கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் ஆலயத்தைப் பத்தாண்டுகளுக்குமுன் நான் முதன்முதலாகப் பார்த்தபோது தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் பெரியகோவிலைப் போலவே இருக்கிறதே என்பதே முதலில் எனக்குள் எழுந்த எண்ணம். இன்றும் கங்கைகொண்ட சோழபுரத்தைக் குறித்துப்பேசும் எழுதும் எவரும் இந்தவரிசையில்தான் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.

ராஜராஜனின் தஞ்சாவூர் முதலில், அவன் மகன் ராஜேந்திரனின் சோழபுரம் இரண்டாவது. தன் காலத்திலேயே எழுந்துவிட்ட இந்தவரிசையை வரலாறு மாற்றிப்பேசவேண்டும் என்றுதான் ராஜேந்திரன் தன் வாழ்நாள் முழுக்க முயன்று தோற்றான் என்பதே கங்காபுரம் நாவலின் ஒற்றைவரி.

வரலாற்றாய்வாளரும் எழுத்தாளருமான அ.வெண்ணிலா வரலாற்றுத் தரவுகளிலிருந்து உறுதியான  புள்ளிகளைப் பெற்றுக்கொண்டு அவற்றின் இடைவெளிகளைப் புனைவின் நெகிழ்வான கோடுகளின்மூலம் இணைக்க முயன்றுள்ளார். தந்தை ராஜராஜனின் தளபதியாகவும் பின்னாளில் சோழப்பேரரசின் அரசனாகவும் தொடர்ந்து போர்களைச் சந்திந்தபடியே இருந்த ராஜேந்திரனின் வாழ்க்கைவரலாற்றை ஒருபோர்க்காட்சிகூட இல்லாமல் அவன் எண்ணவோட்டத்தை மட்டும் ‘இப்படி இருந்திருக்கலாமோ?’ என்று ஆசிரியர் அணுகி எழுதியிருப்பது இந்த நாவலின் முக்கிய அம்சம்.

IMG_6186

மாபெரும் போர்களை உச்சமாக வைத்துப் புனையப்பட்ட இராமாயண, மகாபாரத இதிகாசங்கள் என்றென்றும் நிலைத்திருப்பதற்கு அவற்றை உருவாக்கியவர்களின் திறன் ஒருபுறமென்றால் அவை வாழ்க்கையும் மரணமும் நேரடியாகச் சந்திக்கும் விரிவான போர்க்காட்சிகளை உள்ளடக்கியவை என்பது முக்கியமான காரணம்.  அத்தகைய எளிதான வாய்ப்பு கங்காபுரம் நாவலின் களத்திற்கு இருந்தும் அதை முற்றிலுமாக ஒதுக்கிவைத்துவிட்டு மன்னர்களின் மனங்களுக்குள் புகுந்து வெளியேற முயன்றிருக்கும் வெண்ணிலாவைப் பாராட்டவேண்டும். சவால் நிறைந்த இம்முயற்சி ஒரு வெற்றிகரமான  படைப்பை அளித்துள்ளதாகவே கருதுகிறேன். ஐநூறு பக்கங்களில் எங்கும் தொய்வின்றி தோய்ந்து வாசிக்கமுடிகிறது.

அரசன் என்பவனின் அஸ்திவாரம் எங்கும் எதிலும் அவன் வகிக்கும் முதலிடத்தில்தான் இருக்கிறது. இறைவன் என்ற கருத்தாக்கம்கூட அரசனை இரண்டாமிடத்திற்குத் தள்ளிவிடுவதால் கடவுளுக்குச் சமமாகவே தன்னைக் குடிகள் பாவிக்கவேண்டும் என்பதில் உலகத்தின் அனைத்து அரசர்களும் எக்காலத்திலும் ஒன்றுபோல அக்கறையாக இருந்துள்ளனர்.

