மூன்றாம் சிங்கப்பூர் இலக்கிய மாநாடு (3rd Singapore Literature Conference) ஜூலை 31, 2021 அன்று மெய்நிகர் நிகழ்வாக நடந்தேறியது. அதில் சிங்கப்பூர் இலக்கியத்தில் சமூகம் என்ற கருப்பொருளை முன்வைத்த ஒரு கலந்துரையாடல் நிகழ்வும் இடம்பெற்றது.

cover-AvJnyKltJjJZtrLvFi3pdzXLZW1QqNvr

சிங்கப்பூர் இலக்கியத்தைப் பிரதிநிதித்து ஆங்கிலத்தில் Ms. Ann Ang, சீனமொழிக்கு Dr. Cheong Yun Yee, மலாய்க்கு Ms. Annaliza Bakri, தமிழுக்கு நான் என நால்வர் பங்கேற்றோம். தேசியப் பல்கலைக் கழகத்தின் Dr. Azhar Ibrahim உரையாடலை நெறியாண்டார்.

அந்நிகழ்வில் கடந்தகாலம், எதிர்காலம் என்று இரண்டு சுற்றுகளாக நான் பகிர்ந்துகொண்ட தகவல்கள், முன்வைத்த கருத்துகள் தமிழில் கட்டுரை வடிவில் இங்கே.

photo

[முதல் சுற்று – கடந்த காலம்]

சிங்கப்பூர்த் தமிழிலக்கியத்தில் சமூகம் என்பதைக் குறித்த என் பார்வைகளை மூன்று பகுதிகளாகப் பிரித்துக்கொள்கிறேன். முதலாவது கடந்த அரைநூற்றாண்டில் சிங்கப்பூர்த் தமிழிலக்கியத்தின் அளவைக் குறித்த சில புள்ளிவிவரங்கள், இரண்டாவது சிங்கப்பூர்த் தமிழிலக்கியம் பொதுவாக ‘சமூக’த்தை எவ்வாறு அணுகியுள்ளது என்பதைக் குறித்த கண்ணோட்டம், இறுதியாக அத்தகைய அணுகுமுறை அண்மைக்காலத்தில் எவ்வாறு மாறிவருகிறது என்பதையும் அதற்கான ஓர் எடுத்துக்காட்டையும் விளக்க விரும்புகிறேன்.

முதலில் புள்ளிவிவரத்திலிருந்து தொடங்கலாம்.

தேசிய நூலக வாரியத்தின் மின்வளங்கள் இடம்பெற்றுள்ள தளத்தில் ‘BookSG’ பிரிவில் Tamil Digital Heritage Collection என்ற தலைப்பில் சிங்கப்பூர்த் தமிழிலக்கிய விளைச்சல் தொகுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரர்கள், இதர சிங்கப்பூர்வாசிகள் ஆகியோர் எழுதியதும், சிங்கப்பூரைப்பற்றி எழுதப்பட்டதும் என 1965-2015 காலகட்டத்தில் வெளியிடப்பட்ட ஆகம்பெரும்பாலான கவிதை, புனைவு, அபுனைவு, இதரவகை இலக்கிய நூல்கள் இத்தொகுப்பில் மின்நூல்களாகச் சேகரிக்கப்பட்டுள்ளன.

ஆய்வாளரும் சமூக முன்னோடியுமான திரு அருண் மகிழ்நன் தலைமையில் செயல்பட்ட குழுவினர் வெற்றிகரமாகச் சாத்தியமாக்கிய இத்தொகுப்பு, உலகில் எந்த மூலையிலுள்ள தமிழருக்கும், ஒரே சொடுக்கில் இலவசமாக சிங்கப்பூர்த் தமிழிலக்கியம் கிடைக்க வழிசெய்துள்ளது. இத்தொகுப்பில் சுமார் 350 நூல்கள் இடம்பெற்றுள்ளன.

