07-08-2018 LS-BALABASKARAN

‘ரேடியோ மலாயாவில்’ ஒலிபரப்பாளர், மலாயாப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர், சிங்கப்பூர்த் தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியர் எனப் பல்வேறு முகங்களை வெளிப்படுத்திய பாலபாஸ்கரன், புதுச்சேரியில் பிறந்து பினாங்கில் வளர்ந்து, கடந்த சுமார் நாற்பதாண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வருபவர். இவரது இன்னொரு பரிமாணம் இலக்கிய, இதழியல், சமூக வரலாற்று ஆய்வாளராகத் தொடர்ந்து துல்லியமும் செறிவும்கூடிய ஆய்வுகளை வெளியிட்டு வருவதாகும். தன்னுடைய உயர்கல்வியின்போது தொடங்கிய இத்தகைய ஆய்வுகளுக்கான அவரது ஆர்வம் பணிக்காலத்திலும் பணி ஓய்வு பெற்ற பிறகும் இன்றுவரை தீவிரமாகத் தொடர்கிறது. பாலபாஸ்கரனின் ஆய்வுகள் குறித்த ஒரு கண்ணோட்டத்தை இக்கட்டுரை வழங்குகிறது. 

மலாயாவிற்குள் பிழைப்புக்காக நுழைந்த தமிழர்களின் வாழ்க்கைப் பதிவுகள் புனைவுகளுக்குள் கவனிப்பாரற்று மண்டிக்கிடக்கின்றன என்பதை உணர்ந்ததால் மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளின் தொடக்கத்தையும் போக்கையும் தன்னுடைய இந்தியவியல் முதுநிலை பட்டப்படிப்பிற்காக ஆராய பாலபாஸ்கரன் முடிவுசெய்தார். அதுவரையில் அன்றைய மலாயாக் கல்விப்புலத்தில் அத்தகையதோர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்பதால் அது கடும் உழைப்பையும் ஆழமான சிந்தனையையும் கோரும் ஒரு பணியாக அமைந்தது. 

மலேசியச் சிறுகதைத் தொகுப்புகள் அச்சுநூல்களாகக் குறைவான எண்ணிக்கையிலேயே வெளிவந்திருந்ததால் முழுமையான பார்வைக்காக, பழைய பத்திரிகைத் தரவுகளைத் தேடியலைந்தார். புனைவுகள் எழுந்த காலத்தின் பின்புலத்தை அறிந்துகொள்வதற்காக விரிவான வரலாற்று வாசிப்பைக் மேற்கொண்டார். எழுத்தாளர்கள், எழுத்தியக்கம் தொடர்பான செய்திகளை அணுக்கமாக அறிந்துகொள்ளவேண்டி, பலரைச் சந்தித்துத் தகவல்களைச் சேகரித்தார். அவற்றுடன் தன்னுடைய சிந்தனைகளையும் சுருக்கெனத் தைக்கும் மொழியையும் இணைத்து, தனக்கென பிரத்தியேகமாக ஓர் ஆய்வுத் தடத்தை பாலபாஸ்கரன் உருவாக்கிக்கொண்டார். 

அரசியல் ரீதியாக மலேசியாவும் சிங்கப்பூரும் தனித்தனி நாடுகளாகப் பிரிந்து, இரு நாடுகளுக்குமிடையே சென்று வருவதற்கு கடப்பிதழ் பயன்பாட்டுக்கு வந்த அறுபதுகளின் பிற்பாதியில் இருந்துதான் பிரிவினை மக்கள் மனத்தில் உறைத்து இலக்கியத்திலும் பிரதிபலித்தது என்பது பாலபாஸ்கரன் தன் ஆய்வுகள் வழியாகக் கண்டடைந்த முடிவு. ஆகவே அக்காலத்திற்குமுன் சிங்கப்பூரிலிருந்து எழுதப்பட்டிருந்தாலும் கோலாலம்பூரிலிருந்து எழுதப்பட்டிருந்தாலும் அவற்றைப் பிரித்துப் பார்ப்பதில் பொருளில்லை என்பது அவரது நம்பிக்கை. அந்தவகையில் ‘மலேசியத் தமிழ்ச் சிறுகதை’ [அரசி பதிப்பகம், புதுச்சேரி, 1995] என்கிற பாலபாஸ்கரனின் முதல் ஆய்வுநூலில் இன்றைய சிங்கப்பூர், மலேசியா இரண்டு நாடுகளின் சிறுகதை இலக்கியத் தோற்றுவாய்களும் பிரிக்கவியலாதபடி இறுக்கமாகப் பின்னிப் பிணைந்துள்ளன.

