கடந்த வாரம் நூலகத்திலிருந்து இரவல் பெற்றுவந்த சுரேஷ் பிரதீப்பின் ‘நாயகிகள் நாயகர்கள்’ (கிழக்கு பதிப்பக வெளியீடு, செப்டம்பர் 2017) சிறுகதைத் தொகுப்பை மூன்று அமர்வில் வாசித்து முடித்தேன். மொத்தம் பதினைந்து சிறுகதைகள் கொண்ட இத்தொகுப்பின் முதற்கதை தொடங்கி வரிசையாக ஏழு கதைகள் படித்தேன், முதல் அமர்வில். பிறகு சற்று இடைவெளிவிட்டு அன்றே வேறொரு கதையை வாசித்தேன். நான்கைந்து நாட்கள் சென்றபின்பு மற்ற எட்டுக் கதைகளை மூன்றாம் அமர்வில் வாசித்தேன்.

IMG_5384

ஒவ்வொரு கதையும் சராசரியாக ஏழெட்டு பக்க நீளம் கொண்டது. இது ஆசிரியரால் திட்டமிட்டு அமைக்கப்பட்டதா என்பது நமக்குத் தெரியாது எனினும் தற்கால வாசிப்புச் சூழலுக்கு இந்த அளவு பொருத்தமாக இருக்கிறது என்பது என்னுடைய கணிப்பு. இதைவிட நீளத்தில் குறைந்தால்  சரக்கில்லை என்றும் மிகுந்தால் சிந்தனையை நறுக்கென சொற்களில் கொணரத்தெரியவில்லை என்றும் நானேகூட சொல்லக்கூடும்.

இருப்பினும் புனைவு என்பதொரு மாய உலகம். சிறுகதைக்குப் பொருத்தமான நீள, அகல அளவு குறித்தெல்லாம் எந்தவொரு முடிவுக்கும் வரவிடாமல் அது நம்மை அலைக்கழித்து விளையாடும். இத்தொகுப்பிலும்கூட ஆகச்சிறிய கதையான ‘அலுங்கலின் நடுக்கம்’ என்ற கதை என்னை வெகுவாகக் கவர்ந்தது.

எதிர்பாராதவிதமாக உள்ளூர்ச் சிற்றுந்து ஒன்றில் சந்தித்துக்கொள்ளும் சிறுவயது வகுப்புத்தோழர்கள்  மணிமாறன் – சிவராஜ். அவர்கள் உரையாடலில் இப்படி ஒரு பத்தி;

‘ஏதாவது வேலருந்தா பாத்து குடுங்க மணி’ என்று அவன் சொன்னபோது அவன் மனம் அதிர்ந்தது. அவனை நினைவுகூர முடிந்தது. ஆனால் அந்த நினைகூரல் ஏன் ஒரு அதிர்ச்சியாக நிகழவேண்டும்? அவனுடம் படித்தவன்தான். இப்போது அவனைப் பன்மையில் அழைக்கிறான். அவன் பெயர் சிவராஜ். மணிமாறன் பட்டம் பெறுவதற்கு முன்னே மணம் புரிந்துகொண்டவன்’

இப்படி ‘குடுங்க மணி’ என்று பவ்யமாகத் தொடங்கினாலும் மணிமாறனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று தெரிந்தவுடன், ‘சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க மணி’ என்று சிவராஜின் குரல் ஒருமைக்கு இறங்கிவிடுகிறது. சிவராஜின் பெரிய பையன் தொடக்கப்பள்ளியில் இருக்கிறான்.

பெரிதாகப் படித்து பொருளாதார உயர்வு பெற்றுவிட்டதாலும் பெங்களூருவுக்கு வேலைக்குச் சென்றுவிட்டதாலும் மட்டுமே நீ அனைத்தும் சாதித்துவிட்டதாகப் பொருளில்லை, உன்னிடம் வேலை கேட்கும் நிலையில் இருந்தாலும் நானும் ஒரு விதத்தில் வாழ்க்கைப் படகோட்டப்போட்டியில் உனக்கு முன்னால் சென்றுகொண்டுதான் இருக்கிறேன், உன்னைவிடப் பலவிதங்களில் அனுபவசாலி என்பதை உணர்ந்துகொள் என்று சிவராஜின் அகம் சொல்லத்துடிப்பதை அவ்வொருமைக்கு இறங்குமிடம் அழகாகக் காட்டியுள்ளது. இதுபோன்ற தருணங்களை சிறுகதை வாசிப்பனுபவத்தை உயர்த்தும் லட்சணங்களுள் ஒன்றாக நான் கருதுகிறேன்.

IMG_5400

இரண்டாம் அமர்வில் வாசித்த ஒரே கதை ‘பார்கவி’. சிறுகதைக்குக் காலப்பிரமாணம் மிகவும் முக்கியம்.  தொடக்கத்திலிருந்து இறுதிவரை ஒரே வேகத்தில் போய்விட்டாலும் குற்றமில்லை ஆனால் வேகமெடுத்துவிட்டால் பிறகு குறைக்கமுடியாது. பார்கவி சிறுகதை இந்த விஷயத்தில் ரத்தினமாக ஜொலிக்கிறது. கதைக்கருவும் அப்படி, சொல்லோட்டமும் அப்படி.  குதிரை நடந்து (walk), துள்ளோட்டமிட்டு (trot), ஓடி (run) பிறகு பாய்ச்சலில் (canter and gallop) இறங்குவதுபோல இருக்கிறது வாசிப்பனுவம். அதைக் குலைத்துவிட மனமில்லாமல்தான் அந்த அமர்வை இந்த ஒரே கதையுடன் நிறுத்திக்கொள்ளும்படி ஆயிற்று. இக்கதையில் கற்பனை மிகவும் குறைவு என்பது என் ஊகம்.

