‘தி சிராங்கூன் டைம்ஸ்’ 50ஆவது இதழ் சிறப்பிதழாகக் ‘கனமாக’ வெளிவந்துள்ளது. வழக்கமான 48 பக்கங்களைக் கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கி 91 பக்கங்களில் காத்திரமான உள்ளடக்கம், கவர்ச்சிகரமான வடிவமைப்பு என்று மெருகு கூட்டியுள்ளது.

IMG_7090

நான்காண்டுகள் தொடர்ந்து சிறுபத்திரிகை நடத்துவது அதுவும் அச்சிதழாகக் கொண்டுவருவது எக்காலத்திலும் தமிழில் பெரிய சாதனையாகக் கருதப்படவேண்டிய ஒன்றே. நிறுவனர், முதன்மை ஆசிரியர், பொறுப்பாசிரியர், ஆசிரியர் குழுவினர் அனைவருக்கும் என் வணக்கங்களும் வாழ்த்துகளும்!

50 இதழ்களின் வழியாக சி.டைம்ஸ் என்ன சாதித்திருக்கிறது என்ற கேள்வி எழலாம். 2017ஆம் ஆண்டில் 25 இதழ்கள் வெளிவந்த நிலையில் அவற்றிலிருந்து குறிப்பிட்ட படைப்புகளைத் தேர்ந்தெடுத்து ‘காலச்சிறகு’ என்ற தொகுப்பு வெளியிடப்பட்டது. தொகுப்பாசிரியர் ஷாநவாஸ். அத்தொகுப்பைப் பார்த்தபிறகு எனக்கும் சி.டைம்ஸ் சாதித்தது என்ன என்ற கேள்வி அவ்வப்போது எழுவதுண்டு. சி.டைம்ஸின் சாதனைகள், குறைநிறைகளாக நான் கருதியவற்றை 2018, 2019 ஆண்டுகளில் பதிவுசெய்திருக்கிறேன். 50ஆவது இதழான சிறப்பிதழிலும் ‘தி சிராங்கூன் டைம்ஸ் – தருணமும் தேவையும்’ என்ற கட்டுரையில் மேலும் சில பார்வைகளை எழுதியிருக்கிறேன். இருந்தும் மேலும் சி.டைம்ஸ் குறித்து எழுத எனக்கு ஏதாவது இருந்துகொண்டேதான் இருக்கிறது.

சி.டைம்ஸ் வெகுசிறப்பாகத் தொடர்ந்து செய்துவருகிற ஒரு விஷயம், ஓரளவுக்குச் செய்திருக்கிறது ஆனால் இன்னும் போகவேண்டிய தூரமதிகம் என்கிற வகையில் ஒரு விஷயம், இலேசாகத் தொட்டு மட்டும் பார்த்துள்ளது இனிமேல்தான் முழுவீச்சாக இறங்கவேண்டும் என்ற கணக்கில் மற்றொரு விஷயம் என மூன்று பிரிவுகளில் சில எண்ணங்களை இங்கு முன்வைக்க விரும்புகிறேன்.

வெகுசிறப்பாகத் தொடர்ந்து செய்துவருவது

‘சிங்கைத் தமிழரின் சிந்தனை’யைத் தாங்கிவருவதாக சி.டைம்ஸ் தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறது. யார் சிங்கைத் தமிழர்? எது சிங்கைத் தமிழரின் சிந்தனை?

சிங்கப்பூர் என்ற இந்த நாட்டில் அல்லது நாட்டால் ஒருவர் அடையும் அனுபவங்களின் தொகுப்பு வேறுபடுவதால் அவரின் சிந்தனையும் வேறுபடுகிறது. மேலும், இந்த மண்ணில் இங்குள்ள மக்களோடு வாழ்வதால் அன்றாட நடவடிக்கைகளின் மூலம் இயற்கையாக உண்டாகும் அனுபவம் ஒருவகை. சிங்கப்பூரைக் குறித்து வாசித்து, ஆராய்ந்து, சிந்தித்து, விவாதித்து, சான்றுதேடி உண்டாக்கிக்கொள்ளும் அனுபவம் இரண்டாம்வகை. முன்னது உணர்வுபூர்வமானது. பின்னது அறிவுபூர்வமானது. பலருக்கு இரண்டு தளங்களிலுமேகூட அனுபவங்கள் இருக்கலாம்.

