ஒரு பழைய சம்பவம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. பஃப்ளோ சாலையை ஒட்டியிருந்த ஒரு சந்தில் நானும் என் அக்காவும் விளையாடிக்கொண்டிருந்தோம். எங்கள் வீடு அங்குதான் இருந்தது. எனக்கு அப்போது சுமார் இரண்டு வயது இருக்கும். கணுக்கால், இடுப்பு, கழுத்து, மணிக்கட்டு, விரல்கள் என்று உடலெங்கும் நகைநட்டுகளோடு இருந்த நான் தங்கத்தின் மதிப்பு தெரியாமல் மோதிரம் ஒன்றைக் கழற்றி விளையாடினேன். அது சடக்கென உருண்டோடி தரையில் இருந்த ஒரு துளைக்குள் நுழைந்து மறைந்தது. 

என் ஒன்பது வயது அக்கா அத்துளைக்குள் விரலை நுழைத்து மோதிரத்தை வெளியே எடுக்க எவ்வளவோ முயன்றாள், ஆனால் பலிக்கவில்லை. இறுதியில் அக்கம்பக்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த பொற்கொல்லர் கடைகளில் இருந்தவர்களின் உதவியை நாடினாள். கொஞ்சநேரத்தில் பஃப்ளோ சாலையிலிருந்த மொத்த பொற்கொல்லர் சமூகமும் மோதிர மீட்புப் பணிக்காகத் திரண்டுவிட்டது. பஃப்ளோ சாலை மக்களிடையே 1940களிலிருந்த சமூக உணர்வை விளக்க என் தாய் இச்சம்பவத்தை விவரிப்பது வழக்கம். 

பல்லாண்டுகள் கழித்து, ஒரு பதின்ம வயதுப் பையனாக, பள்ளிக் கலாச்சார விழாவுக்காக மேடைப்பின்னணித் திரைச்சீலை சேகரிக்கச் சிங்கப்பூரில் சுற்றியலைந்த நான், நோரிஸ் சாலையிலிருந்த மூன்றுமாடிக் கட்டடம் ஒன்றின் நெட்டுக்குத்தான படிகளில் ஏறினேன். அக்கட்டடத்தின் மொட்டைமாடியில், தகரக் கூரை வேயப்பட்டிருந்த மரக்கொட்டிலில், இருந்த தமிழ்ச் சமூக அமைப்பொன்றின் தலைமையகம் என்னை வரவேற்றது. 

புன்னகையுடன் அதிலிருந்து வெளிப்பட்ட ஒருவர் என்னை வரவேற்று அங்கு ஒரு மூலையிலிருந்த ஐந்து திரைச்சீலைகளை பள்ளிக்கு எடுத்துச்செல்லலாம் என்று என்னிடம் சொன்னார். அவர் என் அடையாள அட்டையைக் கேட்கவில்லை, பள்ளியின் பெயரைக் கேட்கவில்லை. இத்தனை நாட்களுக்குள் திருப்பிக் கொண்டுவரவேண்டும் என்று தேதிகூடக் குறிக்கவில்லை. என்னைப்பார்த்து, சமூகத்தின் இளையருக்காகவும் இளையர் மேம்பாட்டுக்காகவும் தன் அமைப்பு அனைத்தையும் கொடுக்கும் என்றார். அவர்தான் மா.சி. வீரப்பன் என்பது எனக்குப் பின்னாளில்தான் தெரிந்தது.

இவ்வாறாக பஃளோ சாலை, நோரிஸ் சாலை இவ்விரு சாலைகளும் எவ்வாறு என் சொந்த வாழ்க்கை அனுபவப் பின்புலத்தில் அமைந்துள்ளனவோ அதுபோலவே சிங்கப்பூரில் தமிழர்தம் சமூக, அடையாள உணர்வுகளை பொருள்பொதிந்த ஒன்றாக ஆக்கும் வகையிலும் அமைந்துள்ளன. கடந்த அறுபதாண்டுகளில் நகர மறுசீரமைப்பினாலும் இன்னபிற அரசாங்கக் கொள்கைகளினாலும் இவ்விரு சாலைகளும் மாற்றங்களை அடைந்துள்ளன. 

மாற்றங்கள் மேம்பாட்டைக் கொண்டுவருகின்றன என்று நாம் இயல்பாக அனுமானித்துக் கொள்கிறோம். ஆயினும் நாகரிகம், முன்னேற்றம், நவீனம் இவற்றைக் குறித்த ஆய்வுகள் அண்மைக்காலத்தில் வேறுவிதமாகவும் பேசத் தொடங்கியுள்ளன. இடம் தனது தனித்தன்மைக்கு அழிவு வரும்போது அவ்வழிவையே குழப்பிவிடுகிறது. ஊடுருவ ஏதுவான இடத்தின் எல்லைகள் வரலாற்று அனுபவங்களை உள்வாங்க இடமளிக்கின்றன. தனிமனித நினைவுகளில் சில தருணங்களைத் தேவைக்கேற்ப மீட்டுக்கொள்ளும் வகையில் தக்கவைக்கின்றன. 

