பேராசிரியர் அ. வீரமணி ஐந்தாம் தலைமுறையாக சிங்கப்பூரில் வசிப்பவர். இவரது  தாத்தாவின் தாத்தா 1896இல் தமிழகத்திலிருந்து சிங்கப்பூருக்கு வந்தார். வீரமணி சிங்கப்பூரில், 1947இல், அய்யாவு பத்தர்-துளசியம்மாள் தம்பதியரின் மூத்த மகனாகப்  பிறந்தார்.  
பார்ட்லி தொடக்கப்பள்ளியில் பயின்றார். மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் பட்டப்படிப்பு, சிங்கப்பூர்ப் பல்கலைக் கழகத்தில் முதுகலைப்பட்டம், அமெரிக்க விஸ்கான்சின் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார். சிங்கப்பூர், மலேசியா, புரூனை, ஜப்பான் நாடுகளில் பேராசிரியராகவும் கல்வியாளராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றார். 

veeramani9-2019

சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தை வலுப்படுத்தவேண்டும் என்ற வேட்கையுடன் கடந்த அரைநூற்றாண்டாகப் பல்வேறு இயக்கங்களின் வழியாக இளையரை வழிநடத்தி வருகிறார். அனைத்து முன்னெடுப்புகளிலும் தலைவராகத் தன்னை முன்னிலைப்படுத்தாமல் மதியுரைஞராகவே செயல்படுகிறார். சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் உருவாக்கம், மாற்றங்கள், எதிர்காலம் இவற்றைக் குறித்து பேராசிரியருடன் மனந்திறந்த உரையாடல் இங்கே.

பேராசிரியராக வரவேண்டும் என்பது தங்கள் இளமைக்காலக் கனவா? குறிப்பாக சமூகவியலைத் தேர்ந்தெடுத்தது ஏன்?

என் தாயார் துளசியம்மாள் முக்கியக் காரணம். மூன்று வயதிலேயே தமிழ்ப்பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவைத்தார். மனித சமுதாயத்தின் உயரிய சிந்தனைகளை தமிழ்க்கல்வி அறிய வைத்தது. ஆங்கிலக்கல்வி பெறவேண்டுமென சிங்கப்பூர் இராமகிருட்ண மடத்தில் சேர்த்துவிட்டார். குடும்பத்தில் வறுமை இருந்தாலும், வீட்டின் மூத்த பிள்ளையான நான் ஒரு துறவியாக மனித நலத்திற்குப் பாடுபடவேண்டுமென்ற எண்ணம் அவரிடம் இருந்தது. ஒருவகையில் அவரது விருப்பத்தை நிறைவேற்றினேன் என்றாலும் அவர் விரும்பியபடி அல்ல. பின்னாளில் அவரிடம், என்னால் Professor ஆகத்தான் முடிந்ததே தவிர Prophet ஆக முடியவில்லை என்று வேடிக்கையாகச் சொல்வதுண்டு. 

Veeramani7-1966
                                                                                       (1966)

இராமகிருட்ண பரமஹம்சரின் அருட்மொழிகள், விவேகாநந்தர் விரிவுரைகள், அவரது சமுதாய சீர்திருத்தச் செயற்பாடுகள் இராமகிருட்ண மடத்தில் என்னைப் பெரிதும் கவர்ந்தன. படிப்பதும் பட்டங்கள் பெறுவதும் மனித மேம்பாட்டுக்கு உதவுவதற்கே என்ற சிந்தனை ஒரு கொள்கையாக மாறியது. புகுமுக நிலையில் சிறந்த மாணவனாகத் தேறி இருந்தாலும், இளங்கலைப் படிப்புக்கு, கோலாலம்பூர் சென்று மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்தியவியலும் (Major) சீனவியலும் (Minor) கற்றேன். 

பின்னர் மூன்று ஆண்டுகள் (1971-74) சிங்கப்பூர் வானொலியில் வேலை செய்து வறுமையில் இருந்து மீண்ட பின்னர் சிங்கப்பூர் பல்கலைக்கழக சமூகவியல் துறையில் சேர்ந்தேன். இன்று இருப்பது போல் அன்று படிப்புதவித் தொகை  கிடையாது. பகலில் பல்கலைக்கழகம், மாலையில் வயதுவந்த மாணாக்கர் வகுப்புகளில் பகுதிநேர ஆசிரியர் பணி. வீடு சேர இரவு 11 மணி ஆகிவிடும். 

அன்றைய சிங்கைத் தமிழ்ச் சமூகத்தின் நிலையைப் பிரதிபலிக்கும் தங்கள் இளவயது நினைவுகள் ஒன்றிரண்டை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்களேன்.

