அடையாறு – எழும்பூர் வழியில் சில ‘திருப்பங்கள்’ இருந்ததாலும் போக்குவரத்து சில இடங்களில் மெதுவடைந்ததாலும் விடுதிக்குச் செல்வதற்கு எதிர்பார்த்ததைவிட அதிக நேரம் ஆகியது. முன்னெச்சரிக்கையாக முன்கூட்டியே கிளம்பியதை நானே மெச்சிக்கொண்டேன். முன்னெச்சரிக்கையின் அடுத்தகட்டமாக, வண்டி விடுதியை நெருங்கிக்கொண்டிருந்தபோதே, அங்கிருந்து மூட்டைமுடிச்சுகளை ஏற்றிக்கொண்டு ரயில் நிலையம் செல்ல ஏதுவாக, செயலியைத் திறந்து ஒரு பெரிய வண்டிக்குப் பதிவுசெய்துவிட்டேன்.

விடுதிக்குச் சென்றுவிட 5 நிமிடம் இருந்தபோது, பெரிய வண்டி அங்கே வருவதற்கு 12 நிமிடம் காட்டியது. அங்கிருந்து எழும்பூர் ரயில் நிலையம் மிஞ்சிப்போனால் 15 நிமிடம். எப்படியும் ரயில் கிளம்புவதற்கு முக்கால் மணி நேரம் இருக்கும்போதே சென்றுவிடலாம். எல்லாக் கணக்கும் அணுக்கடிகாரத் துல்லிதம். கணக்கில் எங்களை அடித்துக்கொள்ளமுடியாது. கணிதமேதை ராமானுஜம் எங்கூர்க்காரர்தான். அவர் சாரங்கபாணி சன்னதித்தெரு, நமக்கு கம்பட்ட விஸ்வநாதர் வடக்குவீதி.

விடுதிக்குச் சென்றிரங்கிப் பெட்டிகளை எடுத்துக்கொண்டு, விடுதி வாசலில் தயாராகப் பத்து நிமிடமாகக் காத்திருந்தும் வண்டி நத்தையாக ஊர்ந்து வந்துகொண்டிருந்தது. அப்போதும் இன்னும் பத்து நிமிடம் காட்டியது. கைபேசியில் வண்டி ஓட்டுநரை அழைத்தேன். இடையில் என்னை அவர் அழைத்ததாகவும் நான் எடுக்காததால் ஒருவேளை சேவை தேவையில்லையோ எனக்கருதி நின்றுவிட்டதாகவும் சொன்னார். எனக்கு அவரிடமிருந்து அழைப்பு ஏதும் வரவில்லை. அந்தப்பஞ்சாயத்துக்கு அப்போது அவகாசமில்லை என்பதால் “மேலும் தாமதிக்காமல் சீக்கிரம் வாருங்கள்” என்றேன். “எங்கே போகவேண்டும்?” என்றார். “எழும்பூர் ரயில் நிலையம்” என்றேன். “சரி” என்று இணைப்பைத் துண்டித்தவர் ஓரிரு நிமிடத்தில் செயலியிலிருந்து காணாமற்போனார்.

சிங்கப்பூரில் நீங்கள் ஒரு வாடகைக் கார் பிடிக்கச் செயலியில் போடும்போது, எங்கிருந்து எங்கே போகிறீர்கள் என வண்டி ஓட்டுநருக்குத் தெரியும். தெரிந்துதான் அவர் உங்கள் அழைப்பை ஏற்பார். ஆனால் தமிழகத்தில் அப்படியில்லை. நீங்கள் கிளம்பும் இடம் மட்டுமே அவருக்குத் தெரியும். ஏறும் இடத்திற்கு வண்டி வரும். உங்களுக்குக் கைபேசியில் ஒரு மறை எண் வரும். வண்டியில் ஏறி அமர்ந்ததும் மறை எண்ணை ஓட்டுநரிடம் சொல்லவேண்டும். அதை அவர் அவரது செயலியில் உள்ளிட்டதும்தான் அவருக்குச் செல்லவேண்டிய இடம் தெரியும்.

