தமிழகத்தில், அன்றைய தஞ்சாவூர் ஜில்லாவில் (இன்றைய நாகப்பட்டினம் மாவட்டம்), சிக்கல் என்ற ஊரில் ஒரு விவசாயக் குடும்பத்தில், நடேசன் நாடார் – ஜானகியம்மாள் இணையரின் மகனாக 20 ஜூன் 1908 அன்று பிறந்தவர் பழநிவேலு. உடன்பிறந்தோர் எவருமில்லை.

அன்றைய சிக்கல் கிராமம் பெரும்பான்மையாக நெசவாளர்களையும் விவசாயிகளையும் கொண்டிருந்தது. பழநிவேலுவின் தந்தைக்கு நான்கு ஏக்கர் நெற்பயிர் விவசாய நிலமிருந்தது. குடும்பத்தின் ஒரே வாரிசான பழநிவேலுவைக் கல்விமானாக்க வேண்டும் என்று எண்ணிய அவரது தந்தை, பழநிவேலுவின் படிப்பைக் குறித்த கவனத்துடனும் கண்டிப்பானவராகவும் இருந்தார். எந்த விவசாய வேலைகளிலும் மகனை ஈடுபடுத்தவில்லை.

பழநிவேலு உள்ளூர்த் தொடக்கப்பள்ளியில் சேர்ந்தார். சுமார் ஐம்பதறுபது மாணவர்கள் படித்த அப்பள்ளி அக்காலத்தில் ‘ஃபர்ஸ்ட் ஃபார்ம்’ என்றழைக்கப்பட்ட தொடக்கநிலை-5 வரை கற்பித்தது. பள்ளியிலிருந்து மாலை வீடுதிரும்பியதும் பிற சிறுவர்களுடன் விளையாடுவார். பிறகு வீட்டில் தந்தை சில பாடங்களைக் கற்றுக்கொடுப்பார். பழநிவேலுவுக்கு சுமார் ஐந்தாறு வயதாக இருக்கும்போதே தந்தை காலமாகிவிட்டார்.

பிறகு தாய்வழிப் பாட்டனாரின் கவனிப்பில் பழநிவேலு வளர்ந்தார். வீட்டையொட்டி ஒரு சிறு கடை வைத்திருந்த   பழநிவேலுவின் பாட்டனார் தமிழில் நல்ல புலமை வாய்ந்தவர், புலவர். அவர் பழநிவேலுவுக்குத் தமிழை முறையாகக் கற்றுக்கொடுத்தார். ஏழெட்டு பிராயத்திலிருந்து பள்ளிப்படிப்போடு அடுத்த பத்தாண்டுகளுக்குப் பழநிவேலுவின் தமிழ் இலக்கிய, இலக்கணக் கல்வியும் தொடர்ந்தது.

பழநிவேலு பதின்மவயதில் இருந்தபோது இனி கல்வி அவசியமில்லை என்றும், தந்தையைப் போல விவசாயத்தைச் செய்து குடும்பத்தைக் கவனிப்பதே முக்கியம் என்றும் உறவினரும் ஊராரும் அறிவுறுத்தினர். ஆனால் அவரது தாயார் தன் மகன் சிறந்த கல்விமானாகத்தான் வரவேண்டுமேயொழிய விவசாயியாக அல்ல என்ற கணவரின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் மிகவும் உறுதியாக இருந்தார். மேலும் தன் மகன் ஆங்கிலக் கல்வியும் பெறவேண்டும் என்பது அவரது தணியாத ஆவல்.

பழநிவேலு தொடக்கக்கல்வியை முடித்து உயர்நிலைக் கல்வியை நாகப்பட்டினம் தேசிய உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்தார். குடும்பச் சூழலால் தமிழார்வம் அவருக்கு மாணவப் பருவத்திலிருந்தே அதிகமாக இருந்தது. தமிழ் வகுப்பில் ஆசிரியர், சக மாணவர்கள் என அனைவரின் கவனத்தையும் பெற்றார். படிப்போடு சேர்த்து கால்பந்து, இறகுப்பந்து விளையாட்டுகளிலும் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றார்.

உயர்நிலைப் பள்ளியில் பாடங்கள் கடுமையாக இருந்ததாலும், பள்ளிக்கு வெளியே தமிழைத் தவிரப் பிற பாடங்களில் போதிய உதவி கிட்டாததாலும் உயர்நிலையின் முதல் இரண்டு ஆண்டுகளிலும் ஒவ்வொருமுறை தோல்வியுற்றார். ஆகவே கூடுதலாக இரண்டாண்டு படிக்க நேர்ந்தது. ஆயினும் தளராமல் ஊக்கத்துடன் படித்து 1927-இல் உயர்நிலைக் கல்வியை முடித்தார். அக்கால உயர்நிலைக் கல்வியின் தரம் பின்னாளைய பட்டப்படிப்பிறகு நிகராக இருந்ததாக ஒரு நேர்காணலில் பழநிவேலு நினைவுகூர்ந்தார்.