1948 முதல் 1956 வரை அவசரகால ஆட்சிமுறை. அதனால், தொழிற்சங்கத் தமிழ்த் தலைவர்கள் நாடு கடத்தப்பட்டனர். சிலர் தூக்கிலிடப்பட்டனர். தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் சமூக ஈடுபாடு, தமிழர் பிரதிநிதித்துவ சபை, தமிழர் திருநாள், சிங்கப்பூரில் தமிழர்களுக்குச் சற்று ஊக்கம் அளித்தது. மலாயாவின் 1957ஆம் ஆண்டு விடுதலை சற்று நம்பிக்கையை ஏற்படுத்தியது. 

ஆங்கிலம் அறியாத பாமரத் தமிழர்களின் அரசியல்-தொழிற்சங்க ஈடுபாடு, தமிழை ஆட்சிமொழி ஆக்கியது. இதற்கிடையே சமூகப் பிளவுகள் தமிழர் திருநாள், பொங்கள் திருநாள் ஆகிய பொதுவிழாக்களின் வாயிலாகச் சமுதாய ஒற்றுமையைக் குலைத்தன. மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் 1965ஆம் ஆண்டு பிரிந்ததது. 7 விழுக்காட்டு தமிழர் செல்வாக்கு 4  விழுக்காடாக சரிந்தது.  சுதந்திர சிங்கப்பூரில் தமிழர் சமுதாயம் படிப்படியாகச் செல்வாக்கை இழந்தது. 1970களின் தொடக்கம் வரை சமுதாய நிலைப்பாடு இல்லாமை. ஆங்கிலப்பள்ளிக்குச் சென்று அதேவேளையில்  தமிழையும் தக்க வைத்துக்கொண்டு சமுதாய மாற்றத்திற்குப் பாடுபடுவோர் தேவைப்பட்டனர். இதுதான் அன்றைய தமிழ்ச் சமூகத்தின் சுருக்கமான வரலாற்று நிலை.

மேலும் தெரிந்துகொள்ள விரும்புவோர் ‘சிங்கப்பூர் வளர்ச்சியில் தமிழ்மொழி’ (தமிழ்க்கலை அச்சகம் வெளியீடு, 1996) என்ற எனது நூலிலுள்ள 21 கட்டுரைகளை வாசிக்கலாம். கல்வி, சமூகம், மொழி, ஒருமைப்பாடு, அரசியல், ஆன்மிகம் என பல தளங்களில் அன்றைய தமிழ்ச் சமூகத்தை அக்கட்டுரைகளில் விரிவாகக் காணலாம்.

Veeramani-1

கற்றல், கற்பித்தலில் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையிலிருந்து தமிழ்ச் சமூக மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பங்களிக்கவேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு உண்டானது?

முதுகலை ஆராய்ச்சி நிமித்தம், தமிழ்ச் சமூகத்தில் பலதரப்பட்டவர்களைச் சந்தித்தேன். அவர்களின் சவால்களை அறிந்தேன். பட்டம் பெற்றவர்கள், தமிழ்ச் சமூகத் தலைமைத்துவம் ஏற்றால்தான், சிங்கப்பூரில் தமிழும் தமிழரும் சிறப்புற முடியும் என்ற சிந்தனையும் அதைத்தொடர்ந்த செயற்பாட்டுத் திட்டமும் எழுந்தன. 

பள்ளிக்கூடத்திலும், முதுகலை மாணவராகவும், பின்னர் வானொலி வாயிலாகவும் பலரும் என்னை அறிந்திருந்தனர். அதோடு தமிழ் மலர், தமிழ் முரசு நாளிதழ்களின் நண்பனாக இருந்தேன். தமிழ் மலரில் கட்டுரைகள் எழுதினேன். அதனை நடத்தியவர்கள் எனது நண்பர்கள். தமிழ் முரசு உரிமையாளர் திரு ஜெயராம் சாரங்கபாணி எனது நண்பர். 1977ஆம் ஆண்டு, தமிழ் முரசு நிதிச்சிக்கலில் இருந்ததால், முதுகலைப் பட்ட முடிவுக்குக் காத்திருந்த மாதங்களில் தமிழ் முரசு ஆசிரியராகப் பகலிலும் இரவிலும் உதவினேன். இதனால், சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேரவை தொடங்கிய காலத்தில் அதனை ஆதரித்து நிறைய செய்திகள் எழுத முடிந்தது. ஆனால், என் பெயரை விடுத்தே செய்திகளை வெளியிட்டேன். அக்காலக்கட்டத்தில், மொழிக்கு முன்மொழிந்த பல சீன பத்திரிகை ஆசிரியர்கள் தடுப்புக்காவலில் சிறையில் இருந்தனர்.

சிங்கப்பூர் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேரவை அமைக்கும் பணியில் 1975ஆம் ஆண்டில் ஈடுபட்டேன். பல்கலைக் கழகத்தில் சிங்கப்பூர் இந்திய மாணவர்கள் கணிசமான எண்ணிக்கையில் பயின்றாலும், தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. சுமார் 20 பேர் கொண்ட உயர் மாணாக்கர் நிலை தமிழ்ப்பேரவை அமைப்பைத் தோற்றுவிக்க முடிந்தது. கலை, பண்பாட்டு நிகழ்வுகளைத் தவிர்த்து, சிங்கப்பூரில் தமிழ்-தமிழர் நிலையை முன்வைத்து முதல் ஆய்வரங்க மாநாட்டுக்குப் பாடுபட்டேன். மாணவ உறுப்பினர்களுக்கு எனது வேட்கை புரிந்தது. அம்முயற்சி சிங்கப்பூரில் தமிழாராய்சிக்கு வித்திட்டது. 