‘மலேசியத் தமிழ்ச் சிறுகதை’ 112 பக்கங்களே உடைய சிறு நூலென்ற போதிலும் உள்ளடக்கத்திலும் அணுகுமுறையிலும் ஒரு முன்னோடி ஆய்வாளரின் வருகையை அழுத்தமாக அறிவித்தது. அந்நூலில் 1930 முதல் 1945 வரையிலான காலகட்டத்தை, தொடக்க காலம் (1930-41), ஜப்பானியர் காலம் (1942-45) என்று இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக்கொண்டு சிறுகதைத் தோற்றம் மற்றும் வளர்ச்சியை ஆராய்ந்திருந்தார் பாலபாஸ்கரன். அதுவரை கேள்விப்பட்டிராத பல இலக்கிய வரலாற்றுத் தகவல்களை அந்நூல் வெளிக்கொணர்ந்தது. அதையும் தாண்டி அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டிருந்தது.

முதலாவதாகஅடிக்குறிப்புகளின் ஆழம். கல்விப்புல ஆய்வுக் கட்டுரைகள் போதிய அடிக்குறிப்புகளின்றி ஏற்றுக்கொள்ளப்படாது என்ற கட்டாயத்தினால் அடிக்குறிப்புகளைச் சேர்ப்பது வழக்கமான ஒன்று. ஆனால் அந்நூலிலிருந்த சுமார் 300 அடிக்குறிப்புகளும் தம்மளவில் தனித்துவமிக்கவையாக மிளிர்ந்தன. ஆய்வின் உள்ளடக்கம் எந்த அளவிற்கு மலாயா சிறுகதை இலக்கிய வரலாற்றைக் காட்டியதோ அதற்கு நிகராக அடிக்குறிப்புகள் அன்றைய மலாயாவின் சமூக, இதழியல் வரலாற்றிற்கு வெளிச்சம் காட்டின. எடுத்துக்காட்டாக, சுதந்திர இந்தியா, சுதந்திரோதயம், யுவ பாரதம் ஆகிய மூன்று ஜப்பானியர் ஆக்கிரமிப்புக் காலத் தமிழ் ஏடுகளின் பெயர்களுக்கு அவர் கொடுத்திருந்த அடிக்குறிப்புகளில் அவ்வேடுகள் தோன்றி மறைந்த விவரங்கள், அவற்றின் ஆசிரியர், இதுவரை கிடைத்திருக்கும் இதழ்கள் என அனைத்து விவரங்களையும் கொடுத்திருந்தார் [ப.87]. 

மேலும் ஆங்கில நூல்களை ஆதாரமாகக்கொண்ட இடங்களில் அவற்றுக்கான அடிக்குறிப்புகளில் அந்தந்த நூல்களின் பெயர் விவரங்களோடு விட்டுவிடாமல், தேவையான வரிகளையும் ஆங்கிலத்தில் கொடுத்திருந்தார். எடுத்துக்காட்டாக, சுபாஷ் சந்திரபோஸ் தன்னுடைய விடுதலை இயக்கம் காங்கிரசுக்கு எதிரான அணி அல்ல என்றும் ஒரே குறிக்கோளை அடையும் இருவேறு வழிகள் என்றுமே பார்த்தார் என்று குறிப்பிட்டிருந்த இடத்திற்கான அடிக்குறிப்பில் ஆங்கில மூலத்திலிருந்த வரிகளையும் சேர்த்திருந்ததைக் குறிப்பிடலாம் [ப.76]. அதன்வழியாக ஆய்வாளரின் புரிதலையும் அனுமானத்தையும் உடனுக்குடன் உரசிப் பார்த்துக்கொள்ள வாசகருக்கு ஒரு வாய்ப்பை அளித்திருந்தார். 

இரண்டாவதாககூர்மையான தொகுத்துக்கூறல். ஒரு காலகட்டத்தின் விரிவான சமூக வரலாற்றுப் பின்னணி, பல சிறுகதைகளின் உள்ளடக்க விவரங்கள், கருத்துகள் ஆகியவற்றை ஆய்வில் அளித்துக்கொண்டே வரும்போது வாசிப்பவரின் எண்ணங்களும் பல்வேறு திசைகளிலும் தளங்களிலும் அலைபாய்வதால் ஆய்வின் முடிவென்ன என்ற குழப்பம் உருவாகிவிடும். அதைக் குறைக்க வேண்டியதும் கூடியமட்டிலும் தெளிவான சுருக்கங்களை அளிப்பதும் ஆய்வாளரின் கடமை. தன்னுடைய மொழித்திறத்தின் துணையுடன் அதிலும் பாலபாஸ்கரன் முத்திரை பதித்திருந்தார்.

