‘இந்த பார்டரைத் தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன்’ என்ற வடிவேலு வாக்கிற்கேற்ப நாம் வாழ்ந்து கொண்டிருந்தவரை எல்லாம் சரியாக இருந்தது. நாம் அந்த விதிகளைப் புரிந்துகொள்ளாமல் அல்லது கண்டுகொள்ளாமல் கானுயிர் எல்லைகளை மீறியதால் இப்போது எந்த எல்லை எப்போது திறக்கும் என்று தெரியாமல் அல்லாட வேண்டியுள்ளது.

நமக்குத்தான் கடவுச்சீட்டு கண்றாவி எல்லாம், தீநுண்மி ஆறு மாதத்திற்கு ஒரு வேடம் என்று பூண்டுகொண்டு தன் இஷ்டப்பட்டபடி உலகமெங்கும் இலவச அனுமதியுடன் பயணச்சீட்டின்றி திரிந்துகொண்டுதான் இருக்கிறது. கடந்த ஈராண்டுகளாக நடந்துகொண்டுவரும் கூத்துகளைப் பார்த்தால், தீநுண்மி அதுவாக ஆடி ஓய்ந்து, மானுடப்பதர்கள் போனால்போகட்டும் என்று மன்னித்து விட்டாலொழிய நமக்கு விடிவுகாலம் இல்லை என்று தோன்றுகிறது.

சிங்கப்பூருக்குள் கொவிட்19 நுழைந்தது கண்டறியப்பட்டு (ஜனவரி 2020) இந்தோ அந்தோ என்று இரண்டு ஆண்டு முழுமையாக ஓடிவிட்டது. ஒளிக்கீற்று லேசாக அவ்வப்போது தெரிவதும், கண்ணைக் கசக்கிக்கொண்டு உற்றுப்பார்த்தால், அதற்குள் கருமேகங்கள் மறைப்பதும் என மாறிமாறி நடந்ததில் எதையும் தாங்கும் இதயங்களாக ஆனதுதான் கண்டபலன். காப்பூசி போட்டுக்கொண்டு வந்த நண்பர், தான் கடந்த பதினைந்து ஆண்டுகளாக சிங்கப்பூரில் போட்டுக்கொண்ட ஊசியின் எண்ணிக்கையைவிட கடந்த ஆறுமாதத்தில் போட்டுக்கொண்டது அதிகம் என்றார். உண்மைதான்.

இது முடியப்போவதுமில்லை. கைபேசியில் அவ்வப்போது மென்பொருளை இற்றைப்படுத்திக்கொள்வதுபோல தீநுண்மியின் மாறுவேடங்களுடன் போராட நம்மை அவ்வப்போது இற்றைப்படுத்திக்கொள்ளத்தான் வேண்டும். நம்மிடமிருக்கும் அறிவியலும் தொழில்நுட்பமும் அவ்வளவுதான். நீயா நானா வா ஒண்டிக்கு ஒண்டி பார்க்கலாம் என்று தீநுண்மியை மல்லுக்கு அழைக்க நம்மிடம் வலுவில்லை.

நாசித்துவாரங்களைக் காப்பாற்றும் வகையில் எச்சிலில் கிருமித்தொற்று கண்டறிவது விரைவில் புழக்கத்திற்கு வந்துவிடும் என்று தெரிகிறது. அதைப்போலத் தடுப்பூசி / காப்பூசிகளுக்கு மாற்றாகச் சொட்டுமருந்து ஒன்றையும் கண்டுபிடித்துவிட்டார்கள் என்றால் தோள்பட்டை பிழைக்கும். இல்லாவிட்டால் வலியைக் குறைக்க சிறிய ‘மேகி’ தக்காளிச்சாறு போத்தலைக் குளிர்வித்து சீராக உருட்டவேண்டியதுதான். இப்படியெல்லாம் வலிக்குள்ளும் புத்தாக்கத்துடன் இன்புற்றுக்கொள்ளும்படி ஆகிவிட்டது நிலைமை!

