சிங்கப்பூரில் ஜப்பானியர் ஆக்கிரமிப்புக்காலம் (15 பிப்ரவரி 1942 – 12 செப்டம்பர் 1945) முடிவுக்குவந்து முக்கால் நூற்றாண்டுக்காலம் கடந்துவிட்ட நிலையில், பத்து சிறுகதைகள், ஒரு குறுநாவல், ஒரு நாவல் என மொத்தம் ஒரு டஜன் புனைவுகளே அந்தக் காலகட்ட சிங்கப்பூரைக் களமாக வைத்து சிங்கப்பூர் வாசிகளால் எழுதப்பட்டுள்ளன.[1] அந்த ஒரு நாவல், 1990ஆம் ஆண்டு வெளியான ‘வைகறைப் பூக்கள்’.[2] முப்பதாண்டுகள் கழித்து இப்போது இரண்டாவது நாவல், ‘சுண்ணாம்பு அரிசி’ வந்திருக்கிறது.

சிங்கப்பூர் தனி நாடாக மலர்ந்து (1965) கால் நூற்றாண்டு நிறைவடைந்ததை ஒட்டி 1990ஆம் ஆண்டில் வரலாற்று எழுத்துகள் அதிகரித்ததைப் போலவே, நவீன சிங்கப்பூருக்கான அடித்தளமிடப்பட்டு இருநூற்றாண்டுகள் நிறைவுற்றதை (2019) ஒட்டி சிங்கப்பூர் வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களைக் குறித்த புனைவெழுத்துகள் அதிகரித்துள்ளன.[3]

ஆங்கிலத்தில் அதிக அளவில் படைப்புகள் வெளியாகிவரும் நிலையில் தமிழிலும் அப்போக்கு தொடங்கியுள்ளதன் அறிகுறியாக ‘சுண்ணாம்பு அரிசி’யைப் பார்க்கலாம். அபுனைவிலும் கூட அத்தாக்கத்தை உணரமுடிகிறது. சிங்கப்பூர் இலக்கியப் பரிசு 2020க்கான படைப்பூக்கமுள்ள அபுனைவுப் பிரிவில், வென்றுள்ள ஹேமாவின் ‘வாழைமர நோட்டு’ நூலும் சிங்கப்பூரில் ஜப்பானியர் ஆக்கிரமிப்புக் காலம் குறித்து விவரிக்கும் நூலே. வரலாற்றுப் புனைவுகள், அபுனைவுகளுக்கான வாசகப்பரப்பும் விரிவடைந்து வருகிறது.

சுமார் மூன்றரை ஆண்டுக்கால ஜப்பானியர் ஆக்கிரமிப்புக் காலத்தை நவீன சிங்கப்பூரின் இருநூற்றாண்டுக்கால ஒட்டுமொத்த வரலாற்றிலேயே ஆக உக்கிரமான ஒரு காலகட்டம் என்று வாதிடலாம். அப்படியான  காலகட்டத்தின் வாழ்க்கையை உயிர்த்துடிப்புடன் மீண்டும் வாழ்ந்து பார்க்கவேண்டிய அவசியம் இந்த நாட்டில் வசிக்கும் அனைத்துச் சமூகங்களுக்கும் இருக்கிறது. அதற்குப் புனைவுகளைக் காட்டிலும், குறிப்பாக விரிவான வாழ்க்கைச் சித்திரங்களை அளிக்கும் நாவல்களைவிட, சிறப்பான சாத்தியங்களை அளிக்கக்கூடிய கருவிகள் அனேகமாக இல்லை எனலாம். ஆகவே எல்லா வகையிலும் ‘சுண்ணாம்பு அரிசி’யின் வருகை முக்கியமானதும் காலப்பொருத்தம் உள்ளதும் ஆகும்.

