ராயங்கல ஶ்ரீகிருஷ்ண ராஜநாராயணப் பெருமாள் ராமானுஜம் நாயக்கர் என்ற இயற்பெயருடைய கி.ரா. [1923 – 2021], கரிசல் மண்ணின் ஒரு பகுதியான கோவில்பட்டியை ஒட்டியுள்ள இடைசெவல் கிராமத்தில் பிறந்தவர். இவர் பலதலைமுறைகளுக்கு முன்னால் உயிர்தப்பிப்பிழைக்க இங்கு இடம்பெயர்ந்த, தெலுங்கை வீட்டுமொழியாகக் கொண்ட, சமூகத்தைச் சேர்ந்தவர். தன் மக்களின் வரலாற்றையும் வாழ்க்கையையும் அவர்களில் ஒருவராக, அவர்களின் மொழியிலேயே எழுதி ஆவணப்படுத்தியதோடு வட்டார, சமூக வாழ்க்கையைப் ‘பேசும்’ எழுத்துகள் இன்று தமிழில் வித்தியாசமாகப் பார்க்கப்படாத அளவிற்கு அதற்கு அழகியல் அடிப்படையிலான இலக்கியத் தகுதியையும் பெற்றுத்தந்த முன்னோடி. 

காட்டுக்குள் இருப்பவரால் மரத்தைப் பார்க்கமுடியுமே தவிர காட்டைப் பார்க்கமுடியாது என்பர். அணுக்கமாகவும் துல்லியமாகவும் வாழ்க்கையை நெருங்கநெருங்க அது ஒரு பெரிய வரலாற்றின் ஓட்டத்தில் எங்கே எப்படிப் பொருந்துகிறது என்பதை உணரமுடியாமற் போய்விடும். ஆனால் கி.ரா. தன் கரிசல்காட்டு மனிதர்களின் குணாதிசயங்களை நெருங்கிக் காட்டுவதோடு அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை இந்திய வரலாற்றின் ஒரு பகுதியாக எவ்வாறு சில நூற்றாண்டுகளாக மாறிவந்துள்ளது என்பதைக் கூர்ந்து பார்த்திருக்கிறார், சுவைபட எழுதியிருக்கிறார் என்பதே என்பார்வையில் அவரது முதன்மையான சாதனை.

E1pQi_MVcAInxRC

கி. ராஜநாராயணன் (கி.ரா.)

சிறுகதையோ, நாவலோ, கட்டுரையோ அவருடைய படைப்புகள் தகவற்செறிவும் பண்பாட்டுக் கூறுகளும் ஒன்றோடொன்று கலந்து சலிப்புத்தட்டாத ஒரு தமிழில், கதைசொல்லல் பாணியில் எழுதப்பட்டவை. அவரது எழுத்துமுறையில் ஒளிந்துள்ள சூட்சுமம் என்று மூன்று அம்சங்களை முன்வைக்கிறேன். 

முதலாவது, அவதானம். பொதுவாகக் கூர்ந்த கவனம் என்ற பொருளில் அவதானம் என்ற வடசொல்லைத் தமிழில் பயன்படுத்துகிறோம். எழுத்தாளர்களுக்கான அடிப்படைத் தகுதிகளுள் முதன்மையானதாக அவதானிக்கும் திறனைச் சொல்வேன். இது ஒருவருக்கு இயற்கையிலேயே அமைகிறது, பயிற்சியினால் மேம்படுகிறது. அன்றாட வாழ்க்கைக்குள் எல்லோரும்தான் இருக்கிறோம், சம்பவங்களைப் பார்க்கிறோம். ஆனால் எழுத்தாளரின் கண்கள் அவற்றை ஊடுருவிப் பார்க்கின்றன.

ஓர் அகழாய்வாளரோ வரலாற்றாசிரியரோ கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்துகிடக்கும் புதைபொருட்களை, ஆவணங்களைத் தேடி எடுத்துக்காட்டுகிறார். ஆனால் எழுத்தாளர், நமக்குத் தெரியும் என்று நாம் மேம்போக்காக ஒதுக்கிவிட்ட அன்றாட வாழ்க்கையைக் குறித்தும், பிடிபட்டுவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கும் மனத்தின் செயல்பாடுகளைக் குறித்தும் புதிய கண்ணோட்டங்களைத் தன் ஆழ்ந்த அவதானிப்புகளால் திறந்துவிடுகிறார்.