கடந்த ஈராண்டில், நல்லபடியாகவோ கெட்டபடியாகவோ, வாழ்க்கையில் அனைவருக்குமே குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உண்டாகியிருக்கும். சொந்த அனுபவம், சுற்றம், நட்பு, ஊடகச் செய்திகள் என அனைத்திலும் மீண்டும்மீண்டும் பல்வேறு கதைகளின் வழியாக இந்த மாற்றத்தைக் காணமுடிகிறது. நான் கண்டவரை ஒரேயொரு விதிவிலக்கு மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி. தான் எப்போதும் வெளியில் சுற்றுவதோ, பயணங்கள் மேற்கொள்வதோ இல்லை என்பதாலும், கொவிட்டுக்கு முன்பும் அன்றாடம் அறைக்கதவைத் தாழிட்டுக்கொண்டு வாசிப்பு, மொழிபெயர்ப்புப் பணிகளில் முழுநேரமும் ஈடுபட்டு வந்ததாலும் தற்போதும் அதுவே தொடரும் நிலையில் தனக்குப் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை என்று அண்மைய நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார். அவரைப்போல அரிதாகச் சிலர் இருக்கலாம். அவரும்கூட நண்பர்கள் பலரை தீநுண்மிக்கு பலிகொடுத்துவிட்டதைக் குறித்து வருந்தினார். அனைவருக்கும் வாழ்வாதாரத்தைச் சுரண்டிப் பார்த்தது முதல் வாழ்க்கையையே பறித்துக்கொண்டதுவரை அனேக அட்டூழியங்களை நிகழ்த்திவிட்டது தீநுண்மி.

சிங்கப்பூரில் கொவிட்19 பதவியேற்ற தொடக்க காலத்திலேயே, எல்லோரும் உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து வருமோ என்று பயந்திருந்த காலத்தில், வினோதமான முறையில் சுற்றிவளைத்து, முதல் தாக்கம் என் மகளுக்கு வந்தது. என் மகளின் நெருங்கிய தோழி, அண்டைவீட்டில் வசிக்கும் சமவயது ஃபிலிப்பைன்ஸ் பெண். இருவரும் வினாதெரிந்த காலத்திலிருந்து நட்புள்ளவர்கள். பாலர்பள்ளியில் வகுப்புத் தோழிகள்.

தொடக்கப்பள்ளி வேறுவேறு என்று ஆனபின்னும் வீடுதிரும்பியபின் அன்றாடம் மாலையில் சிலமணி நேரமாவது ஒன்றாக விளையாடுவார்கள். அடிக்கடி எங்கள் வீட்டில் சாப்பிட்டதால் தோசைக்கு சாம்பார் வேண்டாம், பொடி வையுங்கள் என்று கேட்டுவாங்கி சாப்பிடும் அளவுக்கு அந்த ஃபிலிப்பைன்ஸ் பெண் ஆகியிருந்தாள். இருவருமே அவரவர் பெற்றோர்க்கு ஒற்றைப் பிள்ளை என்பதால் இந்த நட்பு எங்களுக்கும் வசதியாக இருந்தது.

கொவிட்டால் அந்தப் பெண்ணுடைய தந்தையின் வேலைக்கு ஆபத்து வந்தது. அவர் நிரந்தரவாசியோ குடிமகனோ அல்ல என்பதால் குறுகிய அவகாசத்தில் வேறுவேலைக்கு மாற இயலவில்லை. மகளுடன் சொந்த நாட்டுக்கே திரும்பவேண்டியதாகிவிட்டது. தன்னுடைய இரட்டையாக சுற்றிவந்த தோழியைப் பிரிந்தது இன்னும் என் மகளுக்கு ஆறவில்லை. வாரம் ஒருமுறை ஸுமிக்கிறார்கள், ‘ரோப்ளாக்ஸ்’ விளையாடுகிறார்கள் என்றாலும் தொட்டுத் தழுவிக்கொள்ள இயலாமல் திடீரென ஒருநாள் விழுந்துவிட்ட பெரும் இடைவெளியை எதிர்கொள்ள இயலாமல் திணறிவிட்டார்கள். எப்போது கொவிட் விலகும், தோழி மீண்டும் சிங்கை திரும்புவாள் என்ற மகளின் கேள்விக்கு என்னிடம் விடை இல்லை.

இடைவெளி என்றதும் ‘வீட்டிலிருந்து வேலை’ குறித்த ஒருவிஷயம் நினைவுக்கு வருகிறது.

நிறுவனங்களுக்குப் பொதுவாக வீட்டிலிருந்து வேலை என்கிற ஏற்பாடு மிகச்சிறப்பான பலன்களையே அளித்துள்ளது. வீட்டிலிருந்து செய்வதால் கவனிக்கவில்லை என்ற பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காகக் கண்ணுங்கருத்துமாகவும் மேலாளர் எதிர்பார்ப்பைவிடக் கொஞ்சம் அதிகமாகவும் வேலை செய்கின்றனர். மேலும் நீக்குப்போக்கான வேலைநாளாக அமைவதால் ஊழியர்களே அதிகத்திறனுடனும் பணியாற்றுகின்றனர். ஆனால் இவ்விரண்டும் அல்லாமல் மூன்றாவது காரணமும் ஒன்றுண்டு. அதுதான் இடைவெளி.