‘…ச்சீ…’ என்ற கதையும் பிடித்தது. இகழ்ச்சிக்குறிப்பாக ஔவை, ‘பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை’ என்று தொடங்கும் நல்வழி வெண்பாவில் சிச்சீ என்ற பதத்தைப் பயன்படுத்தியுள்ளார். பாரதியார் பாஞ்சாலி சபதத்தில், ‘தேயம் வைத்திழந்தான் சிச்சீ சிறியர் செய்கை செய்தான்’ என்று எழுதியுள்ளார். ஆனால் இக்கதையின் ச்சீ அந்த வகையான சிச்சீ அல்ல.

பெண்களின் பேச்சுகளில் அதிகம் புழங்கிக்கொண்டிருக்கும் ச்சீயை வைத்து அவ்வொலி எழுப்பப்படும்போது நிகழும் விதவிதமான உடலசைவுகள், எண்ணவோட்டங்கள், உள்ளெழுச்சி என்று பலவிதமாகப் புனைந்துபார்க்கும் கதை இது. வாசிப்பதற்குப் புதுமையாகவும் இளமையாகவும் இருந்தது.

கதையில் இப்படி ஓரிடம்;

‘ஆண் பெரும்பாலும் அவளுக்கும் அவள் உடலுக்குமான எல்லைக்கோட்டினை அறிய முடியாமல் ஊசலாடுகிறான். அவனை இழக்க பெண்ணும் விரும்புவதில்லை. அவனை விலக்காமலும் இருக்கமுடியாது. அந்த எல்லைக்கோட்டினை எவ்வளவு அழகாகச் சொல்லிவிடுகிறது இந்த ..ச்சீ.. அந்த வார்த்தையைச் சொல்லும் ஒவ்வொருமுறையும் பெண்ணில் ஒரு உச்ச அழகு தோன்றுகிறது’

இப்படி இன்னொன்று;

‘அதில் எவ்வளவு அன்பிருக்கிறது. உரிமை இருக்கிறது. எச்சரிக்கை இருக்கிறது. இனிமை இருக்கிறது. அனைத்திற்கும் மேலாக நீ வேண்டும் இது வேண்டாம் என்ற பாவனை இருக்கிறது. வேண்டாம் என்று முழுமையாக விலக்கமுடியாத தவிப்பிருக்கிறது. தவிப்பிற்கே உரிய பேரழகு பொதிந்திருக்கிறது’

IMG_5399

அருவமான விஷயங்களைக் குறித்து இன்னொருவரிடம் உரையாடுவதில் ஒரு சுகம் இருக்கிறது. அதற்கான நற்றுணை அமைந்துவிட்டால் அதைவிடப் பேருவகை தருவது வேறொன்றுமில்லை.  ஒருவேளை அவ்வுரையாடலைத் தனக்குத்தானே செய்துகொள்ளமுடிந்துவிட்டால் அங்கு சிந்தனையாளர் பிறந்துவிடுகிறார். ஏனெனில் அவ்வுரையாடலை நிறுத்துவது கடினம்.

இந்நூலின் ஆசிரியர் அவ்வாறான தன்னுரையாடலைத் தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டிருக்கிறார் என்றே கருதுகிறேன். அவை அவ்வப்போது கதைகளில் வெளிப்படுகின்றன. இது ஆசிரியர் பயன்படுத்திய ஓர் உத்தியாக அல்லாமல் அவரது இயல்பாகவே எனக்குத்தோன்றுகிறது. அனைத்துக் கதைகளிலும் இவ்வெளிப்பாடு இருந்தபோதும் ‘அகம்’ மற்றும் ‘எல்லாவற்றையும் மீண்டும் தொடங்குதல்’ ஆகிய கதைகளில் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நிறைந்திருக்கிறது. அதை வாசிப்பது சுகமாகவும் இருக்கிறது.

பதினைந்து கதைகள் கொண்ட இத்தொகுப்பில் ஐந்தாறு கதைகளை மட்டும் குறிப்பாகத் தொட்டெழுதியிருப்பதால் மற்ற கதைகள் சோடை என்று பொருளில்லை. குறிப்பிட்டு எழுதாத பல கதைகளின் பொதுவான குறைபாடாக ஒருவிதமான வழுவழுப்புத்தன்மையை உணர்ந்தபோதும் அக்கதைகளை என்னால் முற்றாகத் தள்ளிவிடமுடியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஒளிக்கீற்றுகள் முற்றாக அற்றுப்போன கதைகள் இத்தொகுப்பில் ஏதுமில்லை. முன்னுரையில் இக்கதைகள் சுமார் ஓராண்டுக் காலத்தில் எழுதப்பட்டவை என்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளதால் இக்காலகட்டம் அவரின் படைப்பூக்கம் மிகுந்த காலம் என்பதை ஊகிக்கமுடிகிறது. அது படைப்பில் நன்றாகவே பிரதிபலித்துள்ளது.

ஏற்கனவே குறிப்பிட்டதுபோல புனைவெனும் மாய உலகம் அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் அளவின்றித் தரவல்லது. ஒருவேளை இந்த நூலை வாசித்தபின் முக்கியமான கதைகளை விட்டுவிட்டு எதையோ எழுதியிருக்கிறானே என்றுகூட நீங்கள் நினைக்கலாம். அது அப்படித்தான். எதுவும் செய்வதற்கில்லை.

அவசியம் வாசித்துப்பாருங்கள்.