‘Diplomacy’ (2011) என்ற பேராசிரியர் ஜெயக்குமாரின் இந்த நூல் அவரது ‘Be at the table or Be on the menu’ (2015) என்ற நூலுக்கு முன்னரே வெளியானது. ஆனால் இரண்டாம் நூலை முதலில் நான் வாசித்துவிட்டதால் – அதைக்குறித்துச் சில ஆண்டுகட்குமுன் எழுதிய பதிவு இங்கே – முதல் நூலை வாசிக்க மனமின்றி இருந்தேன். நல்வாய்ப்பாக 2019 செப்டம்பரில், அப்போதுவரைக்குமான, சிங்கப்பூரைப் பாதித்த உலக நடப்புகளைக் குறித்த அவருடைய புதிய பார்வைகளும் சேர்க்கப்பட்ட இரண்டாம் பதிப்பாக ‘அரசநயம்’ நூல் வெளியானது. அண்மையில்தான் அந்நூலை வாசிக்க வாய்ப்பு அமைந்தது.

IMG_7295

பின்விளைவுகளை மனதிற்கொண்டும் புத்தாக்கத்துடனும் அரசநயம் பேணுதல், தேச நலன்களைப் பாதுகாத்தல், மலேசியா, இந்தோனேசியா, சீனா ஆகிய நாடுகளுடன் இருதரப்பு உறவுகளைக் கையாளுதல் என மூன்று பெரும்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த நூலில் அறிமுகம் உட்படப் பதினாறு அத்தியாயங்கள் உள்ளன. ஜெயக்குமார் சட்டப் பேராசிரியர் என்பதாலோ என்னவோ வளவளவென்று போகாமல் சுற்றிவளைக்காமல் தேவையானதைமட்டும் சுருக்கென்றும் சுருக்கமாகவும் எழுதுவது அவருக்குக் கைவந்த கலையாக இருக்கிறது.

அனைத்துலக அரசநயத்தைப் பொறுத்தவரையில் ஒரு நாட்டின் செல்வாக்கு அது எவ்வளவு பெரிதாகவும் எவ்வளவு சக்திமிக்கதாகவும் இருக்கிறது என்பதைக்கொண்டுதான் அமைகிறது என்று  உண்மையை உடைத்துப் பேசும் ஜெயா, அதனால் சிங்கப்பூரைப் போன்ற சிறு நாடுகளுக்கு அந்தத் தளத்தில் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று பொருளில்லை என பீடிகையையும் போட்டுத் தன் நூலைத் தொடங்குகிறார். பொருத்தமாகவும் பயனுள்ளவகையிலும் செயல்பட்டதன் வழியாகச் சிங்கப்பூர் இத்தளத்தில் செய்திருக்கும் தன் சக்திக்குமீறிய சாதனைகளைப் பல எடுத்துக்காட்டுகளின் வழியாக முதற்பிரிவில் விவரித்துள்ளார்.

அவற்றுள், ஐநாவில் ‘சிறுதேசங்களின் கூட்டமைப்பு’ ஒன்றை 1992ஆம் ஆண்டில் சிங்கப்பூர் முனைந்து  உருவாக்கியது என்னைக் கவர்ந்தது. ஒருகோடிக்கும் (பத்து மில்லியன்) குறைவான மக்கட்தொகை கொண்ட நாடுகளை சிறுதேசங்கள் என்ற வரையறைக்குள் கொண்டுவந்து அவற்றுக்குள் ஓர் ஒத்துழைப்பை உருவாக்கிக்கொள்வது இந்த முயற்சி. உருவாக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை இந்தக் கூட்டமைப்புக்குச் சிங்கப்பூரின் தலைமைத்துவமே மற்ற நாடுகளால் விரும்பி ஏற்கப்படுவதும், காலப்போக்கில் ஐநாவில் பொதுச்செயலர் பதவிக்குத் தேர்தல் நடக்கும்போதுகூட போட்டியாளர்கள்  ஐநாவுக்கான சிங்கப்பூரின் பிரதிநிதியை அழைத்துச் சிறுதேசங்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைப் பிரச்சாரத்திற்காக ஒருங்கிணைக்க வேண்டுவதும் சிங்கப்பூரின் தலைமைத்துவத்தையும் தனித்துவத்தையும் காட்டுகின்றன.