சிங்கப்பூரில், 2015 வாக்கில், குறைத்துக்குறைத்துப் பார்த்தாலும், ஆண்டுக்கு சுமார் 30 இலக்கிய மதிப்புள்ள நூல்கள் வெளியிடப்பட்டதாகக் கணக்கிட முடிகிறது. அந்த அடிப்படையில் 2015க்குப் பிறகு தற்போதுவரை மேலும் 150 நூல்கள் வெளியானதாக வைத்துக்கொண்டால், சிங்கப்பூர்த் தமிழிலக்கிய விளைச்சல் என்பது சுமார் 500 நூல்கள் எனலாம்.

இவற்றுள் சரிபாதி கவிதைத் தொகுப்புகள். கால்வாசி புனைவுகள், மீதமுள்ள காற்பங்கு அபுனைவுகள். ஆர்வமூட்டக்கூடிய விதத்தில், 2005-2014 பத்தாண்டுகளில் அதற்கு முந்தைய நாற்பதாண்டுகளைவிட அதிக என்ணிக்கையிலான புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேறுவிதமாகச் சொன்னால், புதிய நூற்றாண்டில் சிங்கப்பூர்த் தமிழிலக்கியப் பரப்பில் ‘பெருவெடிப்பு’ நிகழ்ந்திருப்பதாகச் சொல்லலாம்.

இன்னொரு சுவாரஸ்யமான அவதானிப்பு, 90களின் பிற்பாதியில் சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்து, முதல் தலைமுறை சிங்கப்பூரராகவோ சிங்கப்பூர் வாசியாகவோ உள்ள பிரிவினரே இப்பெருவெடிப்பில் பெரும்பங்கை ஆற்றியுள்ளனர் என்பது. எது எப்படியானாலும் சிறிய சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்திற்கு சுமார் அரைநூற்றாண்டில் சுமார் 500 இலக்கிய நூல்கள் என்பது ஒரு பெரிய சாதனையே. ஆய்வாளர் அருண் மகிழ்நன் ‘சிங்கப்பூர் காலக்குறிப்புகள்’ தொடரில் வெளியான ‘இலக்கியம்’ நூலில் தன் அத்தியாயத்திற்குப் பொருத்தமாக இட்ட தலைப்பைப்போல, “தமிழிலக்கியம்: சிறு சமூகம், பெருந்தடம்”.[1]

இரண்டாவதாக, 1965இல் தொடங்கி அடுத்த ஐம்பதாண்டுகளில் சிங்கப்பூர்த் தமிழிலக்கியம் ‘சமூக’த்தை எவ்வாறு பிரதிபலித்துள்ளது என்பதைப் பார்ப்போம்.

லீ கொங் சியான் ஆய்வாளராக 2017இல் சிங்கப்பூருக்கு வந்து, சுமார் 6 மாதம் தங்கி, ஆய்வுசெய்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான திரு மாலன் பின்வனவற்றைப் பிரதானமாக வெளிப்படும் தலைப்புகளாகத் தன்னுடைய ஆய்வுமுடிவில் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.[2]

  1. சுதந்திர தேசமாக மலர்வது (Becoming an Indepenent Nation)
  2. கம்போங்கிலிருந்து கூட்டுக்குடியிருப்பிற்கு (From Kampong to HDB)
  3. தேசிய சேவை (National Service)
  4. கல்விக் கொள்கைகள் (Educational Policies [Biligualism, PSLE])
  5. பெண்களும் திருமணமும் (Women and Marriage)
  6. பொருளாதார வளர்ச்சி (Economic Growth)
  7. சார்ஸ் (SARS)

என்னுடைய வாசிப்பின் அடிப்படையில், மேற்கண்ட தலைப்புகளுடன், குற்றமும் தண்டனையும், புலம்பெயர் பணிப்பெண்கள், சில பிறழ்வெழுத்துகள் (transgressive writing) ஆகியவற்றையும் சமூகம் தொடர்புடையவை என்று சேர்க்கலாம். என்னுடைய ‘சிங்கைத் தமிழ்ச் சமூகம் வரலாறும் புனைவும்’ என்ற நூலில் இவற்றைக் குறித்து விரிவாக விவாதித்துள்ளேன்.