latestbooks2

ஆக்கிரமிப்பு ஆண்டுகளில் நடந்த அரசியல், சமூக, அன்றாட வாழ்வியல் மாற்றங்களைப் பல கோணங்களிலிருந்து ஒரு புனைவு அணுகமுடியும். கோணங்கள் வேறுபட்டாலும் சில முக்கிய நிகழ்வுகள் எல்லாக் கோணங்களுக்கும் பொதுவானவையாக அமையும். அந்தவகையில் ஒரே களத்தில், காலத்தில் அமையும் பல நாவல்கள் பொதுவான சில புள்ளிகளைத் தொட்டுச்செல்லும். ஆயினும் குறிப்பான சில இடங்களை விரிவாகப் பேசுவதன் வழியாக ஒரு நாவல் தனக்கான தனித்தன்மையையும் அடையாளத்தையும் அடைகிறது.

மலேசியாவின் ‘தமிழ் நேசன்’ ஞாயிறு பதிப்பில், 1975ஆம் ஆண்டில், தொடராக வெளிவந்த சா.ஆ.அன்பானந்தனின் ‘மரவள்ளிக் கிழங்கு’[4] இந்தத் தனித்தன்மையைத் தக்கவைத்துக்கொள்ள முயன்ற முதல் நாவல் முயற்சி எனலாம். பஞ்சத்தினால் துரத்தப்பட்டுக் கடல்தாண்டிப் புலம்பெயர்ந்த ஒரு சமூகம் மீண்டும் அடுத்த தலைமுறையில் பஞ்சத்தில் அடிபடவேண்டிய நிலை ஜப்பானியர் ஆட்சிக்காலத்தில் உண்டானதை, அக்காலத்தில் அரிசிக்குப் பதிலாகத் தமிழரின் பிரதான உணவாக ஆகியிருந்த, மரவள்ளிக் கிழங்கைக் குறியீடாகக்கொண்டு எழுதியது ஒரு குறிப்பிடத்தக்கத் தொடக்கம். ஆயினும் சுமார் அறுபது பக்க அளவில் ஒரு குடும்பத்தின் கதையை மையப்படுத்திச் சுருக்கமாக எழுதப்பட்ட அப்புனைவை ஒரு நெடுங்கதை என்பதே பொருத்தமாக இருக்கும்.

வரலாற்றில் குறிப்பான சில இடங்களின்மீது வெளிச்சம் பாய்ச்சும் வகையில் விரிவாக அணுகுவது என்கிற நோக்கத்தில் தெளிவாகவும், அதேவேளையில் நாவல் என்கிற புனைவு அமைப்பில் வெற்றிகரமாகவும் செயல்பட்டுள்ள சிங்கை-மலேசிய வட்டார இலக்கிய முன்னோடி என்று மலேசிய எழுத்தாளர் அ.ரெங்கசாமியைக் குறிப்பிடலாம்.

ஜப்பானியர்களை எதிர்ப்பதில் உதவி செய்ய இந்தியாவிலிருந்து மலாயாவுக்கு வந்த ராணுவப்படையைக் கொண்டு தங்களுக்கு எதிரான தமிழர் எழுச்சியை பிரிட்டிஷார் துடைத்தொழித்த வரலாற்றை ‘விடியல்’ நாவலாகவும், ஜப்பானியர் ஆக்கிரமிப்புக் காலத்தில் நல்ல உணவுக்காகவும் பிற அடிப்படைத் தேவைகளுக்காகவும் தமிழர் பட்ட பாடுகளை ‘புதியதோர் உலகம்’ நாவலாகவும், சயாம் மரண ரயில் பாதை அமைப்பதற்குக் கொண்டுசெல்லப்பட்டு வதைக்கப்பட்டதை ‘நினைவுச் சின்னம்’ நாவலாகவும், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து தமிழர் போராடச் சென்றதைக் கருவாக வைத்து ‘இமையத் தியாகம்’ என்ற நாவலாகவும் நான்கு விரிவான பதிவுகளை அளித்துள்ளார் அ.ரெங்கசாமி.[5]

