1876 ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து 50 விதைகள் ரப்பர் மரம் வளர்ப்பதற்காக சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டன. ஆனால் வரும் வழியிலேயே அவை இறந்துவிட்டன. அதற்கு அடுத்த வருடம் மீண்டும் அனுப்பப்பட்ட 22 விதைகளில் பாதி சிங்கப்பூரிலும், மீதி மலேசியாவிலும் (அன்று இரண்டு பகுதிகளுமே மலாயா) விதைக்கப்பட்டன. அவற்றில் ஒன்றிரண்டு வளர்ந்து மரங்களாக ஆயின.

பிறகு சுமார் பத்தாண்டுகள் கழித்து (1888இல்) ஹென்றி நிக்கோலஸ் ரிட்லி என்பவர் சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவின் முதல் இயக்குனராகப் பணியாற்ற இங்கிலாந்திலிருந்து வந்தார். அவருக்கு ஏனோ ரப்பரின் மீது அபாரமான காதல். மரத்தைப் பாதிக்காமல் ரப்பர் பாலெடுக்கும் முறையைக் கண்டறிந்தார். கண்ணில் கண்டவர்களிடமெல்லாம் ரப்பர் விதைக்கச்சொல்லி, பேண்ட் பாக்கெட்டில் விதைகளுடன் மலாயாவில் பைத்தியமாய் அலைந்துகொண்டிருந்தார்.

ஆனால் அன்று ரப்பருக்கு அவ்வளவு மவுசில்லை. உலகம் காபி, கரும்பு, மிளகு இவற்றின் பின்னால் சுழன்ற காலம். ஆறுவருடம் காத்திருந்து ரப்பரில் பணம்பார்க்க அதிகம்பேருக்கு பொறுமையில்லை. இருந்தும் ரிட்லியின் நச்சரிப்பில் சிலர் முன்வந்தனர். அதே 1888இல் டன்லப் என்பவர் காற்றடிக்கும் ரப்பர் டயரைக் கண்டுபிடித்ததும் காபித்தோட்டங்களை விதவிதமான நோய்கள்தாக்கி காபி பெரும் அழிவுகண்டதும் ரப்பரின் தேவை கொஞ்சம் தலைதூக்கக் காரணங்களாக அமைந்தன. உலகுக்கே ரப்பர் வழங்க மலாயா தயாரானது.

ஏற்கனவே தாதுவருஷப்பஞ்சத்தில் (1876-78) தப்பிப்பிழைக்க தமிழர்கள் கூட்டம்கூட்டமாக தமிழகத்திலிருந்து உலகின் பலபகுதிகளுக்கும் சென்றபோது மலாயாவுக்குள்ளும் வந்திருந்தனர். அவர்கள் இயல்பாக ரப்பரில் நுழைந்தனர். 80களுக்குப் பிறகு ரப்பரின் உற்பத்தி படிப்படியாக குறைந்து செம்பனையின் ஆதிக்கம் அதிகமாகியபோதும் சீ.முத்துசாமி எனும் படைப்பாளி மட்டும் தன்னந்தனியனாக தனக்கான ரப்பர் காடுகளில் அலைந்துகொண்டிருப்பதை ‘இருளுள் அலையும் குரல்கள்’ நாவல் முதலில் எனக்குச் சொன்னது.

2016ஆம் ஆண்டின் இறுதியில், சிங்கையின் தங்கமீன் கலை இலக்கிய வட்டச் சந்திப்பு ஒன்றிற்கு சென்றிருந்தபோது, பாலுமணிமாறன், ‘இருளுள் அலையும் குரல்கள்’ என்ற சீ.முத்துசாமியின் குறுநாவல் தொகுப்பு ஒன்றைக்கொடுத்து, ‘வாசித்துப்பாருங்கள். இவர் ஜெயகாந்தனுக்கு இணையாக எழுதுபவர்’ என்றார். அப்போது அருகிலிருந்த எம்.ஜி.சுரேஷ், ‘ஜேகேவிடம்கூட கொஞ்சம் பிரச்சார தொனி உண்டு. இவரிடம் அது சுத்தமாகக் கிடையாது’ என்றார். அப்படித்தான் சீ.மு எனக்கு வாசிக்கக் கிடைத்தார்.

எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு  ‘வாசிக்க விரும்புதலும் விரும்பி வாசித்தலும்’ என்ற தலைப்பில் ஒரு சிறப்பான முன்னுரையை இந்த நூலுக்கு அளித்துள்ளார். அதிலுள்ள ஒவ்வொரு வரியும் எண்ணிப்பார்த்து ரசிக்கத் தகுந்தது. கதை என்பது முத்துசாமிக்கு ஒரு சமாதானம்தான், அவர் சொல்லவருவது அதையல்ல என்பது ரெ.கா முன்னுரையின் சாராம்சம்.

‘சில எழுத்தாளர்கள் பின்னணியைக் குறைத்துக் கதையை நீட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் பின்னணியில் செடிகளை வைத்து அழகுபடுத்துமிடங்களில் காட்டையே வைக்கிறார் முத்துசாமி’ என்பவை ரெ.காவின் பொருட்பொருத்தமுள்ள வரிகள். காடு என்ன ஒரே சமமாக வெட்டப்பட்ட, சீரான தொடர்ச்சிகொண்ட குரோட்டன்ஸ் செடிகளா? காட்டைக் குறித்துப் பேசுதலும் எந்த ஒழுங்குக்கும் கட்டுப்படாததாகவே இருக்கட்டும் என்று ஆசிரியர் நினைத்திருக்கலாம்.

அகதிகள், விளிம்பு, இருளுள் அலையும் குரல்கள் ஆகிய மூன்று குறுநாவல்களிலும் புல், பூண்டு, செடி, கொடி, பாம்பு, பன்றி உட்பட அந்தக் கித்தாகாட்டையும், அதற்குள் தனி உலகமாக நிகழ்ந்த தோட்டத்துத் தமிழர்களின் வாழ்க்கையையும் உயிரோட்டத்துடன் தீட்டிக்காட்டுகிறார் சீ.மு. மூன்று குறுநாவல்களும் ஒரே கதைதான். மூன்றையும் தொடர்ச்சியாக வாசிக்க முடிந்தது. அவற்றிற்கிடையே தெளிவான எல்லைக்கோடுகள் இல்லை; தேவைப்படவுமில்லை.

சீ.முத்துசாமியின் மொழி

சிலபக்கங்களிலேயே இப்படி ஒரு மொழியமைப்பையும் களத்தையும் நான் வாசிப்பது முதன்முறை என்பதை உணர்ந்தேன். இலக்கியம் என்பது எதையும் கோர்வையாகச் சொல்லவேண்டும் என்ற சிக்கலைச் சுமந்தலையத் தேவையில்லையோ என்றுகூட எண்ணவைத்த எழுத்து.

நூலை எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கி ஒரு நான்கு பத்திகள் வாசித்து சிறப்பான ஓர் அனுபவத்தைப் பெறமுடியும். ரப்பர் தோட்டத்துத் தமிழர் வாழ்வுக்குள் வாசகரை உணர்வுபூர்வமாக இழுத்து விட்டுவிட்டால் அவர்களே மீதியைப் பார்த்துக்கொள்வார்கள் என்று ஆசிரியர் சரியாகவே கணித்திருக்கிறார்.

மூன்று குறுநாவல்களிலும் மையச்சரடை நோக்கி சுழித்துக்கொண்டு இறங்கும் கதைகளாக இல்லாமல், சம்பவங்களின் சிதறல்களாக ஒருவிதமான போதைதரும் மொழியில் புனைந்திருக்கிறார் சீ.முத்துசாமி. போதை தலைக்கேறியபிறகும், நாக்கு மரத்துப்போனபிறகும் அடுத்த போத்தலை அருந்தச்சொல்வது எதுவோ அதுவே முத்துசாமியின் அடுத்த பத்தியையும் வாசிக்கச்சொல்கிறது. எழுத்து செல்லும் வேகத்தில் இடையிடையே வரும் வழக்குச்சொற்களின் பொருளென்ன என்று யோசிக்க வாசகருக்கு அவகாசமில்லை.