இடைவெளிதான் நமக்கு ஆறுதலையும் அக்கறையையும் அளிக்கிறது, அக்கரைப் பச்சையையும் காட்டுகிறது.  வீட்டிலிருக்கும்போது வேலையையும் வேலையிலிருக்கும்போது வீட்டையும் நினைத்துக்கொண்டு திரிவது நம் இயல்பு. அதனால் வீட்டில் உட்கார வைத்ததால் எப்போதும் வேலையை நினைத்துக்கொண்டிருப்பதைத் தவிர்க்க இயலவில்லை. உடலை அலுவலகத்தில் இருந்து பிரித்து உள்ளத்தை அங்கேயே அலுவலகத்தையே சுற்றிவரச் செய்துவிட்டது.

கணவன் மனைவி இருவருக்கும் வீட்டிலிருந்து வேலை என்றாலும் ஆபத்துதான். கிட்ட இருந்தால் முட்டப்பகை. கண்ணுக்கு அருகில் ஒரு பொருளை வைத்தால் அதைப் பார்க்கமுடியாது, கண்ணை மறைக்கும். அன்பைப் பிரயோகிக்கவும் ஓர் ‘இடைவெளி’ தேவைப்படுகிறது. மதுவை நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று என்பார் நாஞ்சில் நாடன். வீட்டிலிருந்து வேலையும் அப்படித்தான். அகலாது அணுகாது தீக்காயும் திறனிருந்தால் வீட்டிலிருந்து வேலை சாதகம், இல்லையேல் பாதகம். பெருவாரியான மக்கள் வேலையிடங்களுக்குத் திரும்பிவிட்டது நல்லதே, பேருந்திலும் பெருவிரைவு வண்டிகளிலும் உச்சநேரக் கூட்டம் பழையபடி எகிறிவிட்டது என்றாலும்!

மெய்நிகர் சந்திப்புகளில் ஈராண்டுகளாக அன்றாடம் புழங்கிக்கொண்டிருந்தாலும் இன்னும் அந்த மிருகத்தை நாம் வசப்படுத்திவிட்டதாகத் தோன்றவில்லை. தமிழாட்கள் என்றில்லை உலகமெங்குமே நிலை அப்படித்தான் இருக்கிறது. அமெரிக்காவில் இந்த ஆண்டின் மெய்நிகர்ச் சந்திப்புகளில் அசம்பாவிதாமாகவும் அருவருக்கும் விதத்திலும் – தெரியாத்தனமாகத்தான் – நடந்துகொண்டதற்காக, திட்டு வாங்கியது முதல் வேலையிழப்புவரை பத்தில் நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதாகச் செய்தி வாசித்ததும் அதிர்ச்சியடைந்தேன். அதாவது, நாற்பது விழுக்காடு. கணினியிலேயே வாழ்கிறோம் அப்படி இப்படி என்று பீற்றுகிறோமே தவிர இன்னும் கற்கவேண்டிய அடிப்படைகளே கணிசமாக உள்ளன என்பதுதான் உண்மை.

இரண்டு வருடங்களாகப் போகாததால் ஊர் பயண ஆர்வம் கூடிக்கொண்டே போய், வீடடைவு இல்லாத விமானப் பயணங்கள் தொடங்குகின்றன என்றதும், அடித்துப்பிடித்துப் பயணச்சீட்டை வாங்கியிருந்தேன். கொவிட்டுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது இரண்டு மடங்கு என்றாலும் இன்றைய தேதிக்கு மலிவுதான். பயண ஏற்பாடுகளெல்லாம் முடிந்தது. வெடவெடக்கும் மார்கழி மாதக் குளிரில் சுடச்சுட பொங்கல் சாம்பார் சாப்பிடும் கனவுகளாக வந்துகொண்டிருந்தது. திடீரென்று கொவிட் ஓமிக்ரான் வேடத்தில் வந்து அனைத்தையும் குலைத்தது. எல்லைக் கட்டுப்பாடுகள் சிறுபிள்ளைகளை அழைத்துச் செல்வதற்கு ஏற்றதாக இல்லை. சரி கனவு கலைந்ததோடு போகட்டும் என்றால் பயணச்சீட்டுக்கான காசும் அடியோடு போய்விடுமோ என்ற கவலை அரிக்க ஆரம்பித்தது. கொவிட் கீழே தள்ளியதோடு விடாமல் குழியையும் பறிக்கிறது.