உயர்நிலை படித்தவர்கள் எழுத்தராகப் பணிசெய்வதே அப்போது வழக்கமாக இருந்தது. அதன்படி நாகப்பட்டினம், தஞ்சாவூர் பகுதிகளில் ஏதும் எழுத்தர் பணி கிடைக்குமா என்று தேடினார். ஆனால்  அமையவில்லை. பழநிவேலுவின் மாமா (தந்தையுடன் பிறந்த சகோதரியைத் திருமணம் செய்திருந்தவர்) ஒருவர் அவ்வப்போது மலாயாவிலிருந்து பழநிவேலுவுக்குக் கடிதங்கள் எழுதிவந்தார். அதில் மலாயாவில் ரப்பர் தோட்டம், கடைகண்ணிகள் என்று வசதியாக வாழும் தன்னுடன் மலாயா வந்துவிடுமாறு பழநிவேலுவைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார். உள்ளூரில் வேலை சரியாகத் திகையாததால் பழநிவேலு மலாயா செல்ல முடிவெடுத்தார்.

உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த அதே 1927-ஆம் ஆண்டு நாகப்பட்டினத்திலிருந்து மாமாவுடன் கப்பலில் மலாயாவுக்குக் கிளம்பினார் பழநிவேலு. தாயாரைப் பிரியும் வருத்தமிருந்தாலும் தந்தையின் மறைவிற்குப்பின் அந்த இடத்திலிருந்து குடும்பத்தைக் காத்துவந்த மாமாவுடன் செல்கிறோம் என்கிற எண்ணம் அவருக்குச் சற்று ஆறுதலை அளித்தது. கெட்ட சகவாசத்தைச் சேர்த்துக்கொள்ளாமல் மாமாவுக்குக் கீழ்ப்படிந்து நடந்து நற்பெயரெடுக்க வேண்டும் என்றும், காசுபணம் சேர்த்துக்கொண்டு இரண்டு மூன்றாண்டுகளில் மீண்டும் ஊர் திரும்பிவிடவேண்டும் என்றும் பழநிவேலுவிடம் தாயார் கேட்டுக்கொண்டார். பழநிவேலுவும் அப்படியே செய்வதாக வாக்களித்தார்.

ரஜூலா கப்பலில், இரண்டாம் வகுப்புப் பயணியாக, ஏழுநாட்கள் பயணம் செய்து மலாயா வந்திறங்கினார். கிளாங் துறைமுகத்தில் மாமாவுடன் இறங்கி ஒருவாரத் தனிமைப்படுத்தல் நடைமுறைகளை முடித்துக்கொண்டு அருகிலுள்ள ‘பண்டிங்’குக்குச் சென்றார். பிறகு பேராக்கின் துலோக் ஆன்சனில் பாகாங் பாசிர் தென்னைத் தோட்டத்தில் பழநிவேலுவுக்கு வேலை கொடுக்கப்பட்டது. தென்னைக் கொப்பரைகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் நடந்த தோட்டத்தில் தொழிலாளர்களுக்கு ஊதியம் கணக்கிட்டுக்கொடுக்கும் ‘செக்ரோல்’ எழுத்தர் பணி அது. தொழிலாளர்களின் பிள்ளைகள் படிக்கும் தொடக்கப்பள்ளி ஒன்றும் அத்தோட்டத்தில் இருந்தது.

Palanivelu

PC: esplanade.com

முற்பகலில் எழுத்தர் பணி, பிற்பகலில் அப்பள்ளியில் தமிழாசிரியர் பணி என்று பழநிவேலுவின் மலாயா வாழ்க்கை தொடங்கியது. எழுத்தர் பணிக்கு 25 வெள்ளி, ஆசிரியர் பணிக்காக 30 வெள்ளி என்று மாதம் மொத்தம் 55 வெள்ளி அவரது வருமானம். அக்காலத்தில் அது பெரிய தொகை. ஆயினும் ஒருபக்கம் தொழிலாளர்கள் இன்னொரு பக்கம் மாணவர்கள் என்பதால் இவருடன் சரிசமமாகப் பழகுவதற்கு நண்பர்களோ பிற அறிமுகங்களோ இல்லாத சூழல் பழநிவேலுவை சோர்வுறச் செய்தது. வேறேதும் பணிக்குச் செல்லலாமா என்று யோசிக்கத் தொடங்கினார்.

