அரசியல் என்பதைக் கட்சி தொடங்குவது என்றும், ஆன்மிகம் என்பதைக் கோவிலுக்குச் செல்வது என்றும், கலை என்பதைத் திரைப்படம் பார்ப்பது என்றும் தமிழர்கள் புரிந்துகொண்டுவிட்டனர் என்றார் ஒரு மூத்த, முன்னோடித் தமிழ் எழுத்தாளர். அதில் உண்மை இல்லாமலில்லை. ஆகவேதான் இந்த வலைப்பூவை 2017இல் தொடங்கியபோது ஏற்கெனவே அம்மூன்றையும் எழுத இணையமெங்கும் ஏராளமானோர் இருப்பதால், சில நூறு பேருக்குள்ளேயே ரகசியமாகச் சுற்றிச்சுற்றிவரும், தமிழிலக்கியப் புத்தகங்களை அறிமுகப்படுத்தி எழுதுவதை எனக்கு நானே விதித்துக்கொண்டேன்.

ஆனால் இப்பதிவில் அறிமுகப்படுத்தி எழுதப்போகும் இளம்பரிதி கல்யாணகுமாரின் புத்தகங்கள் திரைப்பாடல்கள் குறித்த ரசனைக் கட்டுரைத் தொகுப்புகள்.

ஏன்?

மூன்று காரணங்கள்.

முதலாவது, காட்சி ஊடகங்களும் சமூக ஊடகங்களும் இன்று நம் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டன. திரைப்படப் பாடல் வரிகள் குறித்த தகவல்களையும், அவை எழுப்பும் நினைவுகளையும் காணொளிப் பதிவுகளாக ஆக்கிப் பல்லாயிரம்பேரிடம் உடனடியாக எளிதில் சென்றுசேர இளம்பரிதியால் இயலும். அதற்கான திறன்களும் அவரிடம் நிரம்ப இருக்கின்றன. ஆனாலும் எழுதப்பட்ட வரிகளின்மீதும் புத்தகம் என்கிற வடிவத்தின்மீதும் அவருக்குள்ள தீராக்காதல். அது போற்றுதலுக்குரியது.

இரண்டாவது, திரைப்படப் பாடல்கள் பெரும்பாலும் மின்னிமறைபவை என்றாலும் பல பாடல்கள் ஆழமாகச் சென்று தைக்கக்கூடியவை. “காற்றில் பறந்தே பறவை மறைந்தபிறகும் இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே” போன்ற வரிகள் காட்சிகளைத் துல்லியமாகக் கண்முன் கொணரும் கவிதைகள். அத்தகைய பாடல்களையும் வரிகளையும் தேடிப்பிடித்து அவற்றோடு மேலதிகத் தகவல்களையும் தன் உணர்வுகளையும் இணைத்துப் பட்டைதீட்டித் துலக்கிக் காட்டியிருக்கிறார்.

மூன்றாவது, எழுத்தில் ரசனை வடித்தல். நாம் பாடல்களைக் கேட்கும்போது அதன் வேகத்தில்தான் கேட்கமுடியும். அதை மெதுவாக்கினாலோ வேகப்படுத்தினாலோ இசை குலைந்துவிடும். இரட்டைமாட்டு வண்டி என்பதால் வேறுவழியின்றி பாடல் வரிகளும் இசையின் வேகத்தில்தான் ஓடும். ஆனால் எழுத்திற்கு வரும்போது வாசிப்பவரின் தனிப்பட்ட வேகத்திற்கு ஏற்ப பாடல் மாறுகிறது. முன்னும் பின்னுமாகச் சென்றுகூட விருப்பப்படி ரசிக்கலாம். விழிநுண்ணுணர்வு உள்ளோருக்கு அப்படித்தான் ரசிக்கவும் இயலும்.

வாசகசாலை வெளியீடாகக் கடந்த ஆண்டின் (2022) இறுதியில் வெளிவந்துள்ள ‘பாட்டுவாசி’ ரசனைக் கட்டுரைத் தொகுப்பும்சரி, அதே பதிப்பகம் வெளியிட்ட இளம்பரிதியின் ‘மடைதிறந்து’ (2020) தொகுப்பானாலும்சரி – ‘காலங்களில் அவள் வசந்தம்’ (2021) என்னும் இன்னொரு தொகுப்பையும் இவர் வெளியிட்டுள்ளார் ஆனால் அதை இன்னும் நான் வாசிக்கவில்லை – ஒரேவரியில் கருத்தைச் சொல்லுங்கள் என்றால் ‘ரசனை மேம்பாட்டு நூல்கள்’ என்பேன்.

ஏன்?

மூன்று அம்சங்கள்.