ஆய்வாளர் மாலனுடைய ஆய்வின் முடிவுரைக் குறிப்பு இவ்வாறு சொல்கிறது:

“முடிவாக, சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்கள் கடந்த 50 ஆண்டுகளில் உண்டான பல்வேறு மாற்றங்களுக்கு எதிர்வினை ஆற்றியுள்ளனர் என்பதோடு தங்கள் சமூகத்தின் குரல்களையும் எதிரொலித்துள்ளனர் என்றாலும் அவற்றை அழுத்தந்திருத்தமாகச் செய்யவில்லை (not done so with conviction) என்பதைக் காண்கிறேன். சமூக, பொருளாதார மாற்றங்கள் தொடர்பான அக்கறைகளுக்கு அவர்கள் குரல்கொடுத்துள்ள அதேவேளையில் இல்லம், சுற்றுப்புறம் என்கிற குறுகலான சட்டகத்திற்குள்ளேயே அவற்றை அமைத்துக்கொண்டுவிட்டனர். இவ்வெழுத்தாளர்கள் எவரும் தம் எழுத்துகளின் வழியாக எந்தவொரு இலக்கிய இயக்கத்தையும் தோற்றுவிக்கவில்லை, மேலும் அரசியல் உரையாடல்களும் அரிதாகவே உள்ளன.” (இக்கட்டுரையாளரின் மொழிபெயர்ப்பு)

மேலும், தமிழ்நாட்டு இலக்கியத்துடன் ஒப்பிடும்போது சிங்கப்பூர்த் தமிழிலக்கியம் இந்த நிலையில் செயல்பட்டதற்கான காரணங்களாக இருக்கலாம் என்று தான் கருதும் சிலவற்றையும் மாலன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இடத்தில், பேராசிரியர் அ. வீரமணி, ‘அரைநூற்றாண்டுக்கால சிங்கப்பூர்த் தமிழிலக்கியம்’ என்ற தன் கட்டுரையில் சிங்கப்பூரில் தமிழிலக்கியத்தின் வளர்ச்சி குறித்து அதிகம் அறியப்படாத தகவல்களை விவாதித்துள்ளார் என்பதையும் கவனப்படுத்த விரும்புகிறேன்.[3] ஆர்வமுள்ளோர் வாசித்துப் பார்க்கலாம். இன்று நாம் அவற்றுக்குள் போகவியலாது.

இறுதியாக, அண்மைக் காலத்தில், குறிப்பாக 2015லிருந்து, சிங்கப்பூர்த் தமிழிலக்கியத்தில், அதன் குரலிலும் சரி பேசுபொருளிலும் சரி, நான் அவதானிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை விளக்க விரும்புகிறேன்.

அருவமான கருத்துகளாக அல்லாமல் ஓர் எடுத்துக்காட்டைக் கூறினால் எளிதாகப் புரிந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ ஆகஸ்ட் 2015 இதழில் வெளியான எம்.கே.குமாரின் ‘நல்லிணக்கம்’ சிறுகதை.

உட்லண்சில் வீவக குடியிருப்பு வீடொன்றில் வசிக்கும் சிங்கப்பூரர் தமிழ்க் குடும்பம் அன்று ஒரு முக்கிய விருந்தாளியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. அப்போது எதிர்பாராவிதமாக ஒரு குரங்கு அந்த வீட்டின் தளத்திற்கு வந்து அவர்கள் வீட்டின்முன் அமர்ந்துவிடுகிறது. இல்லத்தின் தலைவிக்கு வனவிலங்குகள் என்றால் ஒவ்வாமை என்பதோடு, முக்கிய விருந்தாளி வரும் நேரத்தில் இப்படி ஒரு தொல்லை வந்துவிட்டதே என்பதும் சேர்ந்து பதற்றம் ஏற்படுகிறது. அவரது கணவரிடம் குரங்கை விரட்டச் சொல்கிறார், இருந்தாலும் குரங்கு நகர மறுக்கிறது.