எண்ண ஓட்டத்தின் தொடர்ச்சியைப் பற்றிக் கவலைப்படாமல் தாவித்தாவிச்செல்லும் இவரது எழுத்து, இப்படித்தான் தொடர்ந்து வரப்போகிறது என்பது புரிந்தவுடன் வாசிக்க ஒரு கொண்டாட்டமாக ஆகிவிடுகிறது. இது தவறாக அல்லது சரியாக இருந்தது என்ற பொழிப்புரை எங்கும் இல்லை. குறிவைத்துத் தாக்கும் பிரச்சாரம் இல்லை. ஒழுக்கம், அறம் குறித்தெல்லாம் ஏதும் பேச்சில்லை. ஒரேவரியில் சொல்வதென்றால், முத்துசாமி மனிதரின் கண்களால் அல்ல, காட்டின் கண்களால் மனிதர்களைப் பார்க்கிறார்.

சீ.முத்துசாமி காட்டும் தோட்டத்துக் காட்சிகள்

தமிழ்நாட்டின் ஒரு குக்கிராமத்தில், என் சிறுவயதில், கோடைக்காலத்தின்போது மழை இருட்டிக்கொண்டு வந்து தூறல் விழ ஆரம்பித்தால், வீடு ‘போர்க்கால அடிப்படை’யில் இயங்கும். தரையில் காயும் படங்குகள், துப்பட்டிகள், கொடியில் காயும் துணிகளை இழுத்து அள்ளிப் போகவேண்டும். மாடுகளை அவசரமாக அவிழ்த்துக் கொட்டிலில் கட்டவேண்டும். ஆனால் கயிற்றை அவிழ்த்ததும் அவை தண்ணீர்த் தொட்டிக்கு இழுக்கும். விறகுகள், சுள்ளிகள், ராட்டிகள் நனைந்துவிடும்முன் சாக்குகளுக்குள் சுற்றி எடுத்துச்செல்ல வேண்டும். ஏணிவைத்து ஏறி முற்றத்தின் மேலே சில ஜன்னல்களை அடைக்கவேண்டும். அதற்குள் மழை வலுத்து வீடு ஆங்காங்கே ஒழுக ஆரம்பிக்கும். இடத்துக்குத் தகுந்தாற்போல் சிறிதும் பெரிதுமான பாத்திரங்களை ஒழுகும் இடங்களில் வைக்கவேண்டும். மோட்டுவளையில் ஒழுகல் அதிகமாகி ஊற்ற ஆரம்பித்தால் சிறிய கொம்பு ஒன்றைக்கொண்டு ஓடுகளை உடைந்துவிடாமல் லாவகமாக அசைக்கவேண்டும்.

நான் சிங்கப்பூர் வந்து பலவருடங்கள் ஆனபின்னும்கூட வீட்டிலிருக்கும்போது மழை தூற ஆரம்பித்தால் என் உடலில் ‘அந்த’ படபடப்பு தொற்றிக்கொள்ளும். சில ஜன்னல் கதவுகளையாவது மூடினால்தான் அது சற்று அடங்கும். பிறகு மெல்ல மெல்ல அது நீர்த்துப்போனது. சீ.மு ‘அகதிகள்’ நாவலில் காட்டும் ஒரு மழைக்காட்சி மீண்டும் அந்தப் பதற்றத்தை வரவைத்தது. வெளியில் மழை பெய்கிறதா என்று எட்டிப்பார்த்துவிட்டு வாசிப்பைத் தொடர்ந்தேன்.  

