இலக்கிய ஆளுமை கி.அ.சச்சிதானந்தம் சமீபத்தில் மறைந்தபோது, இரண்டு அஞ்சலிக் கட்டுரைகளை வாசிக்க நேர்ந்தது. ஒன்று ஜெயமோகன் அவரது வலைதளத்தில் எழுதியது, இன்னொன்று சுகுமாரன் காலச்சுவடில் எழுதியது.

ஜெயமோகன், சுகுமாரன் இருவருமே தமிழிலக்கிய உலகறிந்த ஆளுமைகள், சச்சியுடன் நீண்ட நெடுங்காலம் நேரடிப்பழக்கம் உடையவர்கள். இருவரின் கட்டுரைகளிலும் சச்சிதானந்தம் என்கிற ஆளுமை மீதான அவதானிப்புகள் கிட்டத்தட்ட ஒன்றுபோலவே அமைந்திருந்தன. ஆனால் ஜெயமோகன் சச்சியை ஓர் இலக்கியச் சுவைஞர் என்றும், சுகுமாரன் சச்சியை ஓர் இலக்கிய வழிப்போக்கர் என்றும் சொல்லி முடித்திருக்கின்றனர்.  

சச்சியுடன் எந்த நேரடிப் பழக்கமும் இல்லாத எனக்கு, இரு முன்னோடி இலக்கியவாதிகள் தங்கள் சொற்கள் வழியாகத் தீட்டிக்காட்டிய ‘சுவைஞர் vs வழிப்போக்கர்’ சித்திரங்கள் உண்டாக்கிய சிந்தனைகளைப் பதிவுசெய்யும் கட்டுரை இது. 

இலக்கற்ற வாசிப்பிலும் பயணங்களிலும் இருந்தவர், கவிதை, கதை, மொழிபெயர்ப்பு, தொகுப்பு, பதிப்பு எனப் பலதளங்களில் தொடர்ந்து செயல்பட்டிருந்தாலும் அவற்றில் தனக்கென ஒரு குவிமையமோ தொடர்ச்சியோ வைத்துக்கொள்ளாதவர், இலக்கியப்  படைப்புகளைக் குறித்து ஆழமாகப் பேசுவதைவிட இலக்கியக் கர்த்தாக்களைக் குறித்து விரிவாகப் பேசுபவர் என சச்சியைக்குறித்த அவதானிப்புகள் ஜெயமோகன், சுகுமாரன் இருவரின் கட்டுரைகளிலும் வெவ்வேறு சொற்களில் காணக்கிடைக்கின்றன. ஆனால் ஒரேவிதமான அவதானிப்புகளை வைத்துக்கொண்டு இருவரும் சச்சியின் இலக்கியத் தொடர்பையும் ஆளுமையையும் குறித்த வெவ்வேறு முடிவுக்கு வருகின்றனர். 

ஜெயமோகனைப் பொறுத்தவரை,

கி.அ.சச்சிதானந்தத்தை குறிப்பிடத்தக்க எழுத்தாளர் என்று சொல்லிவிடமுடியாது- நல்ல கதைகள் எழுதியிருந்தாலும். குறிப்பிடத்தக்க மொழியாக்கங்கள் செய்திருக்கிறார்- ஆனால் அதில் தொடர்ச்சியான பெரும்பங்களிப்பு ஏதுமில்லை. முழுநேரப் பதிப்பாளரல்ல. இலக்கிய ஆய்வாளரோ வரலாற்றாசிரியரோ அல்ல. எனில் அவர் யார்? அவர் ஓர் இலக்கியச் சுவைஞர். இலக்கியமே வாழ்வெனக் கொண்டவர் என்றுகூடச் சொல்லலாம். அந்நிலையில் பல இளம் எழுத்தாளர்களுக்கு, கலைஞர்களுக்கு வழிகாட்டியாக நண்பனாகத் திகழ்ந்தவர். சென்ற காலகட்டத்தின் நினைவை நிலைநிறுத்தும் ஒருவகையான மரபுநீட்சியாக நிலைகொண்டவர்.