முதலாவது, திரைப்பாடல் வரிகளை முன்வைத்து ஒருவரின் ‘இயற்கை’யான ரசனையைத் தொட்டுத்தூக்கும் எழுத்துகள் இவை. முறையான இசைப்பயிற்சி அற்ற காதுகளையும் ஒரு பாட்டின் ஏதோவொரு தன்மை இசையை நோக்கி ஈர்த்துவிடுவதைப்போல, குறிப்பான தமிழறிவோ இலக்கியப் பயிற்சியோ இல்லாவிட்டாலும் சிலவரிகள் சிலரை ஈர்த்துவிடும். அதற்கு அவர்களுடைய தனிப்பட்ட அனுபவங்களோ நினைவுகளோ வளர்ப்போ சூழலோ காரணங்களாக அமையலாம். ஆனால் இன்னதுதான் என்று குறிப்பாகச் சொல்லிவிட முடியாது. அதைச்சொல்ல முயலும் கட்டுரைகள் இவை. ஒரு திரைப்படக் காட்சியின் நீட்சியாகவும், அந்தரத்தில் உலவும் இசைத்துண்டின் இணையாகவும், மானுட மகத்துவமாகவும் எப்படியெல்லாமோ இக்கட்டுரைகளில் ரசனை மேம்பாடு நடந்தேறுகிறது.

இரண்டாவது, ஒன்றைக்கொண்டு இன்னொன்று என ரசனைப் பரப்பை விரிவாக்கிக்கொள்வது. எடுத்துக்காட்டாக ‘பசலை’ குறித்த கட்டுரை. தலைவனைப் பிரிந்த தலைவிக்கு உடலிளைத்துப் பசலை பாய்வதாக அகத்திணைப் பாடல்கள் கூறுவதுண்டு. ‘சௌக்கியமா’ பாடலில் மோதிரம் வளையலாக ஆகுமளவுக்கு இளைத்துவிட்ட தன்னை, அது ஒட்டியாணமாய் மாறுமுன் வந்துவிடத் தலைவனிடம் வேண்டும் தலைவியைக் காணும் நூலாசிரியர், அதை ‘நறுமுகையே’ பாடலில் இளைத்துவிட்டதால் இடையில் மேகலை நிற்காமல் நழுவுவதாகப் பிரிவுத்துயர் பாடும் தலைவியோடு இணைத்துப்பார்க்கிறார். அங்கிருந்து பழந்தமிழ்ப் பாடல்கள் என ரசனைப் பரப்பைத் தொடர்ந்து விரித்துச் செல்கிறார்.

மூன்றாவது, ரசனையைப் புதிய கோணங்களில் செழுமைப்படுத்துதல். இங்கு ஓர் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வது பொருத்தமாக இருக்கும்.

‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழுக்குத் தனித்துவமான சில எழுத்துருக்களை (fonts) வடிவமைக்க வேண்டித் தமிழ் எழுத்துரு வடிவமைப்பின் பிதமாகர்களுள் ஒருவரான மலேசியாவின் முத்து நெடுமாறனைத் தொடர்புகொண்டபோது, அவர் எங்களுக்கு எழுத்துருக்களின் அடிப்படைகள் குறித்து விரிவாக ஓர் வகுப்பெடுத்தார். எழுத்துருவில் தொழில்நுட்பத்துக்கு மட்டுமின்றி ரசனைக்கும் இடமிருப்பதைச் சுட்டிக்காட்டினார். ஒரு கவிதை தன் உள்ளடக்கத்தில் “ஷாந்தா, உட்கார். ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்?” என ஜெமினிகணேசன் குரலில் கேட்கிறது என்றால் அக்கவிதையை “என்னோடு வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா?” என்ற சிவாஜிகணேசன் குரலில் கேட்கும் எழுத்துருவைக்கொண்டு அச்சிடக்கூடாது எனச்சொல்லி எடுத்துக்காட்டுகளும் சொன்னார். எழுத்துருவவை அப்படியொரு கோணத்திலிருந்து அதுவரை நான் பார்த்ததே இல்லை. அதைப்போன்ற பல கண்திறப்புக் கணங்கள் இளம்பரிதியின் எழுத்துகளில் விரிந்திருக்கின்றன.

ஒரு பாதுகாப்பு வளையத்துக்காக ப்ரோ, ப்ரதர், அண்ணே என அறிமுகமாகும் அனைத்து ஆடவரையும் விளிக்கவேண்டிய நிலையிலுள்ள ஒரு பெண்ணுக்கு அவர்களுள் ஒருவர் காதலராக மாறும் – இயல்பான ஆனால் இக்கட்டான – தருணத்தை எவ்வாறு ஒரு பாடல் வரி வெளிப்படுத்துகிறது என்று ஒருகட்டுரையில் அவர் விளக்குவது ஓர் எடுத்துக்காட்டு. குஷிப்படுத்துவது, ஆசுவாசப்படுத்துவது, ரசிக்கவைப்பதற்கும் மேலாகப் பல சமுதாய உராய்வுகளுக்கு நடைமுறை உயவுப்பொருளாகவும் பாடல்வரிகள் அமைந்திருப்பதைக் கண்டது எனக்கு அப்படியான ஒரு திறப்பு.

