1968ல் கீழவெண்மணி கிராமத்தில் 44 தலித்கள் (4 பேரைத்தவிர மீதி பெண்கள், குழந்தைகள்) உயிருடன் குடிசைக்குள் அடைத்து கொளுத்தப்பட்டனர். அதைக்கருவாக வைத்து எழுதப்பட்ட நாவல். ஏற்கனவே அது வர்க்க வெறியின் விளைவா, சாதி வெறியின் உச்சமா என்பதில் பலருக்கும் பலகருத்துண்டு. இதில் இ.பா. தன்னால் முடிந்த உளவியல் காரணங்களையும் சேர்த்துள்ளார்.

நாவல் வெளியானதும் கருவுக்காக ஆசிரியர் கம்யூனிஸ்டுகளால் வரவேற்கப்பட்டாலும் மனோதத்துவ பிரச்சனைகளை உள்ளே கொண்டுவந்து அடிப்படைப்பிரச்சனையை நீர்த்துப்போகச் செய்துவிட்டதாக இவரை விமர்சித்ததாக முன்னுரையில் எழுதியுள்ளார்.

நாவலின் முற்பாதியில் பற்பல வரிகள் புருவங்களை உயரச்செய்கின்றன. ‘செக்ஸை வெறுக்கணும்னா காசு குடுத்துப்போகணும்’ என்றொரு வரி. விபச்சாரம் செய்ய வருபவளும் உண்மைப்பெயர் சொல்வதைத் தவிர்ப்பதைக்கண்டு ‘ஆள் கெட்டுப்போனாலும் பேர் கெட்டுப்போகக்கூடாது என்றளவில் சின்னங்களைக் கட்டிக்கொண்டழுவதுதான் நம் சமுதாய தர்மம்’ என்றொரு வரி. ‘பக்தி, அரசியல், சினிமா இந்த மூணையுந்தான் இப்ப அறம்,பொருள்,இன்பத்துக்கு நம்மாளுங்க வெச்சிருக்காங்க. வள்ளுவரை விட்ற முடியுமா?’ என்றோரிடத்தில். இன்னும் நிறைய தெறிப்புகள் ஆங்காங்கே உண்டு.

இறுதியில் அந்தத்துயரத்துடன் முடிவடையும் நாவல் ஆரம்பத்திலிருந்தே விறுவிறுப்பாக எழுதப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து அந்த கிராமத்துக்கு வரும் இரு படித்த இளைஞர்களின் கண்களின் வழியாக பெரும்பகுதி பிரச்சனைகள் பார்க்கப்படுவது ஆசிரியருக்கு வசதியாக இருக்கிறது; அவரும் அதே பின்ணணி உள்ளவரென்பதால். தனக்குத்தோன்றியதைத் தோன்றியபடி எழுதலாம்.

வாசித்துமுடித்ததும் ஒரே யோசனையாக இருந்தது. 45 வருடங்களுக்குமுன் கொஞ்சம் கூலி அதிகம்கேட்டதற்காகத்தான் அடிப்படையில் பிரச்சனை ஆரம்பித்தது. இன்று கேட்டதைக்கொடுக்கிறேன் என்று சொன்னாலும் சேற்றிலிறங்க ஆளில்லை. இந்தத்துயரச்சம்பவத்தைப்பற்றி எழுதப்பட்டிருக்கும் அனைத்தையும் வாசித்துவிட முடிவெடுத்திருக்கிறேன். அதுவே இந்த நாவலின் வெற்றியும்கூட.

*

ஆசிரியர் : இந்திரா பார்த்தசாரதி
(1978 சாஹித்ய அகாடமி விருது)