Veeramani1_PC_thesmartlocal.com

லிட்டில் இந்தியா வரைபடத்தில் பஃப்ளோ, நோரிஸ் சாலைகள்
PC: thesmartlocal.com

சிங்கப்பூரில் பஃப்ளோ சாலை, நோரிஸ் சாலை இரண்டு சாலைகளும் வெறும் இடங்கள் அன்று, தமிழரின் நெடிய வரலாற்றுடன் பின்னிப் பிணைந்தவை. நகர-தேசமான சிங்கப்பூரின் வளர்ச்சியிலும் உலகமயமாதலிலும் குறியீட்டு முக்கியத்துவம் கொண்டவை. சிங்கப்பூர்ப் பொருளாதார வளர்ச்சியின் பிரதிநிதிகளாகவே இவ்விரு சாலைகளையும் சொல்லலாம். தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் மாற்றத்திற்கு எதிரானவர்களல்ல. ஆனால் மாற்றம் யாருடைய நிபத்தனைகளின் பேரிலானது என்பதுதான் அவர்கள் கேள்வி.

சிக்கலான பண்பாட்டுப் புரிதல்கள் எதிரொலிக்கும், பல்வேறு தரப்பினரின் விருப்பங்கள் நெருக்கமாக ஊடாடும், தார்மீக நெறிகளும் நினைவுகளும் நிரம்பிய, ‘லிட்டில் இந்தியா’ பகுதியில், ஒவ்வொன்றும் சுமார் 100 மீட்டர் நீளத்திற்கும் குறைவாகவே உள்ள, இவ்விரு சாலைகளின் வரலாற்றையும் இக்கட்டுரை ஆராய்ந்து அக்கேள்விக்கு விடையளிக்க முயல்கிறது. 

 

இரண்டு சாலைகள்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் – பஃப்ளோ, நோரிஸ் – இரு சாலைகளும் இல்லை. சதுப்பு நிலமாகவும் காட்டுப்பகுதியாகவும் இருந்த அவ்விடத்தில் வனவிலங்குகள் வாசம் செய்தன. 1828ஆம் ஆண்டின் ராஃபிள்ஸ் நகர திட்டத்திலும் அச்சாலைகள் இடம்பெறவில்லை. இச்சாலைகளின் தொடக்கத்தைத் துல்லியமாக அறியத் தேவையான தகவல்கள் நம்மிடமில்லை.

ஆயினும், 1840 முதல் 1890 வரை பஃப்ளோ சாலை கால்நடை சார்ந்த தொழில்கள் சிறப்புற்றிருந்த ஒரு பகுதியாக இருந்ததை அறியமுடிகிறது. பஃப்ளோ (எருமை) என்ற பெயர் அதனால் வந்ததுதான். கால்நடைத் தொழில்கள் காலூன்றுவதற்கு முன் அப்பகுதியில் விவசாயம் செய்யப்பட்டது. 

பல்வேறு பகுதிகளை இணைத்து ஓர் ‘ஊர்’ போல வளர்ந்துவிட்டிருந்த பகுதிதான் அக்கால பஃப்ளோ தெரு. கோயிலில்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற வழக்கு தமிழரிடையே உண்டு. அவர்களின் சமூக ஒழுங்குக் கட்டமைவுக்கு கோயில் அவசியமாக இருந்தது. பஃப்ளோ தெருவும் நோரிஸ் தெருவும் ‘ஊர்’ ஆக இருந்ததால் அவை சந்திக்கும் புள்ளியை ஒட்டி காளியம்மன் கோயில் அமைந்தது. 

பெலிலியோஸ் (I.R.Belilios) என்ற யூதர் பஃப்ளோ சாலையில் கால்நடைத் தொழில் வைத்திருந்தவர்களுள் ஒருவர். அவர் கல்கத்தாவிலிருந்து (அன்றைய பெங்கால் மாகாணம்) வந்தவர் என்பதால் தன் சொந்த நகரத்திலிருந்து வந்த வங்காளிகளை வேலைக்கு வைத்திருந்தார். வங்காளித் தொழிலாளர்கள் காளி வழிபாட்டைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பவர்கள். ஆகவே அப்பகுதியிலிருந்த தமிழர், வங்காளி இருவருக்குமே காளி வழிபாடு பொதுவாக இருந்தது. அதைப் பிரதிபலிக்கும் விதமாகவே அங்கு காளியம்மன் கோவில் அமைந்தது எனலாம். அப்போது அது ‘சுண்ணாம்பு கம்பம் காளியம்மன் கோயில்’ ஆக இருந்தது. காலப்போக்கில் இந்தியரை, குறிப்பாகத் தமிழரை, அப்பகுதி அதிகளவில் ஈர்த்தது.

