‘ஒரு தமிழ் அச்சிதழ் நிறுத்தப்பட்டது’ என எங்காவது செய்திபடித்தால் இதயம் ஒருகணம் நின்று பிறகு துடிக்கிறது! அறிமுகமான இதழ் என்றால் அதிக வருத்தம். அண்மையில் அவ்வரிசையில் ‘தும்பி‘ சிறார் மாத இதழ்.

அம்புலிமாமா, பாலமித்ரா, ராணி காமிக்ஸ், பூந்தளிர், கோகுலம் போன்ற பல்வேறு சிறார் அச்சிதழ்களை வாசித்து வளர்ந்தவன் என்பதால், என் மகளுக்கும் தமிழில் அச்சிதழ் வாசிப்பைப் பழக்கப்படுத்த முனைந்தேன். அதன்பொருட்டு அவள் தொடக்கப்பள்ளியில் நுழையும் முன்பே பல தேடல்கள்.

ஆகஸ்ட் 2017இல் தாய்மொழிக் கருத்தரங்குக்குச் சென்றபோது ‘பாலர் முரசு’ என்னும் சிறார் மாதமிருமுறை இதழ் குறித்து அறிந்தேன். தமிழ் முரசின் ஆக்கத்தில் இருமொழிக் கற்பித்தலுக்கான லீ குவான் யூ நிதியின் ஆதரவில் வெளிவந்தது. தொடங்கப்பட்டு நான்கைந்து மாதங்களே ஆகியிருந்தது. சந்தாதாரர்களுக்கு மட்டும் அஞ்சலில் அனுப்பப்படுவதை அறிந்து கையோடு சந்தா கட்டி – ஆண்டுக்கு 30 வெள்ளி – வரவழைத்தேன். மகளுக்கும் பிடித்திருந்தது. படித்தாள் என்பதைவிடப் படங்களைப் பார்த்தாள் எனலாம். அதுதான் மிகவும் முக்கியம், சிறாரைப் புத்தக வாசிப்புக்குள் ஈர்க்கும் முதன்மையான அம்சம்.

பாலர் முரசில் பத்தாம்பசலித்தனம் கொஞ்சம் இருந்தது. “என் அம்மா விதவிதமான உணவுகளைச் சமைப்பார். நான் சமையல் அறையில் அவருக்கு உதவுவேன். அம்மா வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பார்” என்று ஒருமுறை பார்த்தேன். “அம்மா சமைக்கிறார், அப்பா செய்தித்தாள் வாசிக்கிறார்” என்ற பழம்பாடலின் தொடர்ச்சி அது. சிங்கப்பூர் வீடுகளில் அம்மா சமைப்பது அரிது, அப்பா செய்தித்தாள் வாசிப்பதும் இல்லை. சிங்கப்பூர்ப் பிள்ளைகளுக்குத் தயாராகும் இதழ் என்பதை மனதிற்கொள்ளுமாறு ஒரு செய்தி அனுப்பியதும் உண்டு. மகளுக்கு வயது ஏறியதில் இரண்டாம் ஆண்டு சந்தாவோடு பாலர் முரசு படலம் ஒரு முடிவுக்கு வந்தது.

தி சிராங்கூன் டைம்ஸ் ஆசிரியர் குழுவில் தீவிரமாகச் செயல்பட்ட காலம் அது. அதிலேயே ஒரு சிறார் பகுதி போட்டால் என்ன என்று ஆசிரியர் குழு யோசித்தது. சிறார் இலக்கியம் என்றாலே நினைவுக்கு வரும் பெயர் யூமா வாசுகி. அவருடன் சேர்ந்து பணியாற்றி ‘வண்ணமயில்’ என்ற பெயரில் எட்டுபக்கச் சிறார் பகுதியாக டிசம்பர் 2018 முதல் மூன்று மாதங்களுக்கு வந்தது. அதன்பின் பொருளாதார, நிர்வாகக் காரணங்கள் உள்ளிட்டப் பல்வேறு காரணங்களால் அதைத்தொடர இயலவில்லை. சிங்கப்பூரிலேயே ஒருவரைக் கண்டுபிடித்து வண்ணமயிலைத் தொடரலாம் என்று நினைத்து எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை.