அந்தக் காலகட்டத்தில் ‘சிங்கப்பூர் மாமா’ என்று பழநிவேலு அழைத்த இன்னொரு உறவினர் சிங்கப்பூரில் இருந்தார். மனைவியை இழந்திருந்த அவர் தனியாளாகச் சிங்கப்பூரில் வசித்து வந்தார். அவர் தன்னுடன் சிங்கப்பூர் வந்துவிடுமாறும் வந்தால் சிங்கப்பூரில் சிறப்பான வேலையும் ஊதியமும் உடனே கிடைத்துவிடும் என்றும் பழநிவேலுவை அவ்வப்போது வற்புறுத்திக்கொண்டிருந்தார். ஆகவே சுமார் இரண்டாண்டு தோட்டத்து வேலையில் கழிந்திருந்தபோது, ஜூன் 1930-இல், ரயிலில் சிங்கப்பூருக்கு வந்திறங்கினார். சிலிகி சாலையில் ஒரு வாடகைக் குடியிருப்பில் தங்கினார்.

சிக்கலிலோ மலாயாத் தோட்டத்திலோ இல்லாத சிங்கப்பூரின் உயர்ந்த கட்டடங்களும் நாகரீக உடையணிந்த மனிதர்களும் பழக்கவழக்கங்களும் பழநிவேலுவை மிகவும் கவர்ந்தன. ஆனால் சிங்கப்பூர் மாமா சொன்னபடி எந்த வேலையும் கிடைக்கவில்லை. வருமானமில்லை ஆனால் செலவுமட்டும் ஆகிக்கொண்டிருந்ததால் தோட்டத்து வேலையில் சேமித்திருந்த காசு கரைந்து அனேகமாகத் தீர்ந்துவிட்டது.

சிங்கப்பூர் மாமா எந்த வேலையும் செய்யாமல் நண்பர்களை அண்டிக்கொண்டு காலங்கடத்தி வந்ததையும், தன்னால் வருமானம் கிடைக்கும் என்று நினைத்தே தன்னை சிங்கப்பூர் வரச்செய்திருக்கிறார் என்பதையும் பழநிவேலு விளங்கிக்கொண்டார். இவரை நம்பி இருந்த நல்ல வேலையை விட்டுவிட்டு இப்படி வந்தோமே என்ற கவலை ஆட்கொள்ளத் தொடங்கியது.

உலகப் பொருளாதார வீழ்ச்சிக் காலம் (1930கள்) அது. எல்லா நிறுவனத்திலும் ‘வேலை காலியில்லை’ என்ற அறிவிப்பு தொங்கிக்கொண்டிருந்தது. சுமார் ஆறுமாத காலம் அப்படி வேலைதேடியே கழிந்தபோது, குடியிருப்பின் அருகில் தங்கியிருந்த ஒரு நண்பர் அவர் வேலைசெய்த சிங்கப்பூர் போக்குவரத்து நிறுவனம் ஒன்றில் பணிக்கு விண்ணப்பிக்குமாறு பழநிவேலுவிடம் சொன்னார்.

‘Singapore Traction Company’ என்று அழைக்கப்பட்ட அந்த நிறுவனத்தில் பயணச்சீட்டு விற்பனையைச் சரிபார்க்கும் எழுத்தராகப் பழநிவேலுவுக்கு வேலைகிடைத்தது. மெக்கன்சி சாலையிலிருந்த அந்நிறுவனத்தில் டிசம்பர் 1930-இல், மாதம் 40 வெள்ளி ஊதியத்தில் பழநிவேலு வேலைக்குச் சேர்ந்தார். ஒருவாரம் பகல் வேலை ஒருவாரம் இரவு வேலை என்று அந்நிறுவனத்தில் முறைவைத்து வேலைசெய்ய வேண்டியிருந்தது. தன்னையும் மாமாவையும் கவனித்துக்கொண்டதுபோக மாதம் 10 வெள்ளி சேமித்தார். சேமிப்பிலிருந்து ஊருக்கும் பணம் அனுப்பினார்.

கிளாங் சாலையில் அமைதியான இடத்தில் குடியிருப்பு, வெள்ளிக்கிழமையானால் சிராங்கூன் சாலை காளியம்மன் கோவிலுக்குச் செல்வது, தன் வயதொத்த நண்பர்களின் அறிமுகம், பழக்கம், வாராவாரம் திரைப்படம் என்று சிங்கப்பூர் வாழ்க்கையில் பழநிவேலுவுக்கு ஒரு பிடிமானம் உண்டானது. கப்பலேறி வந்து மூன்றாண்டு கடந்திருந்தாலும் உடனே ஊர்திரும்பும் எண்ணம் அவருக்கு எழவில்லை. இன்னும் சில ஆண்டுகள் கழித்துத் திரும்பலாம் என்று நினைத்தார்.