இன்றைய ரோச்சோர் கால்வாயை ஒட்டிய பகுதி அன்று சதுப்பு நிலமாக இருந்ததால் 1836ஆம் ஆண்டுக்கு முன் பஃப்ளோ சாலை உருவாகி இருந்திருக்க வாய்ப்புகள் குறைவு. ரோச்சோர் கால்வாயின் (அன்று ரோச்சோர் ஆறு) கட்டுமானப் பணிகள் அவ்வாண்டில்தான் முடிந்தன. கால்வாய் அமைந்ததால் அதற்குமுன் வெள்ளக்காடாக இருந்த பகுதிகள் பயன்பாட்டுக்குக் கிடைத்து அப்படியாகத்தான் பஃப்ளோ சாலையும் இன்னபிற சாலைகளும் அமைந்திருக்க வேண்டும். 

ரோச்சோர் கால்வாய் அமைப்பினால் பயன்பாட்டுக்கு வந்த நிலப்பகுதியில்தான், ஃபேரர் பார்க்கில், ஆண்டுக்கு இருமுறை குதிரைப் பந்தயம் நடத்தும் வழக்கம் 1843லிருந்து உருவானது. அதனால் ‘ரேஸ் கோர்ஸ்’ சாலை உருவானது. அது ஐரோப்பியர் குடியிருப்புகளை அப்பகுதிக்கு ஈர்த்தது. சிராங்கூன் சாலையையும் புதிதாக உருவாக்கப்பட்ட ரேஸ் கோர்ஸ் சாலையையும் பஃப்ளோ சாலை இணைத்தது. நா.வ. இரங்கசாமிதாசனால் எழுதப்பட்டு 1893இல் சிங்கப்பூரின் தீனதோய வேந்திர சாலையால் வெளியிடப்பட்ட ‘அதிவினோதக் குதிரைப் பந்தய லாவணி’ நூலின் 15ஆம் செய்யுளில் தாசன் தனது இணையுடன் ஒற்றைக் குதிரை வண்டியில்  பஃளோ சாலைக்குள் நுழைவது பதிவாகியுள்ளது. அன்றைய பேச்சு வழக்கில் ‘பப்ளி ரோடு’ என்று எழுதப்பட்டுள்ளது.

ஒருபக்கம் கால்நடைத் தொழில் அப்பகுதிக்கு வளர்ச்சியைக் கொண்டுவந்தது. இன்னொரு பக்கம் ஐரோப்பியக் குடியிருப்புகள் அதிகரித்தன. கஃப், டிக்ஸன், கிளைவ், டெஸ்கர் போன்ற தெருக்களும் பல்வேறு யூரேஷியக் குடும்பங்களின் பெயர்கள் கொண்ட தெருக்களும் முளைத்தன. அவர்களுடைய குடியிருப்புகளுக்குச் செல்லும் தனியார் பாதைகளாக அத்தெருக்கள் இருந்தன.

இதே, 1840 முதல் 1890 வரையிலான காலகட்டத்தில், கண்டாங் கெர்பாவ் மருத்துவமனை, அரசு மருந்தகம், பொது மருத்துவமனை, அகதிகளுக்கான புகலிடம், தொழுநோய் (பெண்கள்) மருத்துவமனை, இரண்டு காவல் நிலையங்கள், ஓர் அஞ்சல் அலுவலகம் எனப் பல்வேறு காலனித்துவ அரசாங்க நிறுவனங்கள் அங்கு அமைக்கப்பட்டதால் அப்பகுதி வாழ்வதற்கு ஏற்ற வசதியான இடமாக தொடர்ந்து மாற்றமடைந்தது (Siddique & Purushotham, 1982).

இன்றைய லிட்டில் இந்தியா பகுதியில் அக்காலத்தில் நடந்த கால்நடைத் தொழிலில் தென்னிந்தியர்களின் ஆதிக்கம் அதிகம். அவர்களுள் உடலுழைப்புத் தொழிலாளர்களும் இருந்தனர், தொழிலதிபர்களும் இருந்தனர்.

அன்றைய தமிழ்ச் சமூகம் தம் மாட்டு வண்டிகளை வைத்துக்கொண்டு சிங்கப்பூருக்கு ஆற்றிய பங்களிப்பை ஆய்வாளர்கள் இன்னும் கவனிக்கவில்லை. இன்றைய பொத்தோங் பாசிரையும் தஞ்சோங் பாகாரையும் இணைக்கும் வரலாறு அது.  