இதுபோன்ற காட்சிப்படுத்துதல்களின் வலுவான தாக்கத்தால், பல இடங்களில் நினைவுகளுக்குள் மூழ்கி எழுந்து மீண்டுவந்துதான் வாசிப்பதைத் தொடரமுடிந்தது.

தோட்டத்தின் கழிவறையில் கிறுக்கப்பட்ட விஷயங்களால் கொலைகூட விழுந்திருப்பதைச் சொல்லும்போது, ‘தோட்டத்தின் எல்லா ரகசியங்களும் என்றாவது ஒருநாள் அந்த கக்கூசுக்கு வந்தே ஆகும் என்பதால் ரகசியங்களோடு வாழ்ந்துவந்தவர்கள் தூரத்தில் நின்று கக்கூசைப் பார்த்து மௌனமாகத் திரும்பிப் போயிருப்பார்கள்’ என்று காட்சிகளைத் துலக்கமாக மனதில் பதியவைக்கிறார்.

’நம்ம தோட்டத்து சடக்கு (சாலை) எனக்குப் புள்ள மாதிரிடா. அப்ப நீ பொறக்கலடா’ என்று சைக்கிள் மிதித்தபடி காட்டை அழித்துச் சாலையமைத்த நினைவுகளைத் தோண்டி எடுக்கும் பெரியான், அந்த மலைப்பான வேலையைச் சொல்லிக்கொண்டே வரும்போது, ‘முப்பது நாப்பது பேரோட ரத்தம் இதுல கலந்துருக்குடா’ என்று சொல்லிவிட்டு மேலும் பேச்சைத் தொடரமுடியாமல் அமைதியாகிவிடுகிறார். நாவல் முழுதும் ஆசிரியர் காட்டியிருக்கும் தோட்டத்தின் காட்சிகளும் அதிகம் என்னிடம் பேசியது கனமான இந்த மௌனங்கள் வழியாகத்தான்.

ரப்பர் பால் எடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ள தாயின் கஷ்டங்களை அவள் மகனின் கண்கள் வழியாக நமக்குக் காட்டிக்கொண்டு வருகையில், சில மரங்களில் பால் அதிகமாகச் சுரந்து சடுதியில் வாளியை நிறைக்கும்போது இயற்கையாக அவளின் தாய்மை பூரிக்கும் கணங்களை அவள் புன்னகை மூலமாகவே சுட்டிவிடுகிறார். மரத்தைக் கீறியதும் பால் முத்துக்களாகப் பூப்பதைக்கூட நிதானமாகப் பார்க்கவியலாத நெருக்கடியில் அவள் ஒரு கணத்தில் அங்கிருந்து நகர்ந்துவிடுகிறாள் ஆனால் வாசகர் திரும்பித்திரும்பிப் பார்த்தபடிதான் அவள் பின்னால் செல்லவேண்டியிருக்கும்.

வருடத்திற்கு ஒருமுறை அடிக்கப்பட்டு அதுவும் சொற்பகாலமே நீடிக்கும் சுண்ணாம்பு. அதனால் வெள்ளை நிறம் கொள்ளும் தோட்டத்துவீட்டுச் சுவர். அதில் மூட்டைப்பூச்சி கொல்லப்பட்டதால் தீற்றப்பட்ட ரத்தம். ஆசிரியர் யதார்த்தமாகத்தான் எழுதினாரா என்று தெரியவில்லை ஆனால் அந்த ரத்தத்தீற்றல் தோட்டத்தின் கதையையே பேசவல்ல குறியீடு. மனிதர் வாழத் தகுதியில்லாத இடங்கள் என்று அந்த ’வீடுகளை’ப் பற்றி எழுதுபவர் அதேவேளையில் சிறுவயதில் அவ்வீட்டுக் கூரையின் மீது விழும் தூறல் ஒலியைப் படுக்கையில் கிடந்து ரசித்ததையும் எழுதமறக்கவில்லை.