சரி, யாரெல்லாம் இளம்பரிதி எழுத்துகளை வாசிக்கலாம்?

மூன்று வகையினர்.

முதலாவது, வாசிக்கவேண்டும் என்று விரும்புகிறேன் ஆனால் வாசிப்புப் பழக்கம் கைகூடவில்லை, புத்தகத்தைக் கையிலெடுத்தால் மூளை ஓய்வுக்குச் சென்றுவிடுகிறது, எங்கே தொடங்குவதென்றே தெரியவில்லை என்போர். எளிமையான வாக்கியங்களைக்கொண்ட, அனைவரும் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய, நினைவுகளை மீட்டெடுக்கக்கூடிய, இலகுவாகப் பாடிக்கொண்டே படிக்கக்கூடிய நூல்கள் இவை.

இரண்டாவது, எதிலும் நுண்மைகளைக் காணும் மனம்கொண்டோர் வாசிக்கலாம். “எல்லாமே இல்லுமினாட்டி வேலைங்க” என கண்ணுக்குத் தெரிந்த அனைத்தையும் ஒரேபெட்டிக்குள் வம்படியாகப் போட்டு மூடிவிடாதோர். இல்லுமினாட்டிகளே உலகை ஆளட்டுமே, இந்தப் பாடல்வரி இவ்வளவு அழகாக இருக்கிறதே அதை எப்படி ரசிக்காமல் விடுவது? என்று கேட்கமுடிந்தோர்.

மூன்றாவது, எதிலும் மேலதிக அர்த்தங்களைத் தேடுவோர். குத்துமதிப்பாக அர்த்தம் விளங்கிவிட்டால் போதாதா? எதற்கு இவ்வளவு ஆராய்ச்சி? என்று கேட்காதோர். “முன்னைக் கடனைத் தீர்த்திடென்றான்” என்ற பாடல்வரியை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் முந்தைய, பழைய கடனாக இருக்கும் என்றுதான் நினைத்திருந்தேன். முன்னை என்பதற்கு மூத்தவன் என்கிற பொருளும் உண்டு என்று காட்டி அந்தப்பாடலில் அது ஏன் பொருந்துகிறது என்றும் இளம்பரிதி விளக்கிச் செல்கிறார். “ஆறாம் புத்தி தேர புத்தி” என்ற வரி சொல்வது என்ன? இப்படியான பல சுவையான ஆராய்ச்சிகள்.

வாசித்ததும் நூலில் மேலும் மேம்படலாம் என நான் எண்ணியவை?

மூன்று எண்ணங்கள்.

முதலாவது, கட்டுரைகளை உணர்வுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்துவதன்மூலம் பாடல் ரசனையோடு சேர்த்து வாசிப்பு அனுபவத்தையும் மேம்படுத்தலாம். குறிப்பாக வாசகரின் உணர்வுநிலைகளை மெல்லமெல்ல மாற்றிக்கொண்டு போகும்படித் தொகுக்கலாம். எடுத்துக்காட்டாக, ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திலிருந்து ஓர் உக்கிரமான பாடலுக்குப்பிறகு செந்தாழம் பூவில் என்னும் மென்மையான பாடல் வரும்போது ஒரு திடுக்கிடல் நிகழ்கிறது. ஒருவேளை சில வாசகர்கள் இதை விரும்பவும்கூடும்.

இரண்டாவது, கட்டுரைகளுக்குப் படங்களாகத் திரையில் மின்னும் நட்சத்திரங்களைத் தவிர்த்துப் பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர் முகங்களைக் காட்டலாம். இளையராஜா, ரஹ்மான், வாலி, வைரமுத்து, எஸ்பிபி போன்ற பிரபலங்களுக்கு வெளிச்சம் தேவையில்லை. பல அதிகம் கேள்விப்பட்டிராத பாடல்களை, அவற்றை உருவாக்கியோர் பெயர்களை இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். அவர்களின் முகங்களையும் போடலாம்.

மூன்றாவது, சில இடங்களில் பாடல்வரிகள் முறித்து அச்சிடப்பட்டுள்ளதைத் தவிர்க்கலாம். “நாள்தோறும் ரசிகன் பாராட்டும்” என்பது ஒருவரியிலும் “கலைஞன் காவல்கள் எனக்கில்லையே” என அடுத்தவரியும் வருவது அவசியம் தவிர்க்கப்பட வேண்டியது. இதுபோன்ற இடங்கள் இருநூல்களிலும் வெகுசிலவே என்றாலும் வாசிப்பு அனுபவத்துக்கு இடையூறாகும் என்பதால் குறிப்பிட விரும்புகிறேன்.