மலாயில் பொத்தோங் பாசிர் என்றால் மண் வெட்டுதல் என்று பொருள். தமிழர் ‘மண்ணு மலை’ என்று அழைத்தனர். அங்கிருந்து அகழப்பட்ட மணல் மாட்டு வண்டிகளில் தண்ணீர்க் கம்பம், சுண்ணாம்புக் கம்பம், பால்காரத் தெரு, மாரியம்மன் கோவில் வழியாக தஞ்சோங் பாகாரைச் சென்றடைந்தது. அங்கே மணல் கொட்டப்பட்டு நிலவிரிவாக்கப் பணிகள் நடந்தேறின. மாடுகளுக்குத் தண்ணீர் காட்டும் இடமாக தண்ணீர்க் கம்பம் இருந்தது. தண்ணீர்க் கம்பம் காளியம்மன் கோவில் என்று அழைக்கப்படும் ஒரு கோயில் இன்றும் இருக்கிறது. இந்த வண்டித்தடத்தின் வரலாறு இன்னும் விரிவாக எழுதப்படவேண்டும்.

தற்போதுள்ள நோரிஸ் சாலைப் பகுதியில்  திரு  ரிச்சட் ஓவன் நோரிஸுக்கு ஒரு பழத்தோட்டம் இருந்தது. அத்தோட்டத்தின் எல்லைகள் சிராங்கூன் சாலையிலிருந்து ஜாலான் பெசார் வரை (இன்றைய கம்போங் கபோர்) நீண்டது. ரிச்சட் நோரிஸும் அவரது சகோதரர் ஜார்ஜ் நோரிஸும் கிழக்கிந்தியக் கம்பெனி ராணுவ அதிகாரி ஒருவரின் பிள்ளைகள். ஒரு சாலையை உள்ளடக்கிய ஆறு ஏக்கர் பரப்பளவுள்ள அத்தோட்டம் சுமார் 113 ரூபாய்க்கு கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து 1830களில் நோரிஸ் குடும்பத்தால் வாங்கப்பட்டது. வெற்றிலையும் ‘நிபா’ (nipah) பனைகளுமாக இருந்த அத்தோட்டத்தில் நோரிஸ் சகோதரர்கள் மங்குஸ்தீன் பழ மரத்தையும் இன்னபிற பழந்தரும் மரங்களையும் வளர்த்தனர். ரிச்சட் அங்கே ஒரு பங்களா கட்டினார். அவரது பத்து பிள்ளைகளும் அங்குதான் பிறந்தனர்.

அத்தோட்டத்தின் வழியே செல்லுமாறு ஒரு சாலையை 1880களில் அமைந்து அதற்கு ‘ஜாலான் புசார்’ என்று நகராட்சி பெயரிட்டது. ஊழியர் குடியிருப்புக்காகத் தோட்டத்தின் பின்புறப் பகுதிகளையும் எடுத்துக்கொண்டது. முன்பகுதியைத் துண்டு நிலங்களாகப் பிரித்து விற்பனைக்கு விட்டது. அதையொட்டி நிலமதிப்பும் அங்கு உயர்ந்தது. அத்துண்டு நிலங்களை இணைக்கும் சாலைக்கு நோரிஸ் சாலை என்று பெயரிடப்பட்டது. 

பாயா லேபார் சாலைக்கருகில் இருந்த தன் இன்னொரு தோட்டத்திற்கு ரிச்சட் தன் வசிப்பிடத்தை மாற்றிக்கொண்டார். அங்கேயே 1905ஆம் ஆண்டில் இறந்தும் போனார். நோரிஸ் சாலை துண்டு நிலங்களுள் ஒன்றை நோரிஸ் குடும்பம் வைத்துக்கொண்டது. அங்குதான் நோரிஸ் நினைவகம் கட்டப்பட்டது. நோரிஸ் சாலையையும் இந்து சாலையையும் இணைக்கும், சரளைக் கற்கள் பரவப்பட்ட, ஒரு சிறுசாலையை ஒட்டி நோரிஸ் நினைவிடம் இருந்ததாக ராமச்சந்திரா (1961) குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் உலகப்போரில் வெடிகுண்டு தாக்குதல்களால் சேதமடைந்த அந்நினைவிடத்தில் இரு கல்லடுக்குகளை மட்டுமே காணமுடிந்ததாகவும் ராமச்சந்திரா குறிப்பிட்டுள்ளார். 

