சிங்கப்பூர், மலேசியாவில் ‘பசார் மலாம்’ (pasar malam) என்பது இரவுச் சந்தை. ‘பசார் பகி’ (pasar pagi) என்னும் காலைச் சந்தையும் உண்டு, ஆனால் அது ஈரச்சந்தை (wet market) என்னும் பெயரில் வழங்கப்படுகிறது. ஒருவகையில், சமைக்க வேண்டிய பொருள்களுக்கு காலைச் சந்தை, சமைத்த பொருள்களுக்கு இரவுச் சந்தை எனலாம். ஆயினும் இன்றைய சிங்கப்பூர் பசார் மலாமில் உணவைத் தாண்டியும் பல்வேறு பொருள்களின் விற்பனையும் பொழுதுபோக்கு அம்சங்களும் களைகட்டுகின்றன. 

சிங்கப்பூரின் இரவுச் சந்தைகள் 1950களில் ஜாலான் காயூ, செம்பவாங், கெப்பல் துறைமுகப் பகுதிகளை ஒட்டி அமைந்தன. பிரிட்டிஷ் கடற்படைத் தளங்களில் வாராந்திரச் சம்பளம் என்பதால் சம்பளத் தேதியை அனுசரித்து இச்சந்தைகள் முளைத்தன. சுதந்திரச் சிங்கப்பூரில் சுதந்திரமாகச் செயல்பட்டுவந்த பசார் மலாம்களுக்கு விரைவிலேயே ஒரு சோதனை வந்தது. 

அப்போதெல்லாம் சாலையோரங்களில், திறந்தவெளிக் கடைகள் பரப்பப்பட்டு உணவும், இதரபொருட்களும் விற்பனை நடக்கும் சந்தையாகப் பசார் மலாம் இருந்தது. சுகாதாரமற்ற உணவால் அவ்வப்போது பிரச்சனைகள் எழுந்தன. மேலும் சாலையோரக் கடைகள் என்பதால் கூட்டம்கூடியதும் சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பசார் மலாமால் ஒருபக்கம் மக்களுக்கு  நன்மை, இன்னொருபக்கம் இடைஞ்சல். அந்நிலையில் சுகாதாரத்தை மேம்படுத்தவும் நெரிசலைக் கட்டுப்படுத்தவும் சந்தைகளில் உணவுக்கடை வைப்போர் உரிமம் பெறுதல், இடம் மாறிக்கொண்டே இருந்த சந்தைகளுக்கு மாற்றாக அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் சந்தை அமைத்தல் எனச்சில கட்டுப்பாடுகளை 1966இல் அரசு கொணர்ந்தது.

புதிய கட்டுப்பாடுகளுக்குப் பின்னும் இரைச்சல், நெரிசல், சுகாதாரப் பிரச்சனைகள் தொடர்ந்ததால் 1970களில் மெல்லமெல்ல இரவுச் சந்தைகளுக்கான அனுமதி குறைக்கப்பட்டு 1978இல் கடைசிப் பசார் மலாம் மூடப்பட்டது. அத்தோடு சிங்கப்பூரில் பசார் மலாம்கள் தடை செய்யப்பட்டன. ஐந்தாண்டுகள் கழித்து 1983இல் செந்தோசாவில் மட்டும் சுற்றுப்பயணிகளைக் கவரும் ஓர் அம்சமாகப் பசார் மலாம் அனுமதிக்கப்பட்டது. மீண்டும் இரவுச் சந்தைகளைக் குடியிருப்புப் பேட்டைகளுக்குக் கொண்டுவர விரும்பும் மக்களின் குரல்களைப் பல உறுப்பினர்கள் 80களின் பிற்பாதியில் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தனர். 

ஒருவழியாக, 1990களின் தொடக்கத்தில், பசார் மலாமில் உணவு விற்பனை மட்டும் கூடாது பிற பொருட்கள் விற்கலாம் என அனுமதி கிட்டியது. பிறகு, அங்கேயே உணவு தயாரிப்பது கூடாது ஆனால் பொட்டலமிடப்பட்ட உணவுகள் விற்கலாம் என நிலைமை சற்று நெகிழ்ந்தது. ஆனால் சுடச்சுட உணவு தயாரிக்கப்படாவிட்டால் அது பசார் மலாமாகவே இல்லை என்று மக்கள் ஆதரவு சுண்டியதும், தேசியச் சுற்றுப்புற அமைப்பின் (NEA) அனுமதி பெறவேண்டிய நிபந்தனையுடன், இரவுச் சந்தைக்கு உணவுக்கடைகள் திரும்பின. இரவுச் சந்தைகளுக்குப் பழைய பொலிவு மீண்டது.  

பசார் மலாமில் உணவுக்கடை அமைக்க வேண்டுமென்றால் அக்கடையில் உணவைக் கையாளுபவர்கள் உணவுச் சுகாதாரம் குறித்து NEA வழங்கும் பயிற்சியைப் பெற்று, தேர்வில் தேறி, பதிவு செய்துகொண்டிருக்க வேண்டும். மேலும், சமையலுக்குத் தேவையான சுத்தமான தண்ணீர் இணைப்பு, வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் கருவிகள், உணவை அடுக்கிவைக்கும் காட்சிப்பெட்டிகள் என அவசியம் கடைகளில் இருக்கவேண்டிய வசதிகளும் பட்டியலிடப்பட்டு அவ்வப்போது அதிகாரிகளால் சோதனையிடப்படுகின்றன. 

Image courtesy: NHB

சுற்றுப்புற அமைப்பு தவிர நகர மன்றம், குடிமைத் தற்காப்புப் படை எனப் பல்வேறு அமைப்புகளிடம் நெரிசல், தீப்பாதுகாப்பு போன்ற அம்சங்களுக்காக அனுமதி பெறவேண்டும். இத்தகைய கட்டுப்பாடுகளால் பசார் மலாமின் நன்மைகளை மக்கள் அனுபவிக்கும் அதேவேளையில் தேவையற்ற இடைஞ்சல்களைக் குறைத்து, கட்டுக்குள் வைக்கமுடிந்துள்ளது.

அவ்வப்போது முளைக்கும் இரவுச் சந்தைகளால் வியாபாரம் குறைகிறது என அப்பகுதியில் நிரந்தரமாகக் கடை நடத்துவோரும், வசதியான குளுகுளு கடைகள் இரவுச் சந்தைகளின் பாரம்பரிய மவுசைத் தொடர்ந்து குன்றச்செய்கின்றன என இரவுச் சந்தை நடத்துவோரும் சொல்லிவருகின்றனர். இரண்டிலும் உண்மை உண்டு. 

பசார் மலாமின் வரலாற்றைப் பார்த்தால் நகரமயமாக்கம், உலகமயமாக்கம் அனைத்திற்கும் ஈடுகொடுத்தது மட்டுமின்றிக் கட்டுப்பாடுகள், தடைகள், பொருளாதாரச் சுணக்கங்கள், பெருந்தொற்றுகள் எனப் பல்வேறு பெருஞ்சவால்களையும் திறம்பட எதிர்கொண்டு, சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவையாகத் திகழ்வதைக் காணமுடிகிறது. அவ்வரலாறு தொடரும் என்று நம்பலாம். 

***

உசாத்துணை

https://eresources.nlb.gov.sg/infopedia

The Straits Times, 4 Dec 1983, Page 9

[தி சிராங்கூன் டைம்ஸ் மே 2023 இதழில் வெளியானது]