பத்தொன்பதாம் நூற்றாண்டு சிங்கப்பூர்த் தமிழர் வாழ்க்கை குறித்து 2019இல் தேசிய நூலக வாரியத்தில் ஓர் உரை ஆற்றினேன். தமிழரைக் குறிக்க அக்காலத்தில் பிறரால் பயன்படுத்தப்பட்ட ‘கிளிங்’ (kling) என்ற சொல் முதலில் அடையாளமாக இருந்து பிறகு மெல்லமெல்ல கண்ணியக்குறைவான சொல்லாகத் தேய்ந்தது என்று ‘சிங்கை நேசன்’ பத்திரிகையிலிருந்து வரலாற்று ஆதாரங்களைக் அவ்வுரையில் காட்டியிருந்தேன். உரை முடிந்ததும் உரையாடல் நேரத்தின்போது ‘கிளிங்’ குறித்துப் பார்வையாளர்களிடமிருந்து சில கருத்துகள் எழுந்தன.

நாடகக் கலைஞர், தயாரிப்பாளர் ச. வடிவழகன் தன்னுடைய நாடகத் தொடரான Shanmugam The Kalinga Trilogy க்கு முதலில் Kling Trilogy என்றுதான் வைத்திருந்ததாகவும் அது ஆட்சேபிக்கப்பட்டதால் பிறகு பெயர் மாற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். வரலாற்றுப் பின்புலம் தெரியாததால் ஒரு சொல்லைச் சொன்னதுமே அதீத உணர்ச்சிகளுக்கு ஆட்படும் சூழல் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். அடுத்ததாக ஒருவர் எழுந்து ‘கிளிங்’ குறித்த ஒருசில வரலாற்றுத் தகவல்களைச் சொல்லி, முத்தாய்ப்பாக, 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கப்பித்தான் கெலிங் மசூதி இன்றும் பினாங்கில் அதேபெயரில் இருக்கிறது என்ற தகவலைச்சொல்லி கிளிங் மரியாதைக் குறைவான பெயராக இருந்திருந்தால் அந்தப்பெயரில் மசூதி கட்டப்பட்டிருக்காது, நீடித்துமிருக்காது என்ற பார்வையையும் முன்வைத்தார். அப்பார்வை என்னைக் கவர்ந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் சென்று அறிமுகப்படுத்திக்கொண்டேன். அப்படித்தான் சுப்பையா லெட்ச்சுமணன் எனக்கு அறிமுகமானார்.

பிறகு அவருடன் தொடர்பிலிருந்தேன். சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூக வரலாறு குறித்த ஆர்வம் எங்களை இணைக்கும் பொதுப்புள்ளியாக இருந்தது. அவர் நிதித்துறை வல்லுநராக இருந்தாலும் தீவிரமான சமூக வரலாற்று ஆர்வலராக இருந்தார். குறிப்பாகச் சிங்கப்பூரில் நாட்டுக்கோட்டைச் செட்டிமார் வரலாறு குறித்த தகவல்கள் அவரிடம் ஏராளம் இருந்தன. புதிய தகவல்கள் சேரச்சேர அவற்றை ஆவணப்படுத்திக்கொண்டே வந்தார். எனக்குத் தெரிந்து Chettiars: The Pioneer Financiers of Singapore என்னும் கடந்த ஆண்டு உரையே அவரது ஆக அண்மைக்கால உரை.

செட்டியார்கள் நிதியாளர்களாக இருந்து செய்துவந்ததுதான் இன்று மீண்டும் நுண்கடன் அல்லது நுண்நிதி (microfiancing) என்னும் பெயரில் புதிதாக வந்திருக்கிறது என்பது அவரது பார்வை. சுப்பையா லட்ச்சுமணனைப்போன்ற துறைசாரா ஆர்வலர்களால் செய்யப்படும் ஆய்வுகளுக்குத் (Citizen Science, Citizen Research போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது) தற்போது உலக அளவில் அங்கீகாரம் கூடிவருகிறது. ஆய்வுலகம் இப்பங்களிப்புகளைக் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை.

சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியத்திற்காகவும் பல பதிவுகளின் உருவாக்கத்தில் சுப்பையா லெட்ச்சுமணன் குறிப்பிடத்தக்கப் பங்காற்றியிருக்கிறார். செட்டியார் சமூகம் மட்டுமின்றி பல்வேறு தரப்பிலிருந்தும் அதிகம் அறியப்படாத சிங்கப்பூர்த் தமிழர்களைக் குறித்துப் பதிவுகளை அளித்தபடியே இருந்தார். கலைக்களஞ்சிய உருவாக்க ஆசிரியர் குழுவில் இருப்பதால் அவற்றை உடனுக்குடன் வாசிக்கவும், வரலாற்றில் மங்கிப்போன முகங்களை மீண்டும் தரிசிக்கவும் எனக்கு ஓர் வாய்ப்பு அமைந்தது. கடந்தமாதம் அப்படியாக 10 பேரைப் பட்டியலிட்டு தகவல்கள், படங்களுடன் அனுப்பியிருந்தார். அவற்றைக் குறித்த விவாதங்கள் ஆசிரியர் குழுவுக்கும் அவருக்குமிடையே உற்சாகமாகவும் தீவிரமாகவும் சென்றுகொண்டிருந்த சூழலில் அவரது அகால மறைவுச் செய்தி (10/02/2023) அதிர்ச்சியளிக்கிறது.

https://www.tamilmurasu.com.sg/lifestyle/story20230212-124142

தமிழ்ச்சமூக ஆய்வுகள் ஒருபுறமிருக்க, சிங்கப்பூர்த் தமிழ்ப்பண்பாட்டு மையத்தின் உறுப்பினராக, முக்கியமான ஆய்வாளர்களுடன் நிகழ்ச்சிகள் படைப்பதிலும் சுப்பையா லெட்ச்சுமணன் துடிப்பாகப் பங்காற்றியிருக்கிறார். பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா ஆகியோரின் உரை, உரையாடல் நிகழ்ச்சிகளில் நெறியாளராகச் செயல்பட்டிருக்கிறார். பேராசிரியர் ஹார்ட்டின் உரையைச் சுருக்கமாகத் தமிழில் எழுதக் கடந்த ஆண்டு மத்தியில் சுப்பையா லெட்ச்சுமணனை அணுகினேன். எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம் என்றார். அழைத்துப்பேசினேன். சில ஆலோசனைகள் பெற்று நான் எழுதினேன். அதுவே கடைசியாக நான் அவருடன் உரையாடியது. இனி அதற்கு வாய்ப்பில்லை. காலம் கைமீறிவிட்டது.

அவரது சமூக வரலாற்று ஆர்வமும், பொறுப்புணர்வும், துறைதாண்டிய துடிப்பான சமூகச் செயல்பாடுகளும் பலருக்கும் முன்னுதாரணமானவை. அன்னாருக்கு அஞ்சலி! அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!