ஜனவரி (2020) மாதத்திலிருந்தே ‘வூஹான் வைரஸ்’ குறித்து சிங்கப்பூரில் பேச்சு அடிபட்டு வந்தாலும் அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பல அமைச்சுகளும் சேர்ந்து சிங்கைக்குள் அத்தீநுண்மி நுழைந்தால் என்ன செய்யலாம் என்று திட்டமிட்டுக்கொண்டிருந்தனர். அதெல்லாம் அரசு பார்த்துக்கொள்ளும் என்று மக்கள் அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தனர். ஜனவரி 23ஆம் தேதி வூஹானிலிருந்த வந்த ஒரு முதியவர் சிங்கையின் முதல் கொரோனா தீநுண்மி தாக்கியவராக ஆனதுகுறித்த செய்திவந்தபோதுகூட சீனாவுக்குப்போனால் கிருமி தாக்கும்போலும் என்று போய்விட்டனர். வாழ்க்கை வழக்கம்போல ஓடிக்கொண்டிருந்தது.

பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் எனக்கு வேலை தொடர்பாக சிலநாட்கள் மலேசியா  செல்லவேண்டியிருந்தது. வேலையை முடித்துக்கொண்டு 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை சிங்கை திரும்பினேன். அசதியாக இருந்ததால் நேரத்தோடு உறங்கப்போய்விட்டேன். அந்த ஆழ்ந்துறங்கிய அந்த நேரத்தில்தான் சிங்கையே அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருந்திருக்கிறது.

நோய்ப்பரவல் விழிப்புணர்வு நிலை (DORSCON) ஆரஞ்சு வண்ணத்திற்கு மாற்றப்பட்டது அந்த வெள்ளிக்கிழமை மாலையில்தான். சீனா செல்லாத, ஏற்கனவே நோய்பரவியவர்களுடன் எத்தொடர்பும் இல்லாத மூவருக்கு சிங்கையில் தீநுண்மி இருந்தது அன்று காலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த ஆரஞ்சு நிலை அறிவிப்பு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து காலவரையின்றி வீடடங்கு போடப்போகிறார்கள் என்று வதந்திகள் பரவ அடுத்த சிலமணிநேரத்தில் ஃபேர்பிரைஸ், ஷெங்சியாங் போன்ற பலசரக்குக் கடைகளில் இருந்த அனைத்து அரிசி, நூடுல்ஸ், காய்கறிகள்,எண்ணெய், பால், பிற உணவுப்பொருட்கள், கழிவறை திசுத்தாள் உட்பட அனைத்தும் மொத்தமாகக் காலியாயின.

முகநூல், வாட்ஸாப் குழுக்கள் என எதிலுமே இல்லாததால் இந்தக் களேபரங்கள் குறித்து எதுவுமே தெரியாமல், அடுத்தநாள் பிப்ரவரி 8 சனிக்கிழமை காலையில் வழக்கம்போலப் பொருட்கள் வாங்கலாம் என்று அருகிலிருந்த ஷெங்சியாங் கடைக்குச் சென்றால் எல்லாம் துடைத்துப்போட்டது போலச் சுத்தமாக இருந்தது. பதறிக்கொண்டு அருகிலிருந்த ஃபேர்பிரைஸ் போனேன். பத்து கிலோ அரிசியும் ஒரு முட்டைக்கோசும் மட்டும் இருந்தது. அதைமட்டும் வாங்கிக்கொண்டு வீடுதிரும்பினேன். தமிழ்க் கடைகளில் காய்கறிகளின் விலை எகிறின. எங்கும் உணவு கிடைக்காவிட்டால் என்னாகும் என்று நினைத்துப்பார்த்தபோதே கலக்கமாக இருந்தது.

img_8739

[ஃபேர்பிரைஸ் காலியாகிக் கிடந்ததைக் கண்டவுடன் நான் அனுப்பிய குறுஞ்செய்தி, 2020 பிப்ரவரி 8 சனிக்கிழமை காலை. …matter ‘of’ பிழையாக matter ‘if’ ஆகிவிட்டது]

பிப்ரவரி மத்தியிலிருந்து அரசாங்கம் சிங்கை தீநுண்மி பரவல் குறித்து அவ்வப்போது வாட்ஸாப் செய்திகள் அனுப்பத் தொடங்கியது. அதனால் பொய்ச்செய்திகள் ஓரளவுக்கு வலுவிழந்தன என்றாலும் மக்களிடையே பயமும் பாதுகாப்பின்மை உணர்வும் முற்றிலுமாக நீங்கிவிடவில்லை. ஒரேயடியாக இல்லாவிட்டாலும் தங்கள் தேவைக்கதிகமாக பலவகையான பொருட்களை வாங்கி வீட்டில் நிறைத்துக்கொண்டுதான் இருந்தனர்.

