ஒன்றுக்கும் உதவாத பொன்னாடைகளைப் போர்த்துவதற்கு மாற்றாகப் புத்தகங்களைப் பரிசளிப்பது அறிவார்ந்த செயலாக இருக்கும் என அவ்வப்போது குரல்கள் நம் சூழலில் ஒலிப்பதுண்டு. சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம், வாசகர் வட்டம் போன்ற அமைப்புகளிலும் தேசிய நூலக வாரிய நிகழ்ச்சிகளிலும் பொன்னாடைகள் தவிர்க்கப்படுவதையும் புத்தகப் பரிசளிப்புகள் முன்னெடுக்கப்படுவதையும் கண்டுள்ளேன்.

தற்போதைய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 2017லிருந்தே தன்னைச் சந்திக்க வருவோர் பூங்கொத்து, பொன்னாடைகளைத் தவிர்த்துப் புத்தகங்களை அன்பளிக்கலாம் என்றும் வலியுறுத்தியபடியால் சேர்ந்துவிட்ட சுமார் 80,000 புத்தகங்களைத் தமிழகத்தின் பல நூலகங்களுக்கும் பரிசளித்ததாகக் கடந்த ஆண்டு ஒரு செய்தி படித்தேன். இங்கே வாங்கி அங்கே தந்துவிட்டால் பிரச்சனையில்லை, பரிசாக வரும் புத்தகங்களைப் படிக்கலாம் என்று நினைப்பவர்களுக்குப் பிரச்சனை இருக்கிறது.

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பொன்னாடை கூடாது என்பதில் கெடுபிடியானவர். சிங்கப்பூரில் போர்த்தப்பட்ட ஒரு பொன்னாடையை மேடையிலேயே உதறியவர். ஆனால் தனக்குப் பரிசாகவரும் புத்தகங்களைக் குறித்து, “எட்டாம் வகுப்புப் பையன் வாசிக்கும் தரத்திலுள்ள புத்தகங்களைப் பரிசளிக்கின்றனர்” என்று ஒரு கட்டுரையில் நொந்துபோய் எழுதியிருந்தார். தலைவலிபோய் திருகுவலி வந்த கதை!

கடந்த பிப்ரவரியில் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினேன். அந்நிகழ்வில் எனக்குப் பரிசளிக்கப்பட்ட புத்தகம், ‘ஷாஜி இசைக்கட்டுரைகள் முழுத்தொகுப்பு’ (டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், 2023). ஷாஜியின் இசைக் கட்டுரைகளை இங்கொன்றும் அங்கொன்றுமாக நான் இணையத்தில் வாசித்திருக்கிறேன். அரிய தகவல்களை இணைத்து ஆழமாகவும் விரிவாகவும் உள்ளத்தைத் தைக்கும்படியும் ஆற்றொழுக்காக எழுதக்கூடியவர் ஷாஜி. அவர் பத்தாண்டுக் காலத்தில் (2005-2015) எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு அது.

அந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட நூலும் இசை ரசனை சார்ந்ததே. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நன்கு யோசித்துப் பொருத்தமானதாகவும் சுவாரஸ்யமாக வாசிக்கத் தக்கதுமாக ஒரு பரிசுப் புத்தகத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர். கதையின் நீதி என்னவென்றால் புத்தகம் பொன்னாடையைவிடச் சோகமாகவும் சுமையாகவும் ஆகிவிடாமல் இருப்பதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சற்று சிந்திக்கவும் மெனக்கெடவும் வேண்டும் என்பதுதான். இனி ஷாஜியின் புத்தகத்தைப் பார்க்கலாம்.

மலையாளியான ஷாஜி இந்தியாவின் பல பகுதிகளிலும் வாழ்ந்தவர். இசை வெளியீட்டு நிறுவனங்களில் இசைப்பதிவு மேலாளராகப் பணியாற்றியவர். ஒலிப்பதிவின் தரம் குறித்துத் தனக்கென ஒரு பார்வை கொண்டவர். அனைத்திற்கும் மேலாகக் கேட்டுத்தீராத பாட்டுகளின் காதலர், இசை ரசிகர்.