விரைவில் குரங்கு அக்கம்பக்கத்தினரை ஈர்க்கிறது. நமது வீவக குடியிருப்பு பல்லினங்கள் சேர்ந்து வாழ்வதை உறுதிசெய்கிறது. ஆகவே பல்வேறு இனத்தவரும் அங்கே கூடுகின்றனர். அவர்களுள் ஒருவர் அக்குரங்குக்கு உணவளிக்கிறார், அது உண்ணத் தொடங்குகிறது. அது பசியாக இருக்கிறது என்று புரிந்துகொண்டு ஆளாளுக்கு மேலும் உணவை அளிக்கின்றனர்.

இந்தியரான அந்த இல்லத்தலைவிக்கு எவராவது தெரியாமல் இறைச்சியுள்ள உணவை குரங்குக்கு அளித்துவிட்டால் என்ன செய்வது என்று கவலை ஏற்படுகிறது. குரங்குக் கடவுள் மரக்கறி மட்டுமே உண்ணும் என்று அவருக்குத் தெரியும். மேலும் இத்தனை வீடுகள் இருக்கும்போது தன் வீட்டுக்கெதிரே குரங்கு வந்தமர்வது தெய்வ சங்கல்பமாகத்தான் இருக்கவேண்டும் என்று அவருக்குப் படுகிறது.

அந்த நேரம்பார்த்து ஒரு சீனப்பாட்டி சில பழங்களை ஒரு கையிலும் சில துண்டுச் சீட்டுகளுள்ள சிறுகூடையை இன்னொரு கையிலும் எடுத்துக்கொண்டு வருகிறார். அத்துண்டுச் சீட்டுகளில் நான்கு இலக்கங்கள் கொண்ட எண்கள் எழுதப்பட்டுள்ளன. தன் அதிர்ஷ்டத்தைச் சோதிக்க அமைந்துள்ள இப்படி ஓர் அரிதான வாய்ப்பை அவர் இழக்க விரும்பவில்லை. ஒவ்வொரு சவாலையும் வாய்ப்புகளாக மாற்றுவது சிங்கப்பூரர்களின் தனிச்சிறப்பு!

இப்படியாக அக்கதை மேலும் பல சுவாரஸ்யமான சம்பவங்களுடன் விரிகிறது. கதையின் இறுதியில், வனவிலங்குக்கு உணவிட்ட குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்படுகிறது. அபராத தண்டனை பெற்ற பல்லினத்தவரும் ஒருவரையொருவர் பார்த்து வெட்கிப் புன்முறுவல் பூக்கின்றனர். “இன நல்லிணக்கத்திற்கான ஒரு அறிகுறியாகவும் அது தென்பட்டது” என்று அக்கதையை முடிக்கிறார் எம்.கே. குமார்.

கதையில் வரும் குடியிருப்பார்கள் எவரும் சட்டத்திற்கு எதிரானவர்கள் அல்லர். பசியிலிருக்கும் சக உயிரினத்திற்கு உணவிட வேண்டும் என்ற இயல்பான கரிசனமும் தார்மீக உந்துதலும் அங்கே சட்டத்திற்கு எதிராக வந்து நிற்கிறது. அந்த தார்மீக நிலைப்பாட்டையும் ஒருவரது மத நம்பிக்கைகள், பிறரைப் பற்றிய இறுகிக் கெட்டிதட்டிப்போன கண்ணோட்டங்கள் போன்றவை பாதிக்கின்றன. ஆனால் பல்வேறு வேறுபாடுகள் கொண்டவர்கள் சட்டத்தால் ஒரேவிதமான தண்டனைக்கு உள்ளாகும்போது அவர்கள்  அனைவருக்கும் பொதுவான ஒன்று அவர்களால் உணரப்படுகிறது. அவர்கள் மீது அழுத்தப்படும் ஒரு பொதுமைலிருந்தும் நல்லிணக்கம் கிளைக்கிறது.