பெரிய நாடாக இல்லையென்றால் பெரிய நாடுகளுக்கு இணையான கவனத்தைப் பெறும்படி சிறுதேசங்களை ஒருங்கிணைத்து அதன் தலைவராகச் செயல்படலாம் என்ற சிங்கப்பூரின் நம்பிக்கையும் நடைமுறை அணுகுமுறையும் இதில் தெரிகிறது. இதே அக்கறையைப் பத்து தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ஆசியான்’ விஷயத்திலும் சிங்கப்பூர்த் தொடர்ந்து காட்டிவருகிறது. ஐநாவில் உள்ள 192 உறுப்பு நாடுகளில் ஒன்று என்கிறவகையில் ஆண்டுக்கு 68 மில்லியன் வெள்ளியைச் சிங்கப்பூர் செலவழிக்கிறது. ஆகவே அந்தப் பணத்திற்கு எந்தவகையிலெல்லாம் பலனை அதிகரிக்கலாம் என்பதை நம் அதிகாரிகள் எப்போதும் நினைவிற்கொள்ள வலியுறுத்தி வந்திருப்பதாகவும் ஜெயா குறிப்பிடுகிறார்.

அடுத்த பெரும்பிரிவான ‘தேச நலன்களைப் பாதுகாத்தல்’ தலைப்பில் சிங்கப்பூருக்கு அரசநய நெருக்கடியை உண்டாக்கியப் பல குறிப்பிடத்தகுந்த சிக்கல்களையும் அதைச் சிங்கப்பூர் அணுகித் தீர்வுகண்ட விதம் குறித்தும் விளக்கியுள்ளார். இந்த இரண்டாவது பெரும்பிரிவே மொத்த நூலிலும் ஆகக் களிநயமிக்கப் பதிவுகளைக் கொண்டது என்பேன். மர்ம நாவல்களைக் குறிப்பிடும் தேய்வழக்கைப்போலப் ‘பக்கத்துக்குப் பக்கம் பரபரப்பு!’.

மைக்கேல் ஃபே என்ற அமெரிக்க இளையர் சிங்கப்பூரில் சொத்துகளுக்கு நாசம் விளைவித்ததற்காகப் பிடிபட்டார். அவ்வழக்கில் அவருக்கு 4 மாதச் சிறையும் 3500 வெள்ளி அபராதமும் 6 பிரம்படிகளும் தண்டனையாக 1994ஆம் ஆண்டில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சாதாரணமாகப் போயிருக்கவேண்டிய விஷயம்தான் ஆனால் அன்றைய அமெரிக்க அதிபர் கிளிண்டன்வரை போய் அவரும் ஃபேவுக்குக் கருணைகாட்டி விடுவித்துவிடும்படிச் சிங்கப்பூருக்குக் கடிதம் எழுதியதால் அது முக்கியமான அரசநய விவகாரமாக மாறிவிட்டது.

இந்த இடத்தில் ஒரு சிறிய பின்புலத் தகவலை அளித்தால் சிக்கல் விளங்கும். சிங்கப்பூரில் குற்றம்செய்தவர் எந்தநாட்டைச் சார்ந்தவராயினும் சிங்கப்பூர் சட்டப்படி என்ன தண்டனையோ அதேதான். ஆனால் மேலை நாடுகள் உட்பட உலகில் பல நாடுகள் உடலைத் தண்டிக்கும் (பிரம்படி, மரணதண்டனை போன்ற) தண்டனைகளைக் காட்டுமிராண்டித்தனமானது என்று கைவிட்டு வந்திருக்கின்றன, வருகின்றன. அந்தவகையில் சிங்கப்பூருக்கு அவ்வப்போது பிரம்படி, மரணதண்டனைகளைக் கைவிட அவ்வப்போது அழுத்தம் ஏற்படுவது பலகாலமாக நடந்துவருகிறது. சிங்கப்பூர் அவற்றை நீக்கமுடியாது என்று உறுதியாக நின்றுவருகிறது.