Veeramani4-சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் முதல் தமிழ் ஆய்வரங்க மாநாடு (1977)
          சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் முதல் தமிழ் ஆய்வரங்க மாநாடு (1977)

இந்தச் சூழலில்தான், தமிழ்ச் சமூகத்தில் கணிசமான மாற்றமும் நல்ல விளைவுகளும் ஏற்பட வேண்டுமானால், எனது வாழ்க்கையின் அடுத்த 25 ஆண்டுகளைக் கொடுத்தால்தான் முடியும் என்ற முடிவுக்கு வந்தேன். எனவே 1975 தொடங்கி 2000 வரை சமூகத் தொடர்பணிகளில் ‘அறிவை முன்வைத்து ஆக்கப் பணி’ புரிந்தேன். 2000ஆம் ஆண்டில் ஜப்பான் புறப்பட்டேன்.

‘அறிவை முன்வைத்து ஆக்கப்பணி புரிவோம்’ என்ற முழக்கத்துடன் தமிழ் இளையரை ஒன்றுதிரட்டி வழிகாட்டுகிறீர்கள். கடந்த சுமார் நாற்பதாண்டுகளில் சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்ற (சி.த.இ.ம) செயல்பாடுகளின் குறிப்பிடத்தக்க சமூகப் பங்களிப்பு என்ன?

எனது பணி தாங்கள் கூறும் காலவரையை விட நீண்டது. அது ஒரு நீளமான பட்டியல். சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்.

பார்ட்லி உயர் நிலைப்பள்ளி இயல் இசை நாடக மன்றம் (1965-67), மலாயா பல்கலைக்கழக தமிழ்ப்பேரவை (1968-71), சிங்கப்பூர் பல்கலைகழகத் தமிழ்ப்பேரவை (1974-80), சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப்பேரவை (1981-99), தமிழர் பேரவை இளையர் மன்றம் (1982-87), 1988 முதல் சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம் என அறுபதுகளில் தொடங்கி இன்றுவரையிலான பணிகளையும் அவற்றின் தாக்கங்களையும் அந்தந்த காலக்கட்டத்தில் வந்த வெளியீடுகளைக்கொண்டு சமூகப் பங்களிப்புகளை ஓரளவுக்கு அளவிடலாம். 

வீச்சு என்று பார்த்தால் தமிழர் பேரவை இளையர் மன்றத்தில் 1800 உறுப்பினர்கள் இருந்தனர். தமிழர் பேரவை கல்வி உதவித் திட்டத்தில் 25,000 மாணவர்கள் பயனடைந்தனர். அமைப்புகளின்  பெயர்கள் வெவ்வேறாக இருந்தாலும் அனைத்திலும் குறிக்கோள் ஒன்றுதான்.   

Veeramani5-தமிழர் பேரவை கல்வி உதவிக்குழு தொண்டாசிரியர்களாக இளையர்
      தமிழர் பேரவை கல்வி உதவிக்குழு தொண்டாசிரியர்களாக இளையர் (1984)

சுவாமி விவேகாநந்தரின் சிந்தனைகள் என்னை ஆழமாக பாதித்தன. தன்னை முன்னிலைப் படுத்தாமல் ஒருவர் சமூக மாற்றங்களைக் கொணரலாம் என்பதைப் பள்ளிக்கூட நாள்முதல் பின்பற்றிவருகிறேன். என்னுடைய பட்டங்கள், பதவிகள், ஆற்றல்கள் சமுதாய அடையாளத்திற்குத் தேவைப்பட்டால் மட்டுமே எனது பெயரைத் தந்துள்ளேன். இந்த வழியில் ஆயிரக்கணக்கான இளையர், நண்பர்கள் தலைமைத்துவம் பெற்று சிறந்த பணியாற்றியுள்ளனர்.  

பொருளாதார வளர்ச்சிக்காக மட்டுமின்றி, நிறைவான வாழ்க்கை வாழ்வதற்கும் சமூகத்திற்குப் பங்களிக்கவும் உதவும் கல்வியை இன்றைய இளையருக்குப் பயிற்றுவிக்கவேண்டியது அவசியமா?

அவசியம்தான் ஆனால் ஆத்மிக ஈடுபாட்டுடன் செய்யக்கூடிய ஒரு பணியைப் பயிற்றுவிப்பது கடினம். குடும்பச்சூழல், பெற்றோருடைய சிந்தனைகள், செல்லும் பள்ளிக்கூடம், சந்திக்கும் ஆசிரியர்கள், இவர்கள் அனைவரும் இளையருக்கு ஊக்கம் தந்தால்தான் அத்தகைய கல்வியைப் பெறவியலும். 