அப்போது தீநுண்மிக்கு ‘கொவிட்-19’ என்ற பெயரும் சூட்டப்பட்டிருந்தது. தடமறிதல் (contact tracing) என்ற சொல் அடிக்கடி உச்சரிக்கப்பட்டது. அது என்னவென்று மக்கள் முழுமையாகத் தெரிந்துகொள்வதற்குள் தடமறிதலுக்காக அழைப்பதாகச் சொல்லித் தனிப்பட்டவர்களின் தகவல்களைப் பெறுவதும் அதைவைத்து ஏமாற்றுவதும் என அயோக்கியர்கள் வேலையைத் தொடங்கிவிட்டனர். எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்று செயல்படும் இவர்களே நம் காலத்தின் ஆக ஆபத்தான தீநுண்மிகள்!

மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்தே வீட்டிலிருந்து வேலைபார்க்கத் தொடங்கினேன். வீட்டிலிருந்து வேலை என்பது ஒருமாதிரி உற்சாகமும் ஒருவிதமான நிறைவின்மையும் கலந்துகட்டி இருந்தது. மேலதிகாரிகளும் இதெல்லாம் சரிப்படுமா என்ற ஐயத்துடனிருந்தனர். வேலை எப்போது தொடங்கி எப்போது முடிகிறது என்பது தெரியாமலானது. எதற்கும் இருக்கட்டும் என்று அனைவரும் வழக்கத்தைவிடக் கூடுதலாகவே வேலைசெய்தனர்.

‘பாதுகாப்பு இடைவெளி’ (safe distancing) என்ற அடுத்த புதியசொல் பரவலானது. அன்றாடம் லட்சக்கணக்கில் மக்கள் போவதும் வருவதுமாக இருந்த மலேசியா-சிங்கை எல்லைகள் மூடப்பட்டன. விமானங்கள் பறப்பது கிட்டத்தட்ட நின்றுபோயிருந்தது. நீண்டகால அனுமதிச் சீட்டுகளில் இருப்பவர்கள் சிங்கையைவிட்டு வெளியேறினால் திரும்பிவருவது இயலாமற்போகலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எவ்வளவு வேலைகள் பிழைக்கும் என்ற கேள்வி பூதாகரமாக எழுந்தது. ஒரேமாதத்தில் வாழ்வாதாரத்தின் நிலைத்தன்மை குறித்த கேள்வி எழுந்தபோது, எதிர்காலத்தைக் குறித்த அச்சம் சில்லிடவைப்பதாக இருந்தது.

ஏப்ரல் மாதம் தமிழ்மொழி மாதம். ஆனால் சிங்கையில் வீடடங்கு (circuit breaker) தொடங்கியதால் ஊரே வீட்டில் முடங்கியது. வீட்டைவிட்டு வெளியே கிளம்பினால் முகக்கவசம் அணியவேண்டியது கட்டாயமாக்கப்பட்டது. பிறந்த நாள், திருமண நாள் கொண்டாட்டங்கள் எல்லாம் நான்கு சுவர்களுக்குள் மட்டுமே. அது பரவாயில்லை, சில இந்திய நண்பர்களின் பெற்றோர் ஊரில் தவறிப்போய், இறுதிக்கடன்களைச் செலுத்தக்கூட அவர்கள் நேரில் செல்லமுடியாத துயரத்தைக் கேள்விப்பட்டபோது மனம் குமைந்தது. கொடுமையான காலகட்டம் அது!

மலேசிய எல்லை மூடப்பட்டதைத் தொடர்ந்து சிங்கையில் உள்ளவர்களைக்கொண்டே உற்பத்தியைத் தொடரவேண்டிய சூழலில் அலுவலகத் தொழிலாளர்களையும் தொழிற்சாலைக்குள் அனுப்பும் அதிரடி முடிவை நிறுவனம் எடுத்தது. அவர்களுக்கும் வேறு வழியில்லை. அதுவரை வீட்டிலிருந்து பணிபுரிந்த நான் அந்த முடிவினால் வீடடங்கு தொடங்கிய வாரத்திலிருந்து வாரத்திற்கு மூன்று நான்கு நாட்கள் நிறுவனத்திற்குச் செல்லவேண்டியிருந்தது. மூளையுழைப்பிலிருந்து உடலுழைப்புக்கு மாறவேண்டியிருந்தது கடினமாக இருந்தாலும், குறைகடத்தி (semiconductor) உற்பத்தித்துறை அத்தியாவசிய வகைமையில் அறிவிக்கப்பட்டதால் வேலை பிழைத்ததே என்கிற ஆறுதல் உண்டானது. ஏப்ரல், மே இரண்டு மாதங்கள் முழுமையாக அப்படியே கழிந்தன.

