சுமார் முக்கால் நூற்றாண்டுக்குமுன் எழுதப்பட்ட, புகழ்பெற்ற பிரெஞ்சு இலக்கியவாதி ஆல்பர் காம்யூவின் ‘சிசிஃபஸின் தொன்மம்‘ கட்டுரை “ஒரேயொரு உண்மையான, தீவிரமான தத்துவப் பிரச்சனைதான் உள்ளது, அது தற்கொலை” என்று தொடங்கும். முதல் பார்வையில் ஆச்சரியமான வாக்கியமாகத் தெரியலாம். ஆயினும் ஆண்டுக்கு ஏழு முதல் எட்டு லட்சம்பேர் உலகில் தற்கொலை செய்துகொள்கின்றனர் என்னும் புள்ளிவிவரத்தைச் சேர்த்துப்பார்த்தால் அது உண்மையிலேயே ஒரு தீவிரமான பிரச்சனைதான் என்பது உறைக்கும்.

ஒருவருக்கொருவர் எவ்விதத் தொடர்பும் இல்லாத லட்சக்கணக்கான பேருக்குத் தனித்தனியாக ஏதோவொரு தருணத்தில் மற்றுமோர் உதயத்தைப் பார்ப்பதில் எந்தப்பொருளும் இல்லை என்று தோன்றிவிடுகிறது. வாழ்க்கை என்னும் அபத்த நாடகத்திலிருந்து வெளியேறுவதே ஒரே அர்த்தமுள்ள நடவடிக்கை என்று ஒரு பொறி தட்டிவிடுகிறது. ‘திருமுகம்’ நாவலில் வரும் இயற்பியல் பேராசிரியர் பாஷாவும் அப்படி ஒருநாள் உயர்ந்த கட்டடம் ஒன்றிலிருந்து பாய்ந்து தன்மாய்ப்பு செய்துகொள்கிறார். அவரது தற்கொலையை ஆராய்ந்து, அதிலுள்ள பிரச்சனையைத் தத்துவப்படுத்தி விளக்கி, தத்துவத்தில் முனைவர்பட்ட ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க முனையும் தத்துவ மாணவன் யூனூஸின் கண்கள் வழியாக நாவல் விரிகிறது.

நாவலாசிரியர் முஸ்தஃபா மஸ்தூர் ஈரானியர். அவர் சுமார் கால்நூற்றாண்டுக்குமுன் ஃபார்ஸி மொழியில் எழுதிய நாவல் அறபி வழியாகத் (மொழிபெயர்ப்பு: கஸ்ஸான் ஹம்தான்) தமிழுக்கு (மொழிபெயர்ப்பு: முனைவர் பீ.எம்.எம். இர்ஃபான்) சீர்மை பதிப்பக வெளியீடாக 2021இல் வந்துள்ளது. அசல் மொழியில் நாவலின் பெயர் ‘Kiss the fair face of God’ என்னும் அர்த்தத்தில் இருப்பதாகத் தெரிகிறது. உலகின் பல்வேறு மொழிகளில் லட்சக்கணக்கான பிரதிகளைத் தாண்டிவிட்ட நாவல் எனப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிய 135பக்க நாவல்தான், ஆங்கிலத்தில் வெளிவந்ததாகத் தெரியவில்லை.

‘வாழ்க்கை விசாரணை’ என்னும் இருத்தலியல் சிக்கல் முடிந்து, ‘வழக்கு விசாரணை’ என்னும் சட்டச் சிக்கல் தொடங்கும் புள்ளியான தற்கொலையை நாவலாசிரியர் தேர்ந்தெடுத்துள்ளார். அதிலும் தத்துவ மாணவன் யூனூஸ் துப்பறியக் கிளம்புவதுபோல அமைத்திருப்பது சாமர்த்தியமான அணுகுமுறை. தத்துவ விசாரத்தின் கனத்தைத் துப்பறியும் களத்தின் வேகத்தைக்கொண்டு ஈடுகட்ட நினைத்திருக்கலாம். நல்ல திட்டம்தான் ஆனால் பாத்திர வார்ப்புகளில் கூர்மையும் முழுமையும் குறைந்ததால் வேகம் சாத்தியப்பட்ட அளவுக்கு அழுத்தம் வெளிப்படவில்லை.