‘ஸ்கூட்’ விமான நிறுவனம் பயணச்சீட்டு வாங்கும்போதே பயணத்தேதியை வேண்டுமானால் மாற்றலாம் ஆனால் பணம் வாபஸ் கிடையாது என்ற நிபந்தனையோடுதான் விற்றது. அப்படியா வந்துவிடப்போகிறது என்று துணிந்து வாங்கினேன், வந்துவிட்டது. ஜூன் பள்ளி விடுமுறைக்குப் பயணத்தேதியை மாற்றலாம் என்றால் மார்ச் வரைதான் ஸ்கூட் இணையதளத்தில் தேதி காட்டுகிறது. மார்ச்சுக்கு மாற்றி… பிறகு ஜூனுக்கு மாற்றி.. ஒவ்வொரு முறை மாற்றுவதற்கும் கட்டணமுண்டு. மாற்றும் தேதியில் பயணக்கட்டணம் அதிகமென்றால் அதையும் சேர்த்துக் கட்டவேண்டும். விட்டதைப் பிடிக்க முயன்று மொத்தத்தையும் இழக்கும் சூதாட்டம் போல ஆகிவிடுமோ என்ற அச்சம் வேறு. பணம் போனால் பாவம் போச்சு என்பார் என் தந்தை. மொத்தமாக விட்டுத்தொலைத்துவிடலாமா என்றும் ஓர் எண்ணம்.

சரி எதற்கும் ஒரு கடைசி முயற்சியாக இருக்கட்டும் என்று ஸ்கூட்டுக்கு ஓர் உருக்கமான கடிதத்தை வரைந்தேன். தொடர்ந்து வலைப்பூவில் ஏதாவது எழுதுவதால் வேறேதும் பலன் கிட்டியதா என்பது தெரியாது, ஆனால் இதுபோலத் தேவைப்படும்போது கடிதங்கள் எழுத அலுப்புத் தட்டுவதில்லை என்கிற அளவில் ஒரு நன்மை விளைந்துள்ளது. ஸ்கூட்டப்பன் என்ன நினைத்தானோ பயணச்சீட்டுகளுக்கான முழுப்பணத்தையும் மூன்றே நாளில் தம்பிடி சேதாரமின்றித் திருப்பித் தந்துவிட்டான். உருக்கமான நன்றிக்கடிதம் ஒன்றும் அனுப்பிவிட்டேன். இந்நேரம் வங்கமா முந்நீருக்கு மேலே முப்பதாயிரம் அடி உயரத்தில் பறக்கவேண்டியவன் இதை எழுதி ஆறுதல் தேடிக்கொண்டிருக்கிறேன்.

‘என்ன மறுபடியும் துபாய்க்கே போகலாமா? இல்ல இந்த ஊர்லயே இருந்து ஒரு ஓரஞ்சாரமா ஒக்காந்து தொழில் பண்ணலாமா?’ என்று வடிவேலு கிளி ஜோசியம் பார்ப்பதுபோல, ஓமிக்ரான் அடங்கி மீண்டும் நிலைமை மேம்பட்டால் மறுபடியும் ரிஸ்க் எடுத்து ஸ்கூட்டிலேயே ஊருக்கு சீட்டைப் போடலாமா அல்லது இப்படி சிங்கப்பூருக்குள்ளேயே காலத்தை ஓட்டலாமா என்ற கேள்விக்கும் இப்போதைக்குத் தெளிவான விடையில்லை.

Screenshot 2021-12-08 at 10.55.46 PM

இந்த வாரத்தோடு அன்றாடம் கொவிட் பரவல், கட்டுப்பாடுகள் விவரங்கள் அளித்துவந்த அரசாங்க வாட்ஸாப் சேவை நிறுத்தப்படுமாம். ஈராண்டுகளில் கொவிட் பிரச்சனை தீரவில்லை, ஆனால் பழகிவிட்டது. செய்தித்தாட்களில் கொவிட் செய்தி முதல் பக்கத்திலிருந்து மூன்றாம் பக்கத்திற்கு மாறியிருக்கிறது. அந்த அளவில் முன்னேற்றம்தான். கடவுள் நம்பிக்கை உண்டா என்று ஜெயகாந்தனிடம் கேட்டதற்கு, ‘எதையாவது நம்பித் தொலைப்போம். நம்பிக்கை இல்லாம இருக்கறதுதான் கெடுதல்’ என்றார்.

நம்புவோம், நம்பிக்கையுடன் புத்தாண்டை எதிர்கொள்ளத் தயாராவோம்!