சுகுமாரனைப் பொறுத்தவரை,

ஓர் எழுத்தாளருக்கு உரிய அகப்பார்வையை விடப் பயணியின் வேடிக்கைப்பார்வையே சச்சியிடம் இருந்தது. அவற்றையும் ஓயாமல் பேசித் தீர்த்துக்கொள்ளும் விருப்பமே மேலிட்டிருந்தது. இதை அவரிடமே ஒருமுறை சொல்ல நேர்ந்தது. “வேடிக்கை பார்ப்பவனுக்கு சத்தியம் விளங்காதுன்னு பாரதியார் சொல்லியிருக்கார் சச்சி” என்றதும் அவரிடமிருந்து உடனடியாகப் பதில் வந்தது. “அட, போப்பா, சத்தியம் விளங்கலேன்னா என்னா, அப்டி ஒண்ணு இருக்குனு தெரிஞ்சாப் போதாதா?”. இப்போது யோசிக்கும்போது சச்சியை ஓர் இலக்கிய வழிப்போக்கர் என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது. அதுவும் இலக்கியத்துடனான தவிர்க்க இயலாத உறவுதான்.

ஜெயமோகனின் சுவைஞர், சுகுமாரனின் வழிப்போக்கர் இவ்விரண்டில் எது கி.அ.சச்சிதானந்தத்தின் ஆளுமைக்கு நெருக்கமாக வருகிறது என்பதைக்குறித்து புறவயமாக நாம் ஏதும் முடிவுக்கு வரவியலாது. ஒருவேளை சச்சியைக் குறித்த இருவேறு பொது அபிப்ராயங்களின் பிரதிநிதிகளாகக்கூட இவ்விரு பார்வைகளும் அமைந்திருக்கலாம். ஆயினும் இரண்டு கட்டுரைகளையும் முன்வைத்து சில விஷயங்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

முதலாவது, சச்சியின் மொழியை வாசகர்களுக்கு அளிப்பதை ஜெயமோகன் தன் கட்டுரையில் முற்றாகவே தவிர்த்துள்ளார். ‘காழ்ப்புகள் அற்ற தீங்கற்ற அரட்டை’ என்று சச்சியின் நேர்ப்பேச்சுகளை வகைப்படுத்தும் ஜெயமோகன், ஒருவரிகூட சச்சியின் தமிழ் எப்படி இருந்தது என்பதை எங்குமே குறிப்பிடவில்லை. இவ்வளவுக்கும் ஜெயமோகன் ஆளுமைகளைக் குறித்து எழுதும்போது தவறாது இடம்பெறும் ஓர் அம்சமாக அவர்களது உரையாடல்மொழியைக் குறிப்பிடுவதைக் காணலாம். ஆகவே சச்சி பேசிவந்த ‘மெட்ராஸ்பாஷை’யை வேண்டுமென்றே தன் கட்டுரையில் ஜெயமோகன் தவிர்த்திருக்கிறார் என்று தோன்றியது.

பிராமணத்தமிழையோ, திருநெல்வேலி, மதுரை, கொங்கு, நாஞ்சில் நாட்டு, நடுநாட்டுத் தமிழையோ அப்படியே கொடுப்பதால் ஒருவரின் இலக்கிய ஆளுமைக்கு வாசிப்பவரிடத்தில் ஏதும் குறைபாடு வந்துவிடாது. ஆனால் மெட்ராஸ்பாஷை அப்படியல்ல. இன்றும் லூஸ்மோகனின் மொழியாகவும், ரௌடிகளின், கல்வியறிவும் இலக்கியவாசனையும் இல்லாத மக்களின் மொழியாகவும்தான் நம் திரைப்படங்கள் மெட்ராஸ்பாஷையை நமக்கு நினைவூட்டிக்கொண்டிருக்கின்றன. ஆகவே சச்சியை நேரடியாக அறிந்திராத ஒருவர் அந்தப் பொதுப்புத்தியால் தாக்கப்பட்டுவிடக்கூடாது   என்பதற்காகவே அதை ஜெயமோகன் தவிர்த்துள்ளார் என்று கருதுகிறேன். 

அதற்கு நேர்மாறாக, சுகுமாரன் தன் கட்டுரையில் குறைந்தது ஏழெட்டு இடங்களில் சச்சியின் ‘மெட்ராஸ்பாஷை’யை அப்படியே கொடுத்துள்ளார். அதிலும் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் குறித்து, “அய்யோ, அவம் படா பேஜாருப்பா. காலையிலேயே தண்ணிபோட்னு ஆபீஸ் வந்துருவான். ராத்திரி எளுதின கவிதையை ஒரக்கச் சொல்லினு இருப்பான்” என்று சச்சி சொன்னதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தில், சச்சியின் சாதாரணமான கருத்தைத்தாண்டிய ஒரு இளக்காரப்பார்வை அவருடைய மொழியால் வாசகரிடம் உண்டாகிறது. தன்னுடைய முடிவான ‘வழிப்போக்கர்’ கருத்துக்கு மறைமுகமாக வலுசேர்க்க தேவைக்கதிகமாகவே சச்சியின் உரையாடல்மொழியை சுகுமாரன் தன் கட்டுரையில் சேர்த்துள்ளார் என்று நினைக்கிறேன். 