பிறர் செய்யாத, செய்யவியலாத அவதானிப்புகளைச் செய்வதும் அவற்றைப் பதிவுசெய்வதுமே ஓர் எழுத்தாளராகத் தன்பணி என்று கடந்த ஆண்டு சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் பங்கேற்றுப்பேசிய பிரிட்டிஷ் எழுத்தாளர் ஸேடி ஸ்மித் (Zadie Smith) தன் உரையில் குறிப்பிட்டார். ‘எழுதிக்கொண்டே இருந்தால் ஆயிற்றா, களத்தில் இறங்கிப் போராட வேண்டாமா?’ என்று எல்லாக் காலத்திலும் எழுத்தாளர்களை நோக்கிக் கேட்கப்படும் கேள்விக்கு அவரளித்ததுதான் பதில். உடனடியாக இல்லாவிட்டாலும் எழுத்தில் பதிவுசெய்யப்பட்ட கூர்ந்த, அரிய அவதானிப்புகள் எதிர்காலத்தில் என்றோ, எவர் மூலமாகவோ, எப்படியோ ஓர் ஆழமான மாற்றத்தை உண்டாக்கிவிடும். அதனால்தான் தீவிர அவதானிப்புள்ள எழுத்துகள் அதிகாரத்தால் அஞ்சப்படுகின்றன.

கி.ரா.வின் அவதானிப்புகள் இந்தியாவின் தென்கோடியில் இரண்டாயிரம் மூவாயிரம் பேர் மட்டுமே அடங்கிய ஒரு சிறுகிராமத்தின் சமூகத்தில் செய்யப்பட்டவை என்றபோதும் அவற்றில் பொதுமைப்படுத்திக்கொள்ள எவ்வளவோ பொதிந்துகிடக்கின்றன. அதிலும் அறிவியல், தொழிநுட்ப வளர்ச்சிகளையும் அரசியல் மாற்றங்களையும் ‘கோபல்ல கிராமத்து மக்கள்’ எதிர்கொண்ட விதத்தைக் குறித்த அவரது கண்ணோட்டங்கள் தனித்தன்மை மிக்கவை.

மை தொட்டு எழுதும் இறகுப்பேனா, பிறகு மையூற்றி எழுதும் ஊற்றுப்பேனா, அடுத்ததாக அடிக்கடி மைநிரப்ப அவசியமற்ற குச்சிப்பேனா என்று தொழில்நுட்பம் ஒருபக்கம் வளர்ந்தபோதே பேனாவைச் சட்டைப்பையில் செருகிக்கொள்வது படிப்பாளிக்கான அடையாளமாகச் சமூகத்தில் மாறிவந்ததைத் தன் படைப்பில் சுட்டுகிறார். கொடிபிடித்து ஊர்வலம் போவது, போராட்டம் செய்வது இதெல்லாம் இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் புதிதாகத் தமிழ்ச் சமூகத்திற்கு அறிமுகமானவை. அதைப்பார்த்த சிறுவர்கள் ஒரு குச்சியின் முனையில் சிறுதுணியைக்கட்டி ஊர்வலம் செல்லும் விளையாட்டு விளையாடுவதைக் காட்டுகிறார். உரிமைப் போராட்டம் என்னும் பெரிய அரசியல் கருத்தாக்கம் அவற்றின் வெளிப்புற அடையாளக் கவர்ச்சியால் இளமனங்களுக்குள் நுழைந்து ஆழப்பதியும் விதத்தைக் கவனிக்கிறார்.

