2014ல் வாசித்த ‘History through the Lens – Perspectives on South Indian Cinema’ என்ற நூல்தான் முதன்முதலில் தியடோர் பாஸ்கரன் என்ற பெயரை அறிமுகப்படுத்தியது. பிறகு அதே ஆண்டில் ‘தமிழ் சினிமாவின் முகங்கள்’ என்ற சிறுநூலையும் வாசித்தேன். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிதான நூலது. தமிழ் சினிமாவிற்குள் பாடல்களும் சண்டைக்காட்சிகளும் வந்த வரலாற்றைச் சிறப்பாக விவரித்த அந்த நூலின் ஒருபகுதி இன்னும் தெளிவாக நினைவிலுள்ளது.

அவ்விரு புத்தகங்களும் அப்படி அமைந்துபோனதாலோ என்னவோ ஆசிரியர் ஒரு சினிமா வரலாற்றாசிரியர் என்ற எண்ணத்திலேயே இருந்துவிட்டேன். பிறகு ஈராண்டுகளுக்குமுன் இந்திய நாயினங்கள் குறித்து இவர் ஆற்றிய ஓர் அபாரமான உரை அவ்வெண்ணத்தை மாற்றியது. மேலும் கானுயிர், சூழலியல் ஆர்வலராகவும் இவர் கட்டுரைகள் எழுதிவருவதை அறியமுடிந்தது. அரிதான பன்முக ஆளுமை.

இதோ இந்த ‘கல் மேல் நடந்த காலம்’ (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2016) ஒரு வரலாறு சார்ந்த கட்டுரைத் தொகுப்பு நூல். அதிகமும் சிற்பங்கள், கலை வரலாற்றுப் பார்வையின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் இவை. 21 கட்டுரைகள் அடங்கிய 150 பக்க நூல்.

IMG_5401

பொதுவாசகர்க்கு வரலாற்று வாசிப்பை எளிமைப்படுத்தி ஆர்வமூட்டவும்வேண்டும் அதோடு தகவல்களையும் சேர்த்தளிக்கவேண்டும். ஆகவே அலுப்புத்தட்டாமல் வாசிக்கவேண்டுமென்றால் சற்று நெகிழ்வாக எழுதிச்செல்லவேண்டும். அது ஆசிரியர்க்குக் கைகூடியுள்ளது. ‘திருக்குறளை எழுதியவர் யார்?’ என்ற கட்டுரையில் ‘தமிழகத்தில் யாருக்காவது பொழுதுபோகவில்லை என்றால் திருக்குறளுக்கு உரை எழுத ஆரம்பித்துவிடுகின்றார்கள்’ என்று வரும் இடத்தைச் சுட்டலாம்.

‘எம்டன் போட்ட குண்டு’ என்ற கட்டுரை ஜெர்மனியின் எம்டன் போர்க்கப்பல் சென்னையில் குண்டுவீசியது, அது குஜிலி இலக்கியத்தில் வந்தது, இன்றும் எம்டன் என்ற சொல் பேச்சுவழக்கில் நிலைத்திருப்பது எனப்பல விஷயங்களை இணைத்து மிகவும் ஆர்வமூட்டக்கூடியவகையில் எழுதப்பட்டுள்ளது.

கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் பியதாசி யாரோ ஒரு சிங்கள மன்னன் என்று ஆய்வாளர்கள் எண்ணிக்கொண்டிருந்தவேளையில் ஜார்ஜ் டர்னர் என்ற ஆங்கில அதிகாரி அந்த பியதாசி வேறு யாருமல்ல அசோகர்தான் என்று வேறொரு பாலிமொழி ஆதாரத்தைக்கொண்டு நிறுவியதும் ஆய்வு திசைதிரும்பியதை ‘தேவர்களுக்கு பிரியமான அசோகர்’ என்ற கட்டுரை விவரிக்கிறது. அசோகர் போர்களையும் உயிர்ப்பலியிடுவதையும் எதிர்த்தபோதும் உணவுக்காகக் கொல்வதை அவர் தடுக்கவில்லை என்பதோடு மரக்கறி உணவை ஆதரிக்கவில்லை என்றும் இக்கட்டுரையில் வாசித்தபோது சற்று அதிர்ச்சியாக இருந்தது. அசோகர் புத்தமதத்தைத் தழுவினார் என்றதும் நாமாக மற்றவற்றைக் கற்பனைசெய்துகொண்டு அதுவே உண்மை என்று நம்பத்தொடங்கிவிடுகிறோம். அவற்றை சரிசெய்துகொள்வதற்காக வரலாற்று நூல்களை நாடிச்செல்லவேண்டியது அவசியம்.

IMG_5402

‘கால்டுவெல்லின் கொடைக்கானல்’ என்பது மற்றொரு சிறப்பான கட்டுரை. 1838ல் 24 வயது மறையாளராக சென்னைத் துறைமுகத்தில் வந்திறங்கிய கால்டுவெல் சமஸ்கிருதமும் தமிழும் பயின்றது, நடைபயணமாகவே சென்னையிலிருந்து குன்னூருக்குச் சென்றது, வழியில் தஞ்சாவூரில் மாயூரம் வேதநாயகம்பிள்ளையைச் சந்தித்தது, பின்னாளில் கொடைக்கானலில் கடைசி காலத்தைக் கழிக்கவிரும்பியது என்று பல சுவாரஸ்யமான தகவல்கள்.

‘தஞ்சாவூர் பெரியகோவில் கல்வெட்டுகள்’ என்ற விரிவான கட்டுரையின் செய்திகள் வியப்புமேலிட வைப்பவை. பெரியகோவிலுக்கு அளிக்கப்பட்ட 400 தளிச்சேரிப் பெண்டிரின் (நடனம், பாடல்) பெயர்களும் கல்வெட்டில் இருக்கின்றன என்பதால் அப்பெயர்களைக்கொண்டே சில ஊகங்களை முன்வைக்கிறது இக்கட்டுரை. அரச குடும்பத்துப் பெண்கள் உட்படப் பல சமூகத்தின் பெண்டிரும் இவர்களுள் அடக்கம் என்கிறார்.

தஞ்சாவூர் கோவில் கட்டுமானப்பணிகள் திடீரென்று நிறுத்தப்பட்டதற்கான காரணமோ, தஞ்சாவூரைவிட்டு ராஜராஜனின் மகன் ராஜேந்திரன் கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநகராக்கவும் கட்டிமுடிக்கப்படாமலிருக்கும் பெரியகோவிலை எடுத்துக்கட்டாமல் புதிய தலைநகரில் இதே அமைப்பிலான வேறொரு கோவிலை கட்டியதற்கும் காரணங்கள் இன்னும் வரலாற்றில் கிடைக்கவில்லை என்கிறார். தன்னுடைய ஊகமாக, ‘ஆகம் நியதி சார்ந்த சமய நெறியைப் பரப்ப ராஜராஜன் காட்டிய வேகமும் தீவிரமும் எழுப்பிய எதிர்வினையே பெரியகோவில் கட்டும் பணியை பாதித்தது’ என முன்வைக்கிறார்.

இன்னும்பல கட்டுரைகள் தமிழ்நாடு, தமிழர் வரலாற்றை அறிந்துகொள்ள  விழைவோர் அவசியம் வாசிக்கவேண்டியவை.