இதழாக இல்லாவிட்டாலும் படங்களுடன் புத்தகத் தொடராக வரும் பொருத்தமான வரைகதை நூல்களைத் தேடியபோது நூலகத்தில் ‘நிலா காமிக்ஸ்’ தட்டுப்பட்டது. பொன்னியின் செல்வனைக் கவர்ச்சியாகப் போட்டிருந்தனர். நான் சொல்வது திரைப்படம் வெளியாவதற்குச் சில ஆண்டுகளுக்குமுன். வாங்கினேன். படங்கள் சிறப்பாக இருந்தன ஆனால் எழுத்துருவில் (font) கோட்டைவிட்டிருந்தனர்.

தமக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கும் முயற்சியின் பகுதியாகவோ என்னவோ சிறார் வாசிக்கச் சிரமப்படும் அளவுக்கு வளைவுநெளிவுகள்கொண்ட ஓர் எழுத்துருவில் வெளியிட்டிருந்தனர். ஆனாலும் படங்களே கதையைச் சொல்லின என்பதால் மகள் நிலா காமிக்ஸின் ரசிகையாக வெகுகாலம் இருந்தாள். குறிப்பாக ஆழ்வார்க்கடியானுக்கு! படத்தால் விளங்கிக்கொள்ள இயலாத இடங்களை மட்டும் நான் வாசித்துக்காட்ட வேண்டும். உள்ளூரில் தமிழ் காமிக்ஸ் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

‘நெருக்கம்’ என்ற கருப்பொருளில் அமைந்த சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2020 நிகழ்ச்சிகளுள் ஒன்று ‘சித்திரத் தமிழ்’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி. உள்ளூர் இளையர்கள் ராம் பிரசாத், பிருந்தா மேனன், இவ்லின் சோனியா ராயன், ஜெகநாத் ராமானுஜம் ஆகியோர் பங்கேற்றனர். ஆயிலிஷா மந்திரா நெறியாண்டார். சித்திரங்கள் இல்லாமல் வெறும் எழுத்துகளால் நிறைந்த தமிழ்வாசிப்பில் சிறார் ஒவ்வாமை கொள்வது, எந்த வயதினருக்காக எழுதப்படுகிறது என்கிற தெளிவு தமிழ் சிறார் நூல்களில் இல்லாதது எனப்பலச் சிக்கல்களைப் பேச்சாளர்கள் கவனப்படுத்தினர். தமிழ் காமிக்ஸ் ஒன்று சிங்கப்பூரில் விரைவில் வரவிருக்கிறது என்றும் அந்த முதல் முயற்சியை அனைவரும் இலவசமாகவே படிக்கலாம் என்றும் அந்நிகழ்ச்சியில் பகிரப்பட்டது. ஆனால் இதுவரை வந்ததாகத் தெரியவில்லை.

இப்படியாகத் தேடுதல் வேட்டை போய்க்கொண்டிருந்தபோது கண்ணில் பட்டதுதான் ‘தும்பி’ சிறார் மாத இதழ். அழகிய ஓவியங்கள், ஒளிப்படங்களுடன் ஆங்கிலமும் தமிழுமாகத் திருத்தமான வடிவமைப்பில் தமிழ்நாட்டின் திருவண்ணாமலையிலிருந்து வெளிவந்த இதழ். ஆசிரியர் சிவராஜ். உருவம், உள்ளடக்கம் இரண்டிலும் உலகத் தமிழ்ச் சிறாருக்குப் பொருத்தமான இதழ் எனலாம். பத்தாம்பசலிப் பிரச்சனைகள் இல்லை. எழுத்துருக்கள் தேர்வும் அபாரம். உண்மையிலேயே சிறாரின் கண்களைக்கொண்டு வடிவமைக்கப்பட்ட இதழ்.

சுமார் 48 பக்கங்கள். அதில் பாதியளவுக்கு ஒரு வரைகதை. இது ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளிலும் இருக்கும். அடுத்தது ‘மூத்த குழந்தைகளுக்கு’ என்று ஒரு சிறுகதை. இது தமிழில் மட்டும். அவ்வப்போது சிறுகதைக்கு பதிலாக உலக அளவில் சிறார் இலக்கியத்தில் செயல்படும் முன்னோடிகளின் நேர்காணல்கள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாவதும் உண்டு. சுருக்கமாகச் சொன்னால் ஒருபக்கம் பிள்ளைகள் படிக்கலாம், இன்னொரு பக்கம் பெற்றோரும் படிக்கலாம். தமிழ் மொழிபெயர்ப்புகளின் தொடர் வாக்கியங்கள் அவ்வப்போது சற்று இடறின என்றாலும் அவை வாசிப்புக்குப் பெரிய தடையாக இல்லை. இது என் மகளின் கருத்து.