இராட்டையும் காங்கிரஸின் மூவர்ணக்கொடியும் தேசப்பற்றைவிட ஃபேஷனாகக் கருதப்பட்டதால் சமூகத்திற்குள் அதிக ஊடுருவியதைக் காட்டுகிறார். முறுக்குமீசை திருவள்ளுவர் படமும், ‘தமிழண்டா’ சொல்லும் அச்சிடப்பட்ட ‘டி-சர்ட்டு’கள் இன்று தமிழ்ப்பற்றைவிட ஃபேஷனுக்காக இளையர்களால் அணியப்படுவதைக் காண்கிறோம். ஆனால் ஃபேஷன்களால் சமூகக் கவனமும் செயற்சக்திகளின் ஒருங்கிணைப்பும் குறுகிய காலத்தில் உண்டாகின்றன என்பதுதான் வரலாற்றுப் பார்வை. கி.ரா. இதை வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும் அவருடைய எழுத்தின் வழியாக அந்த இடத்தை வந்தடைய முடிகிறது. ஆகவேதான் அவரது கூரிய அவதானிப்புகளின் தாக்கம் ஆழமானது என்று சொல்லத் துணிகிறேன்.

IMG_9792 

இரண்டாவது, நிதர்சனம். யதார்த்தவாதப் படைப்புகள் நிதர்சனத்தை (உள்ளது உள்ளபடி) பேசுகின்றன என்பதால் அவற்றில் கற்பனைக்கான இடம் குறைந்துவிடுகிறது என்றொரு விமர்சனப் பார்வை உண்டு. அப்பார்வையில் உண்மை இல்லாமலில்லை. ஆனால் கற்பனாவாதத்தில் கற்பனைக்கு உள்ள முக்கியத்துவம் யதார்த்தவாதத்தில் ‘தேர்வு’க்கு உண்டு. அதாவது எதை எடுப்பது எதை விடுப்பது என்ற தேர்வு.

யதார்த்தவாதப் படைப்பாளி உள்ளது உள்ளபடி சொல்லமுயல்கிறார் என்றாலும் சொல்வதற்கு அவர் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் விஷயங்களின் தேர்வு எந்த அடிப்படையில் அமைகிறது என்பதைப் பொறுத்தே அப்படைப்புகள் வெல்கின்றன அல்லது வீழ்கின்றன. ஒரு சமூகத்தின் சில தலைமுறை வரலாற்றை இரண்டு நாவல்களுக்குள் (கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள்) பதிவுசெய்ய முயலும்போது அந்த நூற்றாண்டுகளில் நடந்தேறிய ஆயிரக்கணக்கான சம்பவங்கள், மாற்றங்களில் இருந்து மிஞ்சிப்போனால் ஐம்பதறுபதை மட்டுமே கி.ரா. தேர்ந்தெடுத்திருக்கிறார். அவரது தேர்வுகள் மனம்போன போக்கில் செய்யப்பட்டவை அல்ல என்பதைக் காணமுடிகிறது.

தீப்பெட்டி வந்தது கரிசல் கிராமத்தில் பெரும் அதிசயமாக அவரது நாவலில் வருகிறது. அதற்குமுன் ஏதாவது ஒரு வீட்டிற்குச் சென்று நெருப்பு வாங்கிக்கொண்டு வருவதுதான் அங்கு வழக்கம். இது பழங்குடி வழக்கம். கற்களை உரசிய ஆதிமனிதர்கள் தீயைக் ‘கண்டுபிடிக்க’வில்லை, கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். அதற்குமுன்னரே தீ இருந்தது, அவர்களும் பயன்படுத்திக்கொண்டுதான் இருந்தனர். ஆனால் தீ அவர்கள் கட்டுப்பாட்டிலில்லை.