படிப்பது, பணம் சம்பாதிப்பது, வசதியாக வாழ்வது என்ற சித்தாந்தம் இன்று மேலோங்கி இருக்கிறது. கூட்டாகச் செயல்பட்டால்தான் சமுதாய நலன் மேம்படும் என்பது ஜப்பான் போன்ற நாடுகளில் சுலபமாகக் கற்றுக் கொடுக்கப்படுகிறது. துரதிருஷ்டவசமாக ஏனைய தென்கிழக்காசிய, தெற்காசிய நாடுகளில் காலனித்துவத்தின் தாக்கம் அத்தகைய கல்வியை இளையோருக்கு வழங்கும் சூழலை ஏற்படுத்தவில்லை. இப்படியான சூழலில் ஈடுபாட்டுடனும் நிறைவுடனும் சமூகப் பங்களிப்புடனும் செயல்படத் தேவையான கல்வியைப் பயிற்றுவிப்பது மேலும் கடினம். விதிவிலக்காகச் சில குடும்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

நடராஜர் சிலையின் தூக்கிய திருவடியை உருவகமாகக் காட்டி, சிங்கப்பூரில் ஒரு காலை ஊன்றி உலக அளவில் பரவும் இன்னொரு கால் கொண்டவர்களாகத் தமிழ் இளையர் வளரவேண்டும் என்று ஒருமுறை பேசினீர்கள். இளையர் என்ன செய்யவேண்டும்? 

சிங்கப்பூர் ஒரு சிறு தீவுதான். அதே சமயத்தில் இது ஓர் உலக மாநகரம். ஆகையால் சிங்கப்பூரில் இருந்துகொண்டு உலகையே அறிந்துகொண்டுவிடலாம். எந்த இடத்திற்கும் சென்று மனதிற்கு ஏற்றவாறு வாழ்க்கையை வாழலாம். சில சூழல்களில் சிலர் சிங்கப்பூரிலேயே முன்னேற்றம் காணலாம் என்றால் இதர மாணவர்களுக்கு உலகெங்கும் வாய்ப்புகள் உள்ளன. அதற்காக சிங்கப்பூர்க் குடியுரிமையையும் சிங்கப்பூரையும் விட்டுவிடத் தேவையில்லை. 

உலகில் பல இடங்களுக்குச் சென்று இருக்கிறேன். பல வகையான மனிதர்களைச் சந்தித்து இருக்கிறேன். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழர்களுடைய பண்பு உலகில் எங்கும் இருப்பதை உணர்ந்து இருக்கிறேன். ஆகையால் உலகில் எங்கும் நன்றாக வாழ முடியும் என்ற எண்ணம் இளையரிடம் மேம்பட வேண்டும். இல்லையென்றால் இந்த சின்னஞ்சிறு தீவிலேயே வாழ்க்கை கடந்துவிடும். 

பல நாடுகள் சிறப்பான வாழ்க்கையைத் தரமுடியும் என்பதைக் குறித்த துணிச்சலை இளையர் அடையாமலிருந்துவிடக்கூடாது என்றுதான் அக்கருத்தைத் தெரிவித்தேன். என்னுடைய மூதாதையர் நாகப்பட்டினத்திலிருந்து துணிச்சலுடன் கடல்கடந்து சிங்கப்பூர் வந்ததால் எனது வாழ்க்கை மாறியது, மேம்பட்டது. கடலைக் கடக்க அவர்கள் பயந்திருந்தால் இன்று எங்கோ ஒரு சிறு கிராமத்திலேயே பல சந்ததியினரோடு நானும் வாழ்ந்து மறைந்திருப்பேன். 

இரண்டு உலகப்போர்களினால் நேரடியாக பாதிக்கப்பட்டிருந்த அன்றைய தமிழ்ச்சமூகத்தின் பொதுவான அம்சங்கள் என்று எவற்றைக் குறிப்பிடலாம்?

முதல் உலகப்போர் இங்கு நேரடி பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. ஆயினும் 1918ஆம் நடந்த சிங்கப்பூர் சிப்பாய்ப் புரட்சி, ஆங்கிலேயரின் கொடிய தன்மையை உணர்த்தியது. மதராஸ் மாகாண உள்துறை இலாக்காவைப் பின்பற்றி, சிங்கப்பூரிலும் உள்துறை இலாக்கா அமைக்கப்பட்டு, இந்தியர்கள் கண்காணிக்கப்பட்டனர். இந்திய விடுதலை வேட்கை பத்திரிக்கைச் செய்திகளோடு நின்றுபோனது. விடுதலை உணர்வு இருந்தாலும் செயற்பாடுகளாக அவை மாற்றம் பெறவில்லை. 

