11 நவம்பர் 2017 அன்று சிங்கப்பூரின் தேசிய நூலகத்தில் ‘உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியானது. மொத்தம் 13 சிறுகதைகள். ஆசிரியர் ரமா சுரேஷ். ஆசிரியரின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. இவரின் தங்கமுனை விருதுகள் பெற்ற இரண்டு கதைகளும் [ராட்சசி (2015), ரகசியம் (2017)] இத்தொகுப்பில் உள்ளன. எழுத்தாளர் லஷ்மி சரவணகுமாரின் ‘மோக்லி’ பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.

wd

‘நீ வேணாம்டா செல்லம்’, ‘கண்ணாடி மனுசா’ [நதிக்கரை நாகரீகம், தங்கமீன் வாசகர் வட்டச் சிறுகதைகள் தொகுப்பு, 2014], ‘பித்துக்குளி மாமா’ [அப்பாவின் படகு, தங்கமீன் வாசகர் வட்டச் சிறுகதைகள் தொகுப்பு, 2015], ‘கடைசிவரை’ [இடமும் இருப்பும், வாசகர் வட்ட சிறுகதைகள் தொகுப்பு, 2017] ஆகிய ஆசிரியரது முந்தைய நான்கு சிறுகதைகளோடு ஒப்பிடுகையில், சிந்தனையிலும் சரி மொழியிலும் சரி, ‘உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81’ தொகுப்பு ஒரு பெரும் பாய்ச்சலை – அனைத்து கதைகளிலும் இல்லாவிட்டாலும் – நிகழ்த்தியுள்ளது எனலாம். இக்கூற்றுக்கு வலுசேர்க்க இரு உதாரணங்களை முன்வைக்கிறேன்.

முதலாவது, ‘டிஸ்யூ சூ ப்வூ‘. இக்கதையில் ஒரு விளிம்பு நிலை மனிதர் குழந்தை ஒன்றைக் கடத்தி தன் வறுமையைப் போக்கிக்கொள்ள யோசிப்பதாகவும், பிறகு ஒரு குழந்தையின் களங்கமற்ற அன்பு அவருக்குள் தோன்றிய அந்த எண்ணத்தைக் கொன்றுவிடுவதைப் போலவும் காட்டிக் கதை முடிகிறது. ஆனால் கிட்டத்தட்ட அதே களத்தில் அமைக்கப்பட்ட ‘பித்துக்குளி மாமா’கதையில் வரும் விளிம்பு நிலை மனிதர் சிறுசிறு சமநிலை தவறிய செயல்பாட்டால் தவறான முன்னுதாரணமாக ஆனாலும் இறுதியில் அடுத்தவருக்காக அவர் உயிரை ஈந்துவிடுவதாகக் கதை முடிக்கப்பட்டிருந்தது. விளிம்பு நிலை மனிதர்கள் எப்போதும் யோக்கியர்களாகவே சிந்திக்கவேண்டிய அவசியமுமில்லை, உயிரை விட்டுத்தான் உன்னதத்தை நிரூபிக்கவேண்டுமென்ற நிர்ப்பந்தமுமில்லை ஆகிய தெளிவுகள் ‘டிஸ்யூ சூ ப்வூ’ வில் ஏற்பட்டுள்ளதைக் காணலாம்.

இரண்டாவது, ‘உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81‘. இக்கதையில் வர்ணனைகள், காட்சிகள் ஆகியவை சிறப்பான மொழிப்பிரயோகத்தில் மிளிர்ந்துள்ளன. சாலையோடு அவள் செய்யும் மானசீக உரையாடல் பல இடங்களில் கவரும்படி உள்ளது. ‘டுடே வெரி ஹாட் என்று விரல்களை விசிறியாக்கி வீசிக்கொள்வாள். இருவரும் சிரித்துக்கொள்வோம்’ என்றொரு காட்சி கண்முன் விரிகிறது. இன்னோரிடத்தில் ‘…..எனக்கு இங்கு யாரைத்தான் தெரியும்? என் தனிமையைவிட என் தயக்கம் கொடியதாகவே இருந்திருக்கவேண்டும்’ என்ற வரி மின்னுகிறது. இக்கதையில் பூனைப்பாட்டியாக ஓரிரு வரிகளில் வருபவர்தான் ‘பூனைக்கிழவி’ கதையில் முழுமையடைந்துள்ளாரோ என்று யோசித்தேன்.

