பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனின் நூல்கள் அனைத்தும் ஆய்வு அடிப்படையிலானவை. சில ஆண்டுகட்குமுன் அவரது ‘புத்தகத்தின் பெருநிலம்‘ வாசித்திருந்தேன். அதன்பிறகு அவரது ‘கிறித்தவமும் சாதியும்’ வாசித்தேன், ஆனால் முழுமையாக வாசிக்காததால் அந்நூலைக் குறித்து ஏதும் எழுதவில்லை. அண்மையில் ‘தமிழரின் தாவர வழக்காறுகள்‘ வாசித்தேன். ஆசிரியரைக் குறித்த சுருக்கமான அறிமுகத்தையும் அவரது நூல்களைக் குறித்த சில விவரங்களையும் அவருக்கு 2018ஆம் ஆண்டுக்கான ‘விளக்கு’ விருது அறிவிக்கப்பட்டதை ஒட்டி எழுதப்பட்ட இப்பதிவில் காணலாம்..

‘பஞ்சமனா? பஞ்சயனா?’ என்ற இந்த நூல் 12 சமூக வரலாற்று ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு. முதலில் இந்நூல் வெளியானது 2006ஆம் ஆண்டில். இரண்டாம் பதிப்பு 2019. பரிசல் புத்தக நிலையம் வெளியீடு. 128 பக்கம்.

கல்வெட்டுக்கள் செப்பேடுகள் காட்டும் தலித் வாழ்வியல், மன்னர் ஆட்சிக் காலத்தில் குடிமக்களின் இடப்பெயர்ச்சி, சிற்றிலக்கியங்களில் எதிர்க்குரல், கோவில் ஒழுகும் சுஜாதாவும், மேட்டிமை அடையாள எதிர்ப்பும் சிவவாக்கியரும், பெரியதம்பி மரைக்காயர், முலை அதிகாரம் ஒடுக்குமுறை, பஞ்சமனா? பஞ்சயனா?, கேதார சிவனும் வாஞ்சி நாதனும், வீரவாஞ்சியா?, அ.மாதவையா (1872-1925) ஓர் அறிமுகம், சமூக வரலாற்றுப் பின்புலத்தில் புதுமைப்பித்தனின் ‘துண்பக்கேணி’ ஆகியவை அக்கட்டுரைகளின் தலைப்புகள்.

IMG_8868

இக்கட்டுரைகளில் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம் என்னவெனில், தலைப்பை ஒட்டிய செய்திகள் பார்வைகள் என்று மட்டுமில்லாமல், கட்டுரையின் போக்கில் வேறுபல செய்திகளும் நமக்குக் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக, கல்வெட்டுகள் செப்பேடுகளிலிருந்து தலித் வாழ்வியலை அறிய முயற்சிசெய்துள்ள கட்டுரையில், கையெழுத்திடத் தெரியாதவர்கள் ஓலையில் எழுத்தாணியால் கீறுவர் என்றும் அதுவே ‘தற்குறி’ என்றும் வழங்கப்பட்டது என்று கிடைக்கும் செய்தியைக் குறிப்பிடலாம். பிறகு கையொப்பம் இடத்தெரிந்த ஒருவர், ‘தற்குறி மாட்டறிந்தேன்’ என்று எழுதி அவரது கையெழுத்தை இடுவாராம். கீறுவது ஒரேவிதமாக இருக்காது என்பதற்காக இந்த ஏற்பாடாக இருக்கலாம். தற்குறி என்ற சொல்லின் மூலத்தை அறிந்துகொள்ளமுடிகிறது.

