நான் சிலகாலம் தொடர்ந்து இலக்கிய விமர்சனங்கள் எழுதியிருக்கிறேன். இப்போது அவ்வளவாக எழுதுவதில்லை. ஆயினும் விமர்சனப் பார்வை என்பது ஆதாம் கடித்த ஆப்பிளைப் போலத்தான்,  ஒருமுறை உள்ளே வந்துவிட்டால் என்றென்றைக்குமாகத் தங்கிவிடும். இலக்கியப் படைப்புகளை விமர்சன நோக்கில் அலசிக்கொள்வதை அதன்பிறகு தவிர்க்கவே இயலாது.

ஜெயகாந்தன் சொன்னதைப்போல எழுதுவதை நிறுத்திக்கொள்ளலாம், சிந்திப்பதை நிறுத்தமுடியாது. அத்தகைய சிந்தனைகளின் அடிப்படையிலும் தொடர்ந்த அவதானிப்புகள், அனுபவங்களின் அடிப்படையிலும் இலக்கிய விமர்சனத்தின் தன்மைகள் குறித்தும் விமர்சகர்கள் கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்தும் சில கருத்துகளை உங்கள்முன் வைக்க விரும்புகிறேன்.

இலக்கிய விமர்சனத்தின் அடிப்படையான இரண்டு தன்மைகளை முதலில் தெளிவுபடுத்திக்கொள்வோம்.

முதலாவது, ஒரு கத்தியைப் போலப் பிரிக்கக்கூடிய தன்மையைத் தன்னுடைய இயல்பாகக் கொண்டது விமர்சனம். ஒட்டிக்கொண்டு இருக்கக்கூடிய ஒரு பொருளை, கத்தி தன் கூர்முனையால் இரண்டு துண்டுகளாகப் பிரிக்கிறது. அது புற்றுநோய்க் கட்டியை உடலிலிருந்து பிரித்து உயிரைக் காக்கப் போகிறதா அல்லது தலையை உடலிலிருந்து பிரித்து உயிரைப் போக்கப் போகிறதா என்பது அடுத்த விஷயம். ஆனால் கத்தியின் இயல்பான தன்மை பிரிப்பது. இலக்கிய விமர்சனம் என்பதும் அவ்வாறே இழையிழையாகப் படைப்பைப் பிரித்து அலசும் தன்மை உடையது.

மேலும், விமர்சனம் என்னும் அறிவுச்செயல்பாடு, பொதுப்படையாக, ஒற்றையாகச் சொல்லப்பட்டாலும், தான் அணுகும் படைப்பைப் பல வழிகளில் பிரிப்பது மட்டுமின்றி தன்னைத்தானே தொடர்ந்து பிரித்துக்கொண்டும் முன்னேறிச் செல்லக்கூடியது. இதை விளங்கிக்கொள்ள ஓர் எடுத்துக்காட்டைப் பார்க்கலாம்.

நவீனத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளாக இன்று நாம் கருதும் பலர் இணைந்து ஐம்பதுகளில் ‘தமிழ் எழுத்தாளர் சங்கம்’ என்ற ஒன்றைத் தமிழகத்தில் நடத்திவந்தனர். அச்சங்கத்தில் 1959ஆம் ஆண்டு நடந்த ஒரு கூட்டத்தில் ந. பிச்சமூர்த்தியும் கு. அழகிரிசாமியும் இலக்கிய விமர்சனம் நமக்கு இப்போது தேவையில்லை என்றும் முதலில் படைப்புகள் தாராளமாக எழுந்துவரட்டும் என்றும் தம் கருத்துகளை முன்வைக்கின்றனர். சிங்கப்பூரிலும் சரி உலகெங்கும் சரி இந்தக்குரல் தமிழிலக்கியச் சூழலில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருப்பதைக் காணலாம்.