இரண்டாவது, மனிதர் தம் வாழ்வின் இறுதிக்காலத்தில் அதுவரை உக்கிரமாகக் கடைப்பிடித்த கொள்கைகள் செயல்பாடுகளிலிருந்து தளர்வதோ, விட்டேற்றியான கலைந்த மனநிலையில் பேசுவதோ இயல்பானதும் இயற்கையானதும் ஆகும். அப்படியான மனநிலைக்கு இலக்கியவாதி என்பதோ இலக்கியத்தொடர்பு அல்லாதவர் என்ற வேறுபாடுகளெல்லாம் இல்லை, மனிதர்கள் என்கிற ஒற்றுமை மட்டுமே உண்டு. ஆகவே தன் வாழ்வின் இறுதிப்பகுதியில் ஒருவர் கூறிய கருத்தை, ஒருசில வரிகளை வைத்துக்கொண்டு அதுவே அவர் தேடித்தேடி இறுதியாகக் கண்டடைந்தது என்ற முடிவுக்கு நாம் வரக்கூடாது. 

சச்சி தன் இறுதிக்காலத்தில் எழுதிக்கொண்டிருந்த நாவலை முடிக்க ஆர்வம் காட்டாததையும், புத்தகக் காட்சியின் அரங்குகளிலுள்ள புத்தகங்களில் பெரிய ஈர்ப்பின்றி வேடிக்கைபார்த்துக்கொண்டு சென்றதையும் அவரது ‘வழிப்போக்கர்’ இயல்புக்கான ஆதாரங்களாக வாசகருக்கு வரித்துக்காட்டியிருக்கிறார் சுகுமாரன். அவற்றை ஒரு வயோதிகரின் பொதுவான இறுதிக்காலப் பண்புகளாகப் பார்த்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால், வயோதிக மாற்றங்களையும் தன் ‘வழிப்போக்கர்’ கருத்துக்கு ஆதரவாக மாற்றி ‘மூத்த வழிப்போக்கர்’ என்று முடித்துள்ளார்.

இறுதியாக ஒன்று.

இரண்டு அஞ்சலிகளையும் சாராம்சமாகச் சொன்னால், சச்சியை, இலக்கியத்தையும் பயணங்களையும் சுவைத்து மகிழ்ந்து தன் இயல்புக்கேற்ப சில பங்களிப்புகளையும் செய்து அந்த நிறைவுடன் வாழ்ந்து மறைந்த இலக்கியச் சுவைஞராக ஜெயமோகனும், ஏதோ ஆர்வத்தில் சில இலக்கியப் பங்களிப்புகளைச் செய்திருந்தாலும் எந்தத் தீவிரமான கருத்துகளும் ஆழமான பார்வைகளும் அளிப்பதற்கான திராணியின்றி ஆனால் அப்படிப் பங்களிப்போருடன் தொடர்பிலிருப்பதை, இலக்கியத்தை வேடிக்கைபார்ப்பதை மட்டுமே கைக்கொண்ட ஓர் இலக்கிய வழிப்போக்கராக சுகுமாரனும் தங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்துள்ளனர். 

அடிப்படையில், சச்சிக்கு இலக்கியம் அளித்தது என்ன என்று ஜெயமோகனும், சச்சி இலக்கியத்திற்கு அளித்தது என்ன என்று சுகுமாரனும் பார்த்ததால் அவர்களுடைய கருத்துகள் அவ்வாறு அமைந்துவிட்டன என்பது என் பார்வை.