எடுத்துக்காட்டாக, 1930-41 காலகட்டத்தை ஆராயும் முதல் கட்டுரையின் இறுதிப்பகுதியில், இப்படியொரு சுருக்கத்தை அளிக்கிறார்:

ஒருமையும் முழுமையும் இக்கதைகளில் இல்லைநாவலுக்குரிய விசாலமான கதைக்களத்தில் சம்பவங்களை அடுக்கிக்கொண்டே செல்வர்காலமுறைப்படி நிகழ்ச்சிகளைக் கையாளும் முறையைப் பின்பற்றியதால் கதைப்பின்னலுக்குரிய கவனம் தென்படவில்லைஒரே கதை இரண்டுமூன்று கருப்பொருட்களைத் தாங்கியும் நிற்கும்சீர்திருத்தம் பேசவந்தோர் எல்லா முறைகேடுகளையும் ஒரே கதையில் சொல்லிவிடத்துடிக்கும் துடிப்பைப் பார்க்கலாம்கட்டுரை பாணியிலான நடையும்பாத்திர வார்ப்புக் குறையும் இக்காலக் கதைகளின் பொதுவான பிரதிபலிப்பேநீதியை வலியுறுத்துவதே பிரதான நோக்கமாவதால் ஆசிரியர் நினைத்த இடங்களில் தலைநீட்டி மறைவார்வாசகரை நேரில் விளித்து விவரிக்கும் ஓர் அமைப்பை பரவலாகக் காணமுடியும்.” [ப.67]

அப்பகுதியின் இறுதிப்பத்தி கீழ்க்கண்டவாறு அமைகிறது:

குணவமைதிக்கும் உருவ வார்ப்புக்கும் சிந்தனை தந்த வ.வே.சுஐயரின் கதைகள் போன்ற தொடக்கத்தைப் பெறாமல்உள்ளீட்டுக்கும் சமுதாய உணர்வுக்கும் சிந்தனை தந்த மாதவையா போன்றோரின் தொடக்கத்தையே பெற்றது மலேசியத் தமிழ்ச் சிறுகதை.” [ப.71]

மூன்றாவதாகபின்புலச் சமநிலைசிறுகதைகளை அதன் வடிவம், அமைதி ஆகியவற்றுக்காக மதிப்பீடு செய்யும் ஆய்வு அளவுகோலை வசதிப்படி வளைத்துக்கொள்ள விரும்பாத அதேவேளையில், இன்றைய அளவுகோல்களை அன்றைய காலத்தின்மீது பொருத்திப் பார்த்துவிடக்கூடாது என்பதிலும் பாலபாஸ்கரன் தனிக்கவனம் செலுத்தியுள்ளார். பல இடங்களில் கதை எழுந்த காலத்தின் பின்புலத்தை நினைவூட்டி ஒரு சமநிலையை எட்டமுயல்வது அவரது சிறப்பம்சம். எடுத்துக்காட்டாக, ‘கஸ்தூரியின் மறைவு’ (1934) என்ற கதையைக் குறித்து எழுதும்போது அதன் அப்பட்டமான தலைப்பு, பிரச்சாரம் தொனிக்கும் நடை, ஆசிரியர் குறுக்கீடு ஆகியவற்றை “எழுத்தாளரின் குறையெனக் கொள்ளாது அக்காலச் சிறுகதையின் இயல்பு என்று அமைதியடைய வேண்டும்” என்று குறிப்பிடுவதைச் சுட்டலாம் [ப.34]. 

மேலும், ஒரு சிறுகதையைப் பிரசுரிப்பதில் அன்றைய இதழ்களுக்கு இருந்த தேர்வுகளுக்குப் பொருத்தமான பார்வைகளை அளிப்பதன் வழியாகவும் சமநிலையைக் கூட்டியுள்ளார். பிற ஏடுகள் உள்நாட்டு எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டபோது ‘தமிழ்நேசன்’ இலங்கையிலிருந்தும் தமிழ்நாட்டிலிருந்தும் பல கதைகளை வெளியிட்டுள்ளது. ஆகவே அவ்விதழ் உள்நாட்டுப் படைப்புகளை அதிகம் ஆதரிக்கவில்லை என்ற பார்வையைப் பெறுவது எளிது. ஆனால், ‘இந்நாட்டு எழுத்தாளரும் வாசகரும் மெய்யான சிறுகதையைப் படிக்கத் தானாவது உதவிசெய்ய வேண்டும்’ என்ற எண்ணம் தமிழ்நேசனுக்கு இருந்திருக்கலாம் என்ற பாலபாஸ்கரனின் பார்வையைப் பெறுவது அரிது [ப.40].

‘மலேசியத் தமிழ்ச் சிறுகதை’ முதலில் வெளியான உள்ளடக்கத்தோடு, அதற்குப் பிறகு 1978ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தையும் இணைத்து, கதை வகுப்பு முடியும் காலம் (1946-52), முற்சுதந்திர காலம் (1953-57), பிற்சுதந்திர காலம் (1958-69), மறுமலர்ச்சிக் காலம் (1970-78) என மேற்கொண்டு நான்கு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு ஆராய்ந்ததே அவரது முதுகலைப்பட்ட ஆய்வு. 