சிறு எண்ணிக்கையினரைத் தவிர பெரும்பாலோர் சம்பளத்திற்கு வேலைசெய்தனர். அன்றும் இன்றும் பெரும்பாலான தமிழர்கள் ‘கூலிகள்’தாம். ஆங்கில மொழியின் துணையுடன் வேலைசெய்த மலையாளிகள், இலங்கைத் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள் முதலானோர் தமிழகப் பாட்டாளிகளை மனிதக்கூட்டமாகக் கருதவில்லை.

இரண்டாவது உலகப்போர் தமிழர்களை மாற்றியது. பல தமிழர்கள் துப்பாக்கி சுடக் கற்றுக்கொன்டனர். படை அனுபவம் பெற்றனர். ஆங்கிலேயரின் சக்தி ஒன்றும் அசைக்கமுடியாததல்ல என்பதை அறிந்தனர். இந்தியா என்றொரு நாடு உருவாக முடியும் என்று நம்பினர். குனிந்த முதுகுடன் திரிந்த தமிழன் நிமிர்ந்து நடந்தான். அது போருக்குப் பிந்திய தொழிற்சங்க இயக்கங்களில் பிரதிபலித்தது.

‘சிங்கப்பூர் இந்தியரிடையே மாறிவரும் சாதியமைப்பு’ (1977) என்ற தங்கள் முதுகலைப்பட்ட ஆய்வில், மாற்றங்களுக்குத் தகவமைத்துக்கொண்டு நீடிக்கும் வன்மையுடையதாக சாதியை விளக்கிள்ளீர்கள். உள்ளூர்த் தமிழ்ச்சமூகம் சாதியின் பிடியை வலுவிழக்கச் செய்தது எவ்வாறு?

தமிழகத்தில் ஏற்பட்ட சிந்தனைப் புரட்சி, சமூக சீர்திருத்தச் சிந்தனைகள் இங்கு எதிரொலித்தது முக்கியக் காரணம். சிங்கப்பூர் சூழலில் அடிநிலைத் தமிழர்கள் ஒருங்கிணைந்து ஈடுபட்ட தொழிற்சங்க இயக்கம், அரசாங்கத்தின் கொள்கைகள், அனைவரும் பெற்ற ஒரே கல்வி முறை, இனங்களைக் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் கட்டாயமாகக் கலக்கும் வீடமைப்புத் திட்டம், படிப்படியாகக் குறைந்த தமிழகத் தொடர்புகள் ஆகியவையும் குறிப்பிடத்தக்க காரணங்களாக உள்ளன. 

எனது ஆய்வு இந்திய வரலாற்றுப் பண்பாட்டின் சமூக  அமைப்பை ஆழப் புரிந்துகொள்வதாக இருந்தது.

சிங்கைத் தமிழ்ச்சமூகத்தின் குடும்பச் சடங்குகளும் ஆலய வழிபாடுகளும் தொடர்ந்து ‘மேனிலையாக்கம்’ (Sanskritization) ஆவதாக ஒரு பார்வை உண்டு. அதை எவ்வாறு புரிந்துகொள்வது? அதற்கான காரணிகள் என்னென்ன?

சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சியினால் வளர்ந்த சூழல் இது. மேல்மட்ட மக்கள் மட்டுமே ஈடுபட்டு வந்த சமய வழிமுறைகளைப் பணத்தைக் கொண்டு எவரும் பெறமுடியும் என்ற சிந்தனை இன்று வலிமை பெற்றுவிட்டது. சமய விழாக்களை முன்னின்று நடத்தும் கோயில்களும், கோயில் சிப்பந்திகளும் நிதி வரவு நோக்கத்தை முன்வைத்து செயல்படுகின்றனர். இன்று சமயம் ஒரு சந்தையாகச் செயல்படுகிறது. ஆயினும் இவற்றிலிருந்து ஒதுங்கி, ஒரு சாரார் அமைதியான சமய ஈடுபாட்டில் செயல்படுகின்றனர். சாதியின் தாக்கம் குறைவதால், பலர் குலதெய்வ வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். 

பல இனங்கள் இணைந்து வாழும் உலகமயமான மாநகரில், அடையாளம் என்பது பல நிலைகளில் உணரப்படுவதாக நான் கருதுகிறேன். ஆயினும், தைப்பூசம், தீமிதி முதலானவை தமிழர் இன விழாக்களாக சிங்கப்பூரிலும், தமிழகத்திற்கு வெளியில் வாழும் தமிழர் வழித்தோன்றல்களின் அடாயாளமாகவும் திகழ்கின்றன.

பரவலாக அறியப்படாத தொழிற்சங்கத் தமிழரின் பங்களிப்புகள் தங்கள் சிங்கப்பூர்த் தமிழர் இருநூற்றுவர் நூலில் வெளிப்பட்டுள்ளது.  வரலாற்றில் மங்கலாக இருக்கும் அப்பகுதிகளை ஆய்வுகளால் மீட்டுவிட இயலுமா?