ஃபேவுக்கு சிறைதண்டனை அளித்ததோ அபராதம் விதித்ததோ அமெரிக்காவுக்குப் பிரச்சனையில்லை. ஆனால் பிரம்படி வேண்டாம் என்று சிங்கப்பூருக்கு அழுத்தம் அளித்தது. மேலும் சிங்கப்பூரில் பிரம்படி பெறவிருந்த முதல் வெள்ளைக்காரர் ஃபே. அமெரிக்காவுடன் சிங்கப்பூர் கொண்டிருக்கும் நெருக்கமான நல்லுறவு உலகறிந்தது. இந்தச் சூழலில் தண்டனையை மாற்றினால் சிங்கப்பூரின்  சட்டத்தைச் செயல்படுத்தும் திறம் இவ்வளவுதான் என்ற ஏளனத்திற்கு ஆளாக நேரிடும். தண்டனையைச் செயல்படுத்தினால் அமெரிக்க அதிபரின் பேச்சுக்கு எந்த மதிப்புமில்லை என்றாகிவிடும். தர்மசங்கடமான சூழல்.

பிரம்படி கொடுக்கவேண்டும் என்றுதானே இருக்கிறது, வலிக்காமல் காயம்படாமல் கொடுத்துவிடலாம். தண்டனையை நிறைவேற்றிய மாதிரியும் இருக்கும் அமெரிக்க அதிபரைச் சமாதானப்படுத்தியது போலவும் இருக்கும் என்று வெளியுறவுத்துறை அதிகாரிகளிடமிருந்துப் பல யோசனைகள் ஜெயாவுக்கு வந்துள்ளன. இதைப்போன்ற ஏமாற்றுவேலைகள் சிங்கப்பூருக்குப் பெருமைதராது என்று அவற்றை ஜெயா நிராகரித்துள்ளார். பிறகு உயர்மட்ட அளவில் விவாதித்து, அமெரிக்காவுடன் நல்லுறவிற்கான அடையாளமாக 6 பிரம்படிகளை 4 பிரம்படிகளாகக் குறைத்துக் கொள்கிறோம் என்று அமெரிக்க அதிபருக்கு ஒரு கடிதத்தை அனுப்பி ஒருவழியாகப் பிரச்சனை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

தண்டனை நிறைவேற்றப்பட்டு அதே ஆண்டில் ஃபே அமெரிக்கா சென்றுவிட்டார். ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ந்து சாலைவிதிகள் மீறல், போதைப்பொருள் பயன்பாடு எனப்பல்வேறு குற்றங்களுக்காகச் சிறைசென்றுள்ளார். பின்னாளில் அதிபர் பதவியிலிருந்து இறங்கியபின் சிங்கப்பூருக்கு வந்திருந்த கிளிண்டன், ஃபே தொடர்ந்து அமெரிகாவிலும் சட்டமீறல்களைச் செய்துவருவது குறித்து ஒரு விருந்தில் குறிப்பிட்டபோது, ‘நீங்கள் கொஞ்சம் கூடுதலாகவே பிரம்படி கொடுத்திருக்கலாம்’ என்றாராம்.

டச்சுக்காரர் ஒருவருக்குப் போதைப்பொருள் கடத்தியதற்காக இங்கு மரணதண்டனை அளிக்கப்பட்டபோதும், ஒரு பிலிப்பினோ பணிப்பெண் சக நாட்டுப் பணிப்பெண்ணையும் ஒரு சிங்கப்பூர்க் குழந்தையையும் படுகொலைசெய்ததற்காக மரணதண்டனை பெற்றபோதும் அந்தந்த நாட்டு அரசுகளிடமிருந்து அழுத்தம் வந்ததையும் அளிக்கப்பட்ட தண்டனையிலிருந்து பின்வாங்காமல் அதைச் சிங்கப்பூர் சமாளித்ததையும்  விவரித்துள்ளார் ஜெயா.