இரண்டும் தேவையான பார்வைகளே என்பதில் ஐயமில்லை. ஆனால் இலக்கியத்தில் நுழைந்தால் ஒன்று குறிப்பிடத்தக்க எழுத்தாளராக மலர்ந்துவிடவேண்டும் அல்லது வாசகராக நின்றுவிடவேண்டும் என்கிற மரபான இரட்டைநிலை (dichotmy) எதிர்பார்ப்பையே அப்பார்வைகள் வழிமொழிந்துள்ளன. ஆகவேதான் ஏதோவொருவகையில் அவர் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் என்ற நிலையில் அல்லாமல் சுவைஞர், வழிப்போக்கர் என்ற பெயர்களில் மற்றொரு நிலையான வாசக நிலைக்கு சச்சியைக் கொண்டுவந்து சேர்த்துள்ளன.

சச்சியைப் பொறுத்தவரை மேற்கண்ட வகைபிரிப்பு ஒருவேளை உண்மையாகவும் இருக்கலாம். அது பிரச்சனையில்லை. ஆனால் இலக்கிய உலகில் நுழைவோரெல்லாம் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வகைசெய்யும் இந்த ‘இரட்டைநிலை’ எதிர்பார்ப்பு நம் இலக்கியச் சூழலுக்குத் தீமையே செய்யும்.

ஆங்கில இலக்கிய உலகில் ‘இலக்கிய முகவர்’களின் பங்களிப்பு மிகப்பெரியதும் முக்கியமானதும் ஆகும். நல்ல இலக்கியத்தின் நாடித்துடிப்பை அறிவதில் சமர்த்தும் அதைச் சந்தைப்படுத்துவதில் திறமையும்கொண்ட இவர்களைப் பிடித்தால்தான் ஒரு சிறந்த எழுத்தாளர்கூட வரும்போது வரட்டும் என்று அதிர்ஷ்டத்தை நம்பிக்கொண்டிருக்காமல் தன்காலத்திலேயே குறிப்பிடத்தக்க பதிப்பகங்கள் வழியாக வெளியுலகிற்கு வரவும் வாசகர்களைப் பெரிய அளவில் சென்றடையவும் முடியும். நம்முடைய ‘இரட்டைநிலை’ சட்டகத்தில் இந்த இலக்கியமுகவரை எங்கே வைப்பது?

இலக்கிய முகவர்களைப்போலவே, எழுத்தாளர் – வாசகர், என்ற இருபக்கங்களையும் இணைக்கும் இலக்கியச் சூழலமைவுக்கு (ecosystem) வளமும் வலுவும் சேர்க்கும் விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாசிரியர், ஆய்வாளர் போன்ற பல்வேறு திறனாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் இலக்கியத்தில் அதிக வெளிச்சமின்றி செயல்படுகின்றனர். அவர்களுக்கு இலக்கியம் ஏதோ ஒரு இன்னொரு தொழிலல்ல. இலக்கியத்தின்மீது இனம்புரியாத காதல் உள்ளதால்தான் அதில் தொடர்ந்து ஈடுபட்டு அதைச்சார்ந்த வாழ்க்கையை அமைத்துக்கொள்கின்றனர்.

அவர்களின் செயல்பாடுகளில் தரமிருக்கிறதா இல்லையா என்பதை அவ்வந்த நிலைகளில் அவசியம் பார்க்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ‘இரட்டைநிலை’ சட்டகத்தைப்போல நம்மிடம் இருக்கும் மரபான எதிர்பார்ப்புச் சட்டகங்களில் அவர்களை எங்கே பொருத்துவது என்று பார்க்கவேண்டியதில்லை.

மாறாக, இலக்கியச் சூழலமைவின் பல்வேறு அங்கங்களுக்கு மதிப்புகூட்டும்படி சிற்சிறு பங்களிப்புகளைச் செய்திருந்தாலும்கூட அவற்றையும் சரியான இடத்தில் வைத்து மதிப்புடன் பார்க்கும் புதிய சட்டகங்களை உருவாக்கவேண்டும். அப்படி உருவாக்கினால் பல்வேறு இயல்புகளைக் கொண்டவர்களும் இலக்கியத்தில் தமக்கான இடங்களையும் அடையாளங்களையும் கண்டடைவர். அதன்வழியே அச்செயல்பாடுகளுக்கு ஒரு தொடர்ச்சியும் உண்டாகும்போது நிலைத்த, நீடித்த நன்மை இலக்கியத்திற்குக் கிடைக்கும்.

ஒரு முடிவின்போது எழுதப்படும் அஞ்சலிக்கட்டுரைகள் அப்படியான சட்டகங்களை உருவாக்குவதற்கான, அறிமுகப்படுத்துவதற்கான தொடக்கங்களாக அமையட்டும்.

***