இது ஒரு வாசிப்பு. அக்கதைக்கு வேறுபல வாசிப்புகளும் இருக்கலாம். எடுத்துக்காட்டாக, குரங்கின் பார்வையிலிருந்து அக்கதையை வாசிக்கலாம். அப்போது அங்கே உடனடியாக நாம் இந்திய, சீன, மலாய் இனத்தவர்கள் என்பதெல்லாம் மறைந்துவிடும். குரங்கைப் பொறுத்தவரை நாம் மனித இனத்தவர்கள். உணவளிக்கிறார்கள் என்பதால் கனிந்த இதயத்தவர்கள், அவ்வளவுதான். அவற்றிற்கு நம் சட்டதிட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் பற்றி ஏதும் தெரியாது.

சிக்கலான, தொடுவதற்கு அஞ்சும் விஷயங்களையும் நுட்பமான, நுணுக்கமான வழிகளில் புன்னகை ததும்ப விவாதிக்கலாம் என்பதற்கு சிங்கப்பூர்த் தமிழிலக்கியம் முன்வந்துள்ளது என்பதுதான் எம்.கே.குமாரின் இக்கதை வழியாக நான் எடுத்துக்காட்ட விரும்புவது. இதுவே அண்மையில் உண்டாகியுள்ள மாற்றம்.

நகைச்சுவை உணர்வோடும் உக்கிரமாகவும் எழுதப்பட்டுள்ள, அப்படியான பல கதைகளை என்னால் குறிப்பிட முடியும். இதில் எம்.கே. குமார் மட்டும் தனியாக இல்லை. லதா, சித்துராஜ் பொன்ராஜ் போன்ற வேறுபல எழுத்தாளர்களும் உள்ளனர். லிட்டில் இந்தியாவில் வீடற்றவர்களாகவும் விளிம்பு நிலையிலும் வாழும் பல மனிதர்களை இதுவரை காணப்படாத அளவுக்குத் துல்லியமான விவரங்களுடன் உமா கதிர் ‘ரோவெல் தெரு மனிதர்கள்’ தொகுப்பில் காட்டியுள்ளது பேசுபொருளில் சூழலின் விரிவுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு.

இதுவரை கூறியதைத் தொகுத்து ரத்தினச் சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால்,

ஒருகாலத்தில் சிங்கப்பூர்த் தமிழிலக்கியம் அதன் எளிமையான தொடக்கத்தைக் கொண்டிருந்தது. காலப்போக்கில் தன்வழியில் வளர்ந்தது, பெருந்தடங்களைப் பதித்தது. தற்போது தன் கவனத்தைச் சமூகத்துடன் நுணுக்கமான வழிகளில் உரையாடுவதற்காகத் திருப்பியுள்ளது.

நன்றி!

[இரண்டாம் சுற்று – எதிர்காலம்]

சிங்கப்பூர்த் தமிழிலக்கியம் ‘சமூக’த்துடன் இரண்டு முக்கிய விஷயங்களைக் கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் உறவாடவேண்டும். முதலாவது, எழுத்தின் தன்மை. இரண்டாவது, எழுதுபவர்கள்.

எழுத்தின் தன்மையில் அதிகமாகப் பெருங்கதையாடல் (Grand Narration) இடம்பெற வேண்டும். எழுத்தாளர்களில் அதிகமாக சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர்கள் இடம்பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

வடிவத்திலும் சரி, உள்ளடக்கத்திலும் சரி உலக இலக்கியப் போக்குகளுடன் சிங்கப்பூர்த் தமிழிலக்கியம் ஓரளவுக்கு ஈடுகொடுத்து வருகிறது என்றாலும் எழுத்தாளர்களின் கவனம் நுண்கதையாடலிலேயே (Micro Narration) பெருமளவில் இருந்துகொண்டிருக்கிறது. இது மாறவேண்டும். சிங்கப்பூரின் சமூகங்களுக்கு இப்போது 200 ஆண்டுகள் தொடர்ச்சியான வரலாறு இருக்கிறது. அதை உலகத்திற்குச் சொல்லவேண்டும்.

ஆனால் ஏனோ நம் கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் பெருங்கதைகள் சொல்வது வரலாற்றாசிரியர்களின், ஆய்வாளர்களின் வேலை என்று ஓர் எண்ணம் இருக்கிறது போலும். அல்லது புனைவு அதைச் சரியாகக் கையாளாது என்று நினைக்கிறார்களோ என்னவோ!