வானவில்லின் நிறங்களைப் போல ஏழுவகையான சிங்கைத் தமிழ்ச் சிந்தனைகள் ஏழு பெரும் பிரிவினரிடமிருந்து வருவதாக நான் நினைக்கிறேன்.

முதல் பிரிவினர் சிங்கப்பூரர் என்ற அடையாளத்தைத் தாம் இளையர்களாகவும் வயதுவந்தவர்களாவும் இருந்தபோது சுமார் ஐம்பதாண்டுகளுக்குமுன் பெற்றவர்கள். இவர்கள் சிங்கப்பூரைக் கனிவுடன் பார்க்கின்றனர். இரண்டாவது, வினாதெரிந்த காலம் முதல் சிங்கப்பூரர் என்ற தெளிவான அடையாளத்துடன் வளர்ந்தவர்கள். இவர்கள் சிங்கப்பூரைப் பற்றுடனும் பெருமிதத்துடனும் பார்க்கின்றனர். மூன்றாவது, சுமார் முப்பதாண்டுகளுக்குமுன் புலம்பெயர்ந்த தமிழர்கள். இவர்கள் சிங்கப்பூரைப் பொதுவாக வழிபாட்டுணர்வுடன் பார்க்கின்றனர்.

நான்காம் பிரிவினர் புத்தாயிரத்திற்குப் பிறகு சிங்கப்பூருடன் தம்மை இணைத்துக்கொண்டவர்கள். சல்லிவேர்கள் இங்கு பரவிவிட்டன ஆனால் ஆணிவேரை ஊரிலிருந்து பிடுங்குவதா வேண்டாமா என்ற அவஸ்தையில் உள்ளவர்கள். இவர்களில் பலரும் சிங்கப்பூருடன் ஒருவிதமான ‘விருப்பவிலக்க’ உறவுகொண்டுள்ளனர். ஐந்தாம் பிரிவினர் இன்னும் வந்திறங்கிய சூடு அவ்வளவாகக் குறையாத தமிழர்கள். புதிதுபுதிதாக இன்னும் அனுபவங்கள் ஏற்பட்டுக்கொண்டிருப்பதால் எது சிங்கப்பூர் என்பதில் இவர்களுக்கு ஏகப்பட்ட  குழப்பங்கள் இருக்கின்றன. இவர்கள் சிங்கப்பூரைக் குறித்த சந்தேகம் விலகாமல் அதேநேரத்தில் விமர்சனத்துடனும் பார்க்கின்றனர்.

ஆறாவதாக நான் எண்ணுவது அவ்வப்போது பலகாரணங்களுக்காகச் சிங்கப்பூர் வந்து  குறுகிய காலம் தங்கிச்செல்லும் தமிழர்கள். இவர்களது சிந்தனைகளையும் சிங்கைத் தமிழர்களின் சிந்தனை என்று சேர்ப்பது பொருத்தமில்லாததுதான். ஆனால் சிங்கப்பூரைக் குறித்த இவர்களின் கண்ணோட்டங்கள் சிங்கைத் தமிழரின் சிந்தனையை பாதிப்பதால் இப்பிரிவையும் இங்கு கணக்கில்கொள்ள வேண்டியுள்ளது. இவர்கள் சிங்கப்பூரைப் பெரும்பாலும் கருப்புவெள்ளையாகப் பார்க்க முயல்கின்றனர். அதாவது சிங்கப்பூர் இப்படித்தான் என்ற ஒரு கற்பனையுடன் வரும் இவர்கள் அக்கற்பனை தம் குறுகியகால நேரடி அனுபவத்தால் உறுதிப்படுகிறதா அல்லது உதிர்கிறதா என்று பார்க்கின்றனர். ஒன்று கருப்பு, இல்லையேல் வெள்ளை. மிதமிஞ்சிய புகழ்ச்சி அல்லது அடாவடியான இகழ்ச்சி.