இக்காலத்தில்தான் சொந்தமாகத் தமிழில் இலக்கியப் படைப்புகளை எழுதி வெளியிட ஆரம்பித்தார் பழநிவேலு. மலாயா தோட்டத்துப் பள்ளியில் தமிழாசிரியர் பணிபுரிந்தபோதே எழுதும் வழக்கம் இருந்தது என்றாலும் சிங்கப்பூரில்தான் எழுத்தாளராக அறிமுகமானார். நாகூரைச் சேர்ந்த எம்.எம்.புகாரி என்பவர் சிங்கப்பூரில் தொடங்கிய ‘நவநீதம்’ வார இதழில் பழநிவேலுவின் முதல் கவிதை ‘வலிமை’ 1931-ஆம் ஆண்டில் வெளியானது.

தமிழகத்தில் இருக்கும்போது தமிழார்வலராகவும் வாசகராகவும் மட்டும் இருந்து சிங்கப்பூருக்குள் வந்தவுடன் எழுத்தாளராக மலரும் போக்கு பழநிவேலுவிடமிருந்து தொடங்குகிறது எனலாம். இன்றும் அது ஒரு சூட்சும மரபாக அடுத்தடுத்த புலம்பெயர் அலைகளைச் சார்ந்த எழுத்தாளர்களிடமும் நீடிக்கிறது.

பழநிவேலுவின் கிளாங் சாலை வசிப்பிடம், அருகிலிருந்த ‘தமிழர் சீர்திருத்தச் சங்க’த்தில் இணைந்து பணியாற்ற அவருக்கு ஒரு வாய்ப்பை உண்டாக்கியது. கோ.சாரங்கபாணி, அ.சி.சுப்பையா போன்றோர் இணைந்து தொடங்கியிருந்த அச்சங்கத்தின் சமூகப் பணிகளில் அதிக ஆர்வம் கொண்டிருந்த பழநிவேலு, தனது வேலைநேரம்போக மீதி நேரத்தைச் சங்கத்தின் நடவடிக்கைகளிலேயே செலவிட்டார். முதலில் சாதாரண உறுப்பினர், பிறகு நிர்வாகக்குழு உறுப்பினர், பின்னர் பொருளாளர் என சங்கத்தோடு அவரது பணி நெடிய வலுவான பயணமாகத் தொடர்ந்தது.

சங்கம் தனது சீர்திருத்தக் கருத்துகளால் அன்றைய இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது. சாதி ஒழிப்பு, கலப்புத் திருமணம், வழிபாடு சார்ந்த மூடநம்பிக்கை ஒழிப்பு ஆகியவற்றைச் சங்கம் உறுப்பினரிடையே வலியுறுத்தியது என்றாலும் இம்மாற்றங்கள் உடனடியாக அல்லாமல் காலப்போக்கில் மெல்லமெல்லவே நிலைகொள்ளும் என்றுணர்ந்து தேவையான இடங்களில் நீக்குப்போக்காகவும் நடந்துகொண்டது. வயதானனவர்கள் சங்கத்தினரை ‘நாத்திகர்கள்’ என்று ஒதுக்கினாலும் இளைஞர்களிடையே சங்கத் தலைவர்களின் பேச்சுக்கும் பரப்புரைக்கும் வரவேற்பும் ஏற்பும் இருந்தது என்கிறார் பழநிவேலு.

கவிதை எழுதுவதோடு நாடகங்கள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருந்த பழநிவேலு, ‘ஜானி ஆலம்’ என்ற தனது முதல் நாடகத்தை 1934-இல் அரங்கேற்றியிருந்தார். ஆயினும் தமிழர் சீர்திருத்தச் சங்கத்தின் வாயிலாகத்தான் பழநிவேலுவின் நாடகங்கள் படைக்கும் பயணம் தீவிரப்பட்டது எனலாம். சங்கத்தின் நிதித் தேவைகளுக்காகத் நாடகம்போடும் திட்டத்தைத் முன்வைத்ததுடன் தானே எழுதி, இயக்கி, நடிப்புப் பயிற்சியும் அளிப்பதாக முன்வந்தார். உறுப்பினர்களிலிருந்த பல தொழிலாளர்கள் நடிக்க முன்வந்தனர். அவர்களின் அன்றாட வேலைகளுக்குப் பிறகு இரவில் நாடக வசனப் பயிற்சி, பாட்டுப் பயிற்சி, ஒத்திகைகள் ஆகியவை நடந்தன. முழுக்க சிங்கப்பூர் கலைஞர்களாலேயே நடத்தப்பட்ட முதல் நாடகம் என்ற பெருமையைத் தன்னுடைய நாடகம் பெறுகிறது என்று பழநிவேலு குறிப்பிட்டுள்ளார்.