குறைதொலைவு சவாரி என்றால் வாடகைக்கார் ஓட்டுநர்களுக்கு அதில் ஆதாயம் குறைவாம். அதனால் எவரும் அத்தகைய பதிவுகளை ஏற்கமாட்டார்களாம். ஆகவே செல்லுமிடம் தெரியாதபடிக்கு அப்படி ஓர் ஏற்பாடு. ஆனால் நம்மாட்கள் எத்தனுக்கு எத்தர்கள். பதிவுசெய்தவரை செயலியின்வழி அழைத்து, எந்த இடத்தில் நிற்கிறீகள் என்று விசாரிக்க வழிகேட்பதுபோலப் பேச்சோடுபேச்சாக எங்கே போகிறீர்கள் என்று கேட்பார்களாம். என்னைப்போன்ற விவரம் தெரியாதவர்கள் இடத்தைச் சொல்லிவிடுவர். அது அருகிலிருந்தால் அவ்வளவுதான். பயணத்தை ரத்து செய்துவிட்டு அடுத்த சவாரியை ஏற்கப்போய்விடுவார்களாம்.

விவரம் தெரிந்தவர்கள் குறைதொலைவுப் பயணம் என்றால், ஓட்டுநர் அழைத்ததுமே ‘மேலே’ போட்டுக்கொடுப்பதாகத் தெரிவித்துவிடுவார்களாம். சில ‘நியாயமான’ ஓட்டுநர்கள் அவர்களே இவ்வளவு கொடுத்தால் வருகிறேன் என்பார்களாம். அப்படியாவது அந்த அன்பர் கேட்டுத் தொலைத்திருக்கலாம். அதையும் கேட்காமல் பொன்னான நேரத்தையும் வீணடித்துவிட்டார். நேரம் நெருங்க நெருங்க எனக்குப் பதற்றம் கூடிவிட்டது. அடுத்த கார் பதிவு செய்து, அவர் ஒழுங்காக வந்து, போக்குவரத்துத் தேக்கத்தில் மாட்டாமல் சென்று… ரயிலைப் பிடிப்பதைக் குறித்த ஐயம் முளைகட்டத் தொடங்கியது.

விடுதியில் என் பதற்றத்தை அங்கிருந்த ஒரு ஓட்டுநர் கவனித்துக்கொண்டே இருந்திருக்கிறார். “இருங்க சார், கையில வண்டி இருக்கான்னு பாக்குறன்” என்றவர் வரவேற்புப் பதிவுப் பிரிவுக்குச் சென்று பேசினார். நல்லவேளையாக ஒரு பெரியவண்டி இருந்தது. எனக்கு மூச்சுவந்தது. “பே பண்ணிருங்க சார், நான் இதோ வண்டிய எடுத்திட்டு வந்திர்றன்” என்று அந்த ஓட்டுநர் அவசரமாகப் போனார். சூழலின் நெருக்கடியைப் புரிந்துகொண்ட ஒரே ஜீவன்.

பதிவாளர் காசை வாங்கிக்கொண்டு அனுப்புவார் என்று பார்த்தால் அப்போதுதான் அவர் ‘டிரிப் ஷீட்’ எழுதத் தொடங்கினார். தொழிலுக்குப் புதியவர்போலும், தப்பு வந்துவிடாமல் பார்த்துப்பார்த்துப் பொறுமையாக எழுதினார். தாதுகிளம்பியும் இப்படித் தலைகீழாய்க் கிளம்பிவிட்டதே என்று நான் விரத்தியாக அவர் எழுதுவதைப் பார்த்துக்கொண்டிருக்க, வண்டியை வாசலில் நிறுத்திவிட்டு வேகமாக வந்த ஓட்டுநர், “அவுங்க அவசரமா போகணும். டிரிப் சீட் அப்பறம் போட்டுக்கலாம். காச மட்டும் வாங்கிக்கங்க” என்றார். பதிவாளரும் மறுபேச்சு பேசாமல் காசை வாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டார்.

ரயில் நிலையம் செல்லும்வழியில் அந்த ஓட்டுநர்தான் வாடகைக்கார் பதிவில் நடக்கும் மேற்கண்ட சூட்சுமங்களை எனக்கு விவரித்தார். பிறகு சில நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டபோது அவர்களுக்கும் அத்தகைய அனுபவங்கள் உண்டு என்றனர். அவர்மட்டும் அன்று முன்வந்து உதவவில்லையென்றால் இந்த இடத்திலிருந்து வேறுமாதிரிப் பயணக்கட்டுரை எழுத நேர்ந்திருக்கும். அவர் புண்ணியத்தில் திருச்செந்தூர் விரைவு ரயில் கிளம்ப 10-15 நிமிடம் இருக்கும்போதே உள்ளேசென்று அமர்ந்துவிட்டோம். நாலேகாலுக்கு வண்டி கிளம்பியதும்தான் இனி பிரச்சனையில்லை என்ற நிம்மதியே வந்தது.

