மலேசியாவின் வல்லினம் பதிப்பக (யாவரும் பப்ளிஷர்ஸ்இணைவெளியீடு) வெளியீடாக நவம்பர் 2019இல் வெளிவந்திருக்கும் நாவல் பேய்ச்சி‘. ஆசிரியர் ம.நவீன். ஆசிரியரின் முதல் நாவல். பக்கங்கள்: 284

*

அமைவதுஎன்ற ஏதோ ஒரு மாயத்தன்மை ஒவ்வொரு சிறப்பான இலக்கிய ஆக்கத்திற்குள்ளும் நிகழ்கிறது. அதைத் தெளிவான ஒரு வரையறைக்குள் கொண்டுவரமுடிவதில்லை. இத்தனை ஆண்டுக்கால இலக்கிய விமர்சனத்துறை அதைப்பிடிக்க முயலும்போதெல்லாம் அது நழுவிக்கொண்டே வந்திருக்கிறது. அந்த மாயத்தன்மையே இலக்கியத்தில் போலிகள் மறைந்துகொள்வதற்கான இடத்தை அளிக்கிறது. அந்த வகையில் அது சாபமாக இருக்கிறது என்றாலும் அந்த மாயம்தான் எழுத்தை ஒரு தொழில்நுட்பமாகக் கற்றுத்தேறிவிடலாம் என்ற நம்பிக்கை உள்ளோரிடமிருந்து இலக்கியத்தைக் காப்பாற்றிக்கொண்டுவரும் வரமாகவும் இருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால் எழுத்து கைவரப்பெற்றவர்களும்கூட நன்றாக அமைந்துபோகும் ஒரு படைப்பை ஒவ்வொருமுறையும் சாதித்துவிட முடிவதில்லை என்பதை எந்த எழுத்துலக முன்னோடியின் படைப்புலகிலும்கூடக் காணமுடியும். ஆகவே படைப்பு உயிர்பெற்று எழுவதற்கு எழுதுபவரின் கவனங்களை, முயற்சிகளை, முன்னேற்பாடுகளை, முன்முடிவுகளைத் தாண்டிய ஒன்று நிகழவேண்டியிருக்கிறது. அது நிகழும்போது அங்கு கலை பிறக்கிறது. பேய்ச்சி நாவல் ஒரு கலைப்படைப்பாக மலர்ந்துள்ளது என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. பேய்ச்சியை ஆசிரியர் எழுதியிருக்கிறார் என்பதைவிட பேய்ச்சி அவர்மூலமாக நிகழ்ந்துள்ளது என்பதே பொருத்தமாக இருக்கும்.

IMG_7306

பேய்ச்சியை வாசித்து முடித்ததும் எனக்குள் ஒரே நேரத்தில் தவிப்பும் நிறைவுமாக ஆங்காரமும் அமைதியுமாக சன்னதமும் சாஸ்வதமுமாக எழுந்த உணர்வுகளின் கலவையை அப்படியே நினைவில்மீட்டு எழுத்தில் வடிப்பது சிரமம் என்றாலும் அதற்காக அத்தகைய ஒரு படைப்பைக் குறித்து எழுதாமல் விட்டுவிடவும் கூடாது.

*

மனிதனை உந்தும் விசைகளாக மூன்று காரணிகள் உளவியலில் விவாதிக்கப்படுகின்றன.  வியன்னாவின் மூன்று உளவியற் சிந்தனைப் பள்ளிகள்‘ (Three Viennese Schools of Psychotherapy) என அழைக்கப்படும் அவற்றை உருவாக்கிய மூவருமே ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர்கள்.