நான் பார்வையிடச் சென்றபோது மரவேலியாலும் மண்டிய செடிகளாலும் மூடுண்டுபோய்க் கிடந்தது. ரிச்சட் நோரிஸின் மூன்றாவது மகன் ஹாரி நோரிஸ், 1936இல் நினைவகத்தையும் அதையொட்டிய நிலப்பகுதியையும் நன்கு பராமரித்து வரவேண்டும் என்ற நிபந்தனையோடு அப்பகுதிகளை நகராட்சிக்கு அளிப்பதாக உயில் எழுதிவைத்தார். ஆனால் நகராட்சி அதை ஏற்கவில்லை. மேலும் அந்த உயிலை செயல்படுத்தவேண்டிய நிறுவனமும் ஜப்பானியர் ஆக்கிரமிப்புக்கு முன்னரே மூடப்பட்டுவிட்டது. ஆகவே நோரிஸ் நினைவகத்திற்கு எந்த சட்டபூர்வமான பொறுப்பாளரும் இல்லாமற் போயினர்.

கால்நடைத் தொழிலுக்கு 1920களும் 30களும் சோதனைக் காலமாக அமைந்தது. அப்போது உலகளவில் பல்வேறு வியாதிகள் கால்நடைகளைப் பாதித்தன. ஆடு மாடுகளை சிங்கப்பூருக்குள் இறக்குமதி செய்யத் தடைவிதிக்கப்பட்டது. மேலும் நகரமைப்பு நலச்சட்டத்தினால் 1936லிருந்து பால்பண்ணைத் தொழிலும் முடங்கிய நிலையில் இவ்விரு சாலைகளும் வணிக-வசிப்பிடப் பகுதிகளாக மாறத் தொடங்கின. இவ்வாறாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நோரிஸ், பஃளோ சாலைகளில் கால்நடைத் தொழில், அந்நூற்றாண்டின் இறுதியில், தமிழர்கள் பிற தொழில்களுக்குள் நுழைந்ததால் நசிவடைந்தது. 

Veeramani4_PC-roots.gov.sg

PC: roots.gov.sg

கட்டுமானத்துறை வெகுவாக வளர்ச்சி அடைந்துவந்த காலகட்டம் என்பதால் தமிழர் பலரும் தொழிலாளர்களாகவும் ஒப்பந்தக்காரர்களாகவும் அத்தொழிலில் ஈடுபடத் தொடங்கினர். அதேகாலகட்டத்தில் சிராங்கூன் சாலையை ஒட்டியியிருந்த பகுதிகளிலும் தொடர்ந்து தமிழர் குடியேற்றம் அதிகரித்து வந்தது. மக்கட்தொகை அதிகரிப்பின் விளைவாகச் சில்லறை வர்த்தகம், சேவைத்துறைகள் ஆகியவற்றுக்கான தேவை அதிகரித்தது. இத்தகைய வணிக நடவடிக்கைகள் பல மாற்றங்களைக் கொணர்ந்தன.

காலனித்துவ சிங்கப்பூரில் 1940களில் இவ்விரு சாலைகளும் தமிழ்ச் சமூகத்தின் சமுதாய, பொருளாதார முன்னேற்றத்தைப் பிரதிபலிப்பவையாக விளங்கின. போருக்கு முந்தைய பஃப்ளோ சாலையில் வசித்த சமூகம் ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தைப் பிரதிநிதிக்கும் ஒரு சிறுபகுதியாக இருந்தது. அனைவரும் தத்தம் வசிப்பிடங்களின் சொந்தக்காரர்கள் அல்லவெனினும் நீண்டகாலமாக அவர்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து வசித்தனர். 

புக்கிட் தீமா சாலையிலிருந்து சிராங்கூன் சாலைக்குள் நுழையும் ஒருவரால் அப்போது தேக்கா சந்தையை வலப்புறத்தில் காணமுடிந்தது. ரோச்சோர் ஆற்றுக்குள் இறங்கிச் செல்லும் படிகளையும் அங்கு சந்தைக்குத் தேவையான பொருட்கள் வந்து இறங்குவதையும்கூடப் பார்க்கமுடிந்தது. பெரும்பான்மை மக்கள் இந்துமதத்தினர் என்பதால் அவர்களுக்கான தேவையை நிறைவுசெய்யும் நோக்கில் அமைந்த சந்தை அது என்றாலும் பன்றி, மாட்டிறைச்சி விற்கும் கடைகளும் சிறிய அளவில் இருந்தன. 

சிராங்கூன், பஃப்ளோ சாலைகளின் முக்குகளில் காலியாட்கள் இடியாப்பம் சுட்டு விற்கும் தேங்காய்ப்பால் சர்க்கரையுடன் சேர்த்து விற்கும் கடைகளை நடத்தினர். குளிர்பதனப் பெட்டி வசதிகள் இல்லாத அக்காலத்தில் உடனடியாக விற்காவிட்டால் இடியாப்பம் வீணாகிவிடும். கடும் உடலுழைப்பையும் விரைவான விற்பனையையும் கோரிய வியாபாரம் அது. அவர்கள் அனைவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாகவும் அனேகமாக தமிழகத்தின் ஒரே ஊரிலிருந்து வந்தவர்களாகவும் இருந்தனர். தற்போது இந்த வியாபாரம் சில முன்னேற்றங்களுடன் ஜொகூர் பாருவிற்கு இடம்பெயர்ந்து விட்டது.