இறைவன் (அல்லாஹ்) உயர்ந்தவன் (அக்பர்) என்ற பொருள்பட முழங்கப்படும் ‘அல்லாஹு அக்பர்’  தக்பீர் முழக்கத்தைத் தன் உருவம்கொண்ட நாணயத்தில் முகலாயப் பேரரசர் அக்பர் பொறித்தபோது ஒருவேளை அது ‘அக்பரே இறைவன்’ என்ற மறைபொருளை உணர்த்துவதற்காகச் செய்யப்படுகிறதோ என்று சந்தேகப்பட்ட வரலாறும் உண்டு. அவர் தீன்-இலாஹி என்ற புதிய மார்க்கத்தைத் தோற்றுவிக்கவும் முயன்றுகொண்டிருந்தார். இறை என்ற சொல்லுக்குத் தமிழில் இறைவன், அரசன் என்ற இருபொருளும் உண்டு. இதையெல்லாம் மனதிற்கொண்டு பார்த்தால் ஓர் அரசனுக்கு ‘இரண்டாமிடம்’ என்பது எவ்வளவு வலிமிக்கது என்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம். கங்காபுரம் நாவலின் ராஜேந்திரனையும் புரிந்துகொள்ளலாம்.

தான் பட்டத்துராணிக்குப் பிறக்காததால் பிறப்பிலேயே இரண்டாமிடம்தான் தனக்கு விதிக்கப்பட்டிருக்கிறதோ என்று ராஜேந்திரன் புழுங்குகிறான். ஐம்பது வயதில் ஆட்சிக்குவந்து எண்பத்திரண்டு வயதுவரை ஆட்சிசெய்தும் ராஜராஜனின் நிழல் தன்மேலிருந்து விலகவில்லையே என்ற ஏக்கத்துடனேயே மடிகிறான். தஞ்சைப் பெருவுடையார் ஆலய கோபுரத்தைக் காட்டிலும் சோழீஸ்வரத்தின் கோபுரம் இரண்டடியாவது உயரமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் தஞ்சைப் பெரியகோவிலைப் போன்ற தோற்றத்திலேயே அமைக்க ராஜேந்திரன் விரும்பியதாகவும் அது இயலாது என்று தெரிந்ததும் இன்னபிற அம்சங்களில் முயன்றதாகவும் ஆசிரியர் சிறப்பானதொரு புனைவுக்கோணத்தில் பயணித்திருக்கிறார்.

அரண்மனைகளைத் தவிர்த்து மக்களோடு கலந்து புழங்குவது, புதிய தலைநகரம், புதிய பெருங்கோவில் என்று தன்னைத் தந்தையிடமிருந்து வேறுபடுத்திக்காட்ட அவன் முயன்ற ஒவ்வொன்றும் அவனை இன்னும் வலுவாக ராஜராஜனின் பெயருடன் இணைத்துப்பார்க்கப்படவே வழிசெய்யும் துயரம் நாவல் முழுக்க ராஜேந்திரனுக்கு ஆற்றமுடியாததாகவே இருக்கிறது. ஒரு சிறுகதையின் இறுதிவரியைப்போல இந்த நாவலின் இறுதிவரியும் அவன் துயரத்தை உச்சத்திற்குக் கொண்டுசென்று முடிந்திருப்பது உள்ளெழுச்சி கொள்ளச்செய்வதாக அமைந்திருக்கிறது.

எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘இரண்டாம் இடம்’ நாவல் பாண்டவர்களுள் வலுமிக்கவனான பீமன் தான் துரியோதன, துச்சாதனர்களைச் சாய்த்தும் தனக்கு எப்போதும் இரண்டாமிடமே என்ற மனநிலையில் அல்லாடுவதைக் குறித்துப் புனையப்பட்ட புதினம். அது சகோதரர்களுக்கிடையே அவன் பெற்ற இரண்டாமிடம். கங்காபுரத்தின் ராஜேந்திரன் பெற்ற இரண்டாமிடம் தந்தை மகனுக்கிடையேயானது என்றாலும் வீரியத்தில் குறைவில்லாதது.

சோழப்பேரரசு அதன் உச்சத்தில் செயல்பட்டபோது இருந்த நடைமுறைகள், பல தொழில்களைச் செய்வோரின் வாழ்க்கை, கல்வெட்டுகள் மூலமாக இன்று நாம் அறிந்திருக்கும் அன்றைய தமிழ்மொழி, காதல், வீரம் என்று அனைத்தையும் புதிய பார்வையில் வெளிப்படுத்தும் முனைப்படும் வந்திருக்கும் கங்காபுரம் நிச்சயம் வாசகர்களின் ஆதரவிற்கும் வாசிப்பின்பத்திற்கும் ஆராய்ச்சிக்கும் உரியது.

***

கங்காபுரம், அ.வெண்ணிலா, 520 பக்கங்கள், அகநி வெளியீடு, டிசம்பர் 2018,