ஏழாவதாகவும் இறுதியாகவும் நான் கருதுவது ஒரு வகை நுட்பமான சிங்கைத் தமிழ்ச் சிந்தனை. இப்பிரிவினர் பெரும்பாலும் (பிறப்பால்) தமிழர்களே அல்லர். ஆனால் (சிங்கைத்) தமிழர்களைக் குறித்து ஆராய்வதும் சிந்திப்பதும் மட்டுமே இவர்கள் தொழில். பேராசிரியர்களாக ஆய்வாளர்களாகப் பணியாற்றுகின்றனர். சிங்கப்பூரைக் குறித்து ஆய்வுபூர்வமாகவும் அதிகாரபூர்வமாகவும் அறிந்துகொள்ள இவர்களிடம்தான் போகவேண்டும். இவர்கள் எழுதியதைத்தான் வாசித்தாக வேண்டும்.

இந்த ஏழுவகைத் தமிழர்களின் சிந்தனைகளையும் அவர்களது கதை, கவிதை, கட்டுரை, நேர்காணல் போன்ற படைப்புகளை வெளியிடுவதன் வாயிலாகச் சி.டைம்ஸ் தொடர்ந்து சிறப்பாகப் பிரதிபலித்து வந்திருப்பதாக நான் கருதுகிறேன். இதுவரை வெளிவந்துள்ள 50 இதழ்களையும் வாசிப்பவர்களுக்கு இக்கூற்றின் பொருள் துல்லியமாக விளங்கும்.

இந்தப் பார்வைகளை ஒட்டுமொத்தமாக ஒருவர் அறிந்துகொள்வதற்கு மிகுந்த முயற்சிவேண்டும். ஆனால் சி.டைம்ஸைத் தொடர்ந்து வாசிப்பதன் மூலம் அதை எளிதாக அடையமுடிகிறது.  இத்தகைய அரிய சேவையைச் சிங்கைத் தமிழ்ச் சமூகத்திற்குத் தொடர்ந்து சி.டைம்ஸ் தொய்வின்றி வழங்கவேண்டும்.

குறிப்பிடத்தக்க அளவில் செய்திருப்பது ஆனால் இன்னும் அதிகமாகச் செய்யவேண்டியது

இந்த விஷயத்தில் நான் வைக்கப்போவது மொழிபெயர்ப்புப் பணியை.

கொள்கை ஆய்வுக்கழகக் கட்டுரைகள், உருதுக் கவிதை மொழிபெயர்ப்புகள், சில ஆங்கில நேர்காணல்கள், முக்கியமான ஆய்வுச் சுருக்கங்கள் ஆகியவற்றை அவ்வப்போது சி.டைம்ஸ் மொழிபெயர்த்து வெளியிட்டு வந்திருக்கிறது. ஆனாலும் இத்தளத்தில் தொடர்ந்து இயங்கவில்லை. இது கடினமான பணிதான் ஆனால் அவசியமான பணி.

சி.டைம்ஸ் வாசிப்போரில் ஆங்கிலம் அறியாதவர்கள் எத்தனை பேர் இருப்பர்? ஓரிருவர்கூட இருக்கமாட்டார்கள். கிட்டத்தட்ட அனைவருமே ஆங்கில மொழியறிவு படைத்தவர்கள்தாம். பிறகு ஏன் வேலைமெனக்கெட்டு ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்புகளைச் செய்து வெளியிடவேண்டும்?