‘சுகுண சுந்தரம்’ (1936), ‘கௌரி சங்கர்’ (1937) ஆகிய பழநிவேலுவின் சீர்திருத்த நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. கலப்புத் திருமணத்தின் அவசியம், வயதான காலத்தில் இளம்பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளும் வழக்கத்தை ஒழிப்பது என அந்நாடகங்களில் பல்வேறு சீர்திருத்தக் கருத்துகள் வலியுறுத்தப்பட்டிருந்தன. நார்த் பிரிட்ஜ் சாலை அலெக்ஸாண்டிரா அரங்கில் நடந்தேறிய அவ்விரு நாடகங்களும் நல்ல வரவேற்பையும் வருமானத்தையும் பெற்றன. உறுப்பினர் சந்தாவை மட்டுமே நம்பி இயங்கிவந்த சங்கத்திற்கு நாடக வருமானம் பெரும் உற்சாகத்தை அளித்தது.

சங்கத்தின் சார்பில் பரப்புரை செய்வதை அடிப்படை நோக்கமாகக்கொண்டு தொடங்கப்பட்ட ‘தமிழ் முரசு’ பத்திரிகை கோ.சாரங்கபாணியின் கைக்கு வந்தபோது அதில் பழநிவேலு எழுதத் தொடங்கினார். தனக்கு அண்ணனைப்போல விளங்கிய கோ.சாரங்கபாணி தொடர்ந்து தன்னைத் தமிழ்முரசில் கதை, கட்டுரைகள் எழுத ஊக்குவித்ததைப் பழநிவேலு பதிவுசெய்துள்ளார். அவ்வாறாகக் கவிதை, கதை, கட்டுரை, நாடகம் என அனைத்து இலக்கிய வகைமைகளிலும் தொடர்ந்து பயணிக்கத் தொடங்கினார். அதற்கு அவரது தமிழர் சீர்திருத்தச் சங்க நெருக்கமே முக்கியக் காரணமாக அமைந்தது.

மூன்றாண்டு கழித்து ஒரேயடியாகத் திரும்பிவிடுவதாச் சொல்லிக் கப்பலேறிய பழநிவேலு பத்தாண்டு கழித்து 1938-இல் தனது திருமணத்திற்காக இந்தியா சென்றார். திருமணம் முடித்துக்கொண்டு மனைவியுடன் சிங்கப்பூர் திரும்பினார். வேலை, சங்கப்பணி, குடும்பவாழ்க்கை என்று வாழ்க்கை சீராக ஓடிக்கொண்டிருந்தபோதுதான் இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. சிங்கப்பூரை ஜப்பானியர் கைப்பற்றினர். ஊர்க்கப்பல் போக்குவரத்து நின்றது. கடிதப் போக்குவரத்துகளும் இல்லை.

ஜப்பானியர் ஆக்கிரமிப்புக் காலத்தில் (1942-45) போக்குவரத்து நிறுவன வேலையில் பழநிவேலு தொடர்ந்தபோதும், காலையில் அலுவலகப்பணி பிறகு மண்வெட்டுதல், தோட்டமிடுதல், மரவள்ளிக்கிழங்கு பயிரிடுதல் போன்ற கடுமையாண உடலுழைப்பு வேலைகளுக்கு ஆளாகவேண்டியிருந்தது. பெரிபெரி என்ற கால்வீக்க நோய்க்கும் இக்காலத்தில் பழநிவேலு ஆளானார். தமிழர் சீர்திருத்தச் சங்கச் செயல்பாடுகளும் இல்லாமற்போயின.

போர் முடிந்து, சிங்கப்பூரில் பிரிட்டிஷார் ஆட்சி மீண்டு, ஊர்க்கப்பல் கடிதப் போக்குவரத்துகள் மீண்டதும், வேலையிலிருந்து ஆறுமாத ஊதியமற்ற விடுப்பு எடுத்துக்கொண்டு, 1947-ஆம் ஆண்டில் மனைவி மக்களுடன் பழநிவேலு இரண்டாம் முறையாக இந்தியா சென்றார். போர்க்காலத்தில் அவரது தாய் காலமாகியிருந்ததை அறிந்து துயரத்தில் ஆழ்ந்தார். அவரது மனைவியின் பெற்றோரும்கூட அக்காலகட்டத்தில் காலமாகியிருந்தனர்.