தீயை அணையாமல் ஒருவர் இராப்பகலாகக் காவல் பார்த்துக்கொள்ளவேண்டும். அணைந்துவிட்டால் உண்டாக்கமுடியாது. மீண்டும் காட்டுத்தீ ஏதும் பற்றினால்தான் உண்டு. அல்லது இன்னொரு குழுவினரிடம் சென்று நெருப்பு வாங்கிக்கொண்டு வரவேண்டும். காட்டைவிட்டுப் பல்லாயிரம் ஆண்டுகட்குமுன் வெளியேறிவிட்டாலும் இருநூறாண்டுகட்கு முன்வரைக்கும் நாம் நெருப்பு வாங்கிக்கொண்டுதான் இருந்தோம். அந்தப் பின்புலத்தில் பார்த்தால் தீப்பெட்டியின்  முக்கியத்துவம் விளங்கும். கிட்டத்தட்ட இன்று ஒரு வெடிகுண்டை எப்படிப்பார்ப்போமோ அப்படி அன்று தீப்பெட்டி  பார்க்கப்பட்டது என்பதைப்போலக் கி.ரா. காட்டும் சித்திரங்கள் அமைகின்றன.

அவர் பேசத் தேர்ந்தெடுத்த தீப்பெட்டிக்கு அப்படியான ஒரு மானுடக் கடந்தகாலம் மட்டுமல்லாமல், ஒரு கரிசல் எதிர்காலமும் இருந்தது. 

கரிசல் மண் ‘வானம் பார்த்த பூமி’ என அழைக்கப்படும் புன்செய் நிலப்பகுதி என்பதால் தண்ணீர்ப் பிரச்சனை பெரும் பிரச்சனை. மழை நீரைக்கொண்டே பிழைத்திருக்கும் கம்பு, வரகு, சாமை, திணை போன்ற புஞ்சைப் பயிர்களும் கைகழுவிக்கொண்டு சாப்பிட அமராத மனிதர்களும்தான் அங்கு வாழமுடிந்தது. ஆனால் மழையும் அதிகமில்லாத பகுதி அது. கி.ரா.கூட தன் சாகித்திய அகாதமி விருது ஏற்புரையில், உலகிலேயே அதிகம் மழைபொழியும் இடம் இந்தியாவின் சிரபுஞ்சி என்றால் குறைவான மழைபொழியும் இடம் தனது கரிசல் வட்டாரம்தான் என்று பேசியிருக்கிறார். ஆனால் வெயிலுக்குப் பஞ்சமில்லை. இப்பகுதியைச் சேர்ந்த இன்னொரு புகழ்பெற்ற எழுத்தாளரான எஸ். ராமகிருஷ்ணனின் (மல்லாங்கிணர், விருதுநகர்) எழுத்துகளில் இந்த வெயில் இடம்பெறாத படைப்புகளே அனேகமாக இல்லை எனலாம். 

விவசாயத்தை நம்பி வாழமுடியாத வெயில் பிரதேசத்தில் வேறு தொழில்களைத்தான் நம்பவேண்டும். தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலுக்கு இடையறாத வெயில்தான் வேண்டும். இருநூறாண்டுகளுக்குமுன் தீப்பெட்டியை வினோதமாகப் பார்த்த கரிசல் வட்டாரம்தான் (கோவில்பட்டி, எட்டயபுரம், சாத்தூர், சிவகாசி) அடுத்த நூறாண்டுகளில் இந்தியாவிற்கே தீப்பெட்டிகளை ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையாக ஆனது. இன்றுவரை அப்படியே நீடிக்கிறது. ஆக தீப்பெட்டியைப் பார்த்து கரிசல் மக்கள் மிரண்டது ஏதோ ஒரு துண்டான நிகழ்ச்சியல்ல. அதற்கொரு வரலாற்றுத் தொடர்ச்சி அவரது நாவலுக்கு வெளியே உள்ளது. அதனால்தான் அதை அவர் தேர்ந்தெடுக்கிறார்.

கள் அருந்துவதை விலக்கவேண்டும் என்ற கருத்தும் கள்ளுக்கடை மறியல் போன்ற போராட்டங்களும் சுதந்திரப் போரட்டக் காலத்தில் நுழைந்தபோது, குழந்தை பிறந்ததும் கள்ளைத் தொட்டு அதன் வாயில் வைத்து வரவேற்ற சமூகங்களும், நியாயம் சொல்பவர்கள் நிரம்பக் கள் குடித்திருந்தால்தான் பக்கச்சார்பின்றி தீர்ப்புசொல்வார் என்று நம்பி அதை வழக்கத்தில் வைத்திருந்த சமூகங்களும், தெய்வ வழிபாட்டின் பகுதியாக மதுக்குடம் எடுத்த சமூகங்களும் திகைப்படைந்ததைத் தன் படைப்பிற்குள் வைப்பதற்குத் தேர்ந்தெடுக்கிறார், ஏன்?