எழுபதுகளிலும் அதற்குப் பின்னும் எழுதப்பட்ட மேற்கண்ட நாவல்களுக்கு முன்னரே, ‘கடலுக்கு அப்பால்’ (1950), ‘புயலிலே ஒரு தோணி (1962)’ ஆகிய இரு நாவல்களை இந்தக் காலகட்ட வாழ்க்கையைக் களமாகக்கொண்டு ப.சிங்காரம் எழுதியுள்ளபோதும் அவற்றை ஒரு காலகட்டத்தின் வரலாற்றுச் சித்திரங்களைப் பதிவுசெய்யவேண்டும் என்ற தன்னுணர்வுடன் எழுதப்பட்ட நாவல்களாகக் கொள்ளவியலாது என்பது என் கருத்து.

ஆகவே, வரலாற்றுத் தன்னுணர்வு கொண்ட ஜப்பானியர் ஆக்கிரமிப்புக் கால நாவல்கள் என்கிற வரையறையை வைத்துக்கொண்டு, சிங்கப்பூர் மலேசியா இரு நாடுகளிலும் வெளிவந்த தமிழ் நாவல் முயற்சிகளைப் பார்வையிடும்போது, ‘சுண்ணாம்பு அரிசி’யோடு இணைத்துப் பார்க்கவேண்டிய நாவல்களாக அ.ரெங்கசாமியின் ‘புதியதோர் உலகம்’,[6] மா.இளங்கன்ணனின் ‘வைகறைப் பூக்கள்’ ஆகிய இரண்டையும் தேர்ந்துகொள்வது பொருத்தமாக இருக்கும்.

அந்த அடிப்படையில் ஜப்பானியர் ஆக்கிரமிப்புக் காலகட்டத்தின் சில சிக்கலான புள்ளிகளை மட்டும் இந்த மூன்று நாவல்களும் எப்படிக் கையாண்டுள்ளன என்பதை ஒப்பீட்டளவில் ஆராய்ந்து அதன்வழியாக ‘சுண்ணாம்பு அரிசி’யின் பங்களிப்பையும் இடத்தையும் கவனப்படுத்த முயல்கிறேன்.

முதலாவதாக, தமிழருக்குள்ளேயே அறிவு, அதிகாரம், பொருளாதார அடிப்படைகளில் அக்காலகட்டத்தில் எழுந்த சிக்கல்கள்.

தொழிலாளி, கங்காணி, கிராணி என்ற அதிகார அமைப்பின் அடிப்படையில் தமிழருக்குள் எழுந்த ஊடாட்டங்களைப் ‘புதியதோர் உலகம்’ பதிவுசெய்துள்ளது. ‘வைகறைப் பூக்கள்’ அதைத்தாண்டித் தமிழரிலேயே தங்களை உயர்வாகக் கருதிக்கொண்ட ‘கருப்புத்துரை’ என்று அழைக்கப்பட்டோரின் மீதான வெறுப்பையும் அவர்களைப் பிறதமிழர் கோடரிக் காம்பாகப் பார்த்ததையும் சுருக்கமாக ஒரு காட்சியில் வர்ணிக்கிறது. ‘சுண்ணாம்பு அரிசி’ அரசரத்தினம் என்ற கதாபாத்திரத்தை உருவாக்கி இச்சிக்கலை மிகவும் விரிவாகவும் வெளிப்படையாகவும் துணிவோடும் எதிர்கொண்டுள்ளது.

இரண்டாவதாக, தமிழருக்கு அக்காலகட்டத்தில் ஆங்கிலேயரிடமும் ஜப்பானியரிடமும் இருந்த உறவைப்போலவே சக சீன, மலாய் இன மக்களிடம் என்னவிதமான உறவுகள் இருந்தன என்பதைச் சித்தரிப்பது ஒரு முக்கியமான, சிக்கலான புள்ளி. ஏனெனில் அவ்வுறவுகளை ஒற்றைத் தன்மையுடன் கட்டமைக்க இயலாது.