இந்தக்காலகட்டத்தில் வேலை தொடர்பாகவும் சரி இலக்கிய நிகழ்ச்சிகளும்சரி ஸூம், டீம்ஸ் போன்ற மெய்நிகர் சந்திப்புச் செயலிகள் அதிக அளவில் பயன்பாட்டிற்கு வந்தன. மெய்நிகர் சந்திப்புகளில் நிகழ்ச்சித்தரம் தொடர்ந்து அதிகரித்து வந்ததையும் காணமுடிந்தது. எனக்கும் எதிர்பாராத வாய்ப்பொன்று வந்தது. காலச்சுவடும் கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியும் இணைந்து நடத்திய மெய்நிகர் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினேன்.

PHOTO-2020-05-27-23-27-50

அதுபோகட்டும், மீண்டும் பிழைப்புக்கு வருவோம்.

முழுமையாக உடலுழைப்பு வேலை என்பது கடினமாக இருந்தாலும் தொடக்கத்தில் மிகுந்த நிறைவை அளித்தது. அதோடு திட்டமிடுதல், செயல்படுத்துதல், பொறுப்பேற்றல் தொடர்பான அழுத்தங்கள் ஏதுமில்லாததால் பரபரப்பான வாழ்க்கை திடீரென்று அமைதியாக ஆகி நிம்மதியாக இருந்தது. ஆனால் அதெல்லாம் சில வாரங்கள்தான். பிரச்சனைகள், சவால்கள் இல்லாமல் ஒன்றையே திரும்பத்திரும்பச் செய்யும் அந்தவேலை சலிப்புத்தட்ட ஆரம்பித்தது. மனிதன் அப்பத்தினால் மட்டும் வாழ்கிறதில்லை என்கிற விவிலிய வாசகம் நினைவுக்கு வந்தது. அவனுக்குப் பிரச்சனைகள் ஏதாவது இருந்துகொண்டே இருக்கவேண்டும்!

நல்லவேளையாக ஜூன் தொடக்கத்தில் வீடடங்கு ஒரு முடிவுக்கு வந்தது. வெளிநாட்டு ஊழியர் குடியிருப்பு, பொதுச்சமூகம், பெருங்குழுக்கள் என அனைத்திலும் தீநுண்மிப்பரவல் கட்டுக்குள் வந்ததால் வீடடங்கு நீங்கியது. பள்ளிகள் திறந்தன. சிங்கை வெளியே செல்லத்தொடங்கியபோது நான் நேரெதிராக மீண்டும் வீட்டிலிருந்து பணிபுரியத் தொடங்கினேன். ஏனெனில் சிங்கையில் பல்வேறு நிறுவனங்களில் வேலையிழந்தவர்கள் மலேசியர்கள் செய்துகொண்டிருந்த வேலைகளை நிரப்பத்தொடங்கினர். பல மலேசியர்கள் குடும்பத்தினரை விட்டுப்பிரிந்து, இருவார தனிமைப்படுத்தலுக்குப்பின், சிங்கையிலேயே தங்கிப் பணிபுரிய முடிவெடுத்து உள்ளே நுழைந்தனர். ஆகவே என்னைப்போன்ற அலுவலகத் தொழிலாளர்கள் மீண்டும் தங்கள் பணிக்குத் திரும்பினர்.

ஜூன் 19 அன்று சிங்கையில் இரண்டாம் கட்டத் தளர்வு நடப்புக்கு வந்தது. ஒரு குழுவாக ஐந்துபேர் வரை கூடலாமென்று அறிவிக்கப்பட்டபோது சிங்கை ஓர் ஆழமான பெருமூச்சு விட்டது. நாங்கள் ஐந்து நண்பர்கள் உண்டுகளித்து உரையாடி ஆறுதலடைந்தோம். தற்காலிக விடுதலைதான் என்றபோதும் அப்போது அது அவசியத் தேவையாக இருந்தது. மனிதனை ஏன் சமுதாய விலங்கு என்கின்றனர் என்பதை நேரடியாக அனுபவித்து உணர்ந்த தருணமது.