முயன்று வருகிறேன். அதற்கான ஆராய்ச்சிச் சூழலைத் தேடிக்கொண்டிருக்கிறேன். சிங்கப்பூர்த் தமிழர் இருநூற்றுவர் இரண்டாவது தொகுதியில் அதிகமான தொழிற்சங்கவாதிகள் இடம்பெறுகின்றனர். இவர்களின் பார்வையும் சிந்தனையும் நமது சமுதாயத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

ST200

தொழில்நுட்ப வளர்ச்சிகள் நமக்கு உதவுகின்றன என்றாலும் கைபேசி, இணையம் ஆகியவற்றை நாம் சரியாகக் கையாள்கிறோமா? சிங்கப்பூரில் இவை அளித்துள்ள தாக்கத்தை ஒரு சமூகவியலாளராக எப்படிப் பார்க்கிறீர்கள்?

சாலையில் வாகனங்கள் ஒரு பக்கத்தில்தான் போக முடியும் என்ற சட்டம் இருப்பதால் போக்குவரத்தில் அதிக குழப்பம் இல்லை. அதேபோல இல்லத்தில், பொதுவெளியில், நிறுவனத்தில் எனத் தெளிவான எல்லைகளை வகுத்து வாழ்க்கையை நடத்த வேண்டும். அத்தகைய சிந்தனையோடு நாடும் சமுதாயமும் முனைந்து பல கோட்பாடுகளை வகுத்துப் பின்பற்ற வேண்டும். தனிமனித ஒழுங்கு இல்லையென்றால், எதிர்கால வாழ்க்கை மிகவும் சிரமமாக இருக்கும். 

மனிதர்களை நேருக்கு நேராகப் பார்த்து பேசுவதற்குப் பதிலாக எல்லா சமயங்களிலும் கைபேசியை நம்பியிருந்தால் மனித உறவு, சமூகக் கூட்டுறவு முதலானவை வளர்வது கடினம். தொலைபேசி வந்த போது சில கட்டுப்பாடுகளை அனைத்துச் சமூகங்களும் பின்பற்றின. ஆனால் கைபேசி வந்தபின்னர் அத்தகைய கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. முன்னிருந்த கட்டுப்பாடுகளும் அடியோடு மறைந்து விட்டன. ஆகையால் இது ஒரு தனி மனிதர் செய்யக்கூடிய சீர்திருத்தம் அல்ல. பெற்றோர்கள், பள்ளிகள், அரசு, சமூகம், ஆகிய அனைத்தும் சில விதிமுறைகளை அமலாக்கம் செய்து பின்பற்ற வேண்டும். அப்போதுதான் மாற்றம் வரும். 

மேலை நாகரிகத்தைக் கைக்கொள்வதிலுள்ள வசதிகள் ஒருபக்கம், தமிழராக நீடிப்பதற்கான பண்பாட்டு, அடையாளங்களைத் தக்கவைப்பதிலுள்ள தேவைகள் மறுபக்கம் என நீடிக்கும் இழுபறி சமகால வாழ்வைச் சிக்கலாக்குகிறதா?

சிங்கப்பூரைப் பொறுத்தவரையில் நாம் ஒரு மாநகரத்தில் வாழ்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது. எனவே எல்லா இடங்களிலும் தமிழை முன்வைத்துச் செயல்படுவது கடினம் ஆனால் சூழல், சந்தர்ப்பம் அமையும்போதெல்லாம் தமிழை முன்வைத்துச் செயல்படுவதைக் கைக்கொள்ளவேண்டும், ஊக்குவிக்க வேண்டும். 

நாம் தமிழராகத் தமிழர்களுடன் பேசிப் பழகி உறவாட வெறும் ஆயிரம் தமிழ்ச் சொற்கள் தெரிந்திருந்தால் போதும். ஆனால் தமிழுணர்வு என்பது சொற்களைத் தாண்டியது. இளமையிலிருந்தே தமிழ் உணர்வோடு இருக்கவே நாம் கற்றுக் கொடுக்க வேண்டும். ஒருவேளை தமிழையே பேசாத சூழ்நிலையிலும் கூட, தமிழுக்காக தமிழருக்காக தமிழர்களுடைய உயர்பெரும் சிந்தனைகளுக்காகப் பாடுபடும் மனிதர்களை சந்திக்கும்போது அவர்களுக்கு உதவலாம், அவர்கள் நடத்தும் இயக்கங்களுக்கு நிதி வழங்கலாம். அதுவும் தமிழுணர்வுதான், தமிழ் அடையாளம்தான். 

சிங்கப்பூரில் நான் தமிழுக்காக இளையரை ஒன்றுசேர்த்துப் பணியாற்றும்போது பல்வேறு  நிலைகளில் இருக்கும் மனிதர்கள் நிதி உதவி தருகிறார்கள்.  இவர்களுள் பலர் தமிழோடு உறவாடாமல், தமிழைப் பயன்படுத்தாமல் வாழ்க்கையை நடத்துகின்றனர். இருந்தும் இவர்கள் நிதி தரத் தயங்குவதில்லை. தமிழுணர்வே அவர்களை அவ்வாறு செய்ய உந்துகிறது. 

