மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் 1965ஆம் ஆண்டில் பிரிந்தபோது, ஆங்கிலக் கல்வி கற்ற தமிழர்களுக்கும், தமிழை முதன்மையாக பயன்படுத்திய தமிழர்களுக்கும் இடையே காலனித்துவத் தாக்கத்தால் ஒரு பண்பாட்டு இடைவெளி உருவாகியிருந்தது. அதன் தொடர்ச்சியாகத் தமிழிலக்கியம் வளர்க்கும் பணி தமிழைப் பயன்படுத்திய தமிழர்களின் கைகளில் விடப்பட்டது. அத்தமிழரிடையே இலக்கியவாதியாக ஆவதென்பது உன்னதமான சாதனையாகக்  கருதப்பட்டது. இந்த மனப்பாங்கு காலனியாதிக்கக் காலத்தின் இறுதியில் வேரூன்றி, பின்காலனித்துவக் காலத்தில் தமிழ்நாடு, மலாயா, சிங்கப்பூரில் நன்கு வளர்ந்திருந்தது.

பெரும்பான்மையான தமிழ் எழுத்தாளர்கள் கூலித் தமிழர்களாகவும் குறைந்த வருமானம் பெறுபவர்களாவும் இருந்தனர். இவர்கள் முறையான கல்வி அற்றவர்களாகவும், அன்றாட ஊதியம்பெறும்  உடலுழைப்புத் தொழிலாளர், முடிதிருத்துவோர், சாலைப்பணியாளர், துறைமுகக் கூலி எனப் பலவிதமான வேலைகளைச் செய்தவர்களாகவும் இருந்தனர். சில  தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் ஈடுபட்டனர், வேலையில்லாமல் இருந்தவர்களும் இருந்தனர்.  

ஓர் எழுத்தாளராக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதில் இவர்களுக்கு மிகுந்த வேட்கை இருந்தது. அந்த உந்துதலின் விளைவாகத் தம்முயற்சியாலேயே தமிழ் கற்கத் தொடங்கினர். மரபுக் கவிதை, சிறுகதை, நாவல் என்று எழுத்துக் கலையைப் பயில்வதிலும் பேச்சாளர்களாகப் பெயரெடுப்பதிலும் தீவிரமாகச் செயல்பட்டனர். வானொலி நிலையம், செய்தித்தாட்கள், ’இந்தியன் மூவி நியூஸ்’ பத்திரிகை ஆகிய இடங்களில் பணியாற்றிய எழுத்தாளர்கள் கொடுத்துவைத்தவர்களாகக் கருதப்பட்டனர். ஏனெனில் இவர்களுக்கு எழுதுவதற்காக ஊதியம் அளிக்கப்பட்டது. இவர்கள் ஒரு தனி வகுப்பினராக இருந்தனர் எனலாம்.

பின்காலனித்துவ சிங்கப்பூரில், ஒரு புதிய நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகப் பல புதிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. அரசின் பல திட்டங்களுள் சீன சமூகத்திற்கான தணிக்கை, மறுசீரமைப்பு, பல்லினப் பன்மைத்துவ முன்னெடுப்பு போன்றவையும் அடங்கும். ஆனால் அதிகாரத்துவ மொழிகளுள் ஒன்று என்ற அங்கீகாரத்தைத்தாண்டி தமிழ்மொழி பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை. தமிழ்ச் சமூக அமைப்புகளும் இப்புதிய சவால்களை எதிர்கொண்டு உடனடியாகச் செயலாற்றவில்லை. தமிழிலக்கிய வளர்ச்சியும் அதனால் பாதிக்கப்பட்டது.

சீனப் பண்பாட்டை வரையறுப்பதிலும் மாண்டரின் மொழியை சிங்கப்பூர்ச் சீன இனத்தவரின் ஒரேமொழியாக ஆக்குவதிலும் அரசு முனைப்பாக இருந்தது. ஆனால் தமிழ்ப் பண்பாட்டு வரையறுப்பும் தமிழ் மொழியும் தமிழ்ச் சமூகத்தின் கைகளுக்கே விடப்பட்டன. பெரும்பான்மை சீன சமூகத்திற்கு நிகழ்ந்ததைப் போலவே இந்தியர்களுள் பெரும்பான்மையினராக இருந்த தமிழ்ச் சமூகமும் ஒன்றுதிரள இயலாமல், மாறிவந்த அரசியல் சூழல்களுக்கு ஈடுகொடுக்கவியலாமல் செயலிழந்து நின்றது. அந்த நிலைதான் சுதந்திரத்திற்குப் பிற்காலத்தில் எழுதப்பட்ட தமிழிலக்கியத்திலும் பிரதிபலித்தது.