நவீன உளவியலின் தந்தை என்றறியப்படும் ஃபிராய்டு முதலில் முன்வைத்தது இன்ப-துன்பக் காரணி. அதாவது இன்பத்தை அதிகரிப்பதும் துன்பத்தைக் குறைப்பதுமே மனித மனத்தின் நாட்டம் என்றார். மனதின் ஒவ்வொரு செயல்பாட்டையும் அதைக்கொண்டு விளக்கினார். அடுத்ததாக வந்த ஆட்லர், அதிகாரம் அல்லது சக்திக்கான நாட்டமே மனதின் தேடல் என்று விளக்கினார். மூன்றாமவர் ஃபிராங்க்ல், எதிலும் அர்த்தத்தைக் கண்டடைவதே மனித மனத்தின் நாட்டம் என்றார். இன்பதுன்பமோ, அதிகாரமோ வழித்தங்கும் இடங்களேயன்றி வந்துசேரும் இடமல்ல என்றார். நாஜி வதைமுகாம்களில் மாட்டி மனிதர்கள் மெல்லமெல்ல மனிதத்தன்மையை இழப்பதையும் மனம்பிறழ்வதையும் நேரில்கண்டவர். அந்தச் சூழலிலும் வாழ்வதற்கான ஓர் அர்த்தத்தை ஏற்படுத்திக்கொண்டதால் உயிர்பிழைத்து, மனம்பிறழாமல் மீண்டபின் இந்தக் கோட்பாட்டை உருவாக்கினார்.  

பேய்ச்சி நாவலில் கோப்பேரன், ஓலம்மா, மணியம், சின்னி, ராமசாமி ஆகிய அழுத்தமான, முழுமையான கதாபாத்திரங்களிடம் இந்தக் காரணிகளில் ஒன்று ஆதிக்கம் செலுத்துவதைக் காணமுடிகிறது. கோப்பேரனிடமும் ஓலம்மாவிடமும் இன்ப-துன்பக் காரணியும், மணியத்திடமும் சின்னியிடமும் அதிகாரக் காரணியும், ராமசாமியிடம் அர்த்தத்தைக் கண்டடையும் காரணியும் பிரதானமாகத் தொழிற்படுகின்றன. 

ஒரு மனிதரின் உணர்வுகளில் உலக உயிர்களின் உணர்வுகள் அனைத்துமே பிரதிபலிக்கின்றன என்ற  புரிதலுக்காக இவ்வாறு காரணிகளைக்கொண்டு பார்க்கிறோமே அன்றி உளவியற் சட்டகங்களை வைத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள் அல்ல அவை. உயிர்த்துடிப்புடன் கூடிய அக்கதாமாந்தர்களின் தன்மைகளுக்கான பின்புலங்களும் நாவலில் கிடைப்பதால் இயல்பாகவே அவர்கள் அவ்வாறு செயல்படுகின்றனர் என்பதை உணரமுடிகிறது.

மேற்குறிப்பிட்ட கதாமாந்தர்களில் மிகவும் ஆழமானவராக, குறிப்பாக என்னைக் கவர்ந்தவர் ராமசாமி. இந்த நாவலில் பெண்கள் வெளிப்படையாகப்  பேயாகவும் தாயாகவும் ஆகும் தருணங்கள் பல உண்டு என்றாலும் ராமசாமி ஆணாக இருந்தும் பெண்தன்மை கொண்டவராதலால் அவரும் அந்த இருமுனைகளுக்குள் அல்லாடும் தருணங்கள் நாவலில் நுட்பமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேன்மையான எழுத்தின் அடையாளம் இது.

மண்ணும் மனிதரும் ஒருவருக்கொருவர் தகவமைத்துக் கொள்கின்றனர். அது முடியாதபோது ஒருவரையொருவர் மாற்றியமைக்கின்றனர். அங்கு அழிவும் ஆக்கமும் ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளும், வெற்றிகொள்ளும். காட்டை அழித்துத்தான் தோட்டம் உருவாகிறது. தோட்டத்தை அழித்துத்தான் தொழிற்சாலைகளும் அதற்கான பயிர்களும் உருவாகின்றன. ஒவ்வொருகட்ட வளர்ச்சியும் அதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டியிருக்கிறது.

இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்வதற்கும் எதிர்ப்பதற்குமான மனநிலைகள் காலத்தின் கரங்களால் பெருக்கவும் நெருக்கவும் படுகின்றன. மலாயாவில் இது நிகழ்ந்தபோது அதில் கலந்துகொண்ட தமிழ்ச் சமூகம் இந்த மாற்றங்களை எதிர்கொண்ட வரலாறும் அந்த வரலாற்றின் இடைவெளிகளும் பேய்ச்சியில் நுண்ணோக்கியைக்கொண்டு உருப்பெருக்கிக் காட்டப்பட்டுள்ளன. 

தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கக்கூடிய வரலாற்று நிகழ்வுகள் தொடர்ந்து ஒரு புதிய மண்ணில் அடுத்தடுத்து வரும்போது அவற்றைக் கடந்துசெல்வதன் துயரம் நாவலில் வலுவாகப் பதிவாகியுள்ளது. வெவ்வேறு பின்புலங்களுடன் ஆனால் ஒரே சமூகச்சூழலில் வாழும் ஓலம்மா, மணியம், சின்னி, ராமசாமி ஆகிய எவருக்குமே இயற்கையான மரணம் வாய்க்காமல் போவதை அவரவர் தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கல் என்று ஒதுக்கிவிட முடியாது. அதற்கான காரணங்கள் சூழலிலேயே இருக்கின்றன. நாவலில் ஒரு திருப்பமாக வரும் விஷச்சாராயச் சாவுகளையும் அதன் ஒரு பகுதியாகத்தான் சேர்க்கவேண்டும். 

தமிழகத்தின் கிராமப் புறங்களிலிருந்து புறப்பட்டத் தமிழினம் மலாயாவின் கிராமங்களுக்குத் தன்னை ஒப்படைத்தது நேரடியாக ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளிக்கு என நிகழவில்லை. கிராமம் – கடல் – காடு – தோட்டம் – கிராமம் (கம்பம்) என்று அப்பெரிய வட்டத்தின் முனைகள் சந்தித்துக்கொண்டபோது புதியமண்ணில்  குறைந்தது மூன்றாம் தலைமுறை தலையெடுத்திருந்தது. கம்பத்திலிருந்து நகரத்திற்கு நகர்ந்த அதற்கடுத்த தலைமுறையினரின் வேர்கள் மலேசியாவின் கம்பங்களிலிருந்ததேயன்றி கடல்தாண்டி இருந்த இந்தியப் பூர்விகக் கிராமங்களில் அல்ல. சொந்தமண் எது என்பதைத் தெளிவாக ஒரு சமூகம் மீள்வரையறை செய்துகொண்ட இது ஒரு முக்கியமான காலகட்டம். அப்போது ரப்பர் தோட்டங்களும் செம்பனைகளாக மாறத் தொடங்கியிருந்தன.

இந்தக் காலகட்டத்தில் மூத்த தலைமுறைக்கு இடப்பெயர்வு என்பது ஒவ்வாமையையும் ஒரு பதற்றத்தையும் உருவாக்கக்கூடிய ஒன்றாக இருந்திருக்கும். தன் காலத்தில் தனக்கான மனிதர்களை அடையாளம்கண்டு வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொண்டிருக்கும்போது வந்த நகரவாழ்க்கை இடப்பெயர்வைப் பலர் ஏற்றுக்கொண்டு ஆனால் தங்கள் நினைவுகளில் மட்டும் தோட்டத்திலேயே வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். சிலர்  அதை ஏற்கவிரும்பாமல் குடும்பத்திற்குள்ளேயே இழுபறிகள், முறிவுகள், அழிவுகள் எனச் சிதைகின்றனர். காலத்தின் விசையை எதிர்த்துத் தனிப்பட்ட மனிதன் என்னதான் செய்யமுடியும்?

நாவலுக்கு இயற்கை அன்னையின் ஆசீர்வாதம் பரிபூரணமாகக் கிடைத்துள்ளதாகவே கருதுகிறேன். காடு குறித்த வர்ணனைகள், காட்சிகள், சம்பவங்கள் அதீத துல்லியத்துடன் துலங்கி விரிந்துள்ளன. செடிகொடிகளும் மரங்களும் விலங்குகள் பறவையினங்களும் பின்னிப்பிணைந்துவாழும் அக்காட்டின் ஒருபகுதியில் அருவியொன்று விழுந்து நீர்பெருகியோடும் காட்சி அபாரமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. பல இடங்களைச் சற்று உடல் நடுக்கத்துடன் வாசிக்கவேண்டியிருக்கிறது. அதன் அசல்தன்மை அந்த பயத்தை உண்டாக்குகிறது.