காட்சிகளுக்குள் இழையோடும் சமூகம்

இன்னொரு மண்ணில் கிட்டத்தட்ட அகதிகளாக வாழ்ந்த இத்தொழிலாளர்களில் சிலர் குடும்பத்துடன் ஒருதலைமுறை காலத்துக்குப்பிறகு தமிழகம் திரும்பி, அங்கும் ஒட்டமுடியாமல் சொந்தமண்ணிலேயே அகதிகளாக உணர்வதும் நாவலில் ஓரிடத்தில் கடிதச் செய்தியாகப் பதிவாகியுள்ளது. இன்றும் புலம்பெயர்ந்த தமிழர்களின் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று இது.

தகப்பனுக்கு வேறொரு பெண்ணிடம் தொடர்பிருப்பது தெரியவந்தபிறகு தாய் உள்ளூரக் கொள்ளும் அமைதியின்மை ஒரு கட்டத்தில் கொதிநிலையை அடைந்து வெடிக்கிறது. அந்த பெண்ணைத் தாய் மூர்க்கமாகத் தாக்குகிறாள். விஷயம் தெரிந்ததும் தந்தை தாயை அடித்துத் துவைத்துவிடுகிறார். அன்றிரவுதான் தாய் பெரும்பாரம் நீங்கிய நிம்மதியில் அமைதியாக உறங்குகிறாள். அடுத்தநாள் தொடுப்பாக இருந்த பெண்ணின் கணவன் தற்கொலை செய்கிறான். திருமணம் என்று வந்த காலம்தொட்டே திருமணத்தை மீறீய உறவுகளும் சமூகத்தில் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. அன்றைய தோட்டச்சமூகம் இச்சிக்கலை எதிர்கொண்ட முறையை, உளவியலை, விளைவைப் பதிவுசெய்திருக்கிறார் ஆசிரியர்.  

சாதி திருமண விஷயங்களில் மட்டுமல்லாமல் எல்லா இடங்களையும் ஆக்ரமித்திருந்ததும் அது எதிர்க்கப்படவேண்டியது என்ற சிந்தனை தொடங்கிவிட்டதும் தெரியவருகிறது. கோவிலில் பந்தி பரிமாறும் இளைஞனைப் பார்க்கும் கிழவர் ஒருவர், ‘கீழ்ஜாதிக்காரனெல்லாம் கோயில்ல பரிமாற வந்துடறானுங்க’ என்று கூற, இளைஞன் சோற்றோடு சேர்த்து இலையை அவர் முகத்தில் அப்பிவிட்டுக் கோபமாக வெளியேறுகிறான்.

சிவப்பு பாஸ்போர்ட், அனுமதி புதுப்பித்தலுக்கு அதிகாரி தயவு போன்ற அரசியல்-அதிகாரச் சூழ்நிலைகள்,  ரப்பர் மறைந்து பனைநெய் வரவினால் வேலையிழப்பு போன்ற பொருளாதார மாற்றங்கள், இவற்றுக்கிடையே காதல், திருமணம் தொடர்பான உளவியல் போராட்டங்கள், தற்கொலை, கொலை, கள்ளக்காதல், கருக்கலைப்பு, சாதிப்பிளவுகள் போன்ற சமூகச்சிக்கல்கள், கடவுள் வழிபாடு, தீமிதி போன்ற சடங்குகள் என்று தோட்டத்து வாழ்வின் எந்த அம்சமும் இவர் கண்களிலிருந்து தப்பவில்லை.