தீவிர வாசகர்களுக்கும் பொழுதுபோக்கு வாசகர்களுக்கும் இடையிலுள்ளோரைக் குறிவைத்து எழுதப்பட்டிருக்கலாம் ஆனால் சற்றுத் தத்துவார்த்த மொழியில் எழுதப்பட்டப் பொழுதுபோக்கு நாவலாகச் சென்று முடிந்துவிட்டது.

இருத்தலியல் பிரச்சனைக்குள் கடவுளை எங்கே பொருத்துவது என்ற நாவலின் ஆதாரச் சிக்கலைக் கையாள, கதாபாத்திரங்களை அவற்றின் வாழ்க்கைப்போக்கில் விட்டு எதிர்கொள்ளச் செய்யாமல் அவர்கள் உட்கார்ந்து யோசிக்கும் விஷயங்களாகவும், ஆங்காங்கே விவாதித்து முடிவுசெய்யும் நெருக்கடிகளாகவும் ஆக்கியது, காதலை உணரமுடிகிறது ஆனால் அறிவியல்பூர்வமாகத் தன்னுடைய சமன்பாடுகளில் இடம்பெறச் செய்து விளங்கிக்கொள்ள இயலவில்லை எனப் பேராசிரியர் பாஷா தற்கொலை செய்துகொண்டுவிடுகிறார் என்று நம்பகத்தன்மையைக் குறைப்பது போன்ற பல இடறல்கள் நாவலின் தத்துவப் பக்கத்தை வலுவிழக்கச் செய்துவிட்டன.

பிரச்சனையை அழிப்பது கொலை, தீர்வினை அழிப்பது தற்கொலை என்று யூனூஸின் சிந்தனைகள் வரும் சில இடங்களும் “வருந்தி உழைப்பவர் மட்டுமே படிப்படியாக பூமியின் தாங்குதூண்களுள் ஒன்றாக ஆகிறார்” போன்ற ரசிக்கத்தக்க சில வரிகளும், பாஷா ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்று பார்க்கும் ஆர்வமுமே நாவலை நகர்த்திச் செல்கின்றன. அத்தகைய துண்டுதுண்டான அம்சங்கள் ஒரு நாவலுக்கு எவ்வளவு உதவுமோ அந்த அளவுக்கே திருமுகம் நாவலுக்கும் உதவியுள்ளன.

இறைவனின் இருப்பைச் சந்தேகிக்கும் காதலன் யூனூஸுடன் தன் வாழ்க்கை ஒப்பந்தத்தைப் போட்டுக்கொள்ள விருப்பமின்றி சாயாஹ் விலகுமிடம், வாசிப்பவரிடம் உணர்ச்சிகளைக் கிளறாமால்போகலாம். அதற்குக் காரணம் அவர்களது உறவு அன்புப் பிடிப்பில் திளைப்பதாகக் காட்டப்படவில்லை. மாறாக, மூசா நபி பாதணிகளைக் கழற்றியது ஏன் என்பதுபோன்ற அறிவார்ந்த உரையாடல்களிலேயே ஈடுபட்டிருந்தனர் என்பதால் அப்பிரிவு தாக்கத்தை அளிக்கவில்லை.

காதல் மனைவியின் இறப்பு கண்முன் தெரியும் நிலை, உலகம் தெரியாத இளம் மகள் தாயற்று வளரவிருக்கும் கொடுமை என இந்த நாவலிலேயே அதிகக் கொந்தளிப்புகளைக் கொண்டிருந்திருக்க வேண்டிய அலீ றிளா என்ற நண்பன் பாத்திரம் அவ்வப்போது சோகத்துடன் யூனூஸுடன் சென்றுவருவதைவிட, இறுதியில், ஆணவமே இறைவனின் இருப்பைக் குறித்த தேடலாக ஆகிறது என்று போதிக்கப் பயன்படுத்தப்பட்டுவிட்டது பெருஞ்சோகம். சரி, இது அறிவுச்சமூகத்தின் பிரச்சனை என்று பார்க்கலாம் என்றால், சாயாஹுக்கு நேரெதிர் நிலையில், இறைவனுக்கும் காதலுக்கும் தொடர்பில்லை என யூனூஸ் வந்துசேருமிடம் அறிவுத் திருப்தியை அளிக்கவில்லை.

