பேராசிரியர் ஹார்ட் (Professor George L Hart) தமிழிலும் வடமொழி உட்படப் பல்வேறு மொழிகளிலும் புலமை வாய்ந்தவர். தமிழுக்கு ‘செம்மொழி’ அந்தஸ்தைப் பெற்றுத்தர வாதிட்டவர்களுள் குறிப்பிடத்தக்கவர். புறநானூற்றை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் (சி.த.ப.மை.) கடந்த ஆண்டு ஒருங்கிணைத்த ‘Tamil & Sanskrit: The Two Eyes of Siva’ என்ற இணையவழி ஆங்கில உரையிலிருந்தும், தமிழ் ஒரு செம்மொழியே என்று வாதிட பேராசிரியர் ஹார்ட் முன்வைத்த வாதங்களிலிருந்தும் தேர்ந்தெடுத்த பகுதிகள் மொழிபெயர்க்கப்பட்டு இச்சிறு கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது. பழமைவாதத்தின் இடத்தில் செழுமைவாதத்தை முன்வைக்கும் ஆக்கபூர்வமான விவாதங்களைத் தமிழ்ச் சமூகம் வரவேற்று ஆதரிக்கவேண்டும் என்கிற நோக்கில் வெளியிடப்படுகிறது.

“தமிழின் தொன்மை குறித்து நாம் அடிக்கடிப் பேசுகிறோம். நிச்சயமாகத் தமிழ் பழமைவாய்ந்த மொழிதான் என்பதில் ஐயமில்லை ஆனால் அதைக்காட்டிலும் பெருமைப்பட வேண்டியது அதன் செழுமையைக் குறித்துத்தான்”

ஒரு செம்மொழி என்பது என்னைப் பொறுத்தவரை குறைந்தது மூன்று அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும்; குறிப்பிடத்தகத் தொன்மை, தனித்தியங்கும் தன்மை, இலக்கியச் செழுமை. இம்மூன்றும் தமிழுக்கு இருக்கிறது என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளன. இருப்பினும் தொன்மை என்ற ஓர் அம்சத்திற்கு மட்டும் அதீத முக்கியத்துவம் அளிக்கப்படுவதைக் காணமுடிகிறது.

கிடைத்துள்ள தொல்லியல் சான்றுகளை வைத்துப் பார்க்கும்போது தமிழ் ஏறக்குறைய 2200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனலாம். ஆனால் சீன, சுமேரிய, எகிப்திய, அக்காடிய மொழிகள் ஏறக்குறைய 6000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. அவ்வகையில் தமிழின் பழமை குறைவே. ஆயினும் 6000 ஆண்டுகள் பழமையானது என்பதற்காக ஒரு சுமேரிய வரவுசெலவுக் கணக்குக் குறிப்பைக் கம்பனைவிட மேம்பட்டது என்று சொல்வது தகுமா? அதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.

மேலும், தொடர்ந்து தொன்மையையே தேடிக்கொண்டு செல்லும் மனோபாவத்தால், தமிழின் பல்வேறு இதர முக்கியமான அம்சங்களை நாம் கவனிக்க மறந்துவிட்டோம். அவற்றுள் சிலவற்றை இங்கே குறிப்பிட்டு கவனப்படுத்த விரும்புகிறேன்.

பேராசிரியர் ஹார்ட்

முதலாவது, தமிழ் தொன்றுதொட்டு இன்றுவரை தொடர்ந்து ஒரு பேச்சுமொழியாக இருந்துவருகிறது. பல செம்மொழிகள் உட்படப் பல்வேறு பழமையான மொழிகளுக்கு இச்சிறப்பு வாய்க்கவில்லை. 

இரண்டாவது, தமிழின் சங்க இலக்கியமான அகநானூறும் புறநானூறும் சாதாரண மக்களின் உளவியலையும் வாழ்வியலையும் பேசும் அழுத்தமான வெளிப்பாடுகளைக் கொண்டுள்ளன. இப்போக்கு இறையியல், இறைவழிபாடுகள், உயர்குடி வாழ்க்கை போன்றவற்றை இலக்கியமாக்கும் இதர பழங்கால மரபுகளிடமிருந்து வெகுவாக வேறுபட்டிருப்பதோடு, நம் சமகாலத்திற்கு மிகவும் அணுக்கமாகவும் உள்ளது. ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழ் வாழ்க்கையை நேரடியாகக் கற்பனை செய்துகொள்ள உதவுகிறது தமிழிலக்கியம்.

மூன்றாவது, திருக்குறளைப் போன்ற ஓர் அறநூலை நான் வேறெந்த மொழிகளிலும் காணவில்லை. நான் சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன் ஆகிய செம்மொழிகளைக் கற்றவன். அவற்றின் இலக்கியங்களை மொழிபெயர்ப்பின்றி மூலத்திலேயே வாசித்திருக்கிறேன். ரஷ்யன், ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளிலும் விரிவாக வாசித்திருக்கிறேன். இந்திய மொழிகளில் தமிழில் நேரடியாகவும் மலையாளம், தெலுங்கு, இந்தி இலக்கியங்களை மொழிபெயர்ப்பு வாயிலாகவும் வாசித்திருக்கிறேன். என் மொழிப்புலமையைக் காட்டுவதற்காக அல்ல, திருக்குறளைப் போன்ற ஒரு நூலை வேறெங்கும் காணவில்லை என்பதை எந்த அடிப்படையில் சொல்கிறேன் என்பதை விளக்குவதற்காக இவ்விவரங்களைக் கூறுகிறேன்.

பழமையோடு சேர்த்து, இப்படியாக நீண்டுசெல்லும், தமிழின் பல்வேறு செழுமைகளும் நம் கவனத்திற்கு உரியவை.

**

மொழிபெயர்ப்பும் தொகுப்பும்: சிவானந்தம் நீலகண்டன். ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ நவம்பர் 2022 இதழில் வெளியானது.

சி.த.ப.மை. ஒருங்கிணைத்த உரை: https://www.youtube.com/watch?v=92i_Crn2aTU

தமிழ் செம்மொழியே என்பதற்கு பேராசிரியர் ஹார்ட் அளித்த விளக்கங்கள்: https://sangamtamilliterature.wordpress.com/dr-george-harts-letter-recommending-tamil-as-classical-language/