அந்த ஆய்வை மேலும் விரிவும் செம்மையும் செய்து, 200 எழுத்தாளர்களால் எழுதப்பட்ட 630 சிறுகதைகளை அவற்றின் கதைக்களன், பாத்திர வார்ப்பு, நடை நுணுக்கம் போன்ற பல்வேறு கூறுகளின் ஆய்வு மதிப்பீட்டுடன், ‘The Malaysian Tamil Short Stories 1930-1980 – A Critical Study’ [சொந்த வெளியீடு, 2006] என்ற ஆங்கில நூலாக அரை நூற்றாண்டுகால மலேசிய சிறுகதை இலக்கிய வரலாறு வெளிவந்தது. முதலில் வெளியான தமிழ் நூலும், இந்த ஆங்கில நூலும் இவ்வட்டாரத்தின் புனைவுகள் குறித்து ஆராய்வோருக்கு இன்றளவும் தவிர்க்கவியலாத ஆய்வு வளங்களாக ஆகியிருப்பதில் வியப்பில்லை.

இந்த ஆங்கில நூலில், சி.வடிவேலு, ரெ.கார்த்திகேசு, எம்.ஏ.இளஞ்செல்வன் ஆகியோரைக் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களாக அடையாளம் காட்டி அதற்கான காரணங்களை பாலபாஸ்கரன் முன்வைக்கும் ஓர் இயல் அனைத்து இலக்கிய ஆய்வாளர்களும் அவசியம் வாசிக்கவேண்டிய ஒன்று. மூவரும் கெடா மாநிலத்திலிருந்து வந்தவர்கள், ஆசிரியப் பணி செய்தவர்கள் போன்ற ஒற்றுமைகள் இருப்பினும் அவர்கள் எழுத்திலுள்ள வேறுபாடுகளையும் அவை ஏன் சிறுகதை வளர்ச்சிக்கு முக்கியமானவை என்றும் அழுத்தந்திருத்தமான கருத்துகளை அவ்வியல் கொண்டிருந்தது.

இவ்வெழுத்தாளர்களைத் தான் குறிப்பிடுவதால் அவர்களது பலவீனங்களுக்கு அரைக்கண் கொடுத்துவிடாமல் அவற்றையும் தெளிவாக முன்வைத்தது ஓர் இலக்கிய ஆய்வு எவ்வாறு அமையவேண்டும் என்பதற்கான முன்னுதாரணமாக அமைந்தது. எடுத்துக்காட்டாக, “…தன் கற்பனை வறட்சியை ஈடுகட்டப் பெரிதும் தன் கைத்திறத்தைச் சார்ந்திருக்கிறார்” […he depends more on craftmanship to compensate for the thinness of his imagination] போன்ற வீச்சுள்ள விமர்சன வரிகளைக் குறிப்பிடலாம் [ப.234]. அதோடு விட்டுவிடாமல் கைத்திறம் என்று தான் குறிப்பிடுவதை எப்படி வரையறுப்பது என்று மேலும் விளக்கிச் செல்வது சொல்லுக்குச்சொல் அடிமுடி தேடிப் பயணிக்கும் பாலபாஸ்கரனின் அணுகுமுறை. பாலபாஸ்கரனின் சிறப்பான தமிழ், ஆங்கில இருமொழித்திறனும் அவரது ஆய்வுகளைச் செழுமைப்படுத்தியுள்ளது என்பதில் ஐயமில்லை.

இந்த ஆய்வின் தொடர்ச்சியாக வாசிக்கவேண்டியது என அவரது, ‘சிங்கப்பூர் – மலேசியா தமிழ் இலக்கியத் தடம், சில திருப்பம்’ [சொந்த வெளியீடு, 2018] என்ற நூலைக் குறிப்பிடலாம். இதற்குமுன் வெளியான நூல்களில், ஆதார வளங்களைக் குறித்த குறிப்புகளை விரிவாகவும் ஆழமாகவும் கொடுப்பதில் தனிமுத்திரை பதித்த பாலபாஸ்கரன் ஏனோ அதன்பிறகு வெளியான நூல்களில் அதை முற்றாகக் கைவிட்டுவிட்டார். ‘..ஒருவகை பாமரத் தன்மையோடு எல்லாத் தகவல்களையும் திரட்டித் தரவேண்டும் என்பதே விருப்பம்.’ என்றும், ‘கல்வி நிலையங்களின் வரன்முறைகளுக்கு உட்பட்டு அடிக்குறிப்புகளும் ஆதாரப் பட்டியல்களும் சுமக்கும் கட்டுரைகள் அல்ல இவை’ என்றும் அறிவித்துக்கொண்டு எழுதத் தொடங்கிவிட்டார் [சிங்கப்பூர் – மலேசியா தமிழ் இலக்கியத் தடம், ப.1]. 

