யூமா வாசுகி என்ற பெயரைப் பல்லாண்டுகளுக்கு முன்னரே கேள்விப்பட்டிருந்தபோதிலும் அவரது நூல்களையோ ஆளுமையையோ நான் நேரடியாக அறிந்ததில்லை. கடந்த ஆண்டு (2017) தொடக்கத்தில் வாசகர் வட்டம் அங்மோகியோ நூலகத்தில் அவரோடு ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில்தான் அவரது மென்மையான ஆனால் தீர்க்கமான பேச்சைக் கேட்டேன். சிறார் இலக்கியத்துக்காக் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதைக் கண்டு வியந்தேன்.  சில சிறார் நூல்களை அப்போதே வாங்கினேன். சிறப்பான பொழுதாக அமைந்த அந்த நிகழ்ச்சியின் பதிவு இங்கே.

IMG_9407

அன்றைய நிகழ்வில் ‘கசாக்கின் இதிகாசம்’ மொழிபெயர்ப்பு அனுபவத்தையும் பேசினார். அது நடந்த பல மாதங்களுக்குப்பிறகு சாகித்ய அகதமியின் மொழிபெயர்ப்பு விருது அந்நூலுக்காக யூமாவுக்குக் கிடைத்தது. சாகித்ய அகதமி விருது கிடைத்தபின் ஆஸ்திரேலிய தமிழ் வானொலி ஒன்றில் அளித்த பேட்டி அவரது அணுக்கமான பேச்சையும் சிந்தனைப் போக்கையும் காட்டக்கூடியது.

புதிய புத்தகம் பேசுது (ஜனவரி 2018) இதழில் யூமா வாசுகியின் விரிவான நேர்காணல் சிறப்பாக  வந்துள்ளது. பொருத்தமான சொற்கள் கிடைக்காத சிலசமயங்களில் மனப்பிறழ்வுக்கு ஆளாகிவிடுவோமோ என்று அஞ்சும்வரை உந்தக்கூடியது மொழிபெயர்ப்பு என்று அதில் குறிப்பிட்டுள்ளார் யூமா. ‘அரிவாள் ஜீவிதம்’ என்ற மலையாள நாவலை யூமாவின் மொழிபெயர்ப்பில் வாசித்தபோது அவரது மொழிபெயர்ப்பின் சிறப்பை  நான் உணர்ந்துகொண்டேன்.

IMG_20180114_134037

2017 இறுதியில், தி சிராங்கூன் டைம்ஸ் மாத இதழில் சிறார் பகுதி ஒன்றும் சேர்க்கலாம் என்று முதன்மை ஆசிரியர் ஷாநவாஸ் முடிவுசெய்தபோது அதற்காக யூமாவை அணுகியதும் அவரோடு சிறார்களுக்கான உள்ளடக்கம், வடிவமைப்பு குறித்துத் தொலைபேசி  உரையாடல்களில் ஈடுபட்டதும் எனக்கு வாய்த்த சிறப்பான அனுபவங்கள். ‘வண்ணமயில்’ என்ற பெயரில் சிராங்கூன் டைம்ஸ் இதழின் நடுப்பகுதியில் எட்டுபக்கங்கள் அந்த சிறார் பகுதி யூமா பொறுப்பில் வெளியானது. தொடர்ந்து  மூன்று இதழ்களில் அப்பகுதி வெளிவந்தது. பிறகு அதைத் தொடரவியலாமற்போனது.

vannamayil_2

சென்னை சென்றால் யூமாவைச் சந்திக்கவேண்டும் என்று அப்போது முடிவுசெய்திருந்தேன். ஜூன் 2018ல் சென்னை சென்றபோது முகப்பேரில் அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தேன். அவரது எழுத்துப்பணிகளுக்கான அந்த அறையில் எங்கும் நூல்கள் நிறைந்திருந்தன. அதிக அளவில் மலையாள இதழ்கள் இருந்ததைக் கண்டேன். என் கிராமம் திருவாரூருக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையேயுள்ள ஆழியூருக்குப் பக்கம் திருக்கண்ணங்குடி என்று நான் சொன்னபோது ஓவியர் ஆழியைக் குறித்துச் சொல்லி அவருடைய நூல்களின் உரிமை யாரிடத்திலுள்ளது என்று கேட்டார். யூமா ஓவியக்கல்லூரியில் முறையாக ஓவியம் பயின்றவர். பிறகு ஆழியின் மகனுடைய தொடர்பு எண்ணை அவருக்கு அளித்தேன்.