பிரிட்டிஷ் கடற்படை அதிகாரி ஜிம்மர்மேன் தன் நாட்டின் கடற்படைக் கப்பலில் வந்து சிங்கப்பூரில் தற்காலிகமாகத் தங்கியிருந்தபோது குடிபோதையில் சிங்கப்பூர்க் காவலர்களைத் தாக்கிய வழக்கு இன்னும் சுவாரஸ்யமானது. காவல்துறை வழக்குப்பதிவு செய்தபின் கப்பல் கிளம்பி பிரிட்டனுக்குச் சென்றுவிட்டது. அதன்பிறகு ஜிம்மர்மேனை சிங்கப்பூருக்கு அனுப்பவியலாது என்று கடற்படை மறுத்ததோடு அங்கும் அவர்மீது எந்தவழக்கும் விசாரிக்கப்படவில்லை.

இது சரிப்பட்டுவராது என்று யோசித்த சிங்கப்பூர், தன் விமானப்படைக்காக பிரிட்டனிடமிருந்து பலமில்லியன் வெள்ளி மதிப்புடைய ‘டைஃபூன்’ போர் விமானங்களை வாங்கவிருந்தது இந்த ஜிம்மர்மேன் விவகாரத்தால் பாதிக்கப்படலாம் என்று அறிவித்துள்ளது. உடனே இறங்கிவந்த பிரிட்டன், இந்த விவகாரத்தைப் பிழையாகக் கையாண்டுவிட்டதாகவும் அதற்கான நிபந்தனையற்ற மன்னிப்புக்கோருவதாகவும் கடிதமெழுதி ஜிம்மர்மேன் வழக்கு விசாரிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது. விரைவில் ஜிம்மர்மேனுக்கு நான்கு மாதத் தடுப்புக்காவல், இரண்டு படி நிலைகள் பதவிக்குறைப்பு, நன்னடத்தைப் பட்டைகள் நீக்கம், இன்னபிற சலுகை நீக்கங்களையும் செய்துள்ளது. நம் கொள்கையில் பிடிப்போடு இருப்பது ஒருபக்கம் என்றால் யாருக்கு எப்படிப்பேசினால் புரியும் என்று தெரிந்துகொண்டு அதற்கேற்றபடி பொத்தான்களை அழுத்துவதும் அரசநயத்தில் அவசியம் என்கிறார் ஜெயா.

‘மலேசியா, இந்தோனேசியா, சீனாவுடம் இருதரப்பு உறவுகளைக் கையாளுதல்’ என்கிற தலைப்பிலான மூன்றாம் பெரும்பிரிவில் விட்டுக்கொடுத்துப் போவதற்கும் நட்புறவுடன் நடந்துகொள்வதற்கும் தயாராக இருக்கும் அதேவேளையில் சிங்கப்பூரை இஷ்டத்திற்கு வளைத்துவிடலாம் என்ற எண்ணத்தை ஒருபோதும் பெரிய நாடுகளுக்கு அளித்துவிடலாகாது என்பதை மீளுறுதி செய்த விவகாரங்களை விவரித்துள்ளார். அதோடு நம் பேச்சில் நியாயம் இருக்கும் பட்சத்தில் நடுநிலையான மூன்றாம் தரப்பை மத்தியஸ்தம் செய்யக் கோருவது நம் வெளிப்படைத்தன்மையையும் நியாயவாதத்தையும் உலக நாடுகளின் பார்வையில் உயர்த்தும் என்ற பார்வையையும் சிங்கப்பூர் கைக்கொண்டு வருவதை விளக்கியுள்ளார். அதன் விளைவுகளும் தொடர்ந்து சிங்கப்பூருக்குச் சாதகமாகவே அமைந்துவந்துள்ளன.