மனிதர்கள் அண்டமுடியாத சூழலில் அமானுஷ்யமாக ஆர்ப்பரிக்கும் அந்த அருவி பின்னாளில் சுற்றுலாவுக்கான இடமாக மாற்றப்படும்போது சாதாரணமாக ஆகிவிடுவதும் ஒரு வசனத்தின் வழியாகக்  குறிப்புணர்த்தப்படுகிறது. அது பல எண்ணங்களை எழுப்புகிறது. நாவல் வாசிப்பு வேகத்தை எந்த இடத்திலும் குறைக்காத அதேவேளையில் இவ்வாறு பல இடங்களில் யோசித்துப் பார்க்கவைப்பதாகவும் அமைந்துள்ளது.

ஓலம்மாவின் பேரனான அப்போய் சிறுவனும் அவனுடைய நிழலான கருப்பன் நாயும் என்றும் நினைவில் நிற்கக்கூடியவர்கள். தன்னைச் சுற்றி நிகழும் சமூக மாற்றங்களை அதன் உக்கிரத்தோடு விளங்கிக்கொள்ள இயலாத வயதில் கம்பத்தைப் பார்த்த சிறுவன் அப்போய், பின்னாளில் ஒரு நவீனகாலச் சிக்கலுக்கான பழங்காலத் தீர்வை நாடி, மனைவியுடன் வந்து பார்க்கும் பகுதி நாவலில் சிறிதாக இருந்தாலும் சிறப்பாக இருக்கிறது.

தீவிரக் கருப்புச்சட்டையாக இருந்த சம்பு, சம்பு சாமியாக ஆகிப் பேய்ச்சி பூசை செய்வதையும் கையுடைந்த குட்டைக்கார முனியாண்டி சிலை சரிசெய்யப்பட்டு ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பதும் கருப்பு வெள்ளையாகிக்கொண்டு வருவதன் அடையாளங்கள். அப்போது அவனுடைய கருப்பனுக்குப் பதிலாக ஒரு வெள்ளை நாயும் அங்கு வந்து அவனை மோப்பம்பிடித்துச் செல்கிறது.

நாவலில் லேசாக உறுத்திய இடமென்றால் அது மணியம்-சின்னி உசுப்பல்கள், வல்லுறவுக் காட்சிகள்தாம். காம உந்துதல்களை வாசகருக்கு உண்டாக்கக்கூடிய அக்காட்சிகளை இரண்டு விதங்களில் சரிசெய்யலாம் என்று நினைக்கிறேன்;

முதலாவது, மணியம் வரும் அத்தியாயங்களை மட்டும் நாவலில் மணியமே நேரடியாக விவரிப்பதுபோல ‘தன்மை’யில் மாற்றிவிடுவது. அப்போது மணியம் பேசுவதற்கு மணியமே பொறுப்பு. கதைசொல்லிக்கு அதில் பங்கேதுமில்லை. தற்போது நாவல் முழுதும் பயின்றுவந்துள்ள omniscient viewpoint-ஐ அந்த சில அத்தியாயங்களில் மட்டும் மாற்றிக்கொள்ளலாம். அதற்கான இடம் நாவல் வடிவத்தில் உள்ளது. சிறுகதைக்குத்தான் பார்வைக்கோணம் மாறலாகாது என்ற விதி.

இரண்டாவது, ஒருவேளை அவ்வாறு குறிப்பிட்ட அத்தியாயங்களில் படர்க்கையிலிருந்து தன்மை மாற்றம் பெற்றால் வாசிப்புக் குழப்பம் அல்லது வேகக்குறைவு உண்டாகலாம் என்று கருதினால், அக்காட்சிகளை நேரடியாக கதாமாந்தர்களின் சொற்களில் விவரிக்காமல் அதேநேரம் உக்கிரத்தையும் குறைத்துவிடாமல் உருவக, மொழி சார்ந்த உத்திகளைக் கைக்கொள்ளுதல்.