அவருடைய தொடக்ககால ஆய்வுகளைப் போன்ற ஆழமான அடிக்குறிப்பு அணுகுமுறையையே இனிவரும் ஆய்வுகளிலும் அவர் தொடரவேண்டும் என்பதே அவரைப் பின்பற்ற விரும்பும் ஆய்வாளர்களின் உள்ளக்கிடக்கை. ஆயினும் ஆய்வாளர்களைவிடப் புனைவுப் படைப்பாளிகளையும் தமிழ்ச் சமூகத்தின் பொதுவாசகர்களையும் மனதிற்கொண்டு அவருடைய பிற்கால எழுத்துகள் அமைவதால் எழுத்துமுறையை மாற்றிக்கொண்டுள்ளார் என்று கருதவும் இடமுண்டு. மலாயாத் தமிழர் வரலாறு மங்கி மறைந்துவிடக்கூடாதே என்ற அக்கறையும் தவிப்பும் தெறிப்பதை பாலபாஸ்கரனின் பிற்கால எழுத்துகளில் காணமுடிகிறது. கல்விப்புலக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதற்கு அவரது இம்மனப்போக்கு காரணமாக இருக்கலாம். ‘சிங்கப்பூர் – மலேசியா தமிழ் இலக்கியத் தடம்’ நூலின் ஓரிடத்தில், 

எழுதத் தெரிந்தவர்களேஇந்தப் பக்கம் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்ஒரு துயரமான காலப்பகுதியின் இருள் படிந்த வரலாற்றில் உடலும் உள்ளமும் நொறுங்கி வாழ்க்கை உடைந்து போனவர்களைக் கண்முன்னே கொண்டுவாருங்கள்உலக வரலாற்றில் தனித்தன்மை வாய்ந்த விசித்திரமான சித்திரவதைகளின் பின்னணியில் மெய்யான இந்த மானிட உடல்களும் மனங்களும் அனுபவித்த அவஸ்தைகளைச் சித்தரிக்கும் கதைகளையும் நாவல்களையும் கட்டுரைகளையும் கவிதைகளையும் உலக வாசகர்கள் படிப்பதற்கு எழுதித் தாருங்கள்” [ப.23]

என்று உருக்கமாக வேண்டிக்கொள்கிறார். போஸின் இந்திய தேசிய ராணுவ மகளிர் பிரிவான ஜான்சி ராணிப்படை மலாயா வீராங்கனைகள் நூறு பேர் பர்மாவில் போரிட்டதில் வீரமரணம் அடைந்த (1945) ஸ்டெல்லா, ஜோஸபின் இருவருக்கும் இந்த நூலைப் ‘பாத காணிக்கை’ செய்துள்ளதிலும் அவ்வுணர்ச்சி மேலிடுவதைக் காணலாம். 

இந்நூலின் இக்கட்டுரைகளில் பல தருணங்களில் புனைவு எழுத்தாளர்களுக்கு நிகரான சொல்லாட்சிகளையும் ஓட்டமான நடையையும் பயன்படுத்துவதால் நினைவில் நிற்கிறார். சயாம் மரண ரயில் பாதை போடுவதற்காக ஜப்பானியர்களால் வல்லந்தமாகக் கொண்டுசெல்லப்பட்டு மடிந்த தமிழர்களை ‘தண்டவாளத் தமிழர்கள்’ என அவர் விளிப்பது ஓர் எடுத்துக்காட்டு. ‘ஜப்பானிய லாக்கப்பில் ஏழு தினங்கள்’ நூலை எழுதிய சீ.வி. குப்புசாமியின் ஆளுமையைச் சித்தரித்துக்காட்ட, “..நிதானமானவர். அடக்கமானர், ஆரவாரம் இல்லாதவர், புகழுக்கு அலையாதவர். காக்காய் பிடிக்காதவர், கூஜா தூக்காதவர், நல்ல படிப்பாளி, கடும் உழைப்பாளி.” [ப.84] என்கிற நடையில் எழுதுவதையும் குறிப்பிடலாம்.

முப்பது, நாற்பதுகளின் அரசியல் மாற்றங்களை உள்ளடக்கிய அறிமுகம், வித்துவான் எஸ்.எல்.மாதவராவ் முதலியாரை ஆசிரியராகக்கொண்டு தொடங்கப்பட்ட ‘பினாங்கு ஞானாச்சாரியன் Daily News’ (1912) பத்திரிகை மலாயா புனைவுகளுக்கு அளித்த முதலடி, கு.அழகிரிசாமி, சீ.வி.குப்புசாமி, முருகு சுப்பிரமணியன், சுப.நாராயணன், பைரோஜி நாராயணன், ராஜாஜி ஆகியோருக்கு மலாயா சிறுகதை இலக்கியத்தில் உள்ள பங்கு, ஜப்பானியர் காலத்தில் கடும் அச்சுத்தாள் கட்டுப்பாடுகளுக்கு இடையிலும் தமிழ்ச் சிறுகதை செழித்து வளர்ந்த விதம் ஆகியவற்றை விவரிக்கும் கட்டுரைகள் அடங்கியது ‘சிங்கப்பூர் – மலேசியா தமிழ் இலக்கியத் தடம்’. மேலும் ந.பழனிவேலு, வி.டி அரசு, நா.கோவிந்தசாமி, எம்.கே. நாராயணன், இராம கண்ணபிரான், பி.கிருஷ்ணன் ஆகியோரின் விரிவான நேர்காணல்களும் அடங்கிய ஓர் அரிய வரலாற்று நூலாக உருக்கொண்டுள்ளது. 