ஆங்கிலத்தில் வாசிக்க இயலாதவர்களுக்காகத்தான் மொழிபெயர்ப்பு என்று பொதுவாக ஒரு தவறான புரிதல் இருக்கிறது. ஆங்கில மொழியறிவு அற்றவர்களுக்காகத் தமிழில் மொழிபெயர்த்த காலம்  மலையேறிப் போய்விட்டது. தற்போது தமிழில் புதிய சொல்லாடல்களை உருவாக்குவதற்காக மொழிபெயர்க்கவேண்டியுள்ளது. ‘கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்று பாரதி பாடியது அதன்பொருட்டுத்தான். தமிழில் சரியான சொல்லாக்கங்களும் சொல்லாடல்களும் தொடர்ந்து உருவாகவில்லையென்றால் தமிழ்ப் பயன்பாடு ஒருகட்டத்தில் பழம்பெருமை பேசுவதற்கு மட்டுந்தான் பயன்படும். மற்றபடி கலை, இலக்கிய, அறிவுத்துறைகளில் அருகிப்போகும் அல்லது மைய நீரோட்டத்துடன் தொடர்பற்றுப்போகும்.

தனித்தமிழ் ஆர்வலர்கள் கொணர்ந்த சொல்லாக்கங்கள் மற்றும் சிறுபத்திரிகை வட்டாரங்களில் மட்டும் புழங்கிவந்த கலைச்சொற்கள், சொல்லாடல்கள் எனப் பலவும் இன்று தண்ணிபட்டபாடாக வெகுசன இதழ்களிலும் நட்பூடகங்களிலும் இயல்பாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அதற்குச் சில பத்தாண்டுகள் ஆகியிருக்கிறது. மொழித்தேர் அப்படி மெல்லத்தான் நகரும். தொடர்ந்த செயல்பாட்டின்மூலமே சில சிறிய மாற்றங்களையாவது இவ்விஷயத்தில் அடையமுடியும்.

ஆகவே சி.டைம்ஸ் தொடர்ந்து எப்பாடுபட்டேனும் மொழிபெயர்ப்புப் படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவரவேண்டும். சிங்கைச் சமுதாயத்தின் சீன, மலாய் மொழியிலுள்ள நகர்வுகளைத்  (ஆங்கிலத்தின் வழியாகவேனும்) தமிழ்ச் சமூகத்திற்கு சிறிய அளவில் அளிக்கமுடிந்தால்கூட அது போற்றத்தக்கப் பெருங்கொடையாகும்.

தொட்டு மட்டும் பார்த்திருப்பது, இனி முழுவீச்சில் இறங்கவேண்டியது

இங்கு நான் குறிப்பிட விரும்புவது ‘சிறப்பிதழ்கள்’ கொண்டுவரவேண்டியதன் அவசியத்தை.

‘காலம்’ என்றொரு சிற்றிதழை ஈழத்திலிருந்து கனடாவிற்குப் புலம்பெயர்ந்த செல்வம் அருளானந்தம் கடந்த முப்பாதாண்டுகளாக கனடாவில் அச்சில் வெளியிட்டு வருகிறார். இதுவரை மொத்தமாகவே 54 இதழ்கள்தாம் வந்திருக்கின்றன. ஆயினும் ‘காலம்’ தமிழ் இதழியலில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக அறியப்படுகிறது. அதன் பெருமைக்குக் காரணம் நீண்ட நெடுங்காலமாகத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் புலம்பெயர் தமிழர் இதழ் என்பது மட்டுமன்றி இதுவரை வந்திருக்கும் காலம்  இதழ்களில் கிட்டத்தட்டப் பாதியளவு சிறப்பிதழ்கள் என்பதும்தான்.

வெகுசன இதழ்கள் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு சிறப்பிதழ்களை வெளியிடுவது நாம் அறிந்ததே. தீபாவளி சிறப்பிதழ் என்றால் முன்பெல்லாம் அவற்றோடு சீயக்காய் பொட்டலங்களும் அன்பளிப்பாக வரும். தற்போது என்ன கொடுக்கின்றனர் என்று தெரியவில்லை. வெகுசன சிறப்பிதழ்களின் பின்னுள்ள நோக்கம் வியாபாரத்தை அதிகப்படுத்துவதாகும். ஆனால் சி.டைம்ஸ் கொண்டுவரவேண்டியது காலத்திற்கும் வாசகர்களுக்கு மதிப்புகூட்டக்கூடிய காலவதியாகிவிடாத சிறப்பிதழ்களை.