‘வைகறைப் பூக்கள்’ முழுமையாகத் தமிழர் – ஆங்கிலேயர் – ஜப்பானியர் என்ற முக்கோணத்திற்கு உள்ளாகவே தன் பயணத்தை முடித்துக்கொண்டுவிட்டது. ‘புதியதோர் உலகம்’ நாவலிலும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே பிற இன மக்களுடனான உறவு மேலோட்டமாக வெளிப்பட்டுள்ளது. தோட்டத் தமிழருக்கு அதற்கான வாய்ப்புகளும் குறைவாக இருந்திருக்கலாம்.

‘சுண்ணாம்பு அரிசி’ இந்தப் புள்ளியையும் விரிவாக எதிர்கொண்டுள்ளது. முதல் பக்கத்தில் குண்டு விழும்போது மூன்று இனத்தவர்களும் ஓலமிடுவதில் தொடங்கி இறுதியில் தன் சீனத்தோழி ச்சூ மெய் சீரழிக்கப்பட்டதற்காக வடிவு ஜப்பானிய ராணுவ அதிகாரி கசுமியைப் பழிவாங்குவதுவரை இவ்வுறவுகள் பின்னிப் பிணைந்திருப்பதைக் காட்டியுள்ளது.

புக்கிட் தீமா மலையில் பதுங்கிக்கொண்டு ஜப்பானியருக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தைக் கையிலெடுத்த சீனருடன் அது தீவிரவாதம் என்று தெரியாமலேயே தன் சொந்தக் காரணங்கள் மற்றும் துப்பாக்கியைத் தூக்கும் ஈர்ப்பு போன்றவற்றால் முத்து சென்று இணைவதும் ஒரு குறிப்பிடத்தக்க காட்சி. மேலும், ‘ஆச்சி, ஜப்பூன் உங்களை ஒன்றும் செய்யமாட்டார்கள்’ என்று பாதுகாப்பிற்காகத் தம் பெண்டிரைத் தமிழர் குடும்பங்களில் சீனர்கள் விட்டுச் சென்றபோது, சீனருக்கும் உதவவேண்டும் ஜப்பானியர் பகையையும் தேடிக்கொள்ளக்கூடாது என்ற தமிழரின் தர்மசங்கடத்தையும் பாதுகாப்பிற்காக ஒப்படைக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க இயலாதபோது அவர்களுக்கு உண்டான கையறு நிலையையும் ‘சுண்ணாம்பு அரிசி’ திறம்படச் சித்தரித்துள்ளதைக் காணமுடிகிறது.

மூன்றாவதாக, ஜப்பானியர் முற்றிலுமாகக் கொடுமையின் மறுவுருவம் மட்டும்தானா அவர்களிலும் நல்லிதயங்கள் இருந்தனவா என்ற கேள்விக்கு விடைதேடும் புள்ளி.

ஆங்கிலேயரை எதிர்க்க ஜப்பானியருடன் கைகோத்த நேதாஜியை அன்றைய மலாயா (இன்றைய சிங்கப்பூரையும் மலேசியாவையும் உள்ளடக்கியது) தமிழர் உணர்வுபூர்வமாகவும் நேரடியாகவும் பெருவாரியாகவும் ஆதரித்தது வரலாறு. மனிதாபிமான அடிப்படையில் ஜப்பானியரின் கொடுமைகளை எதிர்க்கவும், இந்திய தேசிய ராணுவத்தின் நண்பர் என்ற அடிப்படையில் அவர்களை ஆதரிக்கவும் வேண்டியிருந்த இந்த இடம் மிகவும் சிக்கலானது.