முன்னர் குறிப்பிடப்பட்ட ‘மலேசியத் தமிழ்ச் சிறுகதை’, ‘The Malaysian Tamil Short Stories (1930-1980) – A Critical Study’ ஆகிய ஆய்வுநூல்களுக்குப் பிறகு ஆனால் ‘சிங்கப்பூர் – மலேசியா தமிழ் இலக்கியத் தடம், சில திருப்பம்’ நூலுக்கு முன்பு பாலபாஸ்கரன் இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார். முதலாவது, ‘VR Nathan – Community Servant Extraordinary’ [ISEAS Publishing, 2012] என்கிற ஆங்கில நூல். இரண்டாவது ‘கோ. சாரங்கபாணியும் தமிழ் முரசும் – இன்றைய பார்வை’ [சொந்த வெளியீடு, 2016] என்கிற சமூக வரலாற்று நூல். இந்நூல் சிங்கப்பூர் இலக்கியப் பரிசு, கரிகாழச்சோழன் விருது ஆகியவை அளிக்கப்பட்டு பாராட்டுப் பெற்றது.

வீரராகவலு செட்டி ரெங்கநாதன் என்ற இயற்பெயருடைய வீ.ஆர். நாதன், சிங்கப்பூரில் இந்து அறக்கட்டளை வாரியத்தின் நிதி நிர்வாகத்தில் சீரமைப்புகளைக் கொண்டுவந்ததோடு இந்துக்களிடையே இருந்த பலதரப்பட்ட வழிபாட்டு முறைகளையும் அனுசரித்துச் செல்வதற்கும் வழிசெய்தவர். ஆலயத்தின் வருமானத்தை அதிகரித்து அதை மாணவர் கல்விக்காகவும் ஆலயத்துடன் இணைந்த பாலர் பள்ளிகள் அமைப்பதற்கும் வழிசெய்தவர். சமய நல்லிணக்கம், சிறை சென்று வெளிவந்த போதையர் மறுவாழ்விற்கு உதவுதல் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர். அவரது வாழ்க்கையையும் பங்களிப்பையும் விவரிக்கும் நூலாக ‘VR Nathan – Community Servant Extraordinary’ அமைந்திருந்தது. பாலபாஸ்கரன், சயீத் அப்துல்லா, அருண் செங்குட்டுவன் ஆகிய மூவரும் இந்த நூலின் ஆசிரியர்களாக இணைந்து செயல்பட்டிருந்தனர். இந்த நூலில் பாலபாஸ்கரனின் பங்களிப்பைத் தனியாகப் பிரித்து ஆராய்வதற்கு வாய்ப்பில்லை.

‘கோ. சாரங்கபாணியும் தமிழ் முரசும் – இன்றைய பார்வை’ நூல் மலேசிய சிங்கப்பூர்த் தமிழரின் முதன்மையான தலைவராகக் கருதப்படும் கோ.சா.வின் சிங்கப்பூர் வருகை, திராவிட இயக்க எழுச்சி, தமிழ் முரசு தொடங்கப்பட்ட வரலாறு, அவரது தலையங்கங்கள் மூலம் தமிழ்ச் சமூகத்தில் உருவாக்கிய உணர்ச்சி, இன்று திரும்பிப் பார்க்கையில் அவரது தடுமாற்றங்களாகத் தட்டுப்படும் நிகழ்வுகள் என மலாயாத் தமிழ்ச் சமூக முன்னோடி ஒருவரின் வரலாறா அல்லது மலாயாத் தமிழ் இதழியல் வரலாற்றின் ஒருபகுதியா என்று பிரிக்கவியலாத வகையில் எழுதப்பட்டுள்ளது.

கூலிம் நகருக்கு உரையாற்ற வந்த கோ.சா.விடம் கேள்விகேட்டு மடக்கிப் பேசவிடாமல் செய்த திராவிட கழகத்தினரில் ஒருவராக, அப்போது படித்துக்கொண்டிருந்த, விவரமறியாதவனாகத் தன்னைக் குறிப்பிட்டுக்கொள்ளும் பாலபாஸ்கரன் ஓர் ஆய்வாளராக இந்த நூலில் கோ.சா.வை முடிந்தவரை முழுமையாக மதிப்பீடு செய்ய முயன்றதின் வழியாகத் தன்னளவில் ஒரு வரலாற்றுச் சமாதானத்தை எய்தியிருக்கவேண்டும். 