அரசியல் பேசாமல், இனவாதத்தைப் பேசாமல், அரசு விரும்பாத எதையும் பேசாமல் அன்றாட வாழ்வின் சிறுபிரச்சனைகளை மட்டுமே பேசும் இலக்கியத்தையே தமிழ் எழுத்தாளர்கள் எழுதினர். வானொலி, செய்தித்தாட்களுக்கான எழுத்துகளும் பொதுவாகத் தம்மளவில் சமுதாயப் பிரச்சனைகளைப் பேசாதவைகளாகவே இருந்தன. சர்ச்சைக்குள்ளாகாது என்று செய்தி ஆசிரியர்களால் கருதப்பட்டால் மட்டுமே சில பிரச்சனைகள் இடம்பெற்றன.

சிங்கப்பூர்த் தமிழிலக்கிய வரலாற்றை அண்மையில் எழுதவந்தோர் எழுத்தாளர்களின் பெயர்களையும் படைப்புகளையும் பட்டியலிட்டுவிட்டுத் தங்கள் பணியை எளிமையாக்கிக்கொள்கின்றனர்.[1] நிறுவனக் கட்டமைப்பு ரீதியாக சிங்கப்பூர்த் தமிழிலக்கியம் எவ்வாறு வளர்க்கப்பட்டது என்பதைக் குறித்து சிந்திக்கவோ ஆராயவோ அரிதாகவே முயல்கின்றனர்.

சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில், ‘தமிழ் முரசு’, ‘தமிழ் நேசன்’ ஆகிய இரண்டு நாளிதழ்கள், ‘இந்தியன் மூவி நியூஸ்’ மாத இதழ், சிங்கப்பூரிலும் மலாயாவிலும் இருந்த வானொலி நிலையங்கள், எப்போதாவது நூல்கள் வெளியிட்டுவந்த அமைப்புகள் ஆகியவையே கவிதை, சிறுகதை, நாடக இலக்கியங்களுக்கான வெளியீட்டுத் தளங்களாக இருந்தன. ‘தமிழர் திருநாள்’ மற்றும் ‘பொங்கல் திருநாள்’ ஆகிய இரண்டு சமூகக் கொண்டாட்ட விழாக்களின்போதும் கவிதை, சிறுகதை, நாடகப் போட்டிகள் நடத்தப்பட்டன. அவ்விரு திருவிழாக்களையும் தமிழ்ச் சமூகத்தில் அப்போது அதிகார மையங்களாக விளங்கியவர்கள் அவர்கள் சார்ந்திருந்த அமைப்புகளின் வழியாக முன்னெடுத்துச் சென்றனர்.

சிங்கப்பூர் சுந்ததிரம் அடைந்தபோது, ‘தமிழ் மலர்’, ‘தமிழ் முரசு’, சிங்கப்பூர் வானொலி நிலையம் ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டுமே தமிழ் எழுத்துகளை வெளியிட்டன. சமூகத் தலைவர் கோ. சாரங்கபாணியின் தமிழ் முரசு 1963ஆம் ஆண்டில் தொழிலாளர் வேலைநிறுத்தத்தின் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டது. அதைத்தொடர்ந்து அவரது ‘தமிழர் திருநாள்’ கொண்டாட்ட முன்னெடுப்பும் நலிவடைந்தது. ‘சிங்கப்பூர் திராவிட முன்னேற்ற கழகம்’ 1967ஆம் ஆண்டில் கட்டாயப் பெயர்மாற்றத்திற்கு உள்ளானபோது அவ்வமைப்பு முன்னெடுத்த ‘பொங்கல் திருநாள்’ கொண்டாட்டமும் வீழ்ச்சியடைந்தது.[2]