சமயங்களில் வழக்கத்திற்கு மாறான உத்திகளையும் கைக்கொள்ள வேண்டியிருக்கலாம் என்று எழுதும் ஜெயா அதற்கு சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையே தண்ணீர் விலை தொடர்பாக எழுந்த சிக்கலைக் குறிப்பிடுகிறார். ஒரு கேலன் தண்ணீர் 3 மலேசியாக் காசு என்ற பழைய ஒப்பந்த விலையை  அதிகரித்து 45 காசிற்கு வாங்கச் சிங்கப்பூர் தயாராக இருந்ததையும், பிறகு திடீரென்று 60 காசாக மலேசியா உயர்த்திக் கேட்டபோது அதற்கும் ஒப்புக்கொண்டதையும் ஆனால் பேரம்படிந்தபின்னும் தொடந்து 3 ரிங்கிட், 6 ரிங்கிட் என்று மலேசியா ஏற்றிக்கொண்டே போனதால்தான் சிங்கப்பூர் உடன்பட முடியாமற்போனது என்பதை விளக்கி மலாயிலும் ஆங்கிலத்திலும் கையேடு அடித்துப் பொதுமக்கள் வாசிப்புக்குச் சிங்கப்பூர் விட்டது. இது வழக்கத்திற்கு மாறானது. ஆனால் மலேசியாவின் நீர்வளங்களை உறிஞ்சி சிங்கப்பூர் வருமானம் பார்ப்பதாக பொதுமக்களின் உணர்வுகளைச் சீண்டும் வகையில் தொடர்ந்து மலேசியா பேசிவந்ததால், அதை முறியடிக்க மேல்மட்டத்தில் அறைக்குள்  நடந்த பேச்சுகளை அம்பலப்படுத்தில் காட்டவேண்டியது அவசியமான அரசநயமே என்கிறார் ஜெயா.

இந்தோனேசியக் காட்டுத்தீயால் 2013, 2015இல் சிங்கப்பூர் புகைமூட்ட பாதிப்புக்குள்ளானதையும் அதைக்குறைக்க எடுக்கப்பட்ட சட்ட, அரசநய நடவடிக்கைகளையும் விரிவாக விவாதித்துள்ளார். இன்று கொவிட்-19 தீநுண்மம் நம்மை வீடுகளில்  அடைத்துள்ளது. புகைமூட்டமும் நம்மை வீடுகளில் அடைத்தது நினைவிருக்கலாம். இன்றாவது நாம் வெளியே உடற்பயிற்சிக்காகச் செல்வது நீடிக்கிறது. ஆனால் அப்போது வெளியே சென்றாலே புகையால் தாக்கப்பட்டோம். முகக்கவசமும் மனஅழுத்தமும் நீடித்தன.

கடந்த ஐந்தாண்டுகளாக அதை மறந்திருக்கிறோம் என்றால் அதற்கு சிங்கப்பூர் அரசு தொடர்ந்து இந்தோனேசியா அரசுடன் நெருக்கமாகப் பணியாற்றியதும், காட்டுத்தீ வைப்பதில் ஈடுபட்ட நிறுவனங்களைத் தண்டிக்கச் சிங்கப்பூரில் சட்டமியற்றி அதைச் செயல்படுத்தியதும், தன் பொறுப்பைக் காட்டும் வகையில் தொடர்ந்து இந்தோனேசியாவிற்கு இந்த விஷயத்தில் பொருளுதவி, இன்னபிற உதவிகளைச் சிங்கப்பூர் செய்துவருவதும்தான் காரணம். கால நிலையும் நமக்குச் சாதகமாக இருந்துவருவதை ஜெயா மறைக்கவில்லை எனினும் அரசநயப் பெருமுயற்சிகள் விடாமல் தொடர்கின்றன.