அது இரண்டாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட பிரிவு. எங்களுடன் அதே பெட்டியில் பயணம் செய்த இருவரும் ஆந்திரப் பெண்மணிகள். இருவருக்கும் வயது ஐம்பதுக்கு மேலிருக்கும். ஒருவரால் ஆங்கிலம் பேசமுடிந்தது. செங்கல்பட்டு வருவதற்குள் அவருடன் சினேகிதம் வந்துவிட்டது. தற்காலிக நட்புகளிலே ரயில் சினேகிதம் சிறப்பு வாய்ந்தது. வீடுபோன்ற ஒரு வசதியை ரயில் நமக்கு அளித்துவிடுவது ஒரு காரணமாக இருக்கலாம்.

இரண்டாம் நிறுத்தம் வருவதற்குள் அருகிலிருப்பவரிடம் “நமக்கு ரெண்டு பிள்ள, ஒரு பொண்ணுங்க. பொண்ண சீர்காழில குடுத்துருக்கு” எனத் தொடங்கிவிடுவோர் உண்டு. பிறகு பெரியவர்களுக்குப் பத்திரிகை முதல் பிள்ளைகளுக்குப் பால்பவுடர்வரை பரஸ்பரப் பகிர்தல் நடந்தேறி, இறங்குவதற்குள் சொந்தக்காரர்களாகவே ஆகிவிடுவர். இப்போது பெரும்பாலும் கைபேசியில் மூழ்கிவிடுகின்றனர்.

ஆந்திரப் பெண்மணிகள் இருவரும் தமிழகத்தில் போகாத இடமே கிடையாது போலிருக்கிறது. எல்லா ஊரும் தெரிந்திருந்தது. எல்லாம் பக்திப்பயணங்கள். நான் கும்பகோணம் என்றதும், “அடடா.. அது கோயில்களில் நகரம் ஆயிற்றே. நாங்களெல்லாம் தேடிப்பிடித்து அங்கு அபூர்வமாக வருகிறோம், நீங்கள் அங்கேயே வாழ்கிறீர்கள், போன ஜன்மத்தில் புண்ணியம் செய்துள்ளீர்கள்” என்றார். “அவ்வளவாகச் செய்யவில்லை, ஆண்டுகொருமுறை மட்டுமே அங்கு செல்கிறேன்” என்றேன்.

சிதம்பரம் வந்ததும் இருவரும் பரபரப்பானார்கள். சிதம்பரம் ரயில் நிலைய நடைமேடையில் ஆடலரசனின் சிற்பம் ஒன்று இருக்கிறது. காலணியைக் கழற்றிவிட்டு இருக்கையில் அமர்ந்தபடியே சாளரத்தின் வழியாகப் பரவசத்துடன் வணங்கிக்கொண்டிருந்தனர். நடைமேடையில் இறங்கி வணங்க அவர்களுக்கு விருப்பம்தான், ஆனால் நேரமில்லை. வண்டி விழுப்புரத்தில் மட்டும் 10 நிமிடம் நிற்கும், மற்றபடி ஒவ்வொரு நிலையத்திலும் ஒரு நிமிடம்தான். தேநீர், சாப்பாடு எல்லாம் வண்டிக்குள்ளேயே விலைக்குக் கிடைக்கிறது. விலை மோசமில்லை, ருசி குறித்து அப்படிச் சொல்லமுடியாது.

ஆங்கிலம் பேசத்தெரியாத அந்த இன்னொரு தெலுங்குப் பெண்மணி பயணச்சீட்டு அதிகாரியிடம் வரும்போதும் போகும்போதும் ஏதோ கேட்டுக்கொண்டே இருந்தார். அதிகாரி ஒருகட்டத்தில் சற்றுக்கடுமையாகவே, “கிடைத்தால் தருகிறேன், தொந்தரவுசெய்ய வேண்டாம்” என பதிலளித்தார். பிறகுதான் அப்பெண்மணி RACயில் (Reservation Against Cancellation) பயணம்செய்வது தெரிந்தது.