மிகச்சில எழுத்தாளர்களே தங்கள் படைப்புகளைத் தொகுப்புகளாக வெளியிட்டனர். அவர்களது குறைந்த வருமானம் ஒரு காரணம். சிங்கப்பூர் தனி நாடாகப் பிரிந்து ஒரு தேசமாக ஆக முயன்றுகொண்டிருந்தபோது உண்டான காலத்தின் மாற்றங்களை எதிர்கொள்வதிலிருந்த சவால்கள் மற்றொரு காரணம். பல்லினச் சமுதாயத்தில் தேசிய ஒருங்கிணைப்பை முன்னிட்டு இனங்கள் தத்தம் தோற்றுவாய்களிலிருந்து விலகியிருக்க வழிசெய்யும் வகையில் அரசின் கொள்கைகள் அமைந்ததால், தமிழ் மொழி அடிப்படையிலோ இன அடிப்படையிலோ புதிய அமைப்புகளை உருவாக்குவது எளிதாக இல்லை. ஆகவே பழைய சமுதாய அமைப்புகள் வீழ்ந்தபோது அவ்விடத்தை நிரப்ப புதிய அமைப்புகள் இல்லாமற்போயின. மாறிவந்த சமுதாய-அரசியல் சூழல்களை எதிர்கொள்ள சித்தாந்த ரீதியான சட்டகங்களை அமைத்துத் தருவதற்கும் தமிழ்ச் சமூகத்தில் குறிப்பிடத்தக்க சிந்தனையாளர்கள் இல்லை. எழுபதுகளில்தான் சில குறிப்பான போக்குகள் சமூகத்தில் தென்படத் தொடங்கின.

சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த தமிழ்ப் பேரவை 1975ஆம் ஆண்டிலிருந்து தமிழ்ச் சமூகத்தின் இலக்கிய மந்தநிலையைக் களையும்வகையில் திட்டங்களைக் கொண்டுவந்தது. இகட்டுரையாசிரியரின் வழிகாட்டலில் அமைக்கப்பட்ட அவ்வமைப்பு, 1977ஆம் ஆண்டில் ‘சிங்கப்பூரில் தமிழ் மொழியும் தமிழ் இலக்கியமும்’ என்ற அதன் முதல் கருத்தரங்க மாநாட்டை நடத்தியது.[3] ‘தமிழ்ப் பேரவை’ என்ற பெயரில் இருமொழி கல்விப்புல ஆய்விதழ் ஒன்றை ஆண்டிதழாக வெளியிட்டது. இம்முயற்சிகள் சிங்கப்பூரில் தமிழுக்கும் தமிழிலக்கியத்திற்கும் செல்திசை குறித்த புதிய உத்வேகத்தை அளித்தன.

Screenshot 2021-10-14 at 4.38.26 PM

 அ. வீரமணி

 PC: Rootssg video

ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்ட ஆய்வரங்க மாநாடுகள் 1977, 1979, 1981 ஆண்டுகளில் தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை ஆய்வுக் கண்ணோட்டத்தில் அறிந்துகொள்ளவும் வாசக, விமர்சக கவனங்களைப் பெறவும் வழிகோலின. அதன்வழியாக வெறுமே எழுதுவது, ஒலிபரப்புவது என்றிருந்த நிலை மாறி ஆய்வுக்குட்படுத்தப்படும் முறையான வெளியீடு என்ற நிலை உருவானது. சமூகத் தலைவர்களின் உரைகள் இடம்பெற்றதால் அவர்களது சிந்தனைகளை சாராம்சமாகத் தொகுத்துக்கொள்வதிலும் இக்கருத்தரங்க மாநாடுகள் ஆழமான பங்களிப்பைச் செலுத்தின.

அடுத்தடுத்த ஆண்டுகளில், ‘சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்’ (1977), ஆன்சன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிற்சங்கவாதியுமான சி.வி. தேவன் நாயரின் ஆதரவில் ‘தமிழ் மொழி பண்பாட்டுக் கழகம்’ (1979) ஆகிய தமிழ் அமைப்புகள் உருவாக்கப்பட்டன. மற்றொரு முன்னனித் தொழிற்சங்கவாதி கோ. கந்தசாமியின் தலைமைத்துவத்தில் ‘தமிழர் பிரதிநிதித்துவ சபை’யும் (தமிழர் பேரவை)  மீளெழுச்சி கண்டது. ஒட்டுமொத்தமாக, சிங்கப்பூர்த் தமிழிலக்கியம் படைக்கப்படுவதற்கும் பரவலாக்கத்திற்கும், 1980களில் நம்பிக்கை அளிக்கும் சூழல் உருவானது.

DevanNair-ST

சி.வி. தேவன் நாயர்

PC: AsiaOne.com

அதைத்தொடர்ந்து ‘சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம்’ என்ற புதிய சொல்லாடல் வழக்கத்திற்கு வந்தது என்றாலும் தமிழ் வெளியீடுகள் அளவில் குறைவாகவே இருந்தன. எழுத்தாளர்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட அளவிலேயே தொடர்ந்தது. மேலும் இளைய, புதிய எழுத்தாளர்களின் வருகையும் குறைந்த அளவிலேயே இருந்தது. அப்போக்கை மாற்ற முயற்சித்த ஒரு சிறுகதை ஆசிரியர் நா. கோவிந்தசாமி.