ஒருவேளை பெரிய முயற்சிகள் தோற்கலாம் என்றாலும் அத்தகைய முயற்சிகள் தன்னளவிலேயே வெற்றிகள்தாம் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். ‘காண முயலெய்த அம்பினில் யானை பிழைத்த வேல் ஏந்தலினிது’ என்பது குறைந்தது இரண்டாயிரம் வருடமாக நமக்குத் தெரிந்ததுதானே?

இந்நூற்றாண்டின் முதல் இரு பத்தாண்டுகளில் கவிதை, சிறுகதைகளில் பெருவெடிப்புகளைப் பார்த்தோம். மூன்றாம் பத்தாண்டில் பெருங்கதையாடல் பெருவெடிப்பைப் பார்க்க விரும்புகிறேன். அதற்கான திறன் இருக்கிறது, கட்டுகளை உடைக்கவேண்டியதுதான் பாக்கி. அப்போதுதான் சிங்கப்பூர்த் தமிழிலக்கியத்தை உலகம் திரும்பிப்பார்க்கும்.

ஆனால் ஒப்பீட்டளவில் இது சாதிக்க எளிதானது. சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர்கள் அவற்றை எழுதவேண்டும் என்ற இரண்டாவது விஷயம்தான் மேலும் கடினமானது.

சிங்கப்பூர்த் தமிழிலக்கியம் சிங்கப்பூரின் இளையரைப் பெருமளவில் ஈர்க்க இயலவில்லை என்பதற்கு, மேலோட்டமான காரணங்களிலிருந்து வீட்டில் தமிழ்ப்புழக்கமே தொடர்ந்து குறைந்துவருகிறது என்ற அடிப்படையான காரணம்வரை பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் ஒரேயடியாக எங்கும் இருள்தானா என்றால் நிச்சயம் இல்லை. இரண்டு நம்பிக்கைக் கீற்றுகளை நானே பார்த்திருக்கிறேன்.

முதலாவது நம்பிக்கைக் கீற்று, ‘சிங்கப்பூர் சிறுகதைக் கொத்து’.[4]

பேராசிரியர் ஆ.இரா. சிவகுமாரன் தொகுத்த இச்சிறுகதைத் தொகுப்பில் பத்து கதைகள் இடம்பெற்றுள்ளன. தேசியக் கல்விக் கழகத்தில் தமிழாசிரியர் பயிற்சியில் இருந்த (2017) பத்து உள்ளூர் இளையர்கள் அக்கதைகளை எழுதியுள்ளனர். என்னைப் பொறுத்தவரை பத்து கதைகளுமே இலக்கிய மதிப்புள்ளவை.

நான் சுட்டிக்காட்ட விரும்புவது என்னவென்றால், இந்தப் பத்து அருமையான இளையர்களும் நாம் இளையர்களை ஈர்க்க இயலாததற்காகக் கவலைப்பட்டும் புலம்பியும் பேசிக்கொண்டிருக்கும் அனைத்துக் காரணிகளையும் தாண்டித்தான் முகிழ்த்து எழுந்து வந்திருக்கிறார்கள் என்பதுதையே.

அதைச்சொல்லும் அதேவேளையில், ஒளிபொருந்திய இந்தப் பத்து பேரில், எனக்குத் தெரிந்து, ஒருவரும் அத்தொகுப்பிற்குப் பிறகு கடந்த நான்காண்டுகளில் ஒரு கதையைக்கூட வெளியிடவில்லை. ஆக, திறமை இருந்தும் அதைத் தக்கவைப்பதிலும் தொடர்ந்து மெருகூட்டுவதிலும் நமக்குப் பிரச்சனைகள் உள்ளன. இவ்விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

சிங்கப்பூர்த் தமிழிலக்கியத்திற்கு உள்ளூர் இளையர் பங்களிப்பு என்பதற்கு ஏதாவது நம்பிக்கை இன்னும் இருக்கிறதென்றால் அது இளைய தமிழாசிரியர்களைத் தவிர்த்ததாக அமையமுடியாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். நான் மலேசியாவைப் பார்க்கிறேன். இந்தத் தலைமுறை தமிழாசிரியர்களின் ஒரு பெரிய பட்டியல் இலக்கியச் சூழலை வெகுவாக மாற்றியமைத்துக் கொண்டுள்ளது.