எந்தச் சூழலிலும் எந்த நாகரிகத்தின் தாக்கங்களுடனும் நாம் நாமாகவே நமது அடையாளங்களுடன் நீடிக்கலாம், சிறக்கலாம். குதிரைகளை எதிரெதிர்த் திசையில் பயணிக்கவிட்டால்தான் இழுபறி, ஒரேதிசையில் இணைத்துவிட்டால் மேலும் வேகம் கூடும். 

சிங்கப்பூரில் பிற இனத்தவரின் பார்வையில் தமிழர், இந்தியரைக் குறித்த சில வார்க்கப்பட்ட (streotyped) கண்ணோட்டங்கள் கடந்த இருநூற்றாண்டில் எவ்வாறு மாறிவந்துள்ளன?

இதனை விளக்குவது சற்றுக் கடினம். காலனித்துவ ஆட்சியில் ஒவ்வொரு பிரிவினரும் ஏதாவது ஒரு வேலை நிமித்தம் சிங்கப்பூருக்கு வந்தனர் அல்லது கொண்டுவரப்பட்டனர். ஆகையால் ஒருவர் மற்றவர்களைப் பற்றி அறிந்துகொள்வது குறைவாக இருந்தது. ஆயினும் தென்னிந்தியர்கள் அதாவது தமிழர்கள் பெரும்பாலும் படிப்பறிவு இல்லாமல் மிகவும் ஊதிய குறைவான வேலைகளில் இருந்ததால் அவர்களை மற்ற இனத்தவரை விட மிகவும் கேவலமாக நடத்தினார்கள். இன்று அந்த நிலை மாறிவிட்டது. 

தமிழை முன்வைத்து தமிழில் பேசி செயல்படுபவர்களை யாரும் இழிவாகப் பார்ப்பதில்லை. அதைப்போலவே முன்பு காணப்பட்ட பலவகையான வேறுபாடுகள் மறைந்துவிட்டன. சிங்கப்பூரில் ஏற்பட்ட கல்வி மேம்பாடு, வீடமைப்பு, அரசியல் முதலானவை தமிழர்களை மிகவும் மதிக்கத்தக்க மனிதர்களாக மாற்றி உள்ளது. இன்றைய நிலையில் அரசியலில் நமது செல்வாக்கு குறைந்து இருக்கலாம். ஆனால் சிங்கப்பூரின் அரசியலும் முற்றாக மாறிவிட்டது. எனவே இது தமிழர்களை அதிகம் பாதிக்கவில்லை என்றுதான் நான் கருதுகிறேன்.

Veeramani-2

வெளிநாட்டுத் தமிழர் தொடர்ந்து இங்கு வேர்பிடித்தாலொழிய தமிழ்ச் சமூக எண்ணிக்கையைத் தக்கவைக்கவியலாது என்கிற நிலையில், உள்ளூர்த்தமிழர் – தமிழகத்தமிழர் ஒருங்கிணைவுக்கான சமூக அளவிலான முயற்சிகள், தளங்கள் தேவையாகின்றனவா?

இது நமது சமுதாயத்திற்கு உள்ளாகப் பேசப்படும் கருத்து என்று கருதுகிறேன். நாம் என்னதான் முயன்றாலும் இந்தியர் எண்ணிக்கை 7 லிருந்து 10 விழுக்காட்டுக்கு  உட்பட்டதாகத்தான் இருக்க முடியும். இது இந்த நாட்டின் மனிதவளக் கொள்கை. அதே சமயத்தில் கடந்த காலத்தில் நாகப்பட்டினத்திலிருந்துதான் கப்பல்கள் சிங்கப்பூருக்கு வந்தன ஆனால் இன்று இந்தியாவில் உள்ள எல்லா நகரங்களில் இருந்தும் விமானங்கள் சிங்கப்பூரில் வந்து இறங்குகின்றன. 

இந்த சூழலில் தமிழர்களின் எண்ணிக்கையை துரிதமாக அதிகரிப்பது என்பது சிந்திக்க வேண்டிய ஒரு சிக்கல். எனவே முடிந்த அளவு சிங்கப்பூரில் நிலையாக இருக்கக்கூடிய தமிழர்கள் தமிழையும் அவர்களுடைய பண்பாட்டு அடையாளங்களையும் பாதுகாத்தால் சிறப்பாக இருக்கும். இதற்காக வலிந்து செயல்படுவதற்கு எந்த ஒரு அமைப்பும் தோன்றப் போவதில்லை. அப்படித் தோன்றினாலும் அது அரசாங்கமே முன்னின்று நடத்தும் அமைப்பாகத்தான் இருக்கும். ஆகவே ஒருங்கிணைவு என்பதற்கு அதிக தேவையோ வாய்ப்புகளோ இருக்கப்போவதில்லை. 