மக்களிடமுள்ள பழக்கவழக்க, பண்பாட்டு அம்சங்களைக் கணக்கிற்கொள்ளாமல் சித்தாந்த அடிப்படையில் மாற்றங்களைக் கொண்டுவருவது நோக்கம் சிறப்பானதாக இருந்தாலும் தோல்வியடையும் என்பதோடு விபரீத விளைவுகளையும் உண்டாக்கும் என்பதைக் காட்டவே. அதுவரை தேள்கடிக்கும், உடல்வலிக்கும் மட்டுமே மருந்தாக கிராமத்தில் பயன்பட்டுவந்த நாட்டுச் சாராயம் கள் மறுக்கப்பட்டபோது போதைப்பொருளாக ஆகியது. அதைத்தான் ‘கம்புக்காரர் லகுவணத் தேவர்’ பாத்திரத்தின் வழியாகச் சித்தரிக்கிறார். இன்றும் தமிழ்ச் சமூகத்திற்கு சாராயம் ஒரு பெரும் பிரச்சனையாக நீடிக்கிறது. தமிழகத்தில் ‘டாஸ்மாக்’குகள் மூடப்படும்போது மருந்துக்கடைகளில் இருமல் ‘சிரப்’புகளின் விற்பனை கூடுகிறது. மருந்து போதையாக ஆவது தற்காலத்தில் வேறுவிதமாக நீடிக்கிறது அவ்வளவுதான்.

ஆகவே நிதர்சனத்தைப் பதிவுசெய்வது என்றால் கண்ணில் கண்டதையெல்லாம் பதிவுசெய்வதல்ல, வரலாற்று நோக்கில் விரியக்கூடிய தொடர்ச்சி உள்ளவற்றைத் தேர்ந்தெடுத்து அதற்கு சமூகம் ஆற்றும் எதிர்வினைகளைப் பதிவுசெய்வது என்பதே இலக்கியத்தின் செம்பணி என்றுணர்ந்து கி.ரா. செயல்பட்டுள்ளார்.

இங்கு இன்னொரு விஷயம். கோபல்லபுரத்து மக்களில் காங்கிரஸ் மூவர்ணக்கொடியை கோவில் மரத்தின் உச்சியில் ஏற்றிக்கட்டியது யாரென்று தெரியாமற்போவதாக ஒரு சிறு சம்பவம் உண்டு. அதைக் கட்டியவனைக் கண்டுபிடித்து, அவன் நாடுகடத்தப்பட்டு அந்தமான் சிறைக்குச் செல்வதும், பிறகு வயசாளியாகத் திரும்பிவந்து தமிழகப் போராட்டமொன்றில் மடிவதும்தான் கி.ரா.வின் மூன்றாவது நாவலான ‘அந்தமான் நாயக்கர்’. அவரது சம்பவத் தேர்வுகள் சிறப்பானவை என்பது மட்டுமல்லாமல் அவை ஒவ்வொன்றும் தமக்குள் ஒரு நாவலின் செறிவை உள்ளடக்கிக்கொண்டிருக்கலாம் என்பதும் பிரமிக்கச் செய்கிறது. 

மூன்றாவதாக, அன்யோன்யம். இந்த அம்சத்தைக் கி.ரா.வின் எழுத்துகளில் சொல்லுக்குச்சொல், வரிக்குவரி, பக்கத்துக்குப் பக்கம், படைப்புக்குப் படைப்பு பலவாறாக உணரமுடிந்தாலும் திட்டவட்டமாக அத்தகைய வாசக நெருக்கம் உண்டாவது இதனால்தான் என்று என்னால் சுட்டிக்காட்ட இயலவில்லை. அவர் படைப்புகளிலிருந்து சில எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம் என்றாலும் அது சொல்லவிழைவதன் நுண்மையைக் குறைத்துவிடுமோ என்றஞ்சி விடுத்தனம். குறைந்தபட்சம், புனைவிலக்கியத்திடம் புனைவிலக்கிய விமர்சனம் தோற்கும் இடமாக இதை ஒப்புக்கொள்ளவேண்டியதுதான். ஆனால் நீங்களே வாசித்துப் பார்த்துக்கொள்ள ஒரு கைகாட்டலைச் செய்யமுடியும்.