ந. பிச்சமூர்த்தியும் கு. அழகிரிசாமியும் முறையே புதுக்கவிதை மற்றும் நவீன சிறுகதையின் தலைமகன்களாகக் கருதப்படுகின்றனர். அவர்கள் தம்முடைய படைப்புகளின் தரத்தைத் தம்மளவில் உணர்ந்தே இருந்திருப்பர். ஆகவே தம் படைப்புகள் விமர்சனத்தால் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற ஐயத்தில் அக்கருத்தை அவர்கள் முன்வைக்கவில்லை. இலக்கிய விமர்சனத்தை உள்ளே விட்டால் அது படைப்பு சக்தியையும் நேரத்தையும் தின்றுவிடுமோ என்கிற அச்சத்திலேயே விமர்சனத்தை ஒதுக்க முயன்றிருக்கின்றனர். ஆயினும் க.நா.சு.வும் சி.சு. செல்லப்பாவும் விமர்சனத்திற்கான நேரம் வந்துவிட்டது என்ற கருத்தை அக்கூட்டத்தில் முன்வைக்கின்றனர். ஆகவே விமர்சனம் வேண்டுமா வேண்டாமா என்பதிலேயே முதல் கட்டப் பிரிவு வந்துவிடுகிறது.

அதோடு அப்பிரிவு நிற்பதில்லை. அடுத்தகட்டமாக விமர்சனத்தின் வழிமுறை என்ன என்பதில் பிரிவு உண்டாகிறது. ஒரே அணியில் நின்று விமர்சனம் வேண்டும் என்று வாதாடிய க.நா.சு.வும் செல்லப்பாவும் இருவேறு விமர்சன வழிமுறைகளைக் கையாண்டு, எதிரும் புதிருமாக நின்றனர். அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து அலசி, அறிவியல் சோதனையைப்போல புறவயமாக நிறுவ முயல்வது செல்லப்பா பாணி. இது நல்ல படைப்பு அல்லது தரமில்லாத படைப்பு என்று கைகாட்டிவிட்டு மற்றதை வாசகரையே வாசித்துப்பார்த்து உணர்ந்துகொள்ளும் அகவய முறை க.நா.சு. பாணி. சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘எழுத்து இதழ்த் தொகுப்பு – சி.சு. செல்லப்பா படைப்புகள்’ நூலில் செல்லப்பாவின் அனேக படைப்புகள் க.நா.சு.வுக்கு பதில் சொல்லி செல்லப்பாவால் எழுதப்பட்டதுதான்.

அதற்கு அடுத்தகட்டப் பிரிவினையும் உண்டு. க.நா.சு. போலவே ரசனை விமர்சனத்தை முன்வைத்த வெங்கட் சாமிநாதன், க.நா.சு.வின் ரசனை அணுமுறைகளிலிருந்து மாறுபடும் இடங்கள் உண்டு. இது இப்படியே முடிவில்லாமல் பிரிந்து பிரிந்து பிரிந்து சென்றுகொண்டேதான் இருக்கும். ஆகவே விமர்சனம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஒற்றை முறையைப் பரிந்துரைக்க முயன்றால் அங்கேயே அது அடிபட்டுப் போய்விடும். விமர்சனம் எங்கு நுழைகிறதோ அங்கெல்லாம் கூடவே பிரிவுகளும் நுழையும், அதுவே விமர்சனத்தின் தன்மை என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

இரண்டாவதா, விமர்சனம் என்பது முதன்மையாக வாசகரை நோக்கியே அமையவேண்டும். எவ்வாறு ஒரு படைப்பு வாசகர்களை நோக்கி எழுதப்படுகிறதோ அவ்வாறே விமர்சனமும் வாசகர்களை நோக்கியே எழுதப்படவேண்டும். இந்த விஷயத்தில் நானும் பிழைகளைச் செய்துள்ளேன். பிறரும் தொடர்ந்து செய்கின்றனர். படைப்பாசிரியரின் திறனை ஆராய்வது விமர்சனத்தின் – குறிப்பாக ரசனை விமர்சனத்தின் – நோக்கமாக இருக்கலாகாது.

படைப்பாசிரியர் இறந்துவிட்டார் என ரொலான் பார்த் சொன்ன அளவுக்குப் படைப்பாளியை முற்றாக ஒதுக்கிவிட முடியாது என்றாலும் வாசகப் புரிதலை சற்றாவது மேம்படுத்தாத, படைப்பாளிகளின் குறைநிறைகளை மட்டும் கணக்கிட்டுக்கொண்டு செல்லும் விமர்சனம் தற்காலத்தில் பொருட்படுத்தக்க ஒன்றாக இராது.