சிறார் இலக்கியத்தில் அவரிடம் கைவசமிருந்த அவரது மொழிபெயர்ப்பு நூல்களில் எல்லாம் ஒரு பிரதி வேண்டும் என்று கேட்டேன். என்னை தோசையைச் சாப்பிடச் சொல்லிவிட்டு இங்குமங்குமாக நிலைகொள்ளாமல் அலைந்து ஒவ்வொரு நூல்களாக எடுத்துவந்து வைத்தவைத்தவண்ணம் இருந்தார். இவரது மொழிபெயர்ப்பில் வெளியான சிறார் நூல்களைத் தொகுப்புகளாக வெளியிட்டால் இன்றைய சூழலில் அது கவனம்பெறும் என்று நினைக்கிறேன். யூமாவின் படைப்பூக்கமுள்ள கடும் உழைப்பிற்கும் அது நியாயமாகவும் இருக்கும். ஏழெட்டு நூல்களைக் கொடுத்தவர் அரைக்காசும் வாங்க மறுத்துவிட்டார். நல்ல எழுத்தாளர்கள் பணத்தைப் பாபமாக நினைக்கும் சாபத்திலிருந்து என்று விடுபடுவார்களோ தெரியவில்லை?

IMG_3632

‘குதிரைவீரன் பயணம்’ என்ற சிற்றிதழின் ஆசிரியரான யூமா, அதன் சி.மோகன் சிறப்பிதழை வாசித்தீர்களா என்று கேட்டார். கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் வாசித்ததில்லை என்றேன். அதிலும் ஒரு பிரதி கொடுத்தார். நூலகத்தில் புத்தகங்கள் தேடும்போது சி.மோகந் மொழிபெயர்த்த சீன நாவலான ‘ஓநாய் குலச்சின்னம்’ எப்போதும் கண்ணில்படும் ஆனால் எடுத்து வாசிக்கத் தோன்றியதில்லை. அவரது ஆளுமையை முழுமையாகப் படம்பிடிக்கும் கட்டுரைகளுடன் வெளியாகியுள்ளது (ஜூன் 2016) இச்சிறப்பிதழ்.

இவ்விதழில் யூமா சி.மோகனைப் பற்றி எழுதும்போது, ‘கலை என்பது மனிதத்தின் பேரர்த்தங்களில் ஒன்று என்று அவர் கனிந்து தணிந்து மொழிந்தபோது என் ஆன்மாவில் ஒரு அசரீரி ஆம் என்று ஒலித்தது. வெவ்வேறு கோணங்களில் வந்து ஒளியால் நிலம் தழுவும் கிரணங்களைப்போல ‘கலை நம்பிக்கை’ என்ற ஒரு தரிசனத்தை அவர் முன்வைத்துக்கொண்டே இருந்தார். இன்றும் அதுதான் அவரின் உள்ளும் புறமுமாக இருக்கிறது. அவரது ஜீவாதாரமாக இருக்கிறது. அது அப்பழுக்கற்ற ஒரு உண்மையாக அவரிடத்தில் எளிதே நிலைபெற்றிருக்கிறது. நான் அதிலிருந்துதான் என் கைவிளக்கை சமைத்துக்கொண்டேன்’ என்கிறார். யூமாவிம் சிந்தனை, சொல்லாழம் இரண்டுக்கும் இப்பத்தி ஒன்றே போதும். அதோடு இவ்வரிகள் யூமாவுக்கும் பொருந்தும்.

IMG_3693

இரண்டாம் பத்தியில் குறிப்பிட்டுள்ள ஆஸ்திரேலிய வானொலிப் பேட்டியின் இறுதியில், உங்கள் எதிர்காலத்திட்டம் என்ன என்ற கேள்விக்கு,  ‘இல்ல..ஆதியிலேர்ந்தே இதுவரையும் திட்டம்னு இல்ல. அது..சருகு அப்டியே நீரில மிதந்து போற மாதிரிதான் நம்முடைய வாழ்க்கை இருக்கு..திட்டமிடுவது என்பது நமக்கு ரொம்பவும் அப்பாற்பட்டது’ என்று சொல்லும் யூமாவின் சொற்களில் பாசாங்கு ஏதுமில்லை என்பதை உணரவியலும்.

இவன் மனதோடு பேசும் கலைஞன்.

*