தமிழாசிரியரான அவர், மாணவர்களும் பிற எழுத்தாளர்களும் பங்குபெறும் ‘இலக்கியக் களம்’ ஒன்றை அமைத்தார். பெரிய திட்டமிடல் ஏதுமின்றித் தொடங்கப்பட்ட அவ்வமைப்பு சில ஆண்டுகள் செயல்பட்டது. தமிழர் பேரவை இளையர் பிரிவு இக்கட்டுரையாசிரியரின் வழிகாட்டுதலில் பல சிங்கப்பூர் இளையர்களின் தொகுப்புகளை வெளியிட்டது. அதுவும் 1987ஆம் ஆண்டு நின்றுபோனது. பெரும்பான்மையான எழுத்தாளர்களிடம் ஓர் அமைப்பாகத் திரண்டு இளையர்களையும் புதியவர்களையும் உள்ளிழுத்து தீவிர இலக்கியம் படைக்கச் செய்வதற்கான பொருளாதார வன்மை இல்லை.

Screenshot 2021-10-14 at 4.30.26 PM

நா. கோவிந்தசாமி

PC: Pioneer Naa Govindasamy Video

‘தை நூலகம்’ என்ற நிறுவனத்தின் வழியாக ஏ.பி. சண்முகத்தின் அயராத உழைப்பால் தமிழ் இலக்கிய வெளியீடுகள் தொடர்ந்தன. எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை நூலாகத் தொகுத்து வெளியிட அவர் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்தார். 1989இல் ஒரு சிங்கப்பூர்த் தமிழ்க் கவிஞருக்கு இதய அறுவைசிகிச்சை செய்வதற்காக வாசகர்கள், நண்பர்களிடமிருந்து $21,500 நன்கொடையாகப் பெறப்பட்டு அளிக்கப்பட்ட ஒரு சம்பவம் அப்போது சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்களின் கவனத்தை ஈர்த்தது.[4]

சிங்கப்பூர் தனிநாடாக மலர்ந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்த 1990ஆம் ஆண்டில், வெள்ளிவிழாக் கொண்டாட்டங்களின்போது, தமிழிலக்கியம் மற்றுமொரு நிறுவன ரீதியான எழுச்சிக்கு உள்ளானது. அரசு ஆதரவளித்த ‘இந்தியக் கலாச்சார மாதம்’ முன்னெடுப்பின் பகுதியாக, ஏப்ரல் 1990இல் 25 நூல்களை வெளியிடவேண்டும் என்ற முனைப்புடன் ஒரு முயற்சியை இக்கட்டுரையாசிரியர் மேற்கொண்டார். சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத்தின் ஆதரவுடன் ஆண், பெண், புதிய, பழைய எழுத்தாளர் அனைவரையும் உள்ளடக்கிய 25 தமிழிலக்கிய நூல்கள் ஒரே நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன. அவற்றில் கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை  என அனைத்து வகைகளும் அடங்கியிருந்தன.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், நா. ஆண்டியப்பன் தலைமையில், 1990களில் மறுமலர்ச்சி கண்டது. சமூகத் தலைவர்களையும் தமிழ் எழுத்தாளர்களையும் கௌரவிக்கும் நிகழ்ச்சிகளை அவர் ஏற்பாடுசெய்தது மட்டுமின்றித் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடுவதற்கும் பாடுபட்டார். மேலும், 2011ஆம் ஆண்டில் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு ஒன்றையும் ஒருங்கிணைத்தார்.

Screenshot 2021-10-14 at 4.51.13 PM

நா. ஆண்டியப்பன்

PC: MillatVideoService Video

தமிழ் இலக்கியம் 1990களின் மத்திய காலகட்டத்திலிருந்து ஒரு விரைவான மாற்றத்தை அடைந்தது. வெளிநாட்டுத் திறனாளர்களும் அவர்களது வாழ்க்கைத் துணைகளுமாக அதிகளவில் சிங்கப்பூரில் குடியேறியபோது, இலக்கியக் குழுக்களில் பங்கெடுப்பதன் வழியாகவும் தமிழ்நாட்டில் ஏற்கனவே அவர்களுக்கு இருந்த தொடர்புகள் வழியாக நூல் வெளியீடு செய்தும் தங்கள் தமிழ் அடையாளத்தை அவர்கள் வலுப்படுத்திக்கொள்ளத் தொடங்கினர்.

