சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2022, ‘எனில்’ என்ற கருப்பொருளில் நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. இது இரண்டாவது வார இறுதி. நேற்று (12/11/2022) இரு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன்.

முதலாவது ‘உணவின்றியேல்: சிங்கப்பூர்த் தமிழ் வாழ்வும் இலக்கியமும்‘ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி. பல்வேறு உணவுப் பண்பாடுகள் சங்கமிக்கும் சிங்கப்பூரில் உணவின் இருப்பையும் அதன் இன்மையையும் முன்வைத்து வாழ்வனுபவங்களையும் இலக்கிய விசாரிப்புகளையும் மேற்கொள்ள வாய்ப்பாகத் திட்டமிடப்பட்டிருந்த கலந்துரையாடல். ஷாநவாஸ், முகமது அலி, வசுந்தரா ஆகியோர் பேச்சாளர்களாகக் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியை சஜினி வழிநடத்தினார்.

(இடமிருந்து வலமாக) சஜினி, வசுந்தரா, ஷாநவாஸ், முகமது அலி

இப்படியொரு தலைப்பில் சிங்கப்பூரில் நிகழ்ச்சி நடந்தால் அது ஷாநவாஸ் இல்லாமல் நடக்கமுடியாது. கவிதையாகட்டும் சிறுகதையாகட்டும் கட்டுரையாகட்டும் – சிங்கப்பூர் உணவுப் பண்பாட்டை ஒட்டி அவர் எழுதியெழுதி அமைத்துச்சென்றிருக்கும் இலக்கியத்தடம் அலாதியானது. துண்டு மீனும் வன்முறை கலாச்சாரமும், முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும், அயல்பசி, சுவை பொருட்டன்று என்று அவரது புத்தகங்களின் தலைப்புகளே அத்தடத்தைத் தெளிவாகக் காட்டும். எழுதித் தீராத அவரது அனுபவங்கள் நேற்றைய நிகழ்ச்சியிலும் கொட்டின, களைகட்டின.

சிங்கப்பூரில் உணவுத்தொழிலைப் பழகத் தொடங்கிய காலத்தில் ‘கோபி போ’ என்பதை ‘கே போ’ என்று அனர்த்தமாகத் தான் உச்சரிக்க, அதனால் வெகுண்டெழுந்த வாடிக்கையாளர் முகத்தில் குத்தியதில் பல்லை இழந்த கதையை ‘மொழியும் வலியும்’ என்ற கட்டுரையாக எழுதிய அனுபவத்தில் தொடங்கிப் பல்வேறு வாழ்வனுபவங்கள் இலக்கிய வடிவம்பெற்ற கதையை அவரது பாணியில் விவரித்துச் சென்றார். சிரிப்பொலிகளுக்கிடையே அணுக்கமும் ஆழமும்கொண்டு நகர்ந்த பேச்சு. இறுதியாக உணவுப்பண்பாடு சார்ந்த ஒரு கவிதை முத்தாய்ப்பும் வைத்தார்.

தன் உணவக அனுபவங்கள் வழியாக, என்ன உணவை எந்த நேரத்தில் ஒருவர் சாப்பிட விரும்புகிறார் என்பதையும் அவர் பைகளைச் சுமந்திருக்கும் முறைகளையும்கொண்டே ஆஸ்திரேலியரா, நியூசிலாந்துக்காரரா, அமெரிக்கரா, ஆங்கிலேயரா என்று துல்லியமாகக் கண்டுபிடித்துவிடுவேன் என்று அவர் விவரித்த விதம் பண்பாடு எவ்வாறு அடையாளமாக ஆகிறது என்பதை நுணுக்கமாகக் காட்டியது. குறிப்பிட்ட உணவில் உப்பின் அளவைக் கூட்டிக் குறைத்துக் கேட்கும் வேண்டுகோளை வைத்தே சீனர்களின் கிளைப்பிரிவைக்கூடக் (ஹொக்கியன், காண்டொனீஸ் போன்ற) கண்டுபிடிக்கலாம் என்றார். இந்நிகழ்ச்சியின் உப்பு இவர்தான்.