சயாம் மரண ரயில் வெள்ளோட்டம் விட்டபோது ரயிலோடு ஆற்றில் விழுந்து மறைந்துபோன தொப்பையன், இருபது மைல் ரொட்டி வக்குலைச் சுமந்து சைக்கிள் மிதித்துவந்து ரொம்ப நேரம் ஆபீஸ் வாசலில் மணியடித்து சலிக்கும் ரொட்டிக்கார பாய், மரத்தடியில் கிளிக்கூண்டோடு உட்கார்ந்து அடுத்தவேளை சாப்பாட்டை வருவோர்போவோர் முகத்தில் தேடும் குப்புக்கிழவன் இவர்களைப்போன்ற ஏகப்பட்ட பாத்திரங்கள் ஒரேயொருவரியில் வாழ்ந்து முடித்துவிடுகிறார்கள். ஆனாலும் அவர்கள் இன்னும் என் நினைவில் இருக்கிறார்கள். வரலாற்றின் ஓரத்தில் உருப்பெருக்கிவைத்துத் தேடினாலும் கிடைக்காத இவர்களையும் சேர்த்தே ஒருவரலாறு முழுமைபெறமுடியும் என்று சீமுவுக்குப் பட்டிருக்கவேண்டும். இல்லையென்றால் ஏன் அந்த ஒற்றை வரிகளை மெனக்கெட்டு எழுதவேண்டும்?

சீ.முத்துசாமி எனும் கதாசிரியர்

நாவலில் ஓரிடத்தில், தமிழகத்துக்கும் மலாயாவுக்கும் இடையே மிதந்துகொண்டிருந்த ரஜூலா கப்பல், ‘இத்தனை சோகங்களையும் ஒவ்வொரு பயணத்திலும் சுமந்துசெல்லும் தன் தலைவிதி குறித்து இறைவனை நொந்துகொள்ளலாம். நடுக்கடலில் வலிந்து மூழ்கித் தற்கொலை செய்ய முயற்சிக்கலாம். ஒருவேளை பாவப்பட்ட இந்த அப்பாவி மனிதர்களை நினைத்து தன் முயற்சியைக் கைவிடலாம்’ என்கிறார். அங்கும் கப்பலின் பார்வையில்தான் பேசுகிறார்.

பக்கத்து டிவிஷனிலிருந்து தப்போடும் சாராயப் பாட்டிலோடும் வந்திறங்கும் புதூரான் அடிக்கத் தொடங்கியதும் அதன் ஓசைக்குள் தோட்டமே உள்ளொடுங்கி ஐக்கியமாகிவிடும் என்று எழுதும் இடத்தில் முத்துசாமி, சு.வெங்கடேசன் எழுதிய ‘காவல் கோட்டம்’ நாவலில் மதுரையில் கோட்டைச் சுவர்கள் இடிக்கும் அமானுஷ்யமான இடத்தை நினைவூட்டுகிறார். இறப்பு என்பது இயற்கை என்றாலும் நாம் அதைப் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளோம். பறையின் ஆங்காரமான ஒலி இறப்பின் சாஸ்வதத்தைப் பேசுவதால் அது நம் மனதை ஒடுங்க வைப்பதைக் குறிப்புணர்த்தும் சிறப்பான பகுதி அது.

ஆசிரியரைத் தனிப்பட்ட முறையில் அறிந்தவனில்லை என்றபோதும், எழுத்தின் மூலமாக, அவர் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவராக இருக்கலாம் என்று ஊகிக்கிறேன். இல்லாவிடில் இவ்வளவு உக்கிரமான பாத்திரங்களை – அவர்கள் ரத்தமும் சதையுமாக வாழ்ந்து மடிந்தவர்கள் என்றபோதும் – இயல்பாகப் படைப்பது கடினம். ஆயினும் தவறியும் தன் சொந்த விருப்புவெறுப்புகள் எங்கும் வெளிவந்து வாசகரைத் தொட்டுவிடக்கூடாது என்ற கவனத்தோடு, பார்வைக் கோணங்களைக் கவசங்களாகக்கொண்டு சீ.மு சமர் செய்கிறார். அந்த இலக்கியப்பொறுப்பை வாசிக்கும்போது உணரமுடிகிறது.

ஹென்றி நிக்கோலஸ் ரிட்லி தன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு சுற்றிய ரப்பர் விதைகள் வளர்ந்து வனமானபின்னும் முத்துசாமி சுமந்து அலைவதுதான் ஒரு படைப்பிலக்கியவாதியின் சவாலாக இருக்க முடியும்.