தேசிய நூலக வாரியம், தேசிய புத்தக மேம்பாட்டு மன்றம் ஆகிய அரசுசார் அமைப்புகளும் அக்காலகட்டத்தில் தமிழ் இலக்கிய மேம்பாட்டுக்காகத் துடிப்பாகச் செயல்படத் தொடங்கின. தமிழ் இலக்கியத்தை ஊக்குவிக்கும் தேசிய நூலகத்தின் கண்காட்சிகளும் நூல் வெளியீட்டுக்கான மானியங்களும் ஏற்கனவே எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர்கள், புதிதாகப் புலம்பெயர்ந்த வரவுகள் என அனைவருக்கும் மேன்மேலும் நூல்கள் வெளியிட உந்துசக்தியை அதிகரித்தன. தேசிய நூலக முயற்சிகளின் வாயிலாக அனைத்துத் தமிழ் வெளியீடுகளையும் ஒரே இடத்தில் பார்க்கமுடிந்தது. கடந்த பத்தாண்டுகளாக, புலம்பெயர்ந்த சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்கள் சிங்கப்பூரிலும் தமிழ்நாட்டிலும் வேறு நாடுகளிலும் கௌரவிக்கப்படுகின்றனர். புலம்பெயர்ந்த உலகத் தமிழர் சந்திப்புகளும் இவ்வெழுத்தாளர்களின் புரவலர்களாக ஆயின.

தற்காலச் சிங்கப்பூர் இலக்கியச் சூழல், பல்வேறு குழுக்களும் தம் உறுப்பினர்களின் நூல்களை வெளியிடுவதாலும் போட்டிபோட்டுக்கொண்டு இலக்கிய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதாலும், உற்சாகமான ஒன்றாக மாறியுள்ளது.  சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் கதைக்களம், தங்கமீன் வாசகர் வட்டம், சிங்கப்பூர் வாசகர் வட்டம், கவிமாலை, மாதவி இலக்கிய மன்றம் ஆகியவையும் அக்குழுக்களில் அடங்கும்.

இவ்வியக்கங்களின் செயல்பாடுகளுக்குப் பின்னால் தொழிலதிபர்கள், திறனாளர்கள், முன்னணி எழுத்தாளர்கள் எனப்பலரும் இருக்கின்றனர். இவ்வமைப்புகளின் செயல்பாடுகள் நீங்கலாக, தேசிய நூலகம், தேசிய புத்தக மேம்பாட்டு மன்றம் ஆகியவற்றின் ஆதரவுடன் எழுத்தாளர்கள் தனிப்பட்ட முறையிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

புலம்பெயர் தமிழர் தமிழகத்தில் அமைத்துள்ள இலக்கிய அற நிறுவனங்களின் வழியாக சிறந்த இலக்கியப் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதளிக்கப்படுகின்றன. அத்தகைய விருதுகளில் கரிகாற்சோழன் விருதும் ஒன்று. முஸ்தபா அறக்கட்டளை தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அமைத்துள்ள இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. முகமது முஸ்தபா சிங்கப்பூரின் முன்னணித் தொழிலதிபர்களுள் ஒருவர்.

mustafa-data

 எம். ஏ. முஸ்தபா

PC: seithi.mediacorp.sg

தேசிய கலைகள் மன்றம் நீண்டகாலமாகத் தமிழிலக்கியப் பணியாற்றும் எழுத்தாளர்களுக்குக் கலாசார விருது அளித்து கௌரவிக்கிறது. அதைத்தவிர தாய்லாந்தின் தென்கிழக்காசிய எழுத்தாளர்கள் விருது, மோண்ட்பிளாங்க் – என்யுஎஸ் மையம் அளிக்கும் கலை இலக்கிய விருது, சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தமிழவேள் விருது, சிங்கப்பூர் இலக்கியப் பரிசு, சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் கலா ரத்னா விருது எனப்பல விருதுகள் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் கொண்டாடுகின்றன.[5]