அதோடு, இந்தப் படைப்பை அணுக இது ஒன்றே வாசல் என்று இறுக்கமான ஒற்றைவழியை முன்வைப்பதாகவும் விமர்சனம் அமைந்துவிடலாகாது. ஒருமுறை கோணங்கியுடன் பேசிக்கொண்டிருந்தபோது விமர்சனம் என்பதைவிட வியாக்கியானம்தான் நமக்கு இன்றைய தேவையோ என்று கேட்டார். அதாவது, படைப்பாளி ஏதோ ஒன்றை மனதிற்கொண்டு எழுதியிருக்கலாம். ஆயினும், ஓர் இலக்கியப் படைப்பு தன்னியல்பாக அங்கிருந்து எழுந்து மேலான பல்வேறு புரிதல்களுக்கான சாத்தியங்களை அளிக்கிறது. அவற்றுள் ஒன்றையாவது எடுத்துக்காட்டாதவற்றை விமர்சனங்களாகக் கருதவியலாது. அதேவேளையில் அப்படி எடுத்துக்காட்ட இடமளிக்காத படைப்புகளை இலக்கியமாகவும் கருதவியலாது.

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை ஒரு செய்யுளுக்கு ஆக அதிகமாக ஐம்பது விதமான அர்த்தங்களை அளிக்கும் திறன் பெற்றிருந்தார் என்று தன்னுடைய ஆசானைக் குறித்து உ.வே.சா. எழுதியிருக்கிறார். நிச்சயமாக அச்செய்யுளை இயற்றியவர் ஐம்பது வெவ்வேறு அர்த்தங்களை மனதிற்கொண்டு எழுதியிருக்க வாய்ப்பில்லை. அதைப்போலவே ஒரு நல்ல இலக்கியப் படைப்பு நம்மைப் பல்வேறு வகைகளில் விசாரித்துக் கொள்வதற்கான முகாந்திரங்களை, உரையாடல்களுக்கான வாசல்களைத் திறந்துவிடுகிறது. அது கலையின் இயல்பு.

எவ்வளவு வாசல்களைத் திறக்க இடமளிக்கிறதோ அவ்வளவு தரமான, வளமான இலக்கியப்படைப்பு என்ற அளவில் படைப்பின் சிறப்பைப் புரிந்துகொள்ளவேண்டும். அந்தவகையில் வியாக்கியானங்களும் விமர்சனங்களாக மாறுகின்றன. எந்த மகாவித்வானும் ஓர் உருப்படாத செய்யுளுக்கு ஐம்பது அர்த்தங்களை அளிக்க விரும்பமாட்டார். கனிவன்புமிக்க இயேசுவுக்கும்கூட வெற்றுச் சாடிகளிலிருந்து ஒயினை உண்டாக்க விருப்பமில்லை, முதலில் கற்சாடிகளை நீரால் நிரப்பச் சொல்கிறார்.

சுருக்கமாகச் சொன்னால் இலக்கிய விமர்சனத்தின் பிரிவினைத் தன்மையையும் வியாக்கியானத் தன்மையையும் உணர்ந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

அடுத்ததாக விமர்சகர்கள் கவனத்திற்கொள்ளவேண்டிய மூன்று விஷயங்களுக்கு வருவோம். திருமணத்திற்காக ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது பத்து பொருத்தங்கள் பார்ப்பது உண்டு. அதைப்போலத் தற்காலத்தில் இலக்கிய விமர்சனங்கள் எழுத முற்படுவோர் மூன்று பொருத்தங்களைப் பார்க்கவேண்டியிருக்கிறது; தளப் பொருத்தம், திசைப் பொருத்தம், தேர்வுப் பொருத்தம்.

criticism

PC: hlibguides.mjc.edu

முதலில் தளப் பொருத்தம். விமர்சனத்தை எந்த தளத்தில், எப்படி வெளிப்படுத்தப் போகிறோம் என்பதைக் குறித்த கவனத்துடன் செயல்படுவதே தளப் பொருத்தம்.