இரண்டாவது நம்பிக்கைக் கீற்று, ‘சொல்லிலடங்கா’.

ஆயிலிஷா, அஷ்வினி, கார்த்திகன் ஆகிய மூன்று உள்ளூர் இளையர்கள் – இவர்களுள் எவரும் தமிழாசிரியர் அல்ல – இணைந்து பத்து பகுதிகளாக வெவ்வேறு கருப்பொருள்களில் இந்த வலையொலித் தொடரை உருவாக்கியுள்ளனர். ஒவ்வொரு பகுதியிலும் இலக்கிய விமர்சனம், உள்ளூர் எழுத்தாளர் ஒருவரிடம் நேர்காணல், சில கருப்பொருகளுக்கான இன்றைய தேவைகள் என அற்புதமாகத் தயாரித்திருந்தனர். என்னைப் பொறுத்தவரை இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை.

ஏனெனில் இலக்கிய வாசிப்பு குறைவு என்பதே இங்குள்ள முதன்மையான சிக்கல். இளையர்கள் இலக்கியம் படைப்பதற்கு முன்னால் வலுவான இலக்கிய வாசிப்பு அடித்தளம் அவசியம். வாசிப்புக்கு ஒரு தொடக்கமாக அமையவும், இலக்கியம் சார்ந்த உரையாடல்களைத் துடிப்புடன் வைத்திருக்கவும் ‘போட்காஸ்ட்’ போன்ற காலப்பொருத்தமான புத்தாக்க முயற்சிகள் அவசியம்.

தற்செயலாக, இன்று, சிங்கப்பூர் இலக்கிய மாநாட்டில், ‘சொல்லிலடங்கா’ குழுவினர் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளப் போகிறார்கள். நீங்கள் அவர்களிடம் நேரடியாக மேலும் விவரங்களைக் கேட்கலாம்.

ஆக,

ஏற்கனவே எழுதிக்கொண்டிருப்பவர்களே, உங்களுடைய எழுத்துக் கருவிகளை கூர்தீட்டிக் கொண்டு, தயவுசெய்து பெருங்கதையாடலில் கவனம் செலுத்துங்கள்.

இளையர்களே, நீங்களும் உங்கள் பங்கை ஆற்ற வேண்டும். உங்கள் சொந்த சமூகத்தின் கதைகளை நீங்கள் எழுதத் தயாராக இல்லை என்றால் வேறு யார் எழுதுவார்கள்?

வாய்ப்புக்கு நன்றி!

**

[குறிப்பு: இது என் உரை மட்டுமே. கேள்வி-பதில் அங்கத்தில் நடந்த உரையாடல் இக்கட்டுரையில் இடம்பெறவில்லை.]

[1] Singapore Chronicles : Literature, by Dr Koh Tai Ann, Dr Tan Chee Lay, Dr Hadijah Rahmat and Mr Arun Mahiznan. Published by Straits Times Press and Institute of Policy Studies, 2018

[2] Singapore’s Tamil Writers : Works on Social Progression in Post Independence Singapore, Venkat Subramanian Narayanan, Chapters on Asia, Selected papers from the Lee Kong Chian research fellowship (2014-2016), National Library Board Singapore Publishing, 2018

[3] Fifty Years of Singapore Tamil Literature chapter in ‘50 Years of Indian Community in Singapore’ edited by Gopinath Pillai and K. Kesavapany, World Scientific Publication, 2016. தமிழில் ‘தி சிராங்கூன் டைம்ஸ்‘ செப்டம்பர் 2021.

[4] சிங்கப்பூர்ச் சிறுகதைக்கொத்து, தொகுப்பாசிரியர் முனைவர் ஆ.இரா. சிவகுமாரன், கிரிம்சன் ஏத் பதிப்பகம், 2017