மற்ற சில கதைகளும் பிடித்திருந்தன.

சொர்ணபுஷ்பம்’ கடந்த ஜூன் மாதம் கணையாழி கலை இலக்கிய இதழில் வெளியாகியிருந்தது. வாசித்ததும் அக்கதையும் அது சொல்லப்பட்டவிதமும் எனக்குப் பிடித்திருந்தன. குறிப்பாக, கொண்டாட்டமாக நிகழவேண்டிய காமமுயக்கம்  குழந்தையில்லாததால் சமூக அழுத்தத்துக்கு ஆட்பட்டிருக்கும் கணவன் மனைவிக்கிடையே, உடலும் மனமும் ஒன்றிப்போகாததால் ஒரு கொடுந்தண்டனையாக நிகழ்வதை உறுத்தாத சொற்களால் கையாண்டிருந்ததும், பிறகு மனைவி கருத்தரித்த செய்தியைக் கடல்தாண்டி வந்த இடத்தில் கேள்விப்பட்டதும் அவனுக்குள் ‘நிஜமான’ காமம் கிளர்ந்தெழுவதையும் காட்டியிருந்த இடங்கள் அபாரமானவை.

ஓர் இளங்குற்றவாளியின் சரித்திரம்‘ கதை மிக நன்றாக இருந்தது. மாறன் கதாபாத்திரம் முழுமையாக, மனதுக்கு நெருக்கமாக, நம்பும்படியாக அமைந்திருக்கிறது. வாழ்க்கையை இயல்பாக எதிர்கொள் என்ற தந்தையின் ஆத்மார்த்தமான பேச்சும், தன்னுடைய இழப்பைத் தன் மாணவர்கள் வழியாக நிறைவு செய்யும் அவன் வைராக்கியத்தைப் பிரதிபலிக்கும் கதையின் இறுதிப்பகுதியும் அற்புதம்.

ஆசோவின் கதை‘யில் சிங்கையின் பணக்கார இந்தியக்குடும்பம் ஒன்றில் பணிப்பெண்ணாக வரும் ஒரு பிலிப்பினோ பெண். நாயை மட்டும் பார்த்துக்கொள்ள வேண்டிய தனிமைச்சூழலில் அவள் கொள்ளும் தவிப்பும், பிறகு நாயோடு பழகிவிட்டபிறகு அவ்வீட்டின் உரிமையாளர்கள் விரும்பும் ‘முறைப்படுத்தப்பட்ட அன்பை’ மட்டும் அதன்மேல் காட்டமுடியாமல் அதை மீறும் தவிப்பும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. சாதாரணமாக நாம் மீண்டும் மீண்டும் காண்பவையானாலும் அவற்றில் நம் கண்கள் தவறவிடும் ஒன்றைக் காட்டுவது இலக்கியம். அந்தவகையில் நல்ல கதை.

‘மயிலி’, ‘சாரல்’, ‘தகவமை’ ஆகிய கதைகள் தவிர்க்கப்படவேண்டியவை.

 

மயிலி எவ்வளவுதான் ‘உங்க மேல இரக்கப்பட்டோ அனுதாபப்பட்டோ உங்கள் கட்டிக்க நினைக்கல…இது நன்றிக்கடனும் இல்ல’ என்று சப்பைக்கட்டு கட்டினாலும், வாழ்க்கைத் தராசில் மாமாவின் தியாகத்துக்கு ஈடாகத் தன்னை ஒரு தட்டில் வைத்துவிட்டு, ‘கொஞ்சமா குடி மாமா..முதல் முதல்லா குடிக்கும்போது வாந்தி மயக்கம் வரும் பாத்துக்குடி’ என்று ஆலோசனை சொல்லும் அவளை வாசகர் பரிதாபமாகத்தான் பார்க்கவேண்டியுள்ளது. பிறகு சடாரென்று கொலைப்பழி, சிறை என்று போகக்கூடாத திசையில் கதை பயணப்பட்டுவிட்டது. நுவல் சிறுகதைத்தொகுப்பில் வந்த ‘மிதவை’யை நினைவூட்டிய கதை இது.