ஆர்ஏசி என்னும் கருத்தாக்கம் புரிந்துகொள்ளச் சற்றுக் கடினமானது. சுருக்கமாகச் சொன்னால், பயணம் உறுதி ஆனால் இருக்கை உறுதியில்லை எனலாம். பதிவுசெய்து வராமற்போனவர்களின் இருக்கைகளை ஆர்ஏசி பயணிகளுக்கு அதிகாரி உறுதிசெய்து அளிப்பார். சமயத்தில் இருக்கைகளைப் பகிர்ந்துகொள்ளவும் நேரும். ஆர்ஏசி தத்துவத்தின் நுணுக்கத்தை அறிந்த ஒரு புலவரால், “ஃப்ரெண்ஷிப் என்பது ஆர்ஏசி, லவ் கன்ஃபர்ம் பண்ண நீ யோசி” என்ற திரைப்பாடல்வரி எழுதப்பட்டுள்ளது.

இரவு பத்துமணிவாக்கில் கும்பகோணம் நெருங்கியது. நான் மாயூரம் எனப்படும் மயிலாடுதுறையிலேயே பெட்டிபடுக்கைகளைக் கதவருகே கொண்டுவந்துவிட்டேன். அடுத்தது கும்பகோணம். ரயில் நின்றதும் நான் அவரசமாகக் கதவைத்திறந்து பெட்டியை இறக்க, நடைமேடையில் நின்றிருந்த பெண் அதிகாரி ஒருவர், மலையாள வாசனையடிக்கும் ஆங்கிலத்தில், அடுத்த நிலையம்தான் கும்பகோணம் என்றார். சரேலென்று மீண்டும் ரயிலுக்குள் பாய்ந்ததோடு அவருக்கு அவசரமாக ஒரு நன்றியும் தெரிவித்தேன். எப்படித்தான் நான் கும்பகோணத்தில் இறங்கவேண்டியவன் எனத் தெரிந்துகொண்டாரோ, அந்த ஆடலரசனுக்கே வெளிச்சம்!

திருசெந்தூர் விரைவுரயில் நிறுத்தங்களை இணையத்தில் பார்த்தால் மயிலாடுதுறைக்கு அடுத்தது கும்பகோணம்தான். ஆனால் இடையில் ஒரு நிறுத்தம் இருக்கிறது. சம்பவம் படபடப்பைக் கூட்டிவிட்டது. அடுத்த நிறுத்தத்தில் உண்மையிலேயே கும்பகோணம் வந்தது என்றாலும் இறங்குவதற்குத் தயக்கமாக இருந்தது. எப்படியோ நல்லபடியாகச் சென்று சேர்ந்தோம். உறவினர் வீட்டில் இரவு உறக்கத்திற்குமுன் பேசிக்கொண்டிருந்தபோதே அடுத்தநாள் காலையில் நடைபழகத் தோதான ஓர் இடத்திற்கு அழைத்துச்செல்லுமாறு சொல்லிவிட்டேன்.

அதிகாலையில் கிளம்பிவிட்டோம். சேய் குளம் என்றொரு குளம். அதைச்சுற்றி நடைபாதை. பலரும் நடந்துகொண்டிருந்தனர். ஒருமணி நேரம் விறுவிறுப்பான நடையை முடிக்கும்போது செங்கதிரோன் எட்டிப்பார்த்தான். கும்பகோணத்தில் இருந்த நாள்களில் காலை நடையைச் சேய் குளம் காப்பாற்றியது.

சிறுவயதில் ஆண்டுதோறும் கோடைவிடுமுறைக்கு ஒருமாதம் வந்து குதூகலித்த ஊர் கும்பகோணம். இன்றும் பெரிதாக மாறவில்லை. கும்பேஸ்வரன் கோவில் யானை அன்று மிகப்பெரிய கவர்ச்சி. இன்று கும்பேஸ்வரன் கோவிலின் சன்னதிக் கடைத்தெருவில் இருக்கும் மார்க்கண்டேயா புத்தக நிலையம். மகளுக்காகத்தேடி கடந்தமுறை கிடைக்காத தமிழகத் தொடக்கநிலை சமச்சீர் கல்வித்திட்டத் தமிழ்ப் புத்தகம் இம்முறை கிடைத்தது. உருவத்திலும் உள்ளடக்கத்திலும் தரம்.