ஜப்பானியர் ‘தலைவெட்டிகள்’ என்ற பதிவு மூன்று நாவல்களிலுமே உண்டு. அது கெத்தே அரங்கின் முன்பாகவா கிள்ளானிலா என்பதுதான் வேறுபாடு. மேலும் தலைவெட்டும் நடவடிக்கைகள் இருப்பதால்தான் பஞ்சகாலத்திலும் திருட்டுக் குற்றங்கள் குறைவாக இருப்பதாகத் தமிழர் சமாதானம் கொள்வதையும் ‘வைகறைப் பூக்கள்’ நாவலில் காணலாம். ஜப்பானியரின் நற்குணங்கள் வெளிப்பட்ட இடங்களைக் குறித்த பதிவுகளில் இப்புனைவுகளுக்கிடையே கணிசமான மாறுபாடுகள் உண்டு.

‘வைகறைப் பூக்கள்’ நாவலில் நாயகன் அன்பரசனை ‘நீ காந்தி ஆள்’ என்று விளித்து ஜப்பானியர் உடன்பிறப்பாகக் கருதி அன்பாக நடந்துகொண்டதைக் காணலாம். பெண்களிடம் அவர்கள் முறைதவறி நடந்துகொண்டதாகப் பதிவுகள் இல்லை. ஓரளவுக்கு ஜப்பானியர் மீதான மென்மையான அணுகுமுறை இது எனலாம்.

தமிழ்ப் பெண்களிடன் தவறாக நடந்துகொள்ளும் ஜப்பானிய அதிகாரியை ஒருகட்டத்திற்குமேல் பொறுத்துக்கொள்ள இயலாமல், எதிர்த்துச் சண்டையிட்ட  தமிழரைப் பாராட்டி அவருக்கு ஜப்பானிய மேலதிகாரி வேலையிடத்தில் பதவி உயர்வு அளிப்பதாக ஒரு பதிவை ‘புதியதோர் உலகம்’ கொண்டுள்ளது. அதேவேளையில் சயாம் மரண ரயில் போட ஆள்பிடிப்பதிலோ ஈடுபடுத்துவதிலோ எந்த நியாய உணர்ச்சியோ, கருணையோ உள்ளவர்களாக அவர்கள் சித்தரிக்கப்படவில்லை. பொதுவாகப் பெண்களிடம் நல்லமுறையிலும் ஆண்களிடம் கடுமையாகவும் நடந்துகொண்டதைப் போல ஒரு சித்திரம் ‘புதியதோர் உலகம்’ நாவலில் கிடைக்கிறது.

‘சுண்ணாம்பு அரிசி’யைப் பொறுத்தவரை, இன பேதமின்றி பெண்களைச் சீரழிக்கும் ஜப்பானியரைக் காட்டியுள்ளது. இன்னொரு பக்கம் ஆசிரியப் பதவியில் இருக்கும் கனிவான ஜப்பானியர், ராணுவத்தில் இருந்தும் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் தன் காதலுணர்வை முறையாகவும் கண்ணியமாகவும் கண்ணம்மாவிடம் வெளிப்படுத்தும் அக்கிடோ என்று அவர்களுடைய பல்வேறு முகங்களும் காட்டப்படுகிறது. கூடியமட்டும் முழுமையான பார்வையை அளிக்க முயன்றுள்ள நாவல் எனலாம்.

நான்காவதாகவும் இறுதியாகவும் உணவு, வாழ்வாதாரத்திற்காகத் தமிழர் பட்ட பாடுகளை ஆவணப்படுத்தும் புள்ளி. இதில் உணவைப் பொறுத்தவரை அரிசிச் சோற்றிலிருந்து மரவள்ளிக் கிழங்கு உணவிற்கு மாறவேண்டியிருந்த சூழல்  மூன்று நாவல்களிலுமே இடம்பெற்றுள்ளது. சுண்ணாம்பு கலந்த அரிசி அளந்து வழங்கப்பட்டதையும் அதைச் சாப்பிட்டுத் தமிழர் அடைந்த இன்னல்கள் ‘சுண்ணாம்பு அரிசி’ நாவலில் விரிவாக உண்டு. ஆயினும் உணவுக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் தமிழர் பாடுகள் மிக விரிந்த தளத்தில் நுண்தகவல்களுடன் பதிவுசெய்யப்பட்டுள்ளது ‘புதியதோர் உலகம்’ நாவலில்தான். சிங்கப்பூர்ச் சூழல் என்று சுருக்கிப்பார்த்தால் ‘சுண்ணாம்பு அரிசி’யின் பதிவு விரிவானது எனலாம்.