ஷாஜிக்கு இசையார்வம் – துல்லிதமாகச் சொன்னால் ஒலியார்வம் – வந்ததற்கான முகாந்திரங்களை ‘அப்பாவின் ரேடியோ’ என்னும் கட்டுரையில் காணமுடிகிறது. வானொலி குறித்த தகவல்களின் தொகுப்பென்றோ சிறுவயது நினைவேக்கம் என்றோ நாட்குறிப்புகளென்றோ சொல்லிவிட இயலாதபடி அக்கட்டுரை அவர் வளர்ந்த வடகேரளத்து கிராமச் சூழல், அங்கு ரேடியோ என்னும் கருவி படிப்படியாக மக்களின் அன்றாட வாழ்வில் ஊடுருவி ஒன்றுகலந்த அதிசயம், கண்ணால் கண்டிராத எத்தனையோ உலகங்களை வானலை ஒலிகளின் வழியாகவே ஒருவர் தன் மனக்கண்ணில் காணும் வாய்ப்பு இப்படிப் பல சித்திரங்களை அபாரமாகத் தீட்டிச் செல்கிறது.

சிறுவயதில் வானொலியை ஷாஜி விரும்பிய அதேயளவுக்குத் தந்தையை விலக்கத் தொடங்கினார் என்றாலும் வானொலியையும் அப்பாவையும் பிரித்தே பார்க்கமுடியாத ஒருவித விருப்பவிலக்க உறவின் வினோத மகிமை வெளிப்பட்டுள்ள கட்டுரை இது. ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு மனநிலை அமையும்படி எழுதியிருப்பதை ஷாஜியின் தனித்துவம் என்பேன்.

சலில் சௌதுரியின் கிராமத்திற்குச் சென்றுபார்த்து, காலத்தால் கைவிடப்பட்டுக் கிடக்கும் அந்த மண்ணிலிருந்து எப்படி காலத்தால் அழியாத இசை பிறந்தது என்ற கேள்வியை கேட்டுக்கொண்டு, ஆராய்ந்து, சலில்தாவின் இசை மண்ணிலிருந்து பிறக்கவில்லை என்ற முடிவுக்கு வரும் கட்டுரை ஒன்றில் ஒருவகை அலைதலும் அமர்தலும் சித்திக்கிறது. ‘தொலைந்துபோன இசைஞன்’ என்னும் கட்டுரை பாடகர் ஹரிஹரனின் மகத்தான படைப்பூக்கமும் படைப்பாற்றலும் அவரது கஸல் காலத்தில் வெளிப்பட்டதையும் அது பின்னாளில் மேடை, திரை, பிம்பம் என்று சிதைவுக்குள்ளானதையும் ஒரு நல்ல கலைஞனை இழந்த ஏக்கக்குரலுடன் பதிவுசெய்துள்ளது.

தெரிந்த கலைஞர்களிடமிருந்து தெரியாத பக்கங்களைக் காட்டுவது ஷாஜியின் மற்றொரு வித்தை. எம்.எஸ். விஸ்வநாதனும் அவரது பாடல்களும் தமிழர்களுக்குப் புதிதல்ல. ஆனால் ‘மனயங்கத்து சுப்பிரமணியன் விஸ்வநாதன் பாடும்போது’ என்னும் கட்டுரை அவர் எத்தகைய அபூர்வமான பாடகர் என்னும் கோணத்தில் விரிகிறது. ‘எனக்கொரு காதலி இருக்கின்றாள், அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்’ பாடலில் எம்.எஸ்.வி. உண்மையிலேயே ஏழு ஸ்வரங்களில் சிரிக்கிறார் என்று ஷாஜி எழுதும்போது கிடைக்கும் உற்சாக அனுபவம் தனி ரகம்.