‘சாரல்’ கதையில், அசம்பாவிதமாக வேலையிடத்தில் ஏற்பட்டக் கதிரியக்கத் தாக்கத்தால், காமம் எழாமல் போய்விடுபவன் அதை மறைக்க அதீத காம இச்சையுள்ளவனாகக் காட்டிக்கொள்வது சொல்லப்படுகிறது. இது மிகவும் நுட்பமாகச் சொல்லப்படவேண்டிய கதை. ஆனால் அது நிகழவில்லை. காமவுணர்ச்சி எழுந்தும் அவன் உடல் அதற்கு ஈடுகொடுக்கவில்லையா அல்லது காமமே எழவில்லையா என்ற குழப்பம் கதையில் இருக்கிறது. ஆகவே சம்பவங்களையும் மொழியையும் கொண்டு அக்குழப்பத்தை மறைத்து அவசரமாகச் செல்லும் போக்கைக் காணமுடிகிறது.

‘தகவமை’ கதையை, பூட்டப்பட்ட கம்பிக்கதவின் இருபக்கமும் இருந்து விளையாடிப்பழகி நட்பு துளிர்க்கும் ஒரு காட்சியைத்தவிர, வாசிப்பனுபவமோ யோசிப்பனுபவமோ குறிப்பிடும்படி ஏதும் எனக்குக் கிடைக்கவில்லை என்பதால் தள்ளுபடி செய்கிறேன்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ‘மலைகள்’ இணைய இதழில் ஆசிரியரின் ‘மாயா’ சிறுகதை (இக்கதையும் இத்தொகுப்பில் உள்ளது) வெளியாகியிருந்தது. வாசித்ததும் ஏற்பட்ட கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி ஒரு விமர்சனத்தை அக்கதைக்கு எழுதினேன். தங்கமுனை விருது வென்றுள்ள ராட்சசி, ரகசியம் ஆகிய கதைகளும் என்னுள் இன்னுமிரு மாயாக்களாகவே படிந்தன. ஆகவே அவற்றைக்குறித்து மேலும் விரிவாக எழுத அக்கறையில்லாமல் இருக்கிறேன்.

ரெடிமேட் கதைகளை எழுதாமல் தனக்கான தனித்த அடையாளத்தை ஏற்படுத்தும் வகையில் எழுதுவது, சில கதைகள் பரிசுபெற்றுவிட்டன என்பதால் அதேபோக்கில் பல கதைகளை அமைக்காதது, தொடர்ந்து சிந்தனையையும் மொழியையும் செம்மைப்படுத்தி வருவது ஆகிய அம்சங்களை முன்னிட்டு ஆசிரியருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேம்பட்ட மொழியைக் கையாள முனையும்போது அதைக்கதையை மறைக்கும் கேடயமாகவோ, சொல்லவருவதை நீர்த்துப்போகச்செய்யும் திரவமாகவோ பயன்படுத்தக்கூடாது என்ற வேண்டுகோளையும் வாசகராக முன்வைக்கிறேன்.

பிரஹதாரண்ய உபநிடத்தில் ‘நேதி நேதி நேதி’ என்று ‘இதுவல்ல இதுவல்ல இதுவுமல்ல’ என்று கழித்துக்கொண்டே வந்து எஞ்சியதை வைத்து ஆன்மாவின் உண்மையைக் கண்டறியும் முறை இருப்பதாக வாசித்திருக்கிறேன். அதுபோல எனக்கான அடையாளம் இதுவல்ல இதுவுமல்ல என்று ‘நேதி நேதி’ முறையில் ஆசிரியர் எழுதி எழுதித் தன்னைக் கண்டுபிடிக்கத் துணிந்துள்ளார் என்று சந்தேகிக்கிறேன். அதுவும் ஒரு நல்ல முறைதான். ஆசிரியரின் அடுத்தடுத்த படைப்புகள் இந்த சந்தேகத்துக்கு விடையளிக்கக்கூடும்.

இலக்கிய ஆர்வலர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய தொகுப்பு.