Siva2-'ரேஷன்' முறையில் சிங்கப்பூரில் அரிசி அளிக்கப்பட்டதைக் காட்டும் ஜப்பானியர் ஆக்கிரமிப்புக்கால ஓவியம் (1942, தேசிய அருங்காட்சியக சேகரிப்பு)pc-rootsdotgovdotsg

பங்கீட்டு முறையில் சிங்கப்பூரில் அரிசி அளிக்கப்பட்டதைக் காட்டும் ஜப்பானியர் ஆக்கிரமிப்புக்கால ஓவியம் (1942, தேசிய அருங்காட்சியக சேகரிப்பு) pc-roots.gov.sg

இனி வாசக நோக்கில் ‘சுண்ணாம்பு அரிசி’யின் சில சிறப்பம்சங்களைக் குறித்துச் சுருக்கமான மதிப்பீடுகள்.

இந்நாவலில் வாசகரை முதன்மையாகக் கவரப்போவது அதன் மொழியாகத்தான் இருக்கும். ‘பட்டினிக்குப் பழையசோறு மேல்’, ‘நரிக்கு நாட்டாமை கெடச்சா கெடைக்கு ரெண்டாடு கேக்கும்’ போன்ற தமிழ்ச் சொலவடைகளும், ‘பக்கே பண்ண ஒரு மாத்து துணிகூட இல்லாம அலஞ்சிருக்கியே’ போன்ற அன்றைய சிங்கைத்தமிழர் பேச்சில் இயல்பாக மருவிக் கலந்திருந்த மலாய், சீனச் சொற்களுடன் அவர்களின் உணர்வுகள் வெளிப்படும்போது அது கொடுக்கக்கூடிய ஒரு நிலப்பரப்பின் பிரத்தியேக வண்ணமும் தாக்கமும் தனித்துவமிக்கதாக உள்ளது.

அடுத்ததாக, மனிதர்கள் எல்லாச் சூழல்களுக்கும் எப்படி விரைவாகத் தம்மைத் தகவமைத்துக்கொள்கின்றனர் அதற்கு ஒரு நியாயத்தையும் கற்பித்துக்கொள்கின்றனர் என்கிற ஓர் இழை நாவலின் உள்ளோட்டமாக ஓடிச்சென்றபடியே இருக்கிறது. ‘சம்பளம் கெடக்கட்டும்யா. அதைவாங்கி நான் என்ன சீமையையா வாங்கப்போறேன்’ என்று பேசும் பார்வதி, எதிர்ப்பைக் காட்ட எண்ணியிருந்த ஜப்பானியரிடமே வாழ்வாதரத்திற்காக வேலைகேட்டு நிற்கும் தமிழ் இளைஞர்கள், நாளைக்கு எவர் நண்பராவார் எவர் எதிரியாவார் என்று தெரியாத நிலையில் எல்லாப் பக்கங்களையும் பார்த்து கவனமாக அடியெடுத்து வைக்கும் தமிழ்மணி வாத்தியார் இப்படியாகப் பல பாத்திரங்கள் அவ்விழையைத் தொடர்ச்சியுடன் கொண்டுசெல்கின்றன.