PHOTO-2020-07-25-18-13-36

2020ஆம் ஆண்டு தன் முற்பாதியை நிறைவுசெய்தபோது, சிங்கை மக்கள், சுமார் ஐந்து மாதங்கள், உயிர் அச்சத்திலிருந்து வாழ்வாதாரத்திற்கான அச்சுறுத்தல்வரை அனைத்தையும் அடுத்தடுத்து உக்கிரமாக அனுபவித்து முடித்திருந்ததால் இதற்குமேல் என்ன ஆகிவிடும் என்கிற வெறுப்பையும் கூடவே எதுவந்தாலும் சமாளிக்கலாம் என்ற நம்பிக்கையையும் பெற்றிருந்தனர். இதை எழுதும் இந்த டிசம்பர் 2020 இறுதிவாரம் வரை அந்த நம்பிக்கை அப்படியே வலுவாகத் தொடர்கிறது.

டிசம்பர் இறுதியில் மூன்றாம் கட்டத் தளர்வு நடப்புக்கு வருமென்று அறிவிக்கப்பட்டுவிட்டது. ஐந்துபேர் ஒன்றுகூடலாம் என்பது எட்டுபேர் என்று அதிகரிக்கப்பட்டுள்ளது. பணியிடங்கள் மெல்லமெல்ல ‘வீட்டிலிருந்து வேலை’ ஏற்பாட்டை மாற்றிப் பழைய நிலைக்கு செல்லத் தொடங்கலாம். பெருவிரைவுப் போக்குவரவு வண்டிகளில் பழையபடி காலையும் மாலையும் கூட்டம் அலைமோதலாம். எதையெல்லாம் வெறுத்தோமோ அவற்றின் அருமையை உணர்ந்து விரும்பி ஏற்றுக்கொள்ளவும் தொடங்கலாம். ஆனால் இப்போதைக்கு எல்லாம் கனவுதான்.

வெற்றிகரமாகத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அது சிங்கப்பூருக்கும் வந்திறங்கிய செய்தியும், இதே கொவிட்19 தீநுண்மத்தின் இன்னொருவகை இங்கிலாந்தில் பரவுவதாகவும் அது தடுப்பூசிக்குக் கட்டுப்படுமா என்பது தெரியவில்லை என்ற செய்தியும் ஒன்றாகவே கிடைத்துள்ளதால் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. இதில் ‘வீட்டிலிருந்து வேலை’ என்கிற ஏற்பாடு எனக்கு அன்பளிப்பாக அளித்துச்சென்றுள்ள நான்கைந்து கிலோ எடையைக் குறைக்கவேண்டுமே என்கிற கவலை வேறு. இருக்கவே இருக்கிறது புத்தாண்டு உறுதிகள் பட்டியல், அதில் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

ஆனாலும் 2020ஆம் ஆண்டில் எல்லாம் கனவுதான் என்று சொல்வதற்கில்லை. எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் அதிக நேரம் கிடைத்தது ஒரு நல்வாய்ப்பு என்பேன். பிறரோடு ஒப்பிடும்போது வாசிப்புப் பழக்கமுள்ளோருக்கு கொவிட்19 குறைவான இம்சைகளையே தந்துள்ளதாகத் தெரிகிறது. உடற்பயிற்சி ஆர்வலர்களும் உற்சாகமாகவே இருக்கின்றனர். சில கனவுகளை நனவாக்கும் வாய்ப்பையும் 2020ஆம் ஆண்டு கொடுத்துள்ளது. பழைய வழிகள் மூடப்பட்டபோது புதிய கதவுகள் திறந்துள்ளன.

கடந்த இருபது ஆண்டுகளாக ஒவ்வோராண்டும் அவ்வாண்டில் உலகளவில் அதிகம் புழங்கிய சொல் இதுதான் என்று ஒரு தகவல் பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டு வருவதை நீங்கள் கவனித்திருக்கலாம். எடுத்துக்காட்டாக, Y2K, 9/11, tweet, cloud போன்றவற்றைச் சொல்லலாம். 2020ஆம் ஆண்டின் சொல் ‘கொவிட்19’ என்பதைச் சொல்லவேண்டியதில்லை. 2021ஆம் ஆண்டிறுதியில் அச்சொல் ‘மகிழ்ச்சி’ என்று வரவேண்டும். நல்லதே நடக்கும்!

***

[டிசம்பர் 2020 ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழில் வெளியானது. ஒளிப்படங்கள் இவ்வலைப்பூவில் மட்டும் இடம்பெறுகின்றன]