பேச்சுத்தமிழை எழுத்தில் எழுதலாமா என்று கேள்விகேட்டுச் சிந்திக்கவைப்பது, சொற்களின் பிம்பங்களை அச்சிட்டு அதைக் கண்ணாடியில் காட்டிப் படிக்கச் சொல்வது எனப்பல புத்தாக்க அணுகுமுறைகள். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை போன்ற பெயர்களில் பின்னொட்டாக இருந்த ‘பிள்ளை’யை நீக்கி அவ்விடத்தில் மரியாதைக்காக ‘ஆர்’ விகுதி சேர்த்து ராமலிங்கனார், சுந்தரனார் என ஆக்கப்பட்டிருந்ததைக் கவனித்தேன். தீண்டாமையைக் குறித்து முதல் பக்கத்தில் இடம்பெறும் ‘பாவச்செயல், பெருங்குற்றம், மனிதத்தன்மையற்ற செயல்’ ஆகிய மூன்றில் பாவம், புண்ணியம் எல்லாம் பகுத்தறிவுக்குப் பொருந்தாதவை எனக்கருதியோ என்னவோ பாவச்செயலை மட்டும் நீக்கிவிட்டனர்.

கு.அழகிரிசாமி எனக்கு எப்போதுமே திகட்டாத சிறுகதை எழுத்தாளர். அவரது சிறுகதைகளின் முழுத்தொகுப்பும் இரண்டு தொகுதிகளாக காலச்சுவடு வெளியிட்டிருந்தது. அதையும் வேறுசில நூல்களையும் வாங்கினேன். கையிலிருந்த மூவாயிரமும் காலி. ‘ஆசை இருக்கு தாசில் பண்ண, அழகு இருக்கு கழுத மேய்க்க’ என்றொரு சொலவடை உண்டு. வாசிப்பதைவிட வாங்கிவைப்பதில் வேகம் அதிகம். கடந்த ஆண்டு வாங்கிய நூல்களில் சில இன்னும் கைபடாமல் பத்திரமாக உள்ளன. இந்த ஆண்டிலாவது ராஜ்கிரணைப்போல எதையும் மிச்சம்வைக்காமல் முடிக்கப்பழகவேண்டும்.

இடையில் ஒருநாள் திருவாரூர் செல்லவேண்டிருந்தபோது அங்கு எழுத்தாளர் சுரேஷ் பிரதீப்பைச் சந்தித்தேன். இப்போது என் ஊர்ப்பயணத்தின் ஓர் அங்கமாகவே அவர் ஆகிவிட்டார். அவருடைய வாசிப்பு ஆழமும் எழுத்து வேகமும் பிரமிப்புக்குரியவை. அவருடன் பேசுவது அலாதி இன்பத்தோடு செயலூக்கத்தையும் அளிக்கும் ஒன்று. இளம் தந்தைக்கான சவால்களை எதிர்கொண்டிருக்கும் காலத்திலும் அவரது இலக்கியச் செயல்பாடுகளில் எந்தச் சுணக்கமும் இல்லை.

கீரனூர் ஜாகிர்ராஜா, சீ.முத்துசாமி, தோப்பில் முகமது மீரான், இந்திரஜித் என்று வங்காள விரிகுடாவின் இந்தப் பக்கமும் அந்தப்பக்கமுமாகத் தாவித்தாவிச்சென்றது எங்கள் உரையாடல். சிங்கப்பூர்ப் புனைவுகளை சிங்கப்பூரில் வாசிக்கிறார்களோ இல்லையோ சுரேஷ் பிரதீப் வாசித்துவிடுகிறார். பேச்சில் இடையிடையே நட்பார்ந்த உரையாடலாகிச் சொந்த விஷயங்கள் வந்துவிடும். சொந்த வாழ்க்கைச் பேசப்பட்ட கணத்திலேயே அவற்றுள் ஒருதருணம் இலக்கியத்தில் எங்காவது தட்டுப்பட்டு மீண்டும் பேச்சு இலக்கியத்திற்குள் போய்விடும்.