முகமது அலி தன் ‘நண்டு’ போன்ற திரையாக்க அனுபவங்களிலிருந்தும் ஒரு மோசமான குடும்பச்சூழலில் உணைவைச்சுற்றி அமையும் பாசப்போராட்டம், அக்கறை, அக்கறையின்மை என விரியும் ஒரு திரைக்கதை என கலையும் உணவும் தன் படைப்புகளில் சந்தித்த புள்ளிகளைத் தொட்டுப் பேசினார். உணவு என்பது உணவு மட்டுமல்ல நினைவு என்ற கருத்தும் இவரது பேச்சில் வெளிப்பட்டது. வசுந்தரா உணவைக் குறித்த தன் ஆராய்ச்சியின் வழியாகக் கண்டடைந்த பண்பாட்டு இழைகளையும் வேர்களையும் அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளையும் பகிர்ந்துகொண்டார். சிங்கப்பூரில் ‘இந்திய உணவு’ என்று ஒரே பெட்டிக்குள் அனைத்து உணவுகளையும் அடைக்கமுடியாது, கூடாது என்பதை விரிவாக விளக்கினார்.

உணவு இல்லாமலிருந்தால் என்ற கேள்வியைப் பேச்சாளர்கள் மாறுபட்ட விதங்களில் எதிர்கொண்டனர். உணவுப் பண்பாடு இல்லாவிட்டாலும் கலை இலக்கியத்திற்கான அனேகக் கச்சாப் பொருட்கள் சமுதாயத்தில் இருக்கின்றன என்பதிலிருந்து, உணவுப் பண்பாடு எவ்வாறு காலவோட்டத்தில் தொடர்ந்து உருமாறித் தொடர்கிறது என்பதில் கவனம் செலுத்தலாம் என்பதுவரை அவர்களுடைய பரிந்துரைகள் விரிந்தன. தலைப்பை ஒட்டியும் விலகியும் நீண்ட இவ்வுரையாடல், தன் உணவுத் தேவைகளுக்காக வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் சிங்கப்பூரில் உணவு இல்லாமற் போய்விடும் சாத்தியம் கத்தியைப்போலத் தலைக்குமேல் தொங்கிக்கொண்டிருக்கிறது என்கிற அடிநாதமான சிங்கப்பூர்வாசிகளின் அச்சத்தைத் தொடாமலேயே போய்விட்டது.

ஜப்பானியர் ஆக்கிரமிப்புக் காலத்தில் இது நடந்தும் இருக்கிறது. அதை நினைவூட்ட 1984 முதல் ஆண்டுதோறும் பிப்ரவரி 15-ஆம் நாள் முழுமைத் தற்காப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இளவயதிலேயே போர்க்காலத்தின் சிரமங்களை உணரவைக்கத் தொடக்கப்பள்ளிகளின் உணவுக் கடைகள் அன்று வழக்கமான ருசிமிக்க உணவுகளைத் தவிர்த்து ரொட்டியும், கஞ்சியும், சோளமும், உருளைக்கிழங்கும், அவித்த முட்டையும், பழங்களும் மட்டுமே விற்கின்றன. தீவு முழுதும் எச்சரிக்கை ஒலி எழுப்பப்படுகிறது. அவ்வொலி என்றைக்கும் உணவுக்கு ஆபத்துண்டு என்ற முக்கியமான விஷயத்தை மக்கள் மறந்துவிடாமல் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.

இன்றுவரை ‘சுண்ணாம்பு அரிசி’ போன்ற புனைவுகள் எழுதப்படுகின்றன. ஈராண்டுக்குமுன் (பிப்ரவரி 2020-இல்) உணவு கிட்டாது என்ற கடும் பீதியில் அனைத்துக் கடைகளிலும் பொருட்கள் காலியானது. அண்மையில்கூட முட்டை, கோழி இறைச்சி ஆகியவற்றுக்குப் பஞ்சம் வந்தது. இத்தகைய அனுபவங்கள் கலை இலக்கியத்தில் இதுவரை ஊடாடிய விதம் இனி அமைவதற்கான சாத்தியங்கள் என்பதையும் பேசியிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். இருந்தாலும் நல்ல நிகழ்ச்சியே.