இந்தோனேசியாவில் 1998ஆம் ஆண்டுக் கலவரத்தின்போது அங்கிருந்த சுமார் 10,000 சிங்கப்பூரர், நிரந்தரவாசிகளை வெளியேற்றி சிங்கப்பூருக்கு அழைத்துவந்தவிதம் குறித்து அழகாக எழுதியிருக்கிறார் ஜெயா. ‘இடத்தைக் காலிசெய்தல்’ (evacuation) என்ற பெயரில் செய்தால் அது இந்தோனேசிய அரசைத் தேவையற்ற விமர்சனத்திற்கு உள்ளாக்கலாம் என்பதால் ‘உதவியுடன் புறப்படுதல்’ (assisted departure) என்று பெயரிட்டு மிகவும் கவனமாகச் செயல்பட்டுள்ளது சிங்கப்பூர் வெளியுறவுத்துறை. ஆனால் எப்போதும் இந்தோனேசியா மனம்கோணாமல் நடந்துகொள்ளவேண்டும் என்றும் சிங்கப்பூர் நினைக்கவில்லை.

சிங்கப்பூரின் மெக்டொனால்டு ஹவுசில் 1965ஆம் ஆண்டு வெடிகுண்டு வைத்த (மூவர் கொல்லப்பட்டு முப்பத்திமூவர் காயமடைந்தனர்) வழக்கில் உஸ்மான், ஹாருன் ஆகிய இரண்டு இந்தோனேசியக் கடற்படையைச் சார்ந்தவர்கள் மரணதண்டனை பெற்றனர். அவர்களை நாயகர்களாக்கும்விதமாக ஒரு போர்க்கப்பலுக்கு 2014இல் இந்தோனேசியா உஸ்மான் ஹாருன் என்று பெயர்சூட்டியது. அதைத் தவிர்க்கும்படிச் சிங்கப்பூர் கேட்டுக்கொண்டும் அதே பெயரில் அக்கப்பல் நீடிக்கிறது. ஆகவே அக்கப்பல் சிங்கப்பூர்த் துறைமுகத்தில் நிற்பதற்கும், அக்கப்பலோடு இணைந்து சிங்கப்பூர் வீரர்கள் பயிற்சி பெறுவதற்கும் சிங்கப்பூர் தடைவிதித்துள்ளது.

சீனாவுடன் பொதுவாக நல்லுறவு வைத்திருக்கும் சிங்கப்பூர் தைவான் விஷயத்தில் அவ்வப்போது முட்டிக்கொள்ளும். ‘ஒரே சீனா’ கொள்கையைச் சிங்கப்பூர் அன்றும் இன்றும் ஆதரித்து வந்திருக்கும்போதும் தைவானிடமும் நட்புறவோடு நடந்துகொள்வதில் சீனாவுக்குக் கடுப்புண்டு. லீ குவான் இயூ காலம் முதல் சிங்கப்பூர் பிரதமர்கள் ‘சொந்த’ விஷயமாகத் தனிப்பட்ட முறையில்தான் தைவானுக்குப் போவது வழக்கம். அரசு சார்ந்த பயணமாகப் போனால் தேவையில்லாமல் சீனாவை முறைத்துக்கொள்ளவேண்டிவரும். ஆனால் தைவானோடு இணைந்து சிங்கப்பூர் ராணுவப் பயிற்சிகள் செய்துவருகிறது. அதுதொடர்பாகப் பல சந்திப்புகளை நடத்தவும் வேண்டியிருக்கிறது.