இறுதியாக, உயிர்வாழ்தல் என்பது தனிமனிதர் என்கிற சிறுபுள்ளியில் மையம்கொண்டிருந்தாலும் ஒரு வாழ்க்கை என்பது குடும்ப, சமூக, சமுதாய, உலக அளவுகளில் ஏதோ ஒரு தொடர்பைக்கொண்டு விரிவது ஓர் உலகப்போர்க்காலத்தில் நடப்பதை ‘சுண்ணாம்பு அரிசி’ எடுத்துக்காட்டுகிறது. இந்த நாவலின் தரிசனமாக இதைக் குறிப்பிடலாம்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, சிங்கப்பூரில் ஜப்பானியர் ஆக்கிரமிப்புக் காலம் என்கிற பின்புலத்தில் முப்பதாண்டுகள் கழித்து வந்திருக்கும் இரண்டாவது நாவலான ‘சுண்ணாம்பு அரிசி’, தன் தேவையையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்துகொண்டு, காலத்திற்கேற்ற வெளிப்படைத் தன்மையுடனும் ஆவணப் பொறுப்புடனும் அதேவேளையில் வாசிப்புச் சுவைக்கும் ஈடுகொடுக்கும் மொழியில் அமைந்துள்ளது. வரலாற்று நினைவின் உணவான ‘சுண்ணாம்பு அரிசி’க்கு ஆதரவையும் வரவேற்பையும் தமிழ்ச் சமூகம் கொடுக்கவேண்டியது அவசியம்.

மேலும், வாசிப்புப் பரவலாக்கத்தோடு இணையாக இந்த நாவலின் இலக்கியத் தரம் குறித்த திறனாய்வுகளும் வரவேண்டும். திறந்தமனதுடனும் இலக்கியச் சூழலின் தொடர்மேம்பாடு என்கிற அக்கறையுடனும் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் காலப்போக்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கொண்டுவரும் என்றும் அதன்மூலம் புதிய உயரங்களைத் தொடமுடியும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். 

இந்த ஆய்வுரையை வழங்க வாய்ப்பளித்த நூலாசிரியர் பொன் சுந்தரராசு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Siva3

***

[செப்டம்பர் 2020இல் எழுதப்பட்ட கட்டுரை. டிசம்பர் 2021இல் வெளியான ‘சுண்ணாம்பு அரிசி’ நாவலில் நூலாய்வுரையாக வெளியானது. மார்ச் 2022 ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழிலும் வெளியானது. உசாத்துணைப் பட்டியலில் எண் 2-இல் சில திருத்தங்கள் இப்பதிவில் செய்யப்பட்டுள்ளன ] 

உசாத்துணை 

[1] சிங்கைத் தமிழ்ச் சமூகம் வரலாறும் புனைவும், சிவானந்தம் நீலகண்டன், காலச்சுவடு வெளியீடு, 2019

[2] வைகறைப் பூக்கள், மா.இளங்கண்ணன், இந்தியர் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு வெளியீடு, 1990. [சிங்கப்பூரின் 25ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட 25 நூல்களுள் ஒன்று. நூல்வெளியீட்டுக்குழுவின் தலைவர் முனைவர் அ .வீரமணி.]

[3] https://www.straitstimes.com/lifestyle/arts/catching-up-with-past-growing-appetite-for-historical-novels-in-singapore

[4] மரவள்ளிக் கிழங்கு, சா.ஆ.அன்பானந்தன், பத்துமலை தமிழ் இளைஞர் மணி மன்றம் வெளியீடு, 1979

[5] ‘உண்மைகளை மறைக்க என் புனைவுகளை நான் அனுமதிப்பதில்லை’ அ.ரெங்கசாமி நேர்காணல், மீண்டு நிலைத்த நிழல்கள் தொகுப்பு, தொகுப்பாசிரியர் ம. நவீன், வல்லினம் பதிப்பக வெளியீடு, 2018

[6] புதியதோர் உலகம், அ.ரெங்கசாமி, சொந்த வெளியீடு, 1993