தமிழகத்தில் மன்னர் ஆட்சிக்காலத்தில் குடிமக்களின் இடப்பெயர்ச்சி குறித்த கட்டுரை உழுகுடிகள், கைவினைஞர் போன்று சமூகத்தின் பல்வேறு பிரிவினர் எந்தெந்த காரணங்களுக்காக இடம்பெயர்ந்தனர் (13-14ஆம் நூற்றாண்டுகள்) என்று ஆராய்ந்துள்ளது. அதிகாரத்திற்கு அடங்கியும் அதிகாரத்தை எதிர்த்தும் என இருவிதங்களில் குழுவாக இடம்பெயர்வது நடந்துள்ளதை அறியமுடிகிறது. அவர்கள் அவசியம் என்று நினைத்தால் அரசு இறங்கிவந்து வரியைக் குறைத்து இடப்பெயர்வைத் தடுப்பதும், போகட்டும் என்று நினைத்தால் விட்டுவிடுவதும் நிகழ்ந்துள்ளது.

சிற்றிலக்கியங்களில் எதிர்க்குரல் கட்டுரை, சிற்றிலக்கியம் என்கிற இலக்கிய வகைமை பொதுவாக காமம், பக்தி, துதிபாடுதல் இவற்றைத்தான் செய்கின்றன என்றாலும் அவற்றுக்கு வேறொரு வாசிப்பையும் அளிக்கமுடியும் என்று காட்டுகிறது. பள்ளு, தூது போன்ற சிற்றிலக்கியப் பாடல்களை எடுத்துக்கொண்டு அவற்றில் பொதிந்திருக்கும் அடித்தள மக்களின் எதிர்க்குரல்களை அப்பாடல்களின் வரிகளைக்கொண்டும் வரிகளுக்கிடையே உட்கிடையாக அமையும் அர்த்தங்களைக்கொண்டும் ஆசிரியர் ஆராய்கிறார். இவற்றை எழுதியவர்களின் நோக்கம் அவ்வாறு எதிர்ப்பைப் பதிவுசெய்வதாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் அவர்களை அறியாமலே அது நிகழ்ந்துள்ளது என்கிறார் ஆசிரியர். சற்றுத் தயங்கினாலும் ஏற்றுக்கொள்ளும்படியான வாதமாகவே இருந்தது.

அத்தனை கட்டுரைகளிலும் ஆகச்சிறந்தது என்றால் ‘மேட்டிமை அடையாள எதிர்ப்பும் சிவவாக்கியரும்’ கட்டுரையைச் சொல்வேன். புலால் உண்ணாமை, தீட்டுப் பார்த்தல் போல மேட்டிமை என்று கருதப்படும் பல பழக்கங்களை சிவவாக்கியர் தன் பாடல்களில் எவ்வாறு கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்குகிறார், விமர்சிக்கிறார் என்று அலசி ஆராய்ந்துள்ளார். சித்தர் பாடல் என்று மட்டுமின்றி சுவையான பல வரலாற்றுச் செய்திகளும் இக்கட்டுரையில் உள்ளன. 17ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்கக் கிறித்தவத்தைப் பரப்ப மதுரை வந்த இத்தாலியத் துறவி ரொபர்ட்டோ டி நொபிலி, பிராமணர்களை மதமாற்றம் செய்தாலும் குடுமி வைத்துக்கொள்ளவும் பூணூல் அணிந்துகொள்ளவும் அனுமதித்தது பற்றிய குறிப்பு ஓர் எடுத்துக்காட்டு.

நொபிலி அவ்வாறு அனுமதிக்கக்கூடாது என்று திருச்சபையிடம் புகார் சென்றதும் விசாரணை வந்துள்ளது. இந்துக்களிலேயே பலப்பல சாதியினர் பலவிதமாக கொண்டை (தலையின் பக்கவாட்டில் இருக்கும்), குடுமி (உச்சந்தலையில் இருக்கும்) என்று வைத்துக்கொள்வதால் அது சாதி சம்பந்தப்பட்ட வழக்கமே தவிர மதத்தோடு சேர்த்தியில்லை என்று வாதாடி திருச்சபையின் அனுமதி பெற்றுள்ளார். சுவாரஸ்யமான ஆளாக இருக்கிறாரே என்று இணையத்தில் தேடிப்பார்த்தபோது, மூன்று இழைகளால் ஆன முப்புரி நூலையும் (பூணூல்), பிதா – சுதன் – பரிசுத்த ஆவி என்று விளக்கமளித்திருக்கிறார்.

