ஜூன் 2020-இல் வெளியான மதிப்பாய்வு ஒன்று (‘ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்’ வெளியிட்டது) எவையெல்லாம் அத்தியாவசியத் தேவைகள் என்று பொதுமக்களின் கருத்தைக்கேட்டு வெளியிடப்பட்டிருந்தது. ஒரு கலைஞரின் பங்கு ஆகக்குறைவான அளவுக்கே சமுதாயத்திற்கு அவசியமானது என்று அவ்வாய்வில் பங்கேற்றவர்களுள் பெரும்பான்மையினர் மதிப்பிட்டிருந்தனர். அதற்கு எதிர்வினையாற்றிய கலைஞர்களும் பிறரும், அன்றாட வாழ்க்கையில் கலையின் இடம் மகத்தானது என்றும் பெருந்தொற்றுக் காலத்தில்தான் கலையின் தேவை மேலும் அதிகரிக்கிறது என்றும் வாதிட்டனர்.

எனக்கும் கலை ஆர்வம் உண்டு. ஆகவே வெறும் வாதப்பிரதிவாதமாக மட்டுமின்றி இந்தியப் பாரம்பரிய நடனத்தைக் (குறிப்பாக ஒடிசி நடனம்) கற்பதிலும் நிகழ்த்துவதிலும் கொவிட் பெருந்தொற்றுக் காலம் கொணர்ந்த புதிய சவால்களையும் அவற்றை நாட்டியச் சமூகம் எதிர்கொண்ட விதத்தையும் என் இளநிலை சமூகவியல் பட்டத்திற்காக ஆராய விரும்பினேன். அந்த ஆய்வறிக்கையின் சாராம்சமான சுருக்கத்தை இக்கட்டுரையில் பகிர்ந்துகொள்கிறேன்.

சமூக இடைவெளி, ஒன்றுகூடல் கட்டுப்பாடுகளால் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள் துரிதமாக மின்னிலக்கமயம் ஆனது போலவே நடனத்திற்கும் ஆனது. இந்தியப் பாரம்பரிய நடன வரலாற்றிலேயே அது ஒரு தனித்துவமிக்க தருணம் எனலாம். பழமையான அக்கலை தன்னை மின்னிலக்க உலகத்திற்குத் தகவமைத்துக்கொள்ள ஆரம்பித்தது. தன் ஆதார அம்சங்களை விட்டுக்கொடுக்காமல், ‘அசல்’ தன்மைகளை இழந்துவிடாமல் புதிய அவதாரம் எடுப்பதற்குத் தலைப்பட்டது.

அத்தகைய செயல்பாட்டை காலம், இடம் என இரு கண்ணோட்டங்களிலும் ஆராயவேண்டியிருக்கிறது; அதாவது பெருந்தொற்று சிங்கப்பூரில் தொடங்கியது முதல் கால அடிப்படையில் உண்டான மாற்றம், நேரடியான வகுப்புகள் மின்னிலக்க வகுப்புகளாக ஆனதால் இட அடிப்படையில் உண்டான மாற்றம். நடனம் கற்பித்தல், கற்றல், நிகழ்த்துதல், அமைத்தல், ரசித்தல் எனப் பல்வேறு கோணங்களை உள்ளடக்கிய என் கேள்விகளுக்கு, நடன ஆசிரியர்கள், மாணவர்கள், மூத்த நாட்டியக்காரர்கள் என்று பலதரப்பினரிடமிருந்தும் அனுபவங்களைப் பெற்று அவற்றை ஆராய்ந்தேன்.

வந்தனா ஜெயராம்

அவ்வாறு ஆராய்ந்ததில் மூன்று முக்கிய நிலைகள் எனக்குப் புலப்பட்டன.

முதலாவது, இந்தியப் பாரம்பரிய நடனம் என்பதன் வரையறை, அதன் அசல் தன்மை ஆகியவற்றைக் குறித்த பதற்றங்களை எதிர்கொள்ளுதல். இரண்டாவது, இந்தியப் பாரம்பரிய நடனத்தின் ஆன்மீகமான தன்மைகளை மின்னிலக்க வெளியில் மீளுறுதி செய்துகொள்ளுதல். மூன்றாவது சூழலுக்கேற்ற புதிய கற்பனைகளை உருவாக்குவதன் வழியாக நெருக்கடியிலிருந்து மீளுதல்.

முதலாம் நிலையில் நடன இயக்கத்திற்கு உண்டான நெருக்கடியையும், மின்னிலக்க இடையீட்டையும் முக்கிய அம்சங்களாகக் குறிப்பிடலாம்.

இந்தியாவிற்கோ பிற நாடுகளுக்கோ நடன மாணவர்கள் செல்வது அல்லது அங்கிருந்து ஆசிரியர்கள் சிங்கப்பூருக்கு வருவது போன்றவை தடைபட்டன. மின்னிலக்க வழியில் நடனம் கற்கலாம் என்றாலும் அதற்கும் இடவசதி தேவை. மேலும் நடன முத்திரைகளை வலுவாகத் தரையில் ‘பதிக்கும்’போது அண்டைவீட்டாரின் ‘இரைச்சல்’ புகார்களைச் சமாளிக்க வேண்டியிருந்தது.