சஞ்சாரம்‘ என்றொரு எஸ். ராமகிருஷ்ணனின் நாவல். அதுவும் கரிசல் மண்ணின் வாழ்க்கையை (இசைக்கலைஞர்கள்) காட்டும் ஒரு நல்ல படைப்புதான். தன் படைப்புகளில் கி.ரா. செய்வதைப்போல அனேக செவிவழிக்கதைகளை உள்ளடக்கியதுதான். எழுத்தாளரும் கி.ரா.வைப்போலவே கரிசலில் பிறந்துவளர்ந்த பின்புலத்தைக்கொண்டவர்தான். பொருத்தமான ஒப்பீடாக இருக்கவேண்டுமே என்பதற்காக இவ்விரங்களைக் குறிப்பிடுகிறேன். ஆனால் ஒரே மண்ணிலுள்ள செவிவழிக்கதைகளை அம்மண்ணின் இருவேறு ‘மாஸ்டர்’கள் சொல்கின்றனர் என்றாலும் அங்கு எஸ்.ரா.வின் சொல்முறையில் வாசக அன்யோன்யம் ஒருபடி குறைவதையும் கி.ரா.விடம் மிகுவதையும் காணலாம்.

இதற்குக் கி.ரா.வின் தனித்துவமிக்க ‘மொழி’ காரணமாக இருக்கலாம். வெள்ளந்தியான ‘தொனி’ காரணமாக இருக்கலாம். எழுத்தையும் பேச்சாகவே பார்க்கும் ‘முறை’ காரணமாக இருக்கலாம். கடந்த மே மாதம் கி.ரா. மறைந்தபோது வெளியான அஞ்சலிக் குறிப்புகள் ஒன்றில், அவரது பேத்தி, குடும்பப்பிரச்சனைகளை விளக்குவதற்குக்கூட தன்னிடம் தாத்தா நாட்டுப்புறக் கதைகளைச் சொல்வார் என்று சொல்லியிருந்ததைக் கண்டேன். அப்படியாக வாழ்க்கையைக் கையாள கதைகளே கருவி என்ற அவரது ‘பார்வை’ காரணமாக இருக்கலாம். ஒரு கதைசொல்லும் கனிந்த தாத்தாவுக்காக ஏங்கும் நம் ‘ஏக்கம்’கூட ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது இவையனைத்துமோ இவையல்லாத வேறேதுமாகவோகூட இருக்கலாம். ஆனால் அப்படிப் பிய்த்துப்பார்த்து இந்த வாசக நெருக்க விஷயத்தில் ஒரு தீர்மானமான முடிவை எட்டிவிடவியலும் என்று தோன்றவில்லை. அவரவர் வாசித்துப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

சுருக்கமாக, கணிதமொழியில், அவதானம் + நிதர்சனம் + அன்யோயம் = கி.ரா.

அவரது எழுத்துகளைப் போலவே கி.ரா.வைக் குறித்தும் பல்வேறு தகவல்கள், பார்வைகள் அனுமானங்களாகவும் செவிவழிக்கதைகளாகவும் புழங்குகின்றன. காலப்போக்கில் அவை ஆய்வாளர்களால் சரிசெய்யப்படும் என்று நம்பலாம்.