கோ.சா.வின் ஆளுமைச் சித்திரத்தை, கிடைக்கும் சொற்ப தகவல்களைக்கொண்டு அவரின் திறன்களுடனும் தமிழ்ச் சமூக வளர்ச்சிக்கான நீண்டகாலக் கண்ணோட்டத்தில் அமைந்த பார்வைகளுடனும், தீட்டித்தீட்டி உருவாக்கி பாலபாஸ்கரன் இந்நூலில் அளித்துள்ள அதேவேளையில் கோ.சா.வின் செயல்பாடுகளைத் தன் உரைகல்லில் உரசிப்பார்க்கவும் தவறவில்லை. 

ஜொகூரில் 1927இல் கோ.சா. நடத்தி வைத்ததே மலாயாவின் முதல் சுயமரியாதைத் திருமணம் என்பதை மறுத்து 1926ஆம் ஆண்டிலேயே சிங்கப்பூரில் அத்தகைய திருமணம் நடைபெற்றதற்கான பத்திரிகைச் செய்தியை அளிக்கிறார் [ப.37]. தமிழ் முரசை கூலி உயர்வுப் பிரச்சனைக்காக சுமார் ஓராண்டு காலம், அதுவும் முக்கியமான வரலாற்றுக் காலகட்டத்தில் (13 ஜூலை 1963 முதல் 10 ஜூலை 1964 வரை), நிறுத்தியது அவர்மீது படிந்த ஒரு மாசு என்பதோடு அவர் சமூகத்தின் கோபத்துக்கும் ஆளானார் என்று அவதானிக்கிறார் [ப.16]. தன் நண்பர்களைத் திருப்திப்படுத்த அனாவசியமான சலுகைகளையும், பொருத்தமற்ற பாராட்டுகளையும் தமிழ் முரசில் அளித்தார் என்கிறார் [ப.89, ப.282]. இதையெல்லாம்விட, 

ஐயங்கார் சிறந்த பேச்சாளர் அல்ல என்று ஒப்புக்கொண்டாலும் அவர் பெரும் எழுத்தாளர் அல்ல’ என்று கோ.சா சொல்வதை ஒப்புக்கொள்ள இயலாதுபார்க்கப்போனால் கோ.சா கூட ஒரு சிறந்த கவர்ச்சியான பேச்சாளர் என்று சொல்லிவிட முடியாதுநரசிம்ம ஐயங்காரை நல்ல படிப்பாளிஅறிவாளி என்று சொல்லமுடியும்அதைப்போல சாரங்கபாணியை ஒரு பெரிய படிப்பாளிஅறிவாளி என்று சொல்லமுடியாது”

என்று தமிழ் நேசனின் ஆசிரியர் கி.நரசிம்ம ஐயங்கார் மறைந்தபோது அவருக்கு கோ.சா. வடித்த இரங்கற் குறிப்பையும்கூட விடாமல் விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறார் பாலபாஸ்கரன். இவ்வட்டாரத் தமிழரின் பெருந்தலைவர் கோ.சா. என்பதற்காகத் தன் ஆய்வுக்கருவியின் கூர்மையை மழுங்கடித்து அவர் பயன்படுத்தவில்லை என்பது தெளிவு.

இந்த இடத்தில், முதல் தமிழ்ச் சிறுகதை சிங்கப்பூரில் மகுதூம் சாயபுவால் 1888ஆம் ஆண்டிலேயே ‘சிங்கை நேசனி’ல் எழுதப்பட்டுவிட்டது என்ற நா.கோவிந்தசாமியின் முடிவை பாலபாஸ்கரன் பிழையென நிரூபித்த விதத்தைக் குறித்தும் சில செய்திகளைக் குறிப்பிடவேண்டும். 

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதல் தமிழ்ச் சிறுகதையை எழுதியது வ.வே.சு.ஐயரா, பாரதியா, அ.மாதவையாவா என்ற விவாதத்தில் ஒத்த கருத்துடன் (இன்றும்) ஒரு முடிவுக்கு வரவியலாவிட்டாலும் தமிழ் இலக்கிய ஆய்வுலகம் அவர்கள் மூவரையே சுற்றி வந்துகொண்டிருக்கும்போது, முதல் சிறுகதை 19ஆம் நூற்றாண்டில் இறுதியிலேயே சிங்கப்பூரில் ‘வினோத சம்பாஷணை’ என்ற பெயரில் எழுதப்பட்டுவிட்டது என்று நா.கோ. அறிவித்தது அதிர்வலைகளை எழுப்பியது. நா.கோ. அக்கருத்தை வலியுறுத்தித் தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்தார். 