நடன முத்திரைகள் இல்லாமல் இந்தியப் பாரம்பரிய நடனமே இல்லை. கற்றல் வளர்ச்சியும் முத்திரையின் அழுத்தமும் நேரடியாகவே தொடர்புடையவை. பெருந்தொற்றுக் காலத்தில் அதிக ஓசை எழுந்துவிடக்கூடாது என்ற கவனத்துடனேயே பயிற்சி செய்ததால் மீண்டும் பழையபடி நேரடி வகுப்புகள் தொடங்கியபோது என் வலிமை வெகுவாகக் குன்றியிருந்ததை உணரமுடிந்தது.

சில அண்டைவீட்டாரிடம், “அனைவரும் வீட்டிலிருந்து வேலைசெய்வது என்று ஆனபிறகு எங்களுக்கும் வேறு வழியில்லை, என் வேலை நடனம். அதை நான் வீட்டிலிருந்து செய்தாக வேண்டும்” என்று சொல்லவேண்டியிருந்ததாக என் நடன ஆசிரியை தேவி தெரிவித்தார்.

ஒடிசி நடனத்தில் கால்களை அகட்டிவைத்து இடுப்பில் கைவைத்து நிற்பது அடிப்படையான முத்திரை. அதே முத்திரையுடன் நகர்ந்து செல்லும்படியான நடன அசைவின்போது வீட்டில் இடவசதி போதவில்லை. ஆகவே வழக்கமான கால் அகட்டல்களைப் பாதியாகக் குறைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. அதுவே பழக்கமானதும் பிறகு நேரடி வகுப்பில் பழையபடி மாற்றிக்கொள்வது கடினமாக இருந்தது.

மின்னிலக்க இடையீடு மற்றொரு சவால். நடனத்தைக் காணொளிப் பதிவுகளாக ஆக்கிப் பகிர்ந்துகொள்ள முடிந்தது என்றாலும், இந்தியப் பாரம்பரிய நடனத்தைக் கற்றல் கற்பித்தலுக்காகப் பதிவுசெய்வது என்பது சிக்கலானது. துல்லியமான அசைவுகளைப் பதிவுசெய்யவேண்டிய அதேவேளையில் குருவின் நடன அமைப்பைச் சரியாக வெளிக்கொண்டுவரும் விதமாகவும் அப்பதிவு அமையவேண்டும். ஆகவே பலமுறை பதிவுசெய்யவேண்டிய நிலை உண்டானது. அப்போதும் முழு திருப்தி இல்லை.

இன்னொரு அடிப்படையான சிக்கலும் உண்டு. ரசமும் பாவமும் (Rasa & Bhava) நடனத்தின் இரு கண்கள் என்பது நாட்டிய சாஸ்திரம். நடனமாடுபவரிடமிருந்து வெளிப்படும் பாவம் காண்பவரிடம் ரசானுபவங்களை உண்டாக்குகிறது. அது நடனமாடுபவரையும் பாதிக்கிறது. இது நேரடி நடன நிகழ்வில்தான் சாத்தியம். மேலும் வெகுவேகமான அசைவுகள்கொண்ட நடனக் காணொளிகள் இணையத்தில் விரைந்து பிரபலமாகி மென்மையான அசைவுகள் அளிக்கும் ஆன்மீகமான தருணங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. மின்னிலக்கச் சூழலின் தன்மை பாரம்பரிய நடனத்தின் தன்மையை நீர்க்கச் செய்துவிட்டதைப்போலத் தோன்றியது.

இத்தகைய தீவிரமான அனுபவங்களே, இந்தியப் பாரம்பரிய நடனத்தின் ஆன்மீகமான தன்மைகளை மின்னிலக்க வெளியில் மீளுறுதி செய்யும் இரண்டாம் நிலைக்கு வழிகோலின எனலாம்.

ஒடிசி நடனம் உருவான வரலாறு, பண்பாட்டுப் பின்புலம் ஆகியவற்றைக் குறித்த அறிமுக வகுப்புகள் நடன மாணவர்களுக்கு அளிக்கப்பட்டன. நடனக் கடவுளான நடராஜர் குறியீட்டுத் தத்துவ விளக்கம் நடனத்தை நேரடியாகக் கடவுளுடன் பிணைத்தது. கலை தன் இயல்பிலேயே மதிப்புடையதா அல்லது ஒரு கருவியாகப் பயன்படுத்தும்போது மதிப்புறுகிறதா என்ற விவாதங்களை எல்லாம் தாண்டியதொரு வெளியில் கலையை சஞ்சரிக்க வைக்கும் அவ்விளக்கங்கள் என்னை முற்றாக ஆட்கொண்டன என்பேன்.