நேற்று கலந்துகொண்ட இரண்டாவது நிகழ்ச்சி ‘காந்தியும் நானும்: சுனில் கிருஷ்ணனுடன் நேர்காணல்‘. காந்தியைப் புதிய கோணங்களில் அறிமுகம் செய்து தொடர்ந்து எழுதியும் பேசியும் வரும் எழுத்தாளர் (தொழிலால் ஆயுர்வேத மருத்துவர்) சுனில் கிருஷ்ணனை இன்பா நேர்கண்ட நிகழ்ச்சி.

காந்தி ஆர்வலரும் ஆய்வாளரும் சிந்தனையாளருமான சுனில், காந்தியைப் பெரும்பாலும் செவிவழிச் செய்திகளைக்கொண்டே வழிபாட்டுடன் ஏற்பதற்கோ முரட்டுத்தனமாக நிராகரிப்பதற்கோ அவசியமில்லை என்பதை வலியுறுத்தித் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். காந்தியைக் குறித்த சரியான தகவல்களை அளிக்கவும், புதிய பார்வைகளை அறிமுகப்படுத்தவும் விவாதிக்கவும் இணையதளம், ஆயிரம் காந்திகள், நாளைய காந்தி, காந்தியைச் சுமப்பவர்கள் புனைவுத் தொகுப்பு போன்ற பல்வேறு நூல்கள், மொழிபெயர்ப்புகள் எனத்தீவிரமாகச் செயல்பட்டு வருபவர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுடன் சுனில் கிருஷ்ணன் (வேட்டி அணிந்திருப்பவர்)

காந்தி இன்றைக்கு எந்தவகையில் பொருத்தமானவர், அடுத்த தலைமுறையிடம் அவரைக் கொண்டுசேர்க்கத்தான் வேண்டுமா, இந்திய ரூபாய்த்தாள்களில் இடபெற்றிருக்கும் காந்தியின் புன்னகையாலும், நகரந்தோறும் நிறைந்திருக்கும் அவரது சிலைகளாலும், சாலைகளின் பெயர்களாலும் என்ன பயன், அரசின்மைவாதியான அவரிடம் அரசுகளும் போராட்டக்காரர்களும் கொண்டிருக்கும் உறவு, எதிரியை அழிப்பது என்பதற்கும் எதிரியுடன் போராடுவது என்பதற்குமான வேறுபாடுகள், இலக்கியத்தில் காந்தி போன்ற பல தளங்களில் நகர்ந்த விறுவிறுப்பான உரையாடலாக அமைந்தது.

இன்பா தயாரித்து வந்திருந்த கேள்விகளுக்கும்சரி அரங்கினர் தொடுத்த கேள்விகளுக்கும்சரி நிதானமாகவும் முழுமையாகவும் ஆதாரங்களைச் சுட்டியும் காந்தியவாதிகளுடனான தன் சொந்த அனுபவங்களை சுவாரஸ்யமாக விவரித்தும் சுனில் பதிலளித்தார், விளக்கமளித்தார். அவர் காலடி பட்டதும் ஊர்க்கிணற்றில் தண்ணீர் ஊறியது என்று வழிபடவந்த கிராம மக்களைக் கோபித்து அனுப்பிய காந்தி இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் புனிதராகவும் அதிமனிதராகவும் தொன்மமாகவும் ஆன கதைகளையும் அக்கதைகளைக் கேட்டே காந்தியை நோக்கி முதலில் ஈர்க்கப்பட்ட காந்தியர்களையும் குறித்து அதிகம் கேள்விப்பட்டிராத தகவல்களைக்கொண்டு சுவாரஸ்யாமாகப் பேசினார்.