சிறார் இலக்கியத்துக்காகவே வாழ்ந்து மறைந்த ‘வாண்டுமாமாவி.கிருஷ்ணமூர்த்தியால் ஆகர்ஷிக்கப்பட்டுத் தொடங்கப்பட்ட தும்பி, அவர் பெயரைக் காப்பாற்றியது மட்டுமின்றி அடுத்தகட்டத்துக்கும் சென்றுள்ளது என்பேன். கடந்த ஆண்டு இறுதியில் இந்தியா சென்றபோது தும்பியின் மொத்த இதழ்களையும் அவர்களது இணையதளத்தில் வாங்கினேன். கையிருப்பில் அதிகபட்சமாக 55 இதழ்கள் இருக்கின்றன (விலை ரூ. 4,400) என்றார்கள். ஒரே வாரத்தில் கைக்கு வந்தன. அனைத்து இதழ்களையும் புரட்டி முடிக்கும் முன்னரே பொருளாதாரக் காரணங்களுக்காக 81ஆம் இதழுடன் தும்பி பறப்பதை நிறுத்திக்கொள்வதாக அறிவிப்பு வந்துவிட்டது.

இனி தும்பி வரப்போவதில்லை என்றாலும் இதுவரை வந்த இதழ்களை வாங்கி தும்பி குழுவினரின் சுமார் பத்தாண்டு உழைப்புக்கு நம் ஆதரவைத் தெரிவிக்கலாம். தம் பிள்ளைகளுக்குப் புத்தக வாசிப்பைத் தூண்ட விழையும் பெற்றோருக்கு இது மிகச்சிறந்த தேர்வாக இருக்கும் என்பது என் அனுபவம். வெளிநாட்டுக்கும் அனுப்புகின்றனர் என்று இணையதளத்தைப் பார்க்கும்போது தெரிகிறது.

தும்பியின் 52ஆம் இதழின் ‘முத்த குழந்தைகளுக்கு’ பகுதி, ஆலிசன் கோப்னிக் (Alison Gopnik) என்ற அமெரிக்க உளவியலாளரின் நேர்காணல் மொழிபெயர்ப்பை வெளியிட்டிருந்தது. இவர் கோட்பாட்டுக் கோட்பாடு (theory-theory) என்பதைப் பரவலாக்கியவர். பிள்ளைகள் எவ்வாறு ஒன்றைக் கற்றுக்கொள்கின்றனர் என்பதை ஆராய்பவர்.

அப்பேட்டியில் ஆலிசன் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது, “..காகங்கள் கோழிக்குஞ்சுகளைவிட கூர்மையான புத்தியுடையவை. ஆனால் அவை பறக்கக் கற்றுக்கொள்ளும்வரை அதிக காலத்திற்குத் தன் தாயைச் சார்ந்திருக்கும். … நம் அறிவை செயல்படுத்துவதற்கு முன்பாக நாம் பலவற்றையும் கற்றுக்கொள்ள நமக்கு ஒரு பாதுகாப்பான காலகட்டம் தேவைப்படுகிறது. குழந்தைகள் கற்பதில் அசாதாரணத் திறனுடையவர்கள், ஆனால், உலகை எதிர்கொள்ளும் சாமர்த்தியம் அவர்களிடம் குறைவு..” என்று குறிப்பிட்டிருந்தார். ஒரேநேரத்தில் கற்பதில் அதிதிறனும் கற்றதைச் செயல்படுத்துவதில் குறைதிறனும்கொண்ட பருவமாகச் சிறாரைப் பார்க்கும் கண்களை அவ்வரிகள் அளித்தன. இதைப்போன்ற பல தருணங்களைத் தும்பியில் நான் அடைந்ததுண்டு.

தும்பி நூறாம் இதழை வெளியிடும் என்று நம்பினேன். ஆனால் 81ஆம் இதழோடு நின்றுவிட்டது. ஆயினும் இந்த அளவிலேகூட இது அரிய, முன்னோடியான, மிகத்தரமான வரலாற்று முயற்சி என்பதில் ஐயமில்லை. காலம் கடந்துவிட்டது என்றாலும் உங்களால் முடிந்த ஆதரவைத் தயக்கமின்றி அளிக்கலாம். அதற்கு இன்னும் காலம் இருக்கிறது.

***