நா.கோ. பலமுறை அவ்வாறு எழுதியும் அதற்கு முறையான மறுப்பு பதிவாகாததால் அதையே வேறு சிலரும் தமது ஆய்வேடுகளில் குறிப்பிட ஆரம்பித்தனர். நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த பாலபாஸ்கரன், ‘எது முதல் தமிழ்ச் சிறுகதை? அது எங்கே இருக்கிறது’ என்ற தன் 18 பக்கக் கட்டுரையில் அதை விரிவாக மறுத்தார். [நா. கோவிந்தசாமி எனும் படைப்பாளி, தொகுப்பாளர்கள்: புஷ்பலதா நாயுடு, சுந்தரி பாலசுப்ரமணியம், சிங்கப்பூர்த் தேசிய நூலக வாரிய வெளியீடு, 2011]. அத்தோடு விட்டுவிடாமல், ‘பொதுஜனமித்திரன்’ பத்திரிகையில் 1924 மே 28 அன்று வெளியான ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்ற கதையே சிங்கப்பூரின் முதல் தமிழ்ச் சிறுகதை என்ற தன் ஆய்வு முடிவையும் அக்கட்டுரையில் கொடுத்திருந்தார். 

‘பாவத்தின் சம்பளம் மரணம்’ கதையில் எழுதியவர் பெயர் இல்லாததால் அப்பத்திரிகையின் ஆசிரியர் டி.என்.நடேச முதலியார் எழுதியிருக்கலாம் என்ற ஊகத்தையும் அப்படி ஊகிப்பதற்கான முகாந்திரங்களையும் எழுதியிருந்தார்.  மேலும் அக்கதையை முழுமையாகத் தன் கட்டுரையில் சேர்த்து அக்கதை எவ்வகையில் சிறுகதையாகிறது என்பதை நிரூபிக்க சிறுகதையின் எட்டுப் பண்புகளையும் விளக்கியிருந்தார். அதன்மூலம் வினோத சம்பாஷணை குறித்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு சற்று சரிந்த சிங்கப்பூர் ஆய்வுலகின் தரத்தை மீண்டும் உயர்த்தினார். 

தனக்கென அமைத்துக்கொண்ட தனித்துவமிக்க ஆய்வுத்தடத்தில் கடும் உழைப்பு, மொழிக்கூர்மை, சிந்தனைத்திறம், உண்மையை வெளிப்படுத்துவதில் துணிவு என்று பயணித்துள்ள பாலபாஸ்கரன், அடுத்தடுத்து சிங்கப்பூரின் சுருக்கமான வரலாறு, சிங்கப்பூர் – மலேசியா இதழியல் வரலாறு என்று நூல்களை வெளியிடத் திட்டமிட்டுப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.

தமிழ் நேசன், தமிழ் முரசு இரு பத்திரிகைளையும் விட்டுவிட்டு சிங்கப்பூர் – மலேசியாவின் இலக்கிய வரலாற்றைத் தொட்டுப் பேசமுடியாது என்பது பாலபாஸ்கரனின் கருத்து. இரண்டிலும் வயதில் மூத்த தமிழ் நேசன் தனது நூற்றாண்டைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற விருப்பத்தை ‘சிங்கப்பூர் – மலேசியா தமிழ் இலக்கியத் தடம்’ நூலில் அவர் வெளியிட்டிருந்தார். 

துரதிருஷ்டவசமாக 2019 ஜனவரி 31ஆம் தேதி மலேசியாவின் தமிழ் நேசன் நாளிதழ் 95 வயதில் தன் ஆயுளை முடித்துக்கொண்டதால் அவரது ஆசை நிராசையானது. 

அதனால் பரவாயில்லை. தம் கஷ்டஜீவனங்களுக்கு இடையே எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் மலாயாவின் புனைவுலகிற்குத் தொடக்க காலப் பங்காற்றியவர்களை நமது ஆய்வுகளின் வழியாகக் காலம் கடந்தேனும் அடையாளப்படுத்தி கௌரவிக்கவேண்டும் என்ற இன்னொரு கனவும் பாலபாஸ்கரனுக்கு உண்டு. அந்த இலக்கில் அவரது முயற்சிகளை அவர் தொடர்கிறார். ஆயினும் அது தனியொருவரால் மட்டும் முடிக்கவியலக்கூடிய பணியன்று.

‘சிங்கப்பூர் – மலேசியா தமிழ் இலக்கியத் தடம்’ நூலில் பாலபாஸ்கரன் பெயரளவில் தொட்டுச்சென்ற தகவல்களை ஆய்வுக்குட்படுத்தி விரிவுபடுத்தினாலே அது முழுமையான சிங்கப்பூர் – மலேசிய புனைவிலக்கிய வரலாறாக மலரக்கூடும். அது இவ்வட்டாரத்தின் ஆய்வுத்திறத்தை உலகெங்கிலும் பரந்துவிரிந்த தமிழ்கூறு நல்லுலகிற்கு வெளிக்காட்டுவதோடு ஒரு முன்னோடி ஆய்வாளரின் கனவை நிறைவேற்றியதாகவும் அமையும்.

**

ஜூலை 2021 வல்லினம் இணைய இதழில் வெளியான கட்டுரை