கலை அழகியல் நோக்கு, நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்த கடுமையான கருத்துகள், தாழ்த்தப்பட்டோருக்கு ஹரிஜன் எனப்பெயரிட்டது எனப்பல்வேறு விமர்சனங்களும் காந்தியிடம் தனக்கு உண்டு என்றாலும் எந்நேரமும் உரையாடலுக்கும் தன்னை மாற்றிக்கொள்ளவும் தயாராக இருக்கும் காந்தியிடம் விலகும் புள்ளிகளும் மீண்டும் நெருக்கத்திற்கே இட்டுச்செல்கின்றன என்பதை விளக்கிய பாங்கு சுனிலின் சிந்தனைத் திறத்தையும் தெளிவையும் காட்டியது. கலையோ கடவுளோ, காந்தியின் நம்பிக்கைகளும் கோட்பாடுகளும் மக்களுக்கான நன்மைகளையும் தொடர்ந்து மேம்படும் வாழ்க்கையையும் மனதிற்கொண்டவை என்றும் மையப்படுத்தப்பட்ட மேலை உற்பத்தி, சூழலியல் கேடுகளை அதன் தொடக்க காலத்திலேயே முன்னுரைத்த காந்தியின் தீர்க்கதரிசனத்தையும் நுணுக்கமாக விளக்கினார்.

தேவிபாரதியின் நெடுங்கதைகள் தொகுப்பான ‘பிறகொரு இரவு’ காந்தி கொலை குறித்துத் தான் வாசித்த புனைவுகளிலேயே ஆக அபாரமானது என்ற சுனில் காந்தியைக் கொன்றவர் மட்டுமல்ல அவரைச் சுற்றியிருந்த நம்மைப் போன்ற அனைவருமே எப்படியாக அவர் கொல்லப்பட விரும்பினோம், காத்திருந்தோம் என்று ஆழமாகச் சென்ற புனைவாக அதைக் குறிப்பிட்டார். காந்தியை விலக்கி வைத்து வழிபடுவதோ தூற்றுவதோ எதனால் எளிதாக இருக்கிறது, நெருக்கமான உரையாடலுக்குள் சென்றால் ஏன் காந்தி தொந்தரவு செய்யத் தொடங்கிவிடுகிறார் என்பதையும் விளக்கினார். நேற்றைய விடியல் மாலையிலேயே வந்ததைப்போன்ற உணர்வுடன் நிகழ்ச்சி முடிந்தது.

திருஷ்டி பரிகாரமாக, இரு நிகழ்ச்சிகளிலும், பார்வையாளர்கள் மிகவும் குறைவு. கடந்த வாரத்தைக்காட்டிலும் தேய்மானம். இலவச அனுமதி அட்டைகள் அமைப்புகளுக்கு அதிகம் வழங்கப்படவில்லை, மத்தியான மழை போன்ற காரணிகள் கலை இலக்கியப் பங்கேற்புகளையும் ஆதரவையும் அனுபவத்தையும் பாதிக்க நாம் அனுமதிக்கக்கூடாது.

சமூகத்தின் பங்கேற்பு, ஆர்வம் இல்லாததால் தமிழ் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுவது குறையும் என்றால் – அப்படியொரு செய்தி வெளியானால் – உடனே சிங்கப்பூரில் தமிழின் எதிர்காலம் குறித்துக் கவலைப்பட்டு முகநூலிலும் வாட்ஸாப்பிலும் பொறிபறக்கும். நூலகத்தில் தமிழ் நூல்களுக்கான இடம் குறித்து அப்படியொரு வதந்தி சில ஆண்டுகளுக்குமுன் பரவியபோது அவ்வாறு நிகழ்ந்தும் இருக்கிறது. அத்தகைய அக்கறையுள்ள நூற்றுக்கணக்கானோரில் கால் பங்கினராவது – சரி வேண்டாம், 10 விழுக்காட்டினராவது – எழுத்தாளர் விழா நிகழ்ச்சிகளுக்கு, குறிப்பாகத் தமிழ் நிகழ்ச்சிகளுக்கு, ஆதரவளித்தால் நன்றாக இருக்கும்.

இன்று சுனில் கிருஷ்ணனும் பட்டுக்கோட்டை பிரபாகரும் பங்கேற்கும் ‘வெகுஜன இலக்கியமும் தீவிர இலக்கியமும்: இடைவெளிகளை இணைக்கும் பாலங்கள்’ என்ற நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இலக்கிய ஆர்வலர்கள் அவசியம் கலந்துகொள்ளுங்கள். அடுத்தவார நிகழ்ச்சிகளுக்கும் இப்போதே திட்டமிடுங்கள். ஓர் ‘அனுமதி அட்டை’ வாங்கினால் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளலாம்.

***

படம் நன்றி: மஹேஷ், இன்பா