பழக்கவழக்கங்களை அப்படியே வைத்துக்கொண்டு அதற்கான விளக்கங்களை மாற்றிவிடும் ஒரு மதமாற்ற முறையை இவர் கையாண்டுள்ளார். தமிழ், சமஸ்கிருதம் உள்ளிட்ட பல இந்திய மொழிகளையும் நூல்களையும் பயின்றுள்ளார். சாதி அடையாளமாகப் பூணூலையும் குடுமியையும் பார்த்த நொபிலி அது மேட்டிமை அடையாளமாகவும் இருந்ததைக் காணத்தவறிவிட்டார் என்றும் சிவவாக்கியர் அதையும் விடாமல் தாக்குகிறார் என்றும் ஆசிரியர் பார்க்கிறார்.

பெண்களின் மாதாந்திரப் பூப்பு அன்றும் இன்றும் தீட்டாகக் கருதப்படுகிறது. அந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது என்போர் உண்மையைக் காண விரும்பவில்லை எனலாம். அன்று வீட்டிற்குள்ளேயே வரமாட்டார்கள், இன்று பூஜையறைக்குள் வரமாட்டார்கள் அவ்வளவுதான் வேறுபாடு. நாம் அனைவருமே தூமைகள்தாம் என்று அதிரடியாகப் பாடுகிறார் சிவவாக்கியர்.

ஐயிரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்

கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே

மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும்

துய்யகாயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே

அ. மாதவையா குறித்த கட்டுரையும் புதுமைப்பித்தனின் ‘துன்பக்கேணி’ கட்டுரையும் இலக்கியப் பிரதிகளைக்கொண்டே அவற்றின் ஆசிரியர்களை மதிப்பிடும் கட்டுரைகள் எனலாம். சிந்திக்கவைக்கும் இக்கட்டுரைகள் இலக்கிய வாசிப்புக்கு இன்னொரு கதவைத் திறந்துவிடுகின்றன.

பிற கட்டுரைகள் அனைத்தும் மறுப்பு (rebuttal) கட்டுரைகள். பெரியதம்பி மரைக்காயர் என்பவர் வள்ளல் சீதக்காதி என்றழைக்கப்பட்ட செய்யது அப்துல்காதரின் தந்தை. அவரைக்குறித்த தவறான தகவல் இடம்பெற்ற இந்தியத் தொல்பொருள் ஆண்டறிக்கைக்கு ஆசிரியர் எழுதிய மறுப்புதான் ‘பெரியதம்பி மரைக்காயர்’ என்ற கட்டுரை.

‘கோவில் ஒழுகும் சுஜாதாவும்’ கட்டுரை, சுஜாதா ஆனந்த விகடனில் எழுதிய ஒரு கருத்துக்கு எழுதிய மறுப்பு. இஸ்லாமியப் படையெடுப்புகளின் போது மட்டுமல்லாமல் இந்து மன்னர்களின் படையெடுப்புகளின்போதும்  இந்துக்கோவில்கள் சூறையாடப்பட்டது என்று விளக்கி எழுதப்பட்ட கட்டுரை. படையெடுப்பு என்பதே பெரும்பாலும் கொள்ளையடித்தலை நோக்கமாகக்கொண்டது என்பதால் அதில் மதவேறுபாடுகள் ஏதுமில்லை என்கிறார் ஆசிரியர். ‘முலை அதிகாரம் ஒடுக்குமுறை’ கட்டுரை நாஞ்சில் நாடன் கட்டுரை ஒன்றுக்கான விமர்சனம். இலக்கியப் படைப்புகளில் முலை இடம்பெறுவது ஆபாசமல்ல, ஆனால் கட்டுரை என்ற பெயரில் அவற்றையெல்லாம் திரட்டித்தருவது ஆபாசம் என்ற கருத்தை ஆசிரியர் முன்வைக்கிறார். அது கட்டுரை எழுதப்படும் தொனியைப் பொறுத்தது என்று எனக்கு சொல்லத் தோன்றியது. 