கொசுறாகச் சொல்ல நினைத்தது: இருநூல்களிலும் பெரும்பகுதி பிழையின்றியும் அழகிய தமிழிலும் சிறப்பாகவே அமைந்துள்ளது. ‘பாஸிட்டிவ்வாக’, ‘temporaryதானே’ என எழுதப்பட்டுள்ள வெகுசில இடங்களையும் நேர்நிலையாக, தற்காலிகம்தானே என மாற்றலாம். சில சொற்களுக்குத் தமிழ் தெரியவில்லை என்றாலும் ஒருசொல்லை உருவாக்கிப்போட்டு – இளம்பரிதியின் ரசனைக்குப் பல எழிற்சொற்கள் பிறக்கலாம் – அடைப்புக்குள் ஆங்கிலச்சொல்லை அளிக்கலாம். ஒன்றைப்பெற இன்னொன்றை இழக்கும் மாற்றமாக இருந்தால் தேவையில்லை, வாசிப்புக்கும் ரசிப்புக்கும் குந்தகமில்லாமல் தமிழைக் கூட்டலாம் என்னும் இடங்களை மட்டும் கைவைக்கலாம்.

இறுதியாக,

“சொந்த ரசனைகளின் உணர்கொம்புகள் கூர்மையடைந்ததால் உயிர்த்திருப்பவன். முழுமையை நோக்கி என்றும் முடிவடையாத யாத்திரையில் சென்றுகொண்டிருப்பவன்” என்று தன்னைக் குறித்துச் சொல்கிறார் கவிஞர் மகுடேசுவரன். இளம்பரிதியும் தாராளமாக அப்படிச் சொல்லிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

ரசனைக் கூர்மை ஒருபக்கம் என்றால் இளம்பரிதி எழுத்துகளில் வெறுப்பின்மையை மறுபக்கம் காணமுடிகிறது. இளையராஜா இசையைப்போற்றி இணையத்தில் எங்காவது ஒருவரி இருந்தால் அதற்கு அடுத்ததாக ரஹ்மானைத்தூற்றி ஒருவரி எழுதப்பட்டிருப்பதை அடிக்கடிக் காணலாம். இளம்பரிதி அதற்கு விதிவிலக்கு. ரஜினிகாந்துக்குப் புத்தகத்தைச் சமர்ப்பித்தாலும் கமலஹாசன் ரசனைகளைப் பாராட்டிப் பல இடங்களில் எழுதியிருக்கிறார். தமிழ்தான் என்று இல்லை பிறமொழிப் பாடல்களையும் கேட்பவராகவே தெரிகிறது. “உழன்று நொய்ந்து மடிந்த பாரதியை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள், கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்ற பாரதியை நான் வைத்துக்கொள்ளுகிறேன்” என்ற ஜெயகாந்தனைப்போல எதிலும் வேண்டியதை மட்டும் எடுத்துக்கொள்ளும் மனப்பாங்கு போற்றத்தக்கது. இன்றைய தேவையும்கூட.

இளம்பரிதி எழுதியுள்ள ஒரு கவிதை, தனிமை குறித்த பாடல்களைப் பேசும் ஒரு கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.

பாலையின் தனிமை நெடி

நாசித்துளையைப் புசித்துச் செலுத்தும்போது

ஒட்டகம் மேய்க்கும் சிறுவனொருவன்

நீர்போத்தலை நீட்டிக்கொண்டிருந்தான்

தாகமில்லை

தனிமை என்றேன்

நேரமில்லை

வாழு என்றான்.

நேரமில்லை என்றாலும் வாழ்வதற்கான பிடிமானங்களை அளிக்க முயலும் ரசனை இளம்பரிதியினுடையது. “உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே” என்ற வரியின் உண்மையைப்போல இளம்பரிதியின் எழுத்துகளிலும் ரசனைகளிலும் எதையும் தனித்துவிட்டுவிடாமல் இணைத்துப்பார்க்கும் ஒரு தன்மை அடியோட்டமாக இருக்கிறது. அதுவே வாசிப்பவரையும் தொடுகிறது. அவர் தொடர்ந்து எழுதவும் மேன்மேலும் சவால்களைத் தனக்குத்தானே இட்டுக்கொண்டு பயணிக்கவும் என் வாழ்த்துகள்!

***

தேசிய நூலக வாரிய The Pod அரங்கில் 19/02/2023 அன்று நடந்த இளம்பரிதி கல்யாணகுமாரின் ‘பாட்டுவாசி’ நூலறிமுக நிகழ்ச்சியில் ஆற்றுவதற்காகத் தயாரித்த உரை. இதன் ஒருபகுதி அன்றைய உரையில் இடம்பெற்றது.