செயல்பாடுகளை சிங்கப்பூருக்கு ஏற்றவகையில் மாற்றுவதன் வழியாக சில ஒருங்கிணைவுகள் சாத்தியம் ஆனால் அதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. எடுத்துக்காட்டாக தமிழகத்தில் இருந்து வந்த பலரும் பட்டிமன்றங்களில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இது சிங்கப்பூர்த் தமிழர்களுக்கு எந்த வகையிலும் பொருளுள்ள நடவடிக்கையாகத் தெரியவில்லை. சிங்கப்பூர்த் தமிழர்கள் ஒன்றிணைந்து மீண்டும் ஒரே சமுதாயமாகச் செயல்பட வேண்டுமென்றால் வேறுபல சிந்தனைகளை நாம் செயல்படுத்த வேண்டும். அதற்கு இன்றைய சூழல் இடம் தருமா என்பது ஐயமே.

Veeramani-3

சிங்கைத் தமிழ்ச்சமூகம் பின்பற்ற வேண்டிய உதாரண சிறுபான்மைச் சமூகம் உலகளவில் ஏதும் உண்டா? சிங்கப்பூரில் தமிழருக்கு ஏற்ற ‘படிவங்களை’ (models) நாமே உருவாக்க வேண்டியுள்ளதா?

தென்கிழக்காசிய வரலாற்றில் இரண்டு சமூகங்கள் உலகளாவிய முன்னேற்றத்தைப் பெற்றுள்ளன. ஒன்று சீக்கிய சமூகம், மற்றொன்று சிந்தி பேசும் சமூகம். இந்த இரு சமூகங்களும் தென்கிழக்காசியாவிற்குத் தமிழர்கள் குடியேறிய அதேகாலகட்டத்தில் வந்திருந்தாலும் இன்று அவை உலகளாவிய சமுதாயங்களாக  மாறிவிட்டன. 

சிங்கப்பூரில் சீக்கியர்களின் எண்ணிக்கை கூடவில்லை. ஆனால் முன்பு செய்த வேலைகள் எதிலும் அவர்களை இன்று பார்க்க முடியாது. அவர்கள் உலகளாவிய சிந்தனைகளுடன் கனடாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர். அதேபோல சிந்தி மக்கள் உலகளாவிய நிலையில் சீனர்களை விடவும் பொருளாதாரத்தில் போட்டித்தன்மையுடன் சிறப்பாக வாழ்கின்றனர். இந்த இரு மக்களுக்கும் சிங்கப்பூர் ஒரு இடம்தான். அவர்களே நமக்கு மாதிரிச் சமூகங்கள் (model minorities). அவர்கள் சிங்கப்பூரில் இருந்தாலும் உலகில் எங்கும் கால்வைக்கக்கூடிய சூழலில் வாழ்கின்றனர். இதைத்தான் நான் சிங்கப்பூர்த் தமிழர்களுக்கு எடுத்துக்கூறியும் பரிந்துரைத்தும் வருகிறேன். 

ஜப்பான், கனடா, அமெரிக்கா, தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, மத்திய ஆசியா ஐரோப்பா போன்ற பல இடங்கள் சிங்கப்பூர்த் தமிழர்கள் பரந்து வாழக் காத்துக்கொண்டுள்ளன. சற்று அவற்றை எட்டிப் பார்த்துத் திரும்பினால் உலகம் எவ்வளவு பெரிது என்று நமக்குப் பிடிபடும். அவ்வாறு உலகளாவிய சிந்தனைகள் கொண்டு வாழத் தலைப்பட்டாரல் சிங்கப்பூர்த் தமிழர்கள் உலகில் மிகச்சிறந்த மக்களாக மாறிவிடுவர். 

சிங்கப்பூரிலிருந்து உலகை அறிந்து கொள்வது, உலகில் எந்த இடத்திற்கும் செல்வது எளிது. சற்று முயன்றால் உலகத்தை நாம் எளிதாக அறிந்து கொள்ள முடியும். சிங்கப்பூரில் வாழும் நாம் தமிழ், ஆங்கிலம், மலாய் மொழியோடு இதர மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக ஜப்பானிய, ஜெர்மானிய, ஸ்பானிய மொழிகளைப் படிக்கலாம். இவையெல்லாம் உலகில் பல இடங்களுக்கும் நம்மை இட்டுச் செல்லக்கூடிய மொழிகள். 

இன்னொரு பக்கம் சிங்கப்பூர் தொடர்ந்து தமிழர்களுக்கு ஒரு இடமாக நீடிக்கும். அதில் எந்த மாற்றமும் இருக்காது. சிங்கப்பூரைப் போற்றும் தமிழர்கள் தொடர்ந்து இருப்பர். அவர்கள் தமிழையும் தமிழர் பண்பாட்டுத் தடங்களையும் பாதுகாப்பர் என்று நான் நம்புகிறேன். தமிழ் உணர்வோடு வாழ்ந்து சிங்கப்பூரிலும் உலகளாவிய நிலையிலும் நாம் சிறப்பாக வாழலாம் என்று நான் கருதுகிறேன்.

IMG_1074

***

நேர்காணல்: சிவானந்தம் நீலகண்டன். மார்ச் 2022 ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழில் வெளியானது.