ஆறுமாதம் கழித்து சிங்கப்பூர் திரும்பிய பழநிவேலு தன் போக்குவரத்து நிறுவன வேலையில் தொடர்ந்தாலும் ஒரேவிதமான கூட்டல் கழித்தல் கணக்குப் பார்க்கும் வேலை அவரது படைப்பூக்கமுள்ள மனதைச் சலிப்படையச் செய்தது. ஒரு பெரும் படைப்பாளியாக மிளிரவேண்டும் என்ற அவரது தணியாத வேட்கை உந்திக்கொண்டே இருந்ததால் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார்.

பத்திரிகைகளில் எழுதுவது அவருக்கு பெயரைப் பெற்றுத்தந்ததேயொழிய வருமானம் அறவே ஏதுமில்லை. ஆனால் நேரத்தையும் உழைப்பையும் எழுத்துப்பணி கணிசமாகக் கோரியது. ஆகவே எழுத்தையே தொழிலாக ஆக்கமுடிந்தால் நன்றாக இருக்குமே என்றெண்ணி அதற்கான வாய்ப்புக்காக ஏங்கிக்கொண்டிருந்தார். போருக்குப்பின் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ‘ரேடியோ மலாயா’ தொடங்கப்பட்டிருந்தது.

பத்திரிகைகளில் வெளியான அவரது படைப்புகளின் வழியாக ஏற்பட்ட அறிமுகத்தில் ‘ரேடியோ மலாயா’வுக்காக படைப்புகளை எழுத அவருக்கு வாய்ப்பு அமைந்தது. சுமார் இரண்டாண்டு அவ்வாறு பகுதிநேரப் பணியாக வானொலிக்கு எழுதிவந்தார். பிறகு முழுநேரப் பணியாக 1949-இல் ரேடியோ மலாயாவில் சேர்ந்துவிட்டார். போக்குவரத்து நிறுவன வேலையோடு ஒப்பிடுகையில் அதிக ஊதியம் கிடைத்ததோடு மனதுக்குப் பிடித்த வேலையாகவும் அமைந்தது.

ரேடியோ மலாயாவில் சேர்ந்த கையோடு தமிழர் சீர்திருத்தச் சங்கத்திலிருந்து விலகிக்கொண்டார். அரசாங்க வேலை விதித்த கட்டுப்பாடுகளுள் அதுவும் ஒன்று. இருப்பினும் கோ.சாரங்கபாணியுடன் கொண்டிருந்த தனிப்பட்ட நட்பு தடங்கலின்றி நீடித்தது. பின்னாளில் சாரங்கபாணியின் யோசனைப்படி தமிழர் சீர்திருத்தச் சங்கத்தினர் பலரும் சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றுக்கொண்டனர். பழநிவேலுவும் அவரது மனைவியும் அவ்வாறே சிங்கப்பூர்க் குடிமக்களாக ஆயினர்.

பழநிவேலு ரேடியோ மலாயாவில் சேர்ந்த காலத்தில் மலாயாவில் அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டு கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக பிரிட்டிஷ் அரசு கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டு கொண்டிருந்தது. தோட்டத் தொழிலாளர்களை இலக்காகக்கொண்டு, அரசுக்கு ஆதரவாகவும் கம்யூனிஸ்ட்களை ஆதரிக்கவேண்டாம் என்று வலியுறுத்தியும் ‘கிராம நிகழ்ச்சி’ என்ற தலைப்பில் பழநிவேலு ஒரு வானொலி நிகழ்ச்சியை அமைத்தார். அவருக்கு ஏற்கனவே தோட்ட வாழ்க்கையில் ஓரளவுக்கு நேரடி அனுபவம் இருந்ததால் அந்த நிகழ்ச்சியை உயிர்த்துடிப்புடன் வடிவமைக்க முடிந்தது.

இலக்கியத்தின் தன்மைகளை நன்கு அறிந்தவர் என்பதால் பரப்புரை என்றாலும் அதை அப்பட்டமாகச் செய்யாமல் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோலத் தன் படைப்புகள் வழியாக நுட்பமாக செய்வது பழநிவேலுவுக்குக் கைவந்த கலையாக இருந்தது. அதுவே அவரது படைப்புகளை அனைத்துத் தரப்பினரும் விரும்புவதற்கு வழிசெய்தது. இதைத் தமிழ்முரசில் அவர் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே காணமுடிகிறது. எடுத்துக்காட்டாக 1936-ஆம் ஆண்டில் தமிழ்முரசில் வெளியான ‘குற்றமுள்ள நெஞ்சு’ சிறுகதையைச் சொல்லலாம்.