சிறுகதைச் சிறப்பிதழ், நா.கோவிந்தசாமி சிறப்பிதழ் ஆகிய இரண்டு சிறப்பிதழ்கள் மட்டுமே இதுவரை வெளிவந்துள்ளதாக நினைவு. தற்போது வந்திருக்கும் 50ஆவது சிறப்பிதழையும் சேர்த்துக்கொள்ளலாம். இது எண்ணிக்கையில் மிகவும் குறைவு.

சிறப்பிதழ்களின் சிறப்பு இரண்டு காரணங்களால் உண்டாகிறது. சிறப்பிதழ் ஒரு ‘தீம்’ வைத்து உருவாக்கப்படுவதால் நன்றாகத் திட்டமிட்டுப் போதுமான கால அவகாசத்தை எடுத்துக்கொண்டு தரமான படைப்புகளைத் தாங்கிய இதழாகக் கொண்டுவரமுடியும். அவசரத்தில் பக்கங்களை நிறைக்க ஆற்றலையும் நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கவேண்டியதில்லை. மேலும் ஒரு ‘தீம்’ எக்காலத்திலும் முழுமையாகக் காலாவதியாவதில்லை. ஆக உழைப்பு ஒரேவாசிப்பில் மறைந்துவிடாமல் மீளமீள எதிர்காலத்தில் வாசிக்கப்பட ஏற்றதாக உருமாருகிறது.

2020 இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. ஆசிரியர் குழுவினர் குறைந்தது ஐந்து சிறப்பிதழ்களையாவது இவ்வாண்டில் திட்டமிடலாம்.  அத்தகைய முயற்சி சிராங்கூன் டைம்ஸை அடுத்தகட்ட நகர்வுக்கு உந்தும் என்று உளமாற நம்புகிறேன்.

*

அவ்வளவுதான். மற்றபடி சிங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் தொடர்ந்து தரமான படைப்புகளை சிராங்கூன் டைம்ஸுக்கு அனுப்பியும், வாசகர்கள் தொடர்ந்து சந்தா கட்டி வாங்கிப் படித்து கருத்துகளைத் தெரிவித்தும் ஆதரவளிக்கவேண்டும்.

எழுத்தாளர்கள் ஒருமுறை கவிதையோ கதையோ கட்டுரையோ அனுப்பி சி.டைம்ஸ் அதைப் பிரசுரிக்கவில்லை என்றால் சோர்ந்துவிடாமல் தொடர்ந்து அனுப்புங்கள். நிச்சயம் உங்கள் பெயர் சிங்கைத் தமிழ் இதழியல் வரலாற்றில் இடம்பிடிக்கும். வாசகர்கள் சந்தா கட்டியும் மாதம் ஒன்றாம்தேதியானால் டாண்டாணென்று இதழ் வந்து தபால் பெட்டியில் வந்து விழவில்லை என்று கோபித்துக்கொள்ளாமல் சந்தாவைப் புதுப்பிக்கவேண்டும். நான்கு வயதுக் குழந்தைதானே சி.டைம்ஸ்? அழிச்சாட்டியம் செய்தாலும் அதனிடம் கோபித்துக்கொள்ள என்ன இருக்கிறது?

நூறாவது இதழ் இன்னும் நான்காண்டுகள் கழித்து மலரும்போது அது ஒரு பெரிய கொண்டாட்ட நிகழ்வாக இருக்கவேண்டும். அந்த அளவுக்கு ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ சிங்கைத் தமிழ்ச் சமூகத்திற்குள் இரண்டறக் கலக்கவேண்டும். அதற்கு நாம்தான் உதவவேண்டும்.

**