கி. ராஜநாராயணன் சுமார் நாற்பது வயதுக்குமேல்தான் எழுத ஆரம்பித்தார் என்ற தகவல்  உண்மையல்ல. அச்சில் வந்த அவரது முதற்கதையாக ‘மாயமான்’ (சரஸ்வதி, நவம்பர் 1958) கருதப்பட்டதால் எழுந்த கருத்தாக இருக்கலாம். ‘சொந்தச் சீப்பு’ (சக்தி, அக்டோபர் 1948) கதையே இதுவரை கிடைத்துள்ள முதல் கதை என்று கண்டறிந்து அதைக் ‘காலச்சுவடு’ (செப்டம்பர் 2020) வெளியிட்டுள்ளது. அதற்குமுன் கையெழுத்துப் பத்திரிகைகளில் அவரது கதைகள் வெளியாகியுள்ளன என்பதை அவரது கட்டுரை ஒன்றில் காணமுடிகிறது. ஆகவே இளமையிலிருந்தே புனைவு அவரை வசீகரித்துள்ளது. அவரும் தன் இருபது வயதுகளிலேயே எழுதத் தொடங்கிவிட்டார் என்பதுதான் உண்மை.

‘வட்டார எழுத்து வகையின் முன்னோடி’ என்ற பட்டப்பெயர் அழுத்தமாகக் கி.ரா. மீது விழுந்துவிட்டதால் மறைந்துபோன இன்னொரு அம்சத்தையும் இங்கே குறிப்பிடவேண்டும். அவரது மொழியை நம்மால் உடனடியாகக் கண்ணால் காணமுடிகிறது, வாசித்துவிட முடிகிறது என்பதால் இது நிகழ்ந்துள்ளது. ஆனால் மொழி என்பது கி.ரா.வின் இலக்கிய உடல் மட்டுமே. தன் கரிசல் மண் மீதான அவரது அபரிமிதமான பிடிப்பிற்கு அவரது முன்னோர்கள் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டது ஒரு காரணமாக இருக்கலாம். 

அவ்வரலாறு, தலைமுறை தலைமுறையாக, கதைகளாக அவரது சமூகத்திற்குள் செவிச்சொல்லாகக் கடத்தப்பட்டு வந்துள்ளது. இவர் அதை ‘கோபல்ல கிராம’த்தில் எழுத்தில் பதிவுசெய்துள்ளார். ஆகவே கரிசல் மண்ணின் மக்கள் என்றாலும் ‘நாம் இங்கு இடம்பெயர்ந்து வந்தவர்கள்’ என்ற உணர்வு அவருடைய சமூகத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே வந்திருக்கிறது என்பது கவனத்திற்குரியது. கி.ரா.வின் எழுத்தில் மண்மணம் நிறைந்துள்ளது அதேநேரத்தில் அவர் தனது சமூகத்தை விலகி நின்றும் பார்க்கிறார் என்று அவதானிக்கும்போது அவரது இடப்பெயர்வு மனநிலையின் தாக்கத்தையும் கணக்கிற்கொள்ளவேண்டியுள்ளது. அவரது படைப்புகள் முனைவர் பட்ட ஆய்வுகளுக்குத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படும் சூழலில் படைப்பிற்குப் பின்னுள்ள ஆனால் படைப்பாளியே தன்னுணராத மனநிலைகளைக் குறித்த ஆய்வுகளும் எழுந்தால் இலக்கிய ஆய்வுகள் மேலும் சிறக்கும்.

கி.ரா.விடம் விமர்சனப் பார்வை எவ்வாறு இருந்தது என்பது மறைவாக நிற்கும் இன்னொரு அம்சம். ஒரு காலத்தில், 1920-30களில், கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் இளைஞர்களின் கட்சியாக இருந்தது. கி.ரா.வும் அப்போது இளைஞர். அவருக்கு இடதுசாரித் தொடர்பும் தாக்கமும் இருந்துள்ளது. இடதுசாரி ஆதரவாளர் என்றாலும் அவரது தொடக்ககால இடதுசாரிப் பார்வையும்கூட ஒரு விமர்சனத்தை உள்ளடக்கியதாகவே இருந்திருப்பதை அவரது ஒரு படைப்பைக்கொண்டு ஊகிக்கமுடிகிறது.