அக்கதையில் தனது தாழ்த்தப்பட்ட சாதி அடையாளத்தை மறைத்துக்கொண்டு, இடைநிலைச் சாதியொன்றின் பெயரைத் தன் பெயருடன் இணைத்துக்கொண்டு சமூகத்தில் புழங்கி, பொருளாதார வளம் பெற்று வலம்வரும் வீரபத்திரப்பிள்ளை கதாபாத்திரம், திருமண நாளன்று இரவில் தன் சாதி குறித்த உண்மையை மனைவியிடம் தெரிவித்து மன்னிப்புக் கோருவதாகக் கதை முடிகிறது.

உண்மையான கௌரவத்துடன் வாழவிரும்பும் ஒரு மனிதனுக்குச் சமூகத்தில் சாதியமைப்பு உண்டாக்கும் இன்னல்களைக் கவனப்படுத்தும் அதேவேளையில், தனிமனித உணர்ச்சிகளையும் கருத்திற்கொண்டு வாசகர் நெஞ்சைத்தொடும் விதமாக அக்கதை அமைந்திருப்பதைக் காணலாம். அவ்வாறாக சாதி மீதான வெறுப்பை உருவாக்குவதையும், மானுடமே உயர்ந்தது என்ற உணர்ச்சியை அளிப்பதையும் ஒரே நேரத்தில் அவரால் இலக்கியத்தின் வழியாக முன்வைக்க முடிந்தது.

‘கெத்தே’ கட்டடத்தில் இருந்த ரேடியோ மலாயா பின்னாளில் ‘கேல்டகாட் ஹில்’லுக்கு மாறியது. காலப்போக்கில் ‘ரேடியோ டெலிவிஷன் சிங்கப்பூர்’, ‘சிங்கப்பூர் பிராட்காஸ்டிங் கார்ப்பொரேஷன்’ என்றெல்லாம் அந்நிறுவனத்தின் பெயர்கள் மாறினாலும் சுமார் இருபதாண்டுகள் தொடர்ந்து பழநிவேலு வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றினார்.

காலையில் வேலைக்குச் சென்றால் நடுநிசியில் வீடுதிரும்புவது அப்போது அவரது வழக்கமாக இருந்தது. அக்காலகட்டத்தில் தன்னால் ஓரிரு மணி நேரம்கூட வாசிக்காமல் இருக்கமுடிந்ததில்லை என்று அவர் தெரிவிக்கிறார். வாசிப்பும் எழுத்தும் பணியோடும் வாழ்க்கையோடும் இரண்டறக் கலந்திருந்த பழநிவேலு இந்திய நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் பிரிவுக்குத் தலைமைப் பொறுப்பில் செயல்படும் அளவுக்கு உயர்ந்து ஓய்வுபெற்றார்.

தமிழுக்கும் கலை இலக்கியத்திற்கும் ஆற்றிய சேவைக்காகப் பல்வேறு விருதுகள் அவரைத்தேடி வந்தன. நாடக சிகாமணி (1978), முத்தமிழ்ச் செம்மல் (1980), கலா ரத்னா (1987) ஆகிய சமூக அமைப்புகள் அளித்த விருதுகளோடு சிங்கப்பூர் அரசின் ‘கலாச்சாரப் பதக்கம்’ (1987) விருதும் அவருக்குப் பெருமைசேர்த்தது. சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ‘தமிழவேள்’ (1997) விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

தமிழ்முரசில் பழநிவேலு வெளியிட்ட நூற்றுக்கணக்கானப் படைப்புகளுக்கு சன்மானம் ஏதும் அவருக்குக் கிடைக்கவில்லை என்றாலும் 1947-ஆம் ஆண்டில் கோ.சாரங்கபாணி பழநிவேலுவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை ‘கவிதை மலர்கள்’ என்ற தலைப்பில் சொந்தச்செலவில் வெளியிட்டார். அதன் இரண்டாம் பதிப்பை பழநிவேலு 1975-ஆம் ஆண்டில் வெளியிட்டார். பிறகு ‘காதற்கிளியும் தியாகக்குயிலும்’ என்ற சிறுகதைத்தொகுப்பு 1977-இல் மறைமலை பதிப்பக வெளியீடாக வந்தது. பெரும் ஆதரவைப்பெற்ற இத்தொகுப்பு குறுகிய காலத்தில் விற்றுத்தீர்ந்தது.