‘உள்ளிருந்து உடற்றும் பசி’ என்ற தலைப்பில் தமிழிலக்கியத்தில் காமத்தைக் குறித்த முக்கியமான படைப்புகளை அலசும் இந்த நாவலாசிரியரின் சிறப்பான கட்டுரையொன்றை நான் வாசித்திருக்கிறேன். ஆகவே நம் இலக்கிய முன்னோடிகள் காமத்தைக் கையாள்வதற்காக மொழியைப் பயன்படுத்தியுள்ள விதம் குறித்து ஆசிரியர் நன்கு அறிவார். மொழியின் பிடிமானங்கள் நன்கு வசப்பட்டிருப்பதால் இந்தவகையிலும்கூடப் பார்வைக் கோணத்தை மாற்றாமல் முன்னர் குறிப்பிட்ட இடங்களில் உறுத்தலைக் குறைக்கலாம். மற்றபடி மாற்றம்செய்தால் சிறக்கும் என்று பரிந்துரைக்கக்கூடிய எந்த இடத்தையும் நாவலில் நான் காணவில்லை.

அச்சுப்பிழைகள் பொதுவாகக் குறைவுதான். ஆனால் ஐம்பது இடங்களில் கோப்பேரனின் பெயர் வருகிறதென்றால் பாதிக்குப்பாதி கொப்பேரன் என்றும் மீதி கோப்பேரன் என்றும் அச்சாகியுள்ளது. ஒருவேளை கொப்பேரன், கோப்பேரன் பகுதிகளைத் தனித்தனியாக வாசித்தால் வேறு சிறப்பான அர்த்தங்கள் வருகின்றனவா என்று வாசித்துப்பார்த்தேன். அப்படியான குழப்பங்களை ஏற்படுத்தக்கூடிய பிழை என்பதால் அவசியம் திருத்தப்படவேண்டியது.

*

நவீனின் பல சிறுகதைகளை (போயாக் சிறுகதைத் தொகுப்பு) நான் ஏற்கனவே வாசித்திருக்கிறேன். அவற்றில் பல சிறப்பான புனைவுத் தருணங்கள், மொழிப்பாய்ச்சல்கள் இருந்தபோதிலும் வாசித்ததும் அவற்றைக் குறித்து எழுதவேண்டும் என்ற உந்துதல் போதிய அளவுக்கு எழவில்லை. ஆனால் பேய்ச்சி ஒரு வாசகனாக என்னை முழுமையாக ஆட்கொண்டதோடு எழுதவும் உந்தித்தள்ளியது. ஒருவேளை நவீனின் எழுத்து ஓட்டத்திற்குத் தேவையான இடவசதி சிறுகதையில் இல்லையோ? அல்லது சிறுகதை வடிவத்தின் சட்டதிட்டங்கள் குறித்த அவரின் கூர்ந்த கவனம் அங்கு கலையுச்சம் கொள்வதைத் தடுக்கிறதோ? ஏதோ ஒன்று. மொத்தத்தில் பேய்ச்சி தமிழ் இலக்கிய வரலாற்றில் தனக்குரிய ஓர் இடத்தைப்பிடிக்கும் என்று முன்னுரைப்பதோடு நவீன் இனிமேல் எழுதவேண்டியது நாவல்கள்தாம் என்பதையும் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.

சீ.முத்துசாமியின் இருளுள் அலையும் குரல்கள் வாசித்தபோது உண்டான அதே உணர்வாழத்தையும்  உற்சாகத்தையும் ஒரு பரந்த தளத்தில் உண்டாக்கிய படைப்பாக பேய்ச்சி அமைந்துவிட்டது. மலேசியத் தமிழ் புனைவிலக்கியம் தன் அடுத்தகட்டப் பயணத்தை அடுத்த தலைமுறை வழியாக தீர்க்கமாகத் தொடங்கியிருக்கிறது.

***