ஒடிசி நடன வகுப்புகள் தொடங்குவதற்கு முன்னதாக வழக்கமாக நடப்பவற்றை நான் எண்ணிப்பார்த்தேன். முறையான ஆடைகளை அணிந்துகொண்டபின் வடமொழிப் பிரார்த்தனைகள் வழியாகக் கடவுளர்களின் அனுக்கிரகத்தை வேண்டுதல், பூமாதேவியைத் துன்புறுத்தப் போவதால் அவளிடம் மன்னிப்பு வேண்டுதல், பிறகு பீடத்தில் வீற்றிருக்கும் கடவுளை வணங்கி, வேறு நடன ஆசிரியர்கள் வந்திருந்தால் அவர்களை வணங்கி, பிறகு தன்னுடைய ஆசிரியரை வணங்கிய பிறகுதான் நடன வகுப்பு தொடங்கும்.

வகுப்பு முடிந்தபின் இவையாவும் மீண்டும் நடக்கும். ஸும் வழி வகுப்பாக இருந்தாலும் கணினி வழியாகப் பிரார்த்தனைகளும், வணக்கங்களும் சென்று சேர்ந்தன. குரு-சிஷ்ய பரம்பரை வழியாகக் கற்றல் அவ்வடிவத்தில் தொடர்ந்தது. அது நடனத்தின் ‘அசல்’ தன்மையைக் காப்பாற்ற அல்லது அவ்வாறு உணர உதவியது எனலாம்.

அந்த உணர்வின் மீதும் பிடிமானத்தின் மீதும், சூழலுக்கேற்ற புதிய கற்பனைகளை உருவாக்குவதன் வழியாக நெருக்கடியிலிருந்து மீளுதல் என்ற மூன்றாம் நிலை கட்டமைக்கப்பட்டது.

பெருந்தொற்று திணித்துவிட்டுச்சென்ற மாற்றங்களால் நடன மாணவர்களும் சரி ஆசிரியர்களும் சரி புதிய தன்னுணர்வு நிலைகளுக்கு ஆட்பட்டனர். மாணவர்கள் நடனம் மட்டுமின்றி எழுத்தாக்கம், உடையமைப்பு, இதற்குமுன் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட சில ஆபரண உருவாக்கங்கள் எனப்பல்வேறு தளங்களில் கற்க ஆரம்பித்தனர். நட்டுவாங்கம் சொல்வது மட்டுமே பிரதான வேலை என்ற நிலைமாறி காணொளிகளுக்காக அதிகமாக ஆடத்தொடங்கியதால் ஆசிரியர்களும் புத்தெழுச்சி பெற்றனர்.

நேரடி நிகழ்ச்சி என்றால் அது பரதநாட்டியமோ ஒடிசியோ அக்கலையைக் காணப்பயின்றவர்களே பார்வையாளர்களாக வருவர். ஆனால் இணையத்தில் பதிவேற்றம் செய்யும்போது ஏதோ ஆர்வத்தால் காணவரும் எவ்விதப் பின்புலமுமற்ற ஒரு பார்வையாளரையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்ற எண்ணமும் உருவானது. ஆனால் அதற்காகப் பாரம்பரிய நடனத்தின் தன்மையையும் மாற்றிவிடக்கூடாது, முடியாது. இந்த இடத்திலும் ஒரு புத்தாக்கம் முளைத்தது.

நடன மாணவி வர்ஷா தன் ஆசிரியருடன் இணைந்து ஒரு புதிய நடனப் பகுதியை உருவாக்கினார். அதில் விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாகக் கலியுகத்தில் வரக்காத்திருக்கும் கல்கி அவதாரம் கொவிட்டை அழிப்பதாக அசைவுகள் இடம்பெற்றன. மகிஷாசுர மர்த்தனம் என்பதைப்போல கொவிடாசுர மர்த்தனம்! கடவுளர்களிடம் பேசிக்கொண்டிருந்த ஒடிசி நடனம் சடாரென்று நடைமுறை வாழ்க்கைப் பிரச்சனையுடன் இணைந்த தருணம் அது. புதிய தடைகள் புதிய சோதனைகளுக்கு வழிவிட்டன, உந்தின.

வர்ஷாவின் கல்கி அவதாரம் கொவிட்டை அழிக்கும் நடனம்

கொவிட்டின் தனித்துவமான கிடுக்கிப்பிடியைத் தனித்துவமிக்க வகையில் எதிர்கொண்டு பீடுநடனம் போட்டது ஒடிசி. பிற கலைவடிவங்களும் தத்தம் வழிகளில், கடும்பெரும் பாறைகளுக்குள்ளும் கனிவாகப் படரும் சிறுசெடியின் வேர்களைப்போல, கிளைத்திருக்கும் என்றே நம்புகிறேன். கலையின் தன்மை அது. கலையைப் பயில்வதோடும் பயிற்றுவிப்பதோடும் மட்டுமின்றி அத்தகைய புதிய அனுபவங்களையும் கலைஞர்கள் பதிவுசெய்ய வேண்டும்.

***

மொழிபெயர்ப்பு: சிவானந்தம் நீலகண்டன்

 [‘தி சிராங்கூன் டைம்ஸ்’ ஜூன் 2022 இதழில் வெளியானது]