ஒரு பாடகரின் அல்லது இசையமைப்பாளரின் இசை சாதனைகளைக் குறித்து எழுதும்போது அவர்களின் தனித்த முத்திரை அழுத்தமாக விழுந்துள்ள புகழ்பெற்ற பாடல்களைத் தொட்டுக்காட்டுவது மட்டுமின்றி, அதிகம் கவனிக்கப்படாத பாடல்கள் சிலவற்றையும் குறிப்பிட்டு தன் கணிப்பில் அவை ஏன் சிறந்த பாடல்கள் என்பதையும் ஷாஜி எழுதுகிறார். ராகங்கள், இசைக்கோர்வை, புத்தாக்க அணுகுமுறை போன்ற இசை சார்ந்த விளக்கமாக அக்கணிப்புகள் இருக்கலாம். இசையை காட்டிலும் ஒலித் தொழில்நுட்பத்தில் சாதித்தவர் என்பதைச் சுட்டிக்காட்டி விளக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் குறித்த கட்டுரை போன்ற புதிய பார்வைகளாகவும் இருக்கலாம்.

ஷாஜியின் பார்வைகள், கணிப்புகள், அலசல்கள் அளவுக்கே அவர் கட்டுரைகளில் போகிறபோக்கில் தெளித்துச்செல்லும் தகவல்களும் சுவாரஸ்யமானவை. ஒவ்வொரு கலைஞருக்கும் அவரது முழுப்பெயரைத் தருவதாகட்டும், டி.எம்.எஸ். கடைசியாகப் பாடிய திரைப் பாடல்கள் ‘நான் ஒரு ராசியில்லாத ராஜா’ ‘என் கதை முடியும் நேரமிது’ என அமைந்துபோனது யதேச்சையானதே போன்ற குறிப்பாகட்டும், சலில்தாவின் கைவிடப்பட்ட அந்த கிராமத்தில்தான் நேதாஜியின் பூர்விக வீடும் கைவிடப்பட்டுக் கிடக்கிறது போன்ற செய்திகளாகட்டும் – அற்புதம்.

இந்திய இசைக் கலைஞர்கள்தாம் என்றில்லை. இசை தேச எல்லைகளுக்குள் அடங்காததைப்போல ஷாஜியின் ரசனைக்கும் எல்லையில்லை. பாப் மார்லி, சக் பெர்ரி, ஃப்ரெடி மெர்குரி, ஜான் டென்வர், ஜான் லென்னன், மைக்கேல் ஜாக்ஸன் என்று உலக இசையின் திருப்பங்களை வடிவமைத்தவர்களின் வாழ்க்கையோடு இணைந்த இசையை விவரிக்கும் கட்டுரைகள், அவர்களின் ஆளுமையை நமக்குள் அழுத்தமாகப் பதியச் செய்கின்றன.

இசைக் கலைஞர்களின் வாழ்க்கையையும் இசையையும் காட்டும் சில திரைப்படங்கள் என்னை வெகுவாக பாதித்துள்ளன. மோட்சார்ட்டின் வாழ்க்கையைக் காட்டும் Amadeus, ஃப்ரெடி மெர்குரியின் வாழ்க்கை Bohemian Rhapsody, அண்மையில் பார்த்தது டான் ஷிர்லெயின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட Green Book. அத்தகைய சிறப்பான திரைப்படங்கள் அளிக்கும் அனுபவத்தை ஷாஜியின் இசைக்கட்டுரைகள் அளிப்பதாக உனர்ந்தேன். அதனாலேயே இசை ரசிகர்களுக்கு இப்புத்தகத்தைப் பரிந்துரைக்கத் தோன்றியது.

சுமார் 60 கட்டுரைகளுடன் 600 பக்கங்களில் தொகுக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு கட்டுரையும் அளவில் சற்று நீளமானவை (சுமார் 2000 சொற்கள், 10 பக்கம்) என்றாலும் கட்டுரையை நீட்டுவதற்கோ நிரப்புவதற்கோ ஷாஜி சொற்களைக் கொட்டவில்லை. ஒவ்வொரு கட்டுரையும் தமக்கான வாசக மனநிலையைத் தாமே உருவாக்கிக்கொள்ளும் வல்லமை பெற்றுச் சொந்தக்காலில் நிற்கிறது. படைப்பூக்க அல்புனைவு எழுத்து வகைமைக்கு இனி ஷாஜியின் கட்டுரைகளையும் எடுத்துக்காட்டாகச் சொல்வேன்.

***