நமது சிங்கப்பூர் தேசிய வாரிய நூலகங்களில் உள்ள வளங்கள் (அச்சு நூல்கள், மின்நூல்கள், நுண்படச்சுருள்கள், அரிய நூல்கள், பழைய இதழ்கள், இன்னபிற) கொஞ்சநஞ்சமல்ல. அவற்றை நாம் எவ்வளவு பயன்படுத்துகிறோம் என்பது வேறுவிஷயம். சிங்கப்பூரில் வெளியான பல பழைய இதழ்களை நூலகத்தின் இவ்விணைப்பில் வாசிக்கலாம். அதில் சுமார் 130 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த சிங்கைநேசன் வார இதழும் ஒன்று.

சிங்கைநேசனை முதன்முதலில் 2017ம் ஆண்டின் இறுதியில் வாசித்தேன். அப்போது உண்டான பரவசம் அலாதியானது. ஒருவாரத்துக்கு வேறெதிலும் புத்திபோகவில்லை. ஒவ்வொரு இதழாகக் கணினியில் திறந்துதிறந்து பார்ப்பது ஏதோ புதையலைப் பார்ப்பதுபோலிருந்தது. பிறகு முனைவர் கோட்டி திருமுருகானந்தம் சி.கு.மகுதூம் சாயபுவும் சிங்கை நேசனும் – ஓர் ஆய்வு  என்றொரு நூலை 2015ல் வெளியிட்டுள்ளதை அறிந்து அதை வாசித்தேன். சிறப்பானதொரு நூல். அப்படித்தான் பழைய இதழ்களை வாசிக்கும் ஆர்வம் தொற்றியது.

அந்த சமயத்தில் ஜெ.பாலசுப்பிரமணியத்தின் ‘சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை – தலித் இதழ்கள் (1869-1943)’ என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியின் காணொளி ஒன்று ஸ்ருதி டிவி வழியாகக் காணக்கிடைத்தது. சிங்கைநேசன் சிங்கப்பூரில் வெளியானது 1887-1890 காலகட்டத்தில் என்பதால் அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் வெளியான ஒரு தலித் இதழ் எவ்வாறான உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தது என்பதைப் பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல் மேலிட்டது.

பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதியிடம் தொடர்பு எண்ணைப்பெற்று நூலாசிரியர் ஜெ.பாலசுப்பிரமணியத்திடம் பேசினேன். தலித் இதழ்கள் குறித்துப் பல தகவல்களையும் ஒட்டுமொத்தமாக அவற்றின் குரலையும் என்னிடம் பகிர்ந்துகொண்டவரிடம் என் ஆர்வத்தைச்சொல்லி  சில பழைய இதழ்களை மாதிரிக்காகக் கேட்டேன். அவரிடமிருந்த தமிழன் இதழ்களின் அனைத்து மென்பிரதிகளையும் உடனே அனுப்பிவைத்தார். அவரது நூலை வாங்கி வாசிக்கவேண்டுமென்று முடிவுசெய்துகொண்டேன். சமீபத்தில்தான் வாசித்துமுடித்தேன்.

*

ஆசிரியரின் முனைவர் பட்டத்துக்கான ஆய்வின் அடிப்படையில் அமைந்த நூலிது.  முதல் தலித் இதழான சூரியோதயம் தொடங்கப்பட்டது (1869) முதல் ஈவெரா தனது தலைமையிலான நீதிக்கட்சியைத் திராவிடர் கழகம் என்று பெயர்மாற்றிய ஆண்டுக்கு (1944) முன்னர்வரை உள்ள காலகட்டம் இவ்வாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

தலித் இதழ்களை அறிமுகப்படுத்தி ஆராயுமுன் ‘தலித் இதழியல் தோற்றப்பின்னணி’ என்ற முதற்பகுதி நூலின் அஸ்திவாரத்தை அமைக்கிறது. தலித் என்ற சொல்லின் உருவாக்கம், பரவலாக்கம் முதற்கொண்டு மக்கள் தொகைக்கணக்கெடுப்பு அதன்பின் அமைந்த சாதி அரசியல்வரை சுருக்கமாக ஆனால் அடர்த்தியாக எழுதப்பட்டுள்ள பகுதி இது.

ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிகளிலுமே இதுவரை தமிழ் இதழியல் வரலாற்றை எழுதியவர்கள் தலித் இதழ்களை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டோ அல்லது பெயரளவில் குறிப்பிட்டோதான் சென்றிருக்கிறார்கள் என்று குறிப்பிடும் ஆசிரியர், இந்த நூலில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் பாதிவரை வெளியான 42 தலித் இதழ்களை ஆதாரங்களுடன் பட்டியலிட்டும் அவற்றின் குறிப்பிட்ட அம்சங்களைப் பகுப்பாய்ந்தும் அதன் வழியாக தலித் அறிவுப்பாரம்பரியத்தை வலுவாக நிறுவுகிறார்.

‘மதுவிலக்கு தூதன்’ என்ற தலித் இதழைக் குறித்து சில தகவல்களே இருந்தாலும் 1909ம் ஆண்டிலேயே தலித் அறிவுச்சமூகத்தால் மதுவிலக்கு முன்னெடுப்புக்கென்றே ஒரு இதழ் வெளிவந்துள்ளதை அது அறிவிக்கிறது. காங்கிரஸின் தீவிர மதுவிலக்குப் பிரச்சார இதழ் 1929ம் ஆண்டுதான் வருகிறது.

தலித் இதழ்கள் வெளியான பகுதிகளை ஆராயும் ஆசிரியர் அதன்மூலம் சென்னையிலிருந்து மட்டுமல்லாமல் தமிழகம் முழுதும் பரவியிருந்த அறிவியக்கமாக எடுத்துக்காட்டுகிறார். அதோடு தலித்துகள் எவ்வாறு சாதிய வன்முறையை இப்பத்திரிகைகளில் வெளியிடுவதன்மூலம் தங்களுக்கான பாதுகாப்பை அறிவுபூர்வமான வழியில் அடையமுற்பட்டார்கள் என்பதற்கான தகவல்களையும் அளிக்கிறார்.

ஆய்வுநூல் என்பதால் வாசிக்கத் தயங்கவேண்டியதில்லை. சரளமாகவும் சுவாரஸ்யமாகவும் வாசிக்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது. தமிழர் வரலாற்றிலும் அறிவியக்கத்திலும் ஆர்வமுள்ளோர் அவசியம் வாசிக்கவேண்டிய நூல்.

IMG_3694

சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை – தலித் இதழ்கள் (1869-1943)

ஜெ.பாலசுப்பிரமணியம்

காலச்சுவடு – 2017