ரோச்சோர் ஆற்றை ஒட்டியிருந்த பகுதியில் அஞ்சல் அலுவலகம், அரசாங்கப் பணிகளுக்குத் தேவையான சரக்குகளைச் சேமிக்கும் கிடங்குகள், இன்னபிற அலுவலகங்கள் இருந்ததால் அவற்றிலும் அதிகளவில் தமிழர், சற்று குறைந்த அளவில் சீனர், சீக்கியர், இன்னபிறர் என்று கலந்து புழங்கினர். தமிழ்ச் சொற்களும் சீனக் கிளைமொழிகளின் சொற்களும் கலந்த ‘பசார் மலாய்’ அவர்களிடையே புழங்கு மொழியாக இருந்தது.

ஹாமிட் சந்து (Hamid Lane) வழியாகச் சென்றால் சில ஜாவானியக் குடும்பங்கள் வசித்துவந்த வீடுகளுக்குச் செல்லலாம். இந்த சந்து சிராங்கூன் சாலையைப் பார்த்தும் பஃப்ளோ சாலையைப் பார்த்தும் கட்டப்பட்டிருந்த வீடுகளைப் பிரிக்கும் வகையில் இடையில் அமைந்திருந்தது. பஃப்ளோ சாலையைப் பார்த்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அளவிற் பெரிதாக, அவற்றின் சொந்தக்காரர்கள் அடைந்திருந்த செல்வச் செழிப்பையும் சமூக அந்தஸ்தையும் காட்டக்கூடியதாக இருந்தன.

டி சில்வா (வைர வியாபாரம்), ராமசாமி நாடார், ஷா சகோதரர்கள், நூர்தின் (நீதிமன்ற உரைபெயர்ப்பாளர்), காசா கண்டியர் (பலசரக்குக்கடை) ஆகியோரின் வீடுகள் அங்குதான் இருந்தன. ஒரு மூன்று மாடி பங்களாவில் சில உத்தரபிரதேச மற்றும் தமிழ்க் குடும்பங்கள் வாழ்ந்தன. சாலையின் இறுதியில் கண்டாங் கெர்பாவ் மகப்பேறு மருத்துவமனை இருந்தது. அதை ஒட்டி வலப்புறம் திரும்பும் சாலை கெர்பாவ் சாலையை வெட்டிக்கொண்டுபோய் ரேஸ் கோர்ஸ் சாலையில் இணைந்துவிடும்.

பஃப்ளோ சாலையின் இடப்பக்கம் (இன்றைய தேக்கா சந்தை இருக்குமிடம். கட்டப்பட்டபோது அதற்கு அரசு இட்டிருந்த பெயர் ஸு ஜியாவ் (Zhu Zhiao) சந்தை) வசித்த அனைவருமே பொருளாதார வன்மையுடையோர் என்றாலும் அவர்களுள் ராமசாமி நாடார் ஆகப்பெரும் செல்வந்தராகப் பார்க்கப்பட்டார். மூன்று பெரிய வீடுகளை ஒன்றிணைத்து அவரது மாளிகை அமைந்திருந்தது. தரைத்தளத்தில் பொது நிகழ்வுகளும் திருவிழாக்களும் நிகழும் பெரிய மண்டபம். மேல்தளத்தில் அவரும் திருமணமான பிள்ளைகளும் கூட்டுக்குடும்பத்தைப்போல வசித்தனர். 

சிங்கப்பூரில் வீடுகள் கட்டித்தரும் கட்டுமான நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் ராமசாமி நாடார். அவருக்கிருந்த சொத்துகளின் எண்ணிக்கை முழுமையாக அவருக்கே தெரியாது என்றொரு பேச்சு உண்டு. ஜொகூரிலிருந்த தோட்டங்களுக்கு மளிகைப் பொருட்கள் வியாபாரம் செய்தவராகவும் ஒப்பந்தக்காரராகவும் வாழ்க்கையைத் தொடங்கிய அவர் பின்னாளில் சொத்து முதலீட்டாளராகவும் பிறகு கட்டுமான நிறுவன உரிமையாளராகவும் வளர்ந்தார். 