அச்சில்வந்த முதற்கதையாக அறியப்படும் ‘சொந்தச் சீப்பு’ கதை அறையைப் பகிர்ந்துகொண்டு தங்கும்  நான்கைந்து நண்பர்கள் அதில் ஒருவரின் சீப்பைப் பயன்படுத்துகின்றனர். அது சீப்பின் சொந்தக்காரனுக்குப் பிடிக்கவில்லை ஆனாலும் நண்பர்களிடம் சொல்லமுடியவில்லை என்பதால் மனவழுத்தமாக நீடிக்கிறது. அச்சீப்பை இனி தனதல்ல என்று அவன் சொல்லிவிடும்போது அவனுக்குள் அழுத்தம் நீங்கிவிடுகிறது என்று பொதுவுடைமைத் தத்துவத்தை ஆதரித்து எழுதப்பட்ட கதையாக இருந்தாலும், எல்லோருக்கும் சொந்தமாகிவிடும்போது அச்சீப்பைப் பயன்படுத்தும் எவருமே சுத்தம் செய்யப் பொறுப்பேற்பதில்லை என்கிற அச்சித்தாந்தத்தைச் செயல்படுத்துவதிலுள்ள நடைமுறைச் சிக்கலையும் சேர்த்தே அமைத்திருக்கிறார். ஆகவே விமர்சனங்களற்ற கதைசொல்லித் தாத்தாவாக அவரை ஆக்கிவிடக்கூடிய அபாயம் தவிர்க்கப்படவேண்டியது.

இன்னொரு கொசுறு தகவல். ‘மணிக்கொடி காலம்‘ நூலில் அடிக்கடிக் ‘கி.ரா.’ என்று குறிப்பிடப்படுவது வேறாள். அவர் பி.எஸ். ராமையாவின் நண்பரான கி. ராமச்சந்திரன். 

கி.ராஜ நாராயணனைக் குறித்தும் அவரது படைப்புலகைக் குறித்தும் மேலும் விரிவாக அறிந்துகொள்ள ஜூன் 2021 ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழில் கணேஷ்பாபு எழுதியுள்ள ‘மண்வாசனை’ கட்டுரையையும், காலச்சுவடு ஜூன் 2021 இதழில் பெருமாள்முருகன் எழுதியுள்ள ‘துக்கத்தைக்குறை சந்தோஷத்தை விரிவுபடுத்து’ ஆகிய கட்டுரைகளை வாசிக்கலாம். 

முறையான கல்வியில்லாமலே வருகைதரு பேராசிரியர், தனித்தமிழும் செந்தமிழும் உச்சம்பெற்ற காலங்களிலும் பேச்சுத்தமிழ், எழுத்தைவிட சொல்லே காலத்தின் அரிமானத்தைத் தாக்குப்பிடிக்கும் என்ற வலுவான நம்பிக்கை, குக்கிராமத்தின் குட்டிச்சமூக வாழ்க்கையும் மானுடகுலத்திற்குத் தேவையானதே என்ற தீர்க்கமான பார்வை எனத் தொட்ட இடங்களிலெல்லாம் புதிய தடங்களைப் போட்டுக்கொண்டு வாழ்ந்த கி.ரா.வின் மறைவிலும் ஒரு புதிய தடத்திற்கு முதலடி எடுத்துவைக்கப்பட்டுள்ளது. புதிதாகப் பதவியேற்றுள்ள தமிழக அரசு, முழு அரசுமரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க கி.ரா. அவரது சொந்த கிராமமான இடைசெவலில் மீளாத்துயிலாழ வகைசெய்தது. எழுத்தாளர் என்கிற அடிப்படையில் ஒருவருக்கு இத்தகைய இறுதி மரியாதை செலுத்தப்பட்டது தமிழகத்தில் கி.ரா.வுக்குத்தான் முதல்முறை என்கின்றனர்.

அஞ்சலிக் குறிப்புகளில் ‘இவர் ஒரு சகாப்தம் (era)’ என்று சம்பிரதாயமாகக் குறிப்பிடுவதுண்டு. தன் நூற்றாண்டு வாழ்க்கையைப் பொருளுள்ளதாகவும் போற்றத்தக்க வகையிலும் வாழ்ந்துள்ள கி.ரா.வுக்குத்தான் அது முற்றிலும் பொருத்தமானது.

***