கந்தசாமி மாயவரத்துக்காரர். இவர் 1968ல் எழுதிய சாயாவனம் என்ற நாவல் மிகவும் புகழ்பெற்றது என்று விக்கி சொல்கிறது. அதனால்தான் ‘சா’ கந்தசாமியா என்பது தெரியவில்லை.

எனக்குப்பிடித்திருந்தது; கதையும் சரி எழுத்து நடையும் சரி. இரண்டே பாத்திரங்களைச்சுற்றி நிகழும் கதை. கண்டக்டர் தங்கராசும் டீச்சர் ருக்குவும் தம்பதிகள். கதை தமிழ்நாட்டின் அரசியல்வரலாற்றையும் பிளாஷ்பேக் உத்தியை அடிக்கடிப்பயன்படுத்தி காமராஜ் காலத்திலிருந்து சொல்லிக்கொண்டே வருகிறது. நிறைய ஆழமான குறிப்புகள் கிடையாதெனினும் அன்றைய சாமான்ய மனிதர்கள் என்ன நினைத்திருந்தார்கள் என்பதை ஓரிரு வரிகளில் எழுத்து சொல்லிச்செல்கிறது.

ஆசிரியர் வலிந்துவந்து பொழிப்புரை எழுதாத சம்பவங்கள் எப்போதுமே எனக்குப்பிடிக்கும். வாசகரின் ஊகத்துக்கு விட்டுவிடுவதே சுவாரஸ்யம் கூடச்செய்கிறது. ‘எங்கசாதியில அப்படியெல்லாம் கல்யாணம் பண்ணமாட்டாங்க’ என்று டீச்சர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது ஒருவரின் பிராமணபாஷை அவரின் சாதியைச்சொல்கிறது. ஆனால் மற்றவரது சாதிக்கு அவ்விடத்தில் clue ஏதுமில்லை.

மனைவியை மிகவிரும்பும் அதேநேரத்தில் அவ்வப்போது தன்கோபத்தைக்கட்டுப்படுத்த இயலாமல் வார்த்தைகளில் நெருப்பைக்கொட்டும் கணவர்கள் நம் தமிழ்ச்சமூகத்தில் அன்றும் இன்றும் உண்டு. அதைத்துல்லியமாகச் சித்தரித்துள்ளார். முக்கியமாக சாப்பாட்டுக்கு நேரமாகிவிட்டால் A hungry man is an angry man என்பதை நிரூபிக்கும் வகையில் கடுஞ்சொற்களால் மனைவியை வைவதும் பின் சாப்பாடு ருசி நாக்கை மகிழ்வித்ததும் உடனே பாராட்டுவதும் ஆசிரியரின் நுணுக்கமான கவனிப்பை வெளிப்படுத்துகிறது.

*

ஆசிரியர் : சா.கந்தசாமி
(1998 சாஹித்ய அகாடமி விருது)