முனைவர் இர்ஃபானின் மொழிபெயர்ப்பு பொதுவாக நன்றாகவே உள்ளது. மொழியால் வாசிப்பு ஓட்டம் எங்கும் தடைபடவில்லை, சிக்கலான வாக்கிய அமைப்புகள் இல்லை. மதிப்பெண்கள், காத்திருப்புக்கூடம் போன்ற எளிய தமிழ்ச் சொற்களை விடுத்து மார்க்ஸ், வெயிட்டிங் ஹால் என ஆங்கில ஒலிபெயர்ப்பைப் பயன்படுத்தியது, ஓரிடத்தில் ஆர்க்கிட், இன்னோரிடத்தில் ஓர்க்கிட் என ஒரே ஆங்கிலப் பெயருக்கு இருவெவ்வேறு ஒலிபெயர்ப்பு அளித்திருப்பது போன்ற சிறுசிறு இடங்களைச் சரிசெய்யலாம். பிரசன்னம், சோபை போன்ற பயன்பாடுகளை மரபாகப் பயன்படுத்தப்படும் இடங்களைத் தவிர்த்துப் பிறஇடங்களில் தவிர்க்கலாம்.

காம்யூ தன் கட்டுரையில் விளக்கிய ‘சிசிஃபஸின் தொன்மம்’ புகழ்பெற்றது. கிரேக்கத் தொன்மமான அதில், பாறாங்கல்லை உருட்டிச்சென்று மலையுச்சியில் சேர்க்க விதிக்கப்பட்ட சிசிஃபஸ், தன் முயற்சியில் தோற்றாலும், தொடர்ந்து மீண்டும் மீண்டும் பாறையுருட்டலில் ஈடுபடுவதில் ஓர் அர்த்தத்தைக் கண்டுபிடித்துக்கொண்டான். அதுபோலத்தான் பொருளற்றதாகத் தோன்றும் வாழ்க்கையின் அன்றாடங்களுக்கு அவற்றினளவிலேயே அர்த்தங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பது காம்யூவின் பார்வை. அதாவது பிடிமானத்திற்காக மறுபிறவி, மோட்சம் போன்ற ‘கண்டவர் விண்டிலர்’ விடைகளை உள்ளே கொண்டுவராமல், தற்கொலை என்னும் தப்பித்தலுக்கும் சென்றுவிடாமல் இருப்பிலேயே அர்த்தத்தைத் தேடி இருப்பையே அர்த்தப்படுத்திக்கொள்ளும் சிசிஃபஸின் அணுகுமுறை.

சிசிஃபஸ் மகிழ்ச்சியாக இருப்பதாகவே நாம் கற்பனைசெய்துகொள்ள வேண்டும்” என்று அந்த நீள்கட்டுரையை முடிக்கிறார் காம்யூ. சில புள்ளிகளை ஆங்காங்கு வைத்துவிட்டு முழுமையாக்காமல் விடப்பட்டக் கோலத்தைப் போலத் தோற்றமளிக்கும் 135 பக்க திருமுகம் நாவலில் காம்யூவின் 25 பக்கக் கட்டுரையிலுள்ள தத்துவ, இலக்கிய அனுபவம் கிட்டாதது துரதிருஷ்டவசமானது. திருமுகம் நூலின் பிரபலத்திற்கு ஒருவேளை அதன் ஃபார்ஸி மூலப்பிரதியின் மொழியழகு எல்லாக் குறைகளையும் ஈடுகட்டும் வசீகரமிக்கதாக இருக்கவேண்டும். அல்லது ஒருவித ஆழமற்ற ஆழத்தைக் காட்டும் புனைவைச் சுருக்கமான வடிவில், சுவாரஸ்யமாக வாசிக்க விரும்பும் ஒரு பெரிய வாசகர் கூட்டம் உலகில் உருவாகியிருக்கவேண்டும்.

***