தென்சீனக்கடலில் புழங்கும் விவகாரத்தில் சீனாவுக்கு நேரடியாக ஆதரவளிக்காமல் ஃபிலிப்பைன்சும் சீனாவும் மத்தியஸ்தத்தை நாடவேண்டும் என்ற நிலைப்பாட்டைச் சிங்கப்பூர் எடுத்திருப்பதில் ஏற்கனவே எரிச்சலில் இருந்த சீனா, 2016ஆம் ஆண்டிறுதியில் தைவானிலிருந்து சிங்கப்பூர் சென்ற ஒன்பது ‘டெர்ரக்ஸ்’ ராணுவ வாகனங்களை ஹாங்காங்கில் தடுத்துவைத்தது. தைவான் உறவுகுறித்து சிங்கப்பூரைக் கொஞ்சம் மிரட்டியும் பார்த்தது. ஆனால் சிங்கப்பூர் பணியவில்லை. இரண்டு மாதங்களில் வாகனங்களை அனுப்பிவிட்டதுடன் பழையபடி நட்புறவையும் சீனா தொடர்ந்தது. லீ குவான் இயூ மறைந்தபின் (2015) சிங்கப்பூர் அரசு தன் வெளியுறவு நிலைப்பாட்டிலிருந்து இறங்கிவந்து நடந்துகொள்கிறதா என்பதை ஆழம்பார்க்கக்கூட சீனா அந்த விவாகரத்தைப் பயன்படுத்தியிருக்கலாம் என்கிறார் ஜெயா.

அரசநயத்தில் எந்த நாடுகளுக்கும், ‘நிரந்தர நண்பர்கள் கிடையாது, நிரந்தர அக்கறைகள் (interests) மட்டுமே உண்டு’ என்ற சொலவடை உள்ளதாக நூலில் ஓரிடத்தில் குறிப்பிடும் ஜெயா அதை எவ்வாறு முடிந்தவரை சேதாரமில்லாமல் செய்யமுடியும் என்பதைச் சிங்கப்பூரின் அனுபவங்களைக்கொண்டு அனைவருக்கும் புரியும்விதத்தில் இந்த நூலில் விளக்கியுள்ளார். மேலும் நூலிலுல்ள பல சம்பவங்களையும் அவை தீர்க்கப்பட்ட முறைகளையும் அறிந்துகொள்வது அரசாங்கத்திற்கு மட்டுமல்லாமல் நம் அன்றாட அலுவல்களிலும்கூடப் பலனளிக்கும் என்றுதான் தோன்றுகிறது.

அவரே குறிப்பிட்டிருப்பதைப்போல இத்தகைய நாட்டுநலன் தொடர்பான முக்கியமான அனுபவங்களை அதில் சம்பந்தப்பட்டவர்கள் விரிவாக எழுதிவைக்காவிடில் காலப்போக்கில் அவற்றிலிருந்து பெறப்பட்ட பாடங்கள் அடுத்தடுத்த தலைமுறை அதிகாரிகள், அரசுகளுக்குக் கிடைக்காமற் போகலாம்.  ஆகவே சிரமம் பாராமல் இதைச் செய்யவேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் கடமை என்கிறார்.

டாமி கோவும், ஜெயக்குமாரும் (இருவருமே சட்டப்பேராசிரியர்கள்) இணைந்து, ‘பெட்ரா பிராங்கா’ யாருக்குச் சொந்தம் என்று சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையே நடந்த பல்லாண்டுகால இழுபறிப்போராட்டத்தை முடித்துவைத்ததை நூலாக எழுதி ஈராண்டுகளுக்குமுன்யு வெளியிட்டுள்ளனர். அதையும் வாசிக்கவேண்டும்.

***

பி.கு: Diplomacy என்பதற்குப் பொருத்தமான சொல் தேடிக்கொண்டிருந்தபோது ந.சிவேந்திரன் என்கிற இலங்கைத் தமிழர் 2013இல் ஜெயமோகனுக்கு எழுதிய கடிதமொன்றில் ‘அரசநயம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்ததைக் கண்டேன். மிகப்பொருத்தமான சொல்லாக்கமாகத் தோன்றியது, எடுத்துக்கொண்டேன். ‘தந்திரக்கார’ நரி என்பதைப்போல ஏமாற்றுவது என்கிற  எதிர்மறைப் பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுப் பழகிவிட்டதால் அரச’தந்திரம்’ என்பது அவ்வளவு பொருத்தமாகப் படவில்லை. ‘அரசநயம்’ உண்மையிலேயே நயஞ்சரக்கு.