1965 தொடங்கி இதுவரையிலான தமிழிலக்கியம் சார்ந்த வெளியீடுகளாக, 143 கவிதைத் தொகுப்புகள், 266 குழந்தை இலக்கிய நூல்கள், 105 சிறுகதைத் தொகுப்புகள், 48 குறுநாவல்கள் / நாவல்கள், 176 அபுனைவு நூல்கள் (கருத்தரங்கக் கட்டுரைகள், பத்திகள், விமர்சனங்கள், வாழ்க்கை வரலாறுகள், இன்னபிற) பட்டியலிடப்பட்டுள்ளன.[6] குறைந்த அளவிலான எழுத்தாளர், வாசகர் பரப்பைக்கொண்டது சிங்கப்பூர்த் தமிழிலக்கியம் என்றபோதும் அது தொடந்து பிழைத்திருப்பது மட்டுமின்றி தழைத்தோங்கியும் கடந்த அரைநூற்றாண்டாக வளர்ந்துவருகிறது. இலக்கியவாதியாக ஆகும் உள்ளார்ந்த வேட்கை தமிழரிடையே இன்னும் ஆழமாக நீடித்துவருகிறது.

சிங்கப்பூர்த் தமிழிலக்கிய விளைச்சலுக்கு மகுடம் சூட்டுவதுபோல அமைந்தது, அருண் மகிழ்நன் தலைமையில், மின்னிலக்கக் குழுவினர் முன்னெடுத்த சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய மின்தொகுப்பு.[7][8] உள்ளூர் தமிழ் மரபுடைமை அமைப்புகளும் தேசிய நூலக வாரியமும் இணைந்து செயலாற்றிய இத்திட்டம் சுதந்திர சிங்கப்பூரின் முதல் 50 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் அனைத்தையும் மின்னிலக்க வடிவமாக்கி இணையத்தில் கிடைக்கச் செய்யும் நோக்கில் தொடங்கப்பட்ட பெருந்திட்டம்.

Screenshot 2021-10-14 at 5.22.37 PM

அருண் மகிழ்நன்

PC: RootsSg Video

சிங்கப்பூர்த் தமிழிலக்கியத்தைப் பாதுகாப்பதுடன் எதிர்காலச் சந்ததியினருக்குக் கையளிக்கும் விதமாக, 2013ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டம் 2015ஆம் ஆண்டில், சுமார் 350 நூல்கள் மின்னிலக்க வடிவில் சிங்கப்பூருக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டு வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

*

[‘50 Years of Indian Community in Singapore’ (Editors Gopinath Pillai and K. Kesavapany, World Scientific Publication, 2016) என்ற தொகுப்பு நூலில் ‘Fifty Years of Singapore Tamil Literature’ என்ற தலைப்பில் இடம்பெற்ற பேராசிரியர் அ. வீரமணியின் ஆங்கிலக் கட்டுரை. மொழிபெயர்ப்பு: சிவானந்தம் நீலகண்டன்]

[செப்டப்ம்பர் 2021 ‘தி சிராங்கூன் டைம்ஸ்‘ இதழில் வெளியானது]

**

References

  1.   Thinappan SP, Na Aandiyappan, Suba Arunasalam (eds) (2011). Singapoor Thamizh Ilakia Varalaru – Oor Arimugam (History of Singapore Tamil Literature – An Introduction). Singapore, Singapore Tamil Writers Association.
  2.   Mani A. (2014). A tale of two streets: Urban renewal, transnationalization and reconstructed memories. In: Mani A (ed) Enchanting Asian Social Landscapes. Singapore, Swarnadvipa Publishing House, pp. 1-36.
  3.   Veeramani A. (1977). Singapooril Thamizhum Thamizhilakkiyamum (Tamil Language and Tamil Literature in Singapore). Singapore, University of Singapore Tamil Language Society.
  4.   Straits Times Newspaper Article. Poet receives funds for heart surgenry.html. Accessed on 6 February 2015.
  5.   Arun Mahiznan, 2014. ‘KTM Iqbal: The Man and His Word’, Cultural Medallion 2014, pp. 18-21. https://nac.gov.sg/docs/awards-recognition-files/ktm-iqbal.pdf. Accessed on 6 February 2015
  6.   Seethlakshmi, 2014. Singapoor Thamizh Ilakkiyam – Oor Arimugam (Singapore Tamil Literature – An Introduction). Paper presented at the Conference on Thayagam Kadantha Thamizh (Tamil Beyond its Homland), Coimbatore, TamilNadu January 20-22.
  7.   Thamizmani, Quarterly magazine of the Tamil Language and Cultural Society, Singapore, August 2014.
  8.  http://www.straitstimes.com/breaking-news/singapore/story/iswaran-calls-more-volunteers-support-plan-digitise-tamil-lierature-2#sthash.rxZVn4Gk.dpuf. Accessed on 3 February 2015.