பஃளோ சாலையில் அவரது வீட்டிற்கு எதிர்ப்பக்கத்தில் இரண்டு சிறிய கடைவீடுகளும் அவருக்கிருந்தன. அவற்றில் அவரது மூத்த மகளும், சட்ட நிறுவனம் நடத்திவந்த, மருமகன் ஆதித்தன் நாடாரும் வசித்தனர். அதையொட்டிய வீடு ராமசாமி நாடாரின் சொத்துகளைப் பராமரித்துவந்த அண்ணாமலை நாடாருடையது. விதவிதமாக சிங்கப்பூருக்குள் வரும் கார்கள் அனைத்தும் ராமசாமி நாடரிடம் இருந்தன. வீட்டுக்கருகே இடமில்லாமல் அவற்றுக்குத் தனியாகக் கொட்டகை அமைக்கவேண்டிய நிலை. 

கெர்பாவ் சாலை, பெலிலியோஸ் சந்து, ரேஸ் கோர்ஸ் சந்து ஆகிய இடங்களில் இருந்த என் உறவினர் பலரின் வீட்டுக்கு அக்காவுடன் சேர்ந்து ஓடிச்சென்றது நினைவுள்ளது. அவர்கள் அனைவரும் பத்தர் என்றழைக்கப்பட்ட பொற்கொல்லர்கள். தம் சொந்தப் பட்டறைகளை (2 பேரிலிருந்து சுமார் 30 பேர் வரை வேலை பார்க்கும் இடங்கள்) அங்கு அமைக்கவியலாதவர்கள் தஞ்சோங் பாகார், செம்பவாங்கின் நேவல் பேஸ், ஜாலான் காயு, நாலாவது மைல் புக்கிட் தீமா சாலை (இன்றைய ஆடம் சாலை, புக்கிட் தீமா சாலை சந்திப்பு) போன்ற தீவின் பிறபகுதிகளுக்கோ ஜொகூர் பாருவுக்கோ சென்றனர். ஆயினும் பஃப்ளோ சாலைதான் அவர்களின் குவிமையம். சுமார் இருநூறு பேர் அச்சாலையை ஒட்டிய பகுதிகளில் வசித்தும் வேலைசெய்தும் வந்தனர்.

மளிகைக்கடை வைத்திருந்தோர், முடிதிருத்துவோர், உதிரிவேலைகள் செய்தோர் எனப் பிறரும் அங்கே வசித்தனர். ‘டோர்மிடரி’ போன்ற அமைப்பிலிருந்த அறைகளில் அவர்கள் தங்கியிருந்தனர். அனைவரும் ஆண்கள். உறங்குவதற்கு ஆளுக்கொரு பாய், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்த தங்கள் சொந்த ஊர்களுக்கு இரண்டு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கப்பலில் சென்றுவருவதற்கு ஏதுவாக ஒரு சில டிரங்குப்பெட்டிகள் அவ்வளவுதான் அவர்களின் சொத்து. அப்படியாக நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து வந்த அனைத்து தரப்புகளையும் பிரதிநிதிக்கும் நுண்ணுருவமாக பஃப்ளோ சாலை இருந்தது.

ராமசாமி நாடார் குடும்பத்தின் ‘சக்தி’யால் அந்த சாலை எப்போதும் அமைதியாகவே இருந்தது. பெரும்பாலும் அவரது குடும்பத்தினரின் கார்கள்தான் ஓடின. பிறர் ராமசாமி நாடாரின் வீட்டுக்கு எதிர்ப்பக்கத்தில் சாலைக்கு அந்தப்பக்கமிருந்த நடைபாதையில் அமைதியாக நடந்து சென்றனர். ஆதி திராவிடர்கள் பொதுவாக அங்கே காணப்படுவதில்லை. அப்படியே வந்தாலும் காலணிகளைக் கழற்றிக் கையில் எடுத்துக்கொண்டு விரைவாக அவரது வீட்டைத் தாண்டிச் சென்றுவிடுவர். சாதி அடிப்படையிலான பல கட்டுப்பாடுகள் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டன. சில ஜாவானிய, சீன குடும்பங்கள் பஃப்ளோ சாலையில் வசித்தபோதும் பன்றி, மாட்டிறைச்சிகள் வெளியே பார்வைக்குப் படாமல் பார்த்துக்கொண்டனர்.

பொருளாதார உயர்நிலைக்காகவும் மக்களுக்காக வாரிவழங்கிய வள்ளல் என்பதற்காகவும் ராமசாமி நாடார் உயர்ந்த நிலையில் வைத்து மதிக்கப்பட்டார். தம் மதிப்பை வெளிப்படுத்தும் வண்ணம் தாமாகவே சில வழக்கங்களை மக்கள் கடைப்பிடித்தனரே ஒழிய அவர் கட்டுப்பாடுகள் ஏதும் விதித்திருக்கவில்லை. தமிழ்நாட்டில் சமூக, பொருளாதார சீர்திருத்தங்களை முதலில் அடைந்த சாதிகளுள் நாடார் சாதியும் ஒன்று (Hardgrave, 1969). 