எழுத்து மூலமாக வைக்கப்படும் விமர்சனத்திற்கு அன்றும் இன்றும் வலுவான மரியாதை உண்டு. எழுதப்பட்ட எழுத்திற்கு ஓர் அதிகாரபூர்வ, ஆதாரபூர்வ தன்மை வந்துவிடுகிறது என்பதே காரணம். காதல் கடிதம் கொடுத்துவிட்டான் என்று ஊரே திரண்டுவந்து கடிதம் கொடுத்தவனைப் பிடித்து அடிப்பது இருபதாண்டுகளுக்கு முன்கூட தமிழக கிராமங்களில் வழக்கத்தில் இருந்தது. ஆனால் காதலை ஒரு பெண்ணிடம் வாய்மொழியாகச் சொல்வது பிரச்சனையில்லை, கடிதமாக எழுத்தில் கொடுத்தால் பெரிய பிரச்சனை!

ஆகவே தன் விமர்சனம் பொருட்படுத்தத்தக்கது என்று நம்புவோர் எழுத்து வடிவத்தில் வெளியிடவேண்டும். வாய்மொழியாகச் சொல்வதில் அதிக பயனில்லை.

இன்று விமர்சனத்தை எழுத்தில் வெளிப்படுத்த மெய்யூடகங்கள், மெய்நிகர் ஊடகங்கள் என இரண்டு வழிகள் உள்ளன. மெய்யூடகங்களான அச்சிதழ்கள் குறைவு. மேலும் அவை குறுகிய எண்ணிக்கையிலான வாசகர்களையே சென்றடைகின்றன. ஆயினும் இலக்கியத்தை அன்றாடம் சிந்தித்துக்கொண்டிருப்பவர்கள் குறைவானவர்களே. விமர்சனம் அவர்களைச் சென்றடைந்தால் போதும், தன் முழுமையான பயனை அடையும். வலைதளம், வலைப்பூ ஆகிய மெய்நிகர் தளங்களையும் பயன்படுத்தலாம். அங்கு வருபவர்கள் இலக்கியத்தை நாடி வருபவர்கள்.

விமர்சனத்தில் சொற்கூர்மை எந்த அளவுக்கு இருக்கலாம் என்பதிலும் தளம் குறித்த கவனம் தேவையாகிறது. முகநூல் போன்ற நட்பூடகங்களில் பொதுவில் விமர்சனங்களை வெளியிடுவது தேவையற்ற சிக்கல்களைக் கொண்டுவருகிறது. இலக்கியத்தின், விமர்சனத்தின் தன்மைகளை அறியாதவர்கள் அங்கே மிகுந்திருப்பதால் ஓரிரு சொற்களைப் பிடித்துக்கொண்டு வம்புகளில் இறங்கலாம். மேலும் உடனுக்குடன் பதிலளிக்கும் அவசரமோ, விருப்பக்குறிகள் பெறும் ஆர்வமோ இலக்கியத்திற்கோ விமர்சனத்திற்கோ அவசியமில்லை. இது ஆயிரம் காலத்துப்பயிர், பொறுமையாக வளரக்கூடியது.

இரண்டாவது, திசைப் பொருத்தம். விமர்சனம் உருவாக்கும் உரையாடல் எந்தத்திசையில் செல்லவேண்டும் என்பதைக் குறித்து விமர்சகர் சற்றாவது சிந்தித்திருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துவதே திசைப் பொருத்தம்.

படைப்பாசிரியர் இறந்துவிட்டார் என்ற முழக்கம் உருவானதே படைப்பாளி அளிக்கக்கூடிய ஒரே அர்த்தம் ஓர் இலக்கியப்பிரதி மூடுண்ட பிரதியாக ஆக்கிவிடுகிறது என்பதால்தான். படைப்பாசிரியரை மாய்த்துவிட்டு விமர்சகர் அதே வேலையைச் செய்வதில் பொருளில்லை. ஆகவே விமர்சனங்கள் உரையாடல்களுக்கான முகாந்திரங்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்படத் தக்கதே.

ஆயினும் அந்த உரையாடல்கள் எந்த திசையில் நகரவேண்டும் என்பதைக் குறித்த குறைந்தபட்ச தயாரிப்பு, முன்யோசனை விமர்சகருக்கு இருக்கவேண்டும். இல்லாவிட்டால் விமர்சகருடைய வாசிப்பு, அறிவு, திறமை இவற்றைக் காட்டுவதாகத்தான் விமர்சனம் அமையும். இந்த இடத்தில் என் சொந்த அனுபவத்திலிருந்து ஓர் எடுத்துக்காட்டைப் பார்க்கலாம்.