அச்சிலோ இணையத்திலோ உலகத்தமிழர் எங்காவது இலக்கியச் சிறப்பிதழ் போடுகிறார்கள் என்றால் பிரதீப்புக்குக் காய்ச்சல் கண்டுவிடும். சிறப்பிதழ் குழு அவரை அணுகிவிடும். அவரும் எந்த வேண்டுகோளையும் நிராகரிப்பதில்லை போலும். ஓர் ஆளுமையைக் குறித்தோ குறிப்பிட்ட இலக்கிய வகைமையிலோ எழுத ஒப்புக்கொண்டால் ஆதியோடந்தமாக வாசித்துவிட்டு எழுத அமர்வது அவரது வழிமுறை. ‘சியமந்தகம்’ தொகுதியில் ஆகப்பெரிய கட்டுரை இவரதுதான்.

ஜெயமோகனின் நூற்றுக்கணக்கான சிறுகதைகளைப் படித்துவிட்டு அவற்றுள் எழுத்தாளரின் போக்குகள், அணுகுமுறைகள் மாறிய காலங்களின் திருப்புமுனைக் கதைகளை மட்டும் தொட்டுக்கொண்டு, தொய்வின்றி இருபது பக்க அளவில் நீண்டிருக்கும் அக்கட்டுரையை எழுதுவதற்கு, சரி எழுதுவதை விடுங்கள், வாசிப்பதற்கேகூட இலக்கியத்திராணி வேண்டும். ஆய்வும் ரசனையும் சரிவிகிதத்தில் கலந்த கலவை அது. பெருந்தேவியின் கவிதைப்புத்தகம் ஒன்றை எனக்கு அன்பளித்தார். பிரியாவிடை பெற்றுக்கொண்டோம்.

தஞ்சாவூர் பெரிய கோவிலுக்குச் செல்ல இதுவரை மகளுக்கு வாய்ப்பு அமையாமலே இருந்துவந்தது. இம்முறை அமைந்தது. யதேச்சையாக நான் ஒரு நாளைத் திட்டமிட அன்றுதான் பிரதோஷம், விசேஷமான நாள் என்றனர். எல்லாம் தானாக அமைகிறதே என்று மகிழ்ந்தேன். பெரியகோவில் செல்லவிருப்பதைத் தஞ்சாவூரிலுள்ள உறவினர் ஒருவரிடம் சொல்லி அவரையும் அங்கு வரச்சொன்னேன். பிரதோஷத்தன்று கோவிலில் கூட்டம் நெறிதுளிபடும் என்றும் தன்னால் வரிசையில் மணிக்கணக்கில் நிற்கமுடியாது என்றும் சொன்னார். நான் உஷாராகிப் பயணத்தை அடுத்தநாளுக்கு மாற்றிவிட்டேன்.

பிரதோஷத்திற்கு அடுத்தநாள் அறவே கூட்டமில்லை. நந்தியை வணங்கிப் பெருவுடையாரிடம் செல்வதற்குப் பத்து நிமிடம்கூட ஆகவில்லை. ஆயிரமாண்டுகளாகக் காலப்பிரக்ஞையற்று நின்றுகொண்டிருக்கும் பெரியகோவில் காணத்திகட்டாத அதிசயம், அழகு. தமிழர்களிடம் பெரியகோவில் உண்டாக்கும் அதிர்வுகளும் பெருமித உணர்வும் தனி ரகம். படங்களில் பார்த்திருந்தாலும் நேரில்கண்டதும் மகள் அசந்துபோனாள். பெருவுடையார்கோவில் தமிழ்ச்செல்வமல்ல, மானுடச்செல்வம். அதனால்தான் யுனெஸ்கோ உலக மரபுடைமைத் தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆலய வளாகத்தில் நுழைந்ததுமே காலம் உறையத் தொடங்குவதை உணரலாம்.