ராமசாமி நாடாரே நாடார்களின் குலத்தொழிலாகக் கருதப்பட்ட கள் விற்பனையைத் தவிர்த்து முதலில் மளிகை வியாபாரம் செய்து, பிறகு பெரிய தொழிலதிபராக ஆனவர்தான். அ.சி. சுப்பையாவைப் போல ராமசாமி நாடாருக்கு நிகரான சமுதாய அந்தஸ்து கொண்ட தமிழர்கள் பலர் சிங்கப்பூரில் இருந்தனர் என்றாலும் தன் தனிப்பட்ட ஆளுமையாலும் மக்கட்சேவையாலும் அவர்களுள் முதன்மையானவராக நாடார் திகழ்ந்தார். அ.சி. சுப்பையாவின் சமூக மேம்பாட்டுப் பணிகளைப் பாராட்டி, 125 சிராங்கூன் சாலை முகவரியிலிருந்த, தன் கடைவீடு ஒன்றை அன்பளிப்பாகத் தமிழர் சீர்திருத்த சங்கத்திற்காக நாடார் அளித்தது இன்றளவும் நினைவுகூரப்படுகிறது.

தமிழகம் மற்றும் சிங்கப்பூர் என வங்காள விரிகுடாவின் இரண்டு பக்கங்களிலும், காலனித்துவக் காலத்தில் வசதிவாய்ப்புடன் இருந்த தமிழர்களை பஃப்ளோ சாலை பிரதிநிதித்தது. இவர்கள் சுயதொழில் செய்வோராகவும் கிராமம் மற்றும் சாதி சார்ந்த இந்து-தமிழர் வழக்கங்களைக் கடைப்பிடிப்போராகவும் இருந்தனர். இவர்களுள் பலர் தம் குடும்பத்துடன் சிங்கப்பூரில் வசித்தனர். அவர்களது உறவினர்கள் ஊரில் மேம்பாடுகளை அடைய உதவினர். 

ஆனால் உடலுழைப்புத் தொழிலாளர்களின் கதை இதற்கு நேர்மாறாக அமைந்தது. அவர்கள் குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டுக் காலியாட்களாக இங்கே வந்தனர். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை சிங்கப்பூருக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையே பயணித்த ஊர்க்கப்பல்தான் ஆட்களையும் வியாபாரத்தையும் மட்டுமல்லாமல் அவர்களுக்கான பொருட்களையும் செய்திகளையும் கொண்டுவந்து அவர்தம் சொந்த ஊர்த் தொடர்புகளைத் தக்கவைத்துக் கொண்டிருந்தது.  

அதே காலகட்டத்தில் நோரிஸ் சாலையும் பெரும் மாற்றங்களை அடைந்து கொண்டிருந்தது. நோரிஸ் குடும்பத்தின் சொத்து என்ற நிலை மாறி சிங்கப்பூரில் தமிழ்ச் சமூகத்தின் அடையாளத்தை நிலைநிறுத்தும் பகுதியாக ஆகிவந்தது. விற்பனைக்கு வந்த நோரிஸ் சாலை துண்டு நிலங்கள் பலவற்றைத் தமிழர்கள் வாங்கினர். மேலும் பலவற்றுள் தொழில்முனைவோராக தம் தொழில்களை நடத்தினர். 

நீண்டகால வாடகைதாரர்களை வெளியேற்றவோ அவர்களுக்கு வாடகையை உயர்த்தவோ கூடாது என்ற நிலையை வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் உருவாக்கியது நோரிஸ் சாலை வாசிகளுக்குச் சாதகமாக அமைந்தது. இச்சட்டம் 1990கள் வரை நடைமுறையில் இருந்தது. நோரிஸ் சாலையில் இரண்டுமாடிக் கடைவீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. விரைவிலேயே தொழில்கள் நடக்குமிடமாகவும், தொழில் நடத்துவோர் குடும்பங்களின் வசிப்பிடமாகவும், காலியாட்கள் அறையைப் பகிர்ந்துகொண்டு தங்குமிடமாகவும் அப்பகுதி மாறியது.

(தொடரும்)

**

[Enchanting Asian Social Landscapes (First Edition), Edited by A.Mani, Swarnadvipa Publishing, 2014 என்ற நூலிலுள்ள ‘A tale of two streets in Singapore: Urban renewal, transnationalisation and reconstructing memories’ என்ற கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்பு. சுருக்கமும் மொழிபெயர்ப்பும்: சிவானந்தம் நீலகண்டன். முழுமையான கட்டுரைக்கும், விரிவான ஆய்வு, ஆதாரக் குறிப்புகளுக்கும் மூலப்பிரதியை நாடலாம்.]

[‘தி சிராங்கூன் டைம்ஸ்’ நவம்பர் 2021 இதழில் வெளியானது]