‘ஊடறு 2019’ பெண்ணிலைச் சந்திப்பில் வெளியிடப்பட்ட ‘சங்கமி’ நூலைக் குறித்து நான் ஒரு கட்டுரை   எழுதியிருந்தேன். கட்டுரையை வாசித்த நண்பர் ஒருவர் சாதி, பெண்கள் முன்னேற்றம் குறித்த ஒரு கட்டுரையை அம்பேத்கர், பெரியார் ஆகியோரைக் குறிப்பிடாமல் எப்படி என்னால் முடிக்கமுடிந்தது என்று வினவினார்.

“சாதி ஒழிப்புக்கான சமூக மேம்பாட்டு நம்பிக்கைகள் அனைத்தும் தோல்வியைத் தழுவியுள்ள சூழ்நிலையில் புதிய சிந்தனைகள், அணுகுமுறைகள் தேவைப்படுகின்றன. ஒருவேளை அவை  பெண்களிடமிருந்து வரக்கூடும் என்று தோன்றுகிறது.” என்று நான் அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, உரையாடல் இத்திசையில் நகரவேண்டும் என்று விரும்பியும் மீண்டும் பழைய அம்பேத்கர்-காந்தி-பெரியார் விவாதங்களுக்குள்ளேயே சென்றுவிடக்கூடாது என்கிற எண்ணத்தில்தான் அவர்கள் பெயர்களைத் தவிர்த்தேன் என்றும் விளக்கினேன்.

இந்த எடுத்துக்காட்டில் உள்ள கட்டுரை புனைவிலக்கிய விமர்சனம் அல்ல என்றாலும் உரையாடல்களை எழுப்ப விரும்பும் எழுத்துகளுக்கான அடிப்படைப் பொறுப்பாக உரையாடலின் திசையைக் குறித்த அனுமானமும் அதற்கேற்ப எழுதும் அணுகுமுறையும் தேவை என்பதை முன்வைக்கிறேன். இல்லாவிடில் விமர்சனங்கள் நேரவிரயத்திலோ மனக்கசப்பிலோ இரண்டிலுமோ சென்று முடியலாம்.

மூன்றாவதாக, தேர்வுப் பொருத்தம். எத்தகைய படைப்புகளை விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதைக் குறித்த கவனம்.

சுந்தர ராமசாமி நாஞ்சில் நாடனின் ஆரம்பகட்டப் படைப்புகளைக் குறித்து, இவர் வார்த்தைகளை வாரி இறைக்கிறார், முதிரா முற்போக்கு என்றெல்லாம் காட்டமாக விமர்சித்தபோது அதனால் நாஞ்சில் நாடன் வருத்தமடைந்திருப்பார் என்றாலும், ஓர் இலக்கிய முன்னோடி அப்படிச் சொல்கிறார் என்பதால் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அவரே பாராட்டும்படியாக ஒரு படைப்பை எழுதிவிடவேண்டும் என்று முடிவுசெய்துகொண்டு காலப்போக்கில் அதைச் செய்தும் காட்டுகிறார். எழுத்தாளர் ஆ.மாதவனுக்கும் அதேபோல அனுபவம் உண்டு.

அவ்வளவு பொறுமை மிக்க படைப்பாளிகளை இன்று காண்பதரிது. ஓர் இலக்கிய விமர்சனத்தில் படைப்பு குறைசொல்லப்படுகிறது என்றால் விமர்சகரின் பின்னாலுள்ள அரசியல் என்ன என்று ஆராய்வதே இன்றைய நடப்பு. இது காலத்தின் கோலம். யாரையும் குறைசொல்வதற்கில்லை.