‘கவிஞர் ந. பழநிவேலுவின் படைப்புக் களஞ்சியம்’ என்ற தலைப்பில் அவரது படைப்புகள் அனைத்தையும் தொகுத்து இரு தொகுதிகளாக 1997-ஆம் ஆண்டில் அவரது மகன் பாலகிருட்டிணன் வெளியிட்டார். பழநிவேலு எழுதிக்குவித்த படைப்புகளுள் ஒரு பகுதி மட்டுமே அந்நூலில் இடம்பெற்றுள்ளதாக அத்தொகுப்பின் அணிந்துரையில் வை. திருநாவுக்கரசு குறிப்பிடுகிறார். இருப்பினும் குறைந்தபட்சமாக அவரது இலக்கியப் படைப்பூக்கத்தையும் வீச்சையும் பரிமாணங்களையும் அவை காட்டி நிற்கின்றன எனலாம். அன்றைய சிங்கப்பூரின் மக்கள்மொழி எவ்வாறு இருந்தது என்பதை அறிந்துகொள்ளக்கூடிய ஆவணமாகவும் பழநிவேலுவின் படைப்புகள் விளங்குவதையும் வை.திருநாவுக்கரசு குறிப்பிட்டுள்ளார்.

பழநிவேலு – சம்பூர்ணம் தம்பதியினருக்கு நான்கு மகன்கள், மூன்று மகள்கள் என மக்கள் எழுவரும் சிங்கப்பூரில் பிறந்தவர்கள். கடைசிவரை எழுத்தும் வாசிப்புமாக இருந்த பழநிவேலு தனது 92-ஆம் வயதில் (2000) இயற்கை எய்தினார்.

மூன்று ஆண்டுகள் வேலைசெய்து பொருளீட்டி ஊர்திரும்ப எண்ணிக் கப்பலேறிய பழநிவேலு, மறைந்தபோது நிரந்தரமாக இம்மண்ணின் தமிழ் அடையாளங்களுள் ஒருவராக ஆழமாக வேர்விட்டிருந்தார். அவரை இம்மண்ணோடும் மக்களோடும் பிணைத்தது தமிழ்மொழியே என்று சொல்லலாம். அந்தவகையில் ந.பழநிவேலு ஒரு சமத்துவக் கவிஞர் மட்டுமல்ல, தமிழோடு கலந்து வாழ்ந்த ஒரு முன்னோடித் தமிழரும்கூட.

***

குறிப்புகள்:

  1. இக்கட்டுரை ந. பழநிவேலுவின் வாழ்க்கை வரலாற்றை விரிவாகப் பதிவுசெய்வதையும் அவரது ஒட்டுமொத்த எழுத்துப்பணி நிகழ்ந்த பின்புலத்தைக் காட்டுவதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டது. ‘சிங்கப்பூர்த் தமிழர் இருநூற்றுவர்‘ இரண்டாம் தொகுதிக்காக (இன்னும் வெளியாகவில்லை) எழுதப்பட்டது. சில செம்மையாக்கங்களுடன் இங்கே வெளியிடப்படுகிறது.
  2. ‘Palanivelu Natesan, Communities of Singapore (Part 2), Accession Number 000588, Reel/Disc 1-13’ என்ற தலைப்பில் சிங்கப்பூர் தேசிய ஆவணக்காப்பகத்தில் ந. பழநிவேலுவின் சுமார் ஆறுமணிநேர நேர்காணல் (1985) பதிமூன்று பகுதிகளாக ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேர்காணல் செய்தவர் முனைவர் டேனியல் சியூ. இக்கட்டுரையின் பெரும்பான்மைத் தகவல்கள் அந்த நேர்காணலிலிருந்து தருவிக்கப்பட்டது.
  3. தேதி, மாத, வருடங்களை மேற்கண்ட நேர்காணலில் ந. பழநிவேலு நினைவிலிருந்து குறிப்பிடுவதால் பல இடங்களில் மாற்றிமாற்றிக் குறிப்பிடுகிறார். ‘For the love of writing’ என்ற தலைப்பில் பழநிவேலு பெயரில் ஒரு வாழ்க்கைக்குறிப்பு ‘The Straits Times’ நாளிதழில் (01/11/1989 பக்கம் 3) வெளியாகியுள்ளது. அதில்வரும் தேதி, மாத, வருடங்களோடு மேற்கண்ட நேர்காணலில் வரும் தகவல்கள் பொருந்திப்போகவில்லை. ஆயினும் இக்கட்டுரையின் முதன்மை நோக்கத்தை அவை குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கவில்லை என்பது கட்டுரையாளரின் பார்வை.