திட்டமிடாமல் அமைந்த ஒரு பயணம் வேளாங்கண்ணி. சொந்த ஊரிலிருந்தபோது ஒருநாள் நாகப்பட்டினம் கடற்கரைக்குப் போவதற்காகப் போட்ட திட்டம் மழை குறுக்கிட்டதால் வண்டியை வீட்டுக்குத் திருப்பாமல் வேளாங்கண்ணிக்கு விடச்சொல்லிவிட்டேன். அதற்குள் மழை நின்றுவிடாதா என்று ஒரு நப்பாசைதான். சென்று சேர்ந்தபோது மழை குறைந்திருந்ததே தவிர நிற்கவில்லை. மாதா கோவிலுக்குள் நுழைந்து வழிபட்டோம். வாய்மொழி வரலாற்றின்படி ஐந்தாறு நூற்றாண்டு வரலாறுகொண்டது புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம். வெளியே வந்தபோது மழை நின்றிருந்தது.

அம்மாவும் உடன் வந்திருந்தார். மீண்டும் காரில் சென்று ஏற இருநூறு மீட்டராவது நடக்கவேண்டும். நடப்பதற்குச் சிரமம் இருந்தாலும் சமாளித்துக்கொண்டு நின்றுநின்று வந்துகொண்டிருந்தார். அதைப்பார்த்த ஒரு பக்தர், ஆலய அலுவலகத்தில் சக்கர நாற்காலி இருப்பதாகவும் இரவல் பெற்றுக்கொள்ளலாம் என்றும் யோசனை சொல்லிவிட்டுப்போனார். நல்ல யோசனையாகப் பட்டது.

சக்கர நாற்காலிக்குக் கட்டணம் ஏதுமில்லை ஆனால் 2000 ரூபாய் வைப்புத்தொகை கேட்டனர். கொடுத்துப் பெற்றுக்கொண்டேன், பயனுள்ளதாக இருந்தது. வேலைமுடிந்ததும் திரும்பக்கொண்டுசென்று கொடுத்தேன். வைப்புத்தொகை இல்லாமல்தான் முதலில் இரவல் கொடுத்தார்களாம். ஆனால் பயன்படுத்திவிட்டுத் திருப்பித்தராமல் காரில்போட்டுக் கொண்டுசென்றுவிடுகிறார்களாம். இவ்வளவுக்கும் இறைத்தலத்திற்கு வழிபட வந்தோர்!

வீடுதிரும்பும்போது வழியில் யோசித்துக்கொண்டே போனேன். இந்தியச் சமுதாயத்தில் நமக்கென்ன என்று போகாத ஓர் உதவி மனப்பான்மை உள்ளோட்டமாக, ஆழமாக இருக்கிறது. அது எப்படியோ தலைமுறை தலைமுறையாகக் கையளிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் மலாய்த் திருமணங்களைப் பற்றிய கட்டுரை ஒன்றில் அச்சமூகத்தின் சிறப்பம்சமாக ‘தாமாக முன்வந்து உதவும் தன்மை’ (gotong royong) பற்றிக் குறிப்பிட்டிருந்தனர். தற்போது அது நலிவடைந்து வருவதாகவும் ஆய்வாளர்கள் எழுதியிருந்தனர். அதுபோல ஒரு கோத்தோங் ரோயோங் இந்தியாவில் கண்ணுக்குப் புலப்படாமல் வேரோடி இருக்கிறது.

செல்லுமிடத்தைக் கேட்டுவிட்டுப் பதிவை ரத்துசெய்யும் குறுக்குபுத்தி உள்ள இடத்தில் எந்தப் பிரதிபலனும் இல்லாமல் தானே ரயிலைப் பிடிக்கச் செல்வதுபோலப் பதறி உதவிக்குவரும் ஒருவர் இருக்கிறார். அடுத்த நிறுத்தம் என்ன என்பதைக்குறித்துத் தெளிவாக அறிந்துகொள்ளமுடியாத குளறுபடிகொண்ட நிர்வாக அமைப்பிற்குள் அக்குளறுபடியால் எவரும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்று நினைக்கும் ஒருவர் வருகிறார். இரவல் பெற்ற சக்கர நாற்காலியைத் திருடிச்செல்லும் எண்ணத்திற்கு நடுவில், நடக்கமுடியாதோருக்கு இரவல் குறித்த தகவலை வலிந்துசென்று அளிக்கும் தன்மையும் இருக்கிறது. பெருநகரம் குக்கிராமம் என்றெல்லாம் வேறுபாடு இல்லாமல் அந்த மாய இழை எங்கெங்கும் ஊடாடி நிறைந்திருக்கிறது.

(தொடரும்)