மற்ற மூன்று கட்டுரைகளும் (பஞ்சமனா? பஞ்சயனா?, கேதார சிவனும் வாஞ்சி நாதனும், வீரவாஞ்சியா?) மறுப்புக்கட்டுரைகளே. மூன்றும் வாஞ்சிநாதன் தொடர்புடையவை. நூலில் இதுவரையிலான கட்டுரைகளை வாசிப்பவர்கள் ஆசிரியரை பிராமண எதிரியாகப் புரிந்துகொள்ளக்கூடும் என்றாலும் வாஞ்சி ஐயருக்காக அவர் வாதாடும் இக்கட்டுரைகள் அவ்வெண்ணத்தை மாற்றக்கூடும். 

ஆஷ் என்ற வெள்ளை அதிகாரியை மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து சுட்டுக்கொன்று (1911ஆம் ஆண்டு) தன்னையும் மாய்த்துக்கொண்ட வாஞ்சி நாதன் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். ஆஷ் கொலையில் அரசியல் இல்லை நாட்டுப்பற்று இல்லை, சாதி மேட்டிமையுணர்ச்சி மட்டுமே உண்டு என்று வாதிடுவோர் உண்டு. குறிப்பாக திராவிடர் கழகத்தினர். அக்கழகத்தினர் வாஞ்சி நாதன் வீரனா என்று சந்தேகித்து வெளியிட்ட ‘வீரவாஞ்சியா(ர்)?’ என்ற பிரசுரத்தை மறுத்து ஆசிரியர் ஆதாரங்களுடன் சிறப்பாக வாதிட்டுள்ளார். வவேசு ஐயர் ஆயுதக்கடத்லைத் தொழிலாகக்கொண்டிருந்தார் என்று அப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் சிறுபிள்ளைத்தனமானது என்று தாக்கியிருக்கிறார். 

வாஞ்சி நாதன் தன்னை மாய்த்துக்கொண்டபோது அவரிடம் ஒரு கடிதம் இருந்தது. அக்கடிதத்தில் தான் ஆஷைக் கொலைசெய்ததற்கான காரணத்தை வாஞ்சி எழுதியிருந்தார். அதில், ‘கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை’ என்ற வரியும் உண்டு. பஞ்சமன் என்றால் நால்வகை வருணங்களுக்குள் அடங்காத இழிபிறப்பையுடைய ஐந்தாம் வருணத்தவன், தீண்டத்தகாதவன்.

ஐந்தாம் ஜார்ஜ் மன்னனைப் பஞ்சமன் என்று விளிப்பதால் வாஞ்சி விமர்சனத்திற்கு ஆளாக நேரிடுகிறது. அதனால், ஜார்ஜ் பஞ்சமன் என்றால் ஜார்ஜ் ஐந்தாமவன் (அதாவது ஐந்தாம் ஜார்ஜ்) என்று ஒரு சிலர் விளக்கமளிக்கின்றனர். அதை ஆசிரியர் தகுந்த விளக்கங்களுடன் மறுக்கிறார். கோமாமிசம் தின்பவன் மிலேச்சன் என்று குறிப்பிட்டபின்பே பஞ்சமன் என்று அக்கடிதத்தில் எழுதப்பட்டிருப்பதையும், ஜார்ஜ் பஞ்சமன் என்று எழுதி George V என்று ஆங்கிலத்திலும் பெயர் தனியாக இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார். மேட்டிமை உணர்வு இருப்பதாலேயே நாட்டுப்பற்று இல்லாமற்போகவேண்டிய அவசியமில்லை என்று விளக்குகிறார்.

பண்பாட்டு அடையாளம், வரலாறு, பழந்தமிழிலக்கியம், நவீன இலக்கியம் இவற்றில் ஆர்வமுள்ளோர் வாசிக்கவேண்டிய புத்தகம்.

***