சில ஆண்டுகட்கு முன் தமிழிலக்கிய உலகின் இளம் படைப்பாளிகளின் படைப்புகளைக் குறித்த விமர்சனங்களைத் தன் இணையதளத்தில் வெளியிட்டுத் தீவிரமான விவாதங்களை உருவாக்க ஆரம்பித்தார் எழுத்தாளர் ஜெயமோகன். அம்முயற்சி விரைவிலேயே நிறுத்தப்பட்டது. தேவையற்ற திரிப்புகளையும் காழ்ப்புகளையும் அவை உருவாக்கின என்று காரணம் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, தன்னுடைய தேர்வே இனி தன் விமர்சனமாக இருக்கும் என்று ஜெயமோகன் எழுதினார். அதாவது, தன் தலைமுறை அதற்கு முந்தைய தலைமுறைப் படைப்பாளிகளின் படைப்புகளைத் தீவிரமாக விமர்சிப்பதைத் தொடதும் அதேவேளையில் இளம் படைப்பாளிகளின் படைப்புகளில் தரமான படைப்புகளாகத் தான் கருதுபவற்றைக் குறித்து மேலும் சில திறப்புகளை அளிக்கும் விதமாகவே இனி அவரது விமர்சன அணுகுமுறை அமையும். ஆக சிங்கப்பூரில் என்றல்ல, தீவிரமான குறைசொல்லும் விமர்சனங்கள் – அவற்றில் உண்மை இருந்தாலும் இல்லாவிட்டாலும் – உலகின் எந்தப்பகுதியிலும் தேவையற்ற சிக்கல்களையே உருவாக்குகின்றன.

Polemics எனப்படும் கருத்துப்பூசல்கள் எல்லாக் காலத்திலும் இலக்கியத்தில் உண்டு. ஆனால் எவ்வளவு தீவிரமாக இருந்தாலும் அது கருத்தளவில் நின்றுவிட்டால் சிக்கலில்லை. கடந்த தலைமுறையில் அபூர்வமாகவே தனிப்பட்ட வம்புவழக்குகள் வந்தன. தற்காலத்தில் எல்லா இலக்கியக் கருத்துகளும் படைப்பாளிக்கான தனிப்பட்ட பாராட்டாகவோ தாக்குதலாகவோ கருதப்படுவதாலும் இணைய, மெய்நிகர் ஊடக ஊடுருவல்களாலும் அவை தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதிக்கும் அளவுக்குச் சென்றுவிடுகின்றன. ஒருவகையில் பிச்சமூர்த்தியும் அழகிரிசாமியும் விமர்சனத்தை அஞ்சியது இன்று நடந்துகொண்டிருக்கிறது. ஆகவே படைப்புத் தேர்வுப் பொருத்தம் மிகமிக அவசியமாகிறது.

ஒட்டுமொத்தமாகத் தொகுத்துச் சொன்னால், விமர்சனம் என்பது தன்னளவில் ஒரு பிரிக்கும் சக்தி. தான் செல்லுமிடங்களிலெல்லாம் சிறுசிறு வேறுபாடுகளோடு பிரிவுகளை உண்டாக்கிக்கொண்டே வளர்ந்து செல்லும். அதுவே அதன் பயன்மதிப்பு. விமர்சனம் முதன்மையாக வாசகரை நோக்கி அமையவேண்டும். இவ்விரண்டும் ரசனை விமர்சனத்தின்  அடிப்படைகள்.

விமர்சனம் வெளியிடப்படும் தளம், விமர்சனம் உருவாக்கும் விவாதங்களின் செல்திசை, விமர்சனத்திற்கான படைப்புகள் தேர்வு ஆகியவற்றில் கவனத்துடனும் விவேகத்துடனும் தற்கால விமர்சகர் செயல்படவேண்டியுள்ளது. இவற்றிற்கு உட்பட்டு இலக்கிய விமர்சனம் கொணரக்கூடிய குறைந்தபட்ச நன்மைகளை மட்டுமே தற்காலத்தில் எதிர்பார்க்கமுடிகிறது. ஆயினும் காலதேச வர்த்தமானங்களுக்குத் தக்க செயல்பட்டு இலக்கிய விமர்சனத் தொடர்ச்சியைக் காப்பதும் அவசியம்.

***

[அங் மோ கியோ பொது நூலகத்தில் 29.12.2019 அன்று நடந்த வாசகர் வட்ட மாதாந்திர இலக்கியச் சந்திப்பில் ஆற்றிய உரையின் எழுத்துவடிவம்]