புத்தகங்களை வாசிக்க வம்படியாக எப்படியெல்லாம் இறங்கியிருக்கிறேன் என்று யோசித்துப்பார்த்தேன். புனைவில் நாஞ்சில் நாடன் வெகுவாகக் கவர்ந்திருந்தார். ஆறே ஆறுதான் என்பதால் அவரது நாவல்கள் அனைத்தையும் வாசிப்பது எளிதாக முடிந்தது. ஆனால் அதன்பின் எல்லாமே ஓரளவில் நிறைவேறாமல்தான் போனது, குறைந்தது தற்காலிகமாக. பெருமாள்முருகன் பிடித்துப்போய் ஒன்பது நாவல்கள்தானே எழுதியிருக்கிறார், முடிப்போம் என்றிறங்கியது ஏழுடன் நிற்கிறது. சாகித்ய அகடமி விருதுபெற்ற நாவல்களையெல்லாம் (சுமார் 25) வரிசையாக வாசித்துவிடுவது என்று இறங்கியது எட்டுடன் நிற்கிறது. காந்தியின் எழுத்து-பேச்சு மொத்தமும் ஆயிரம் பக்கங்கள் கொண்ட இருபது தொகுப்புகளாக வெளியானபோது அனைத்தையும் வாசிக்கப் பூண்ட உறுதி இரண்டு தொகுப்புகளோடு கலகலத்தது. ஸிட்னி ஷெல்டன், டான் பிரௌன், மால்கம் கிளாட்வெல் ஆகியோரை முடித்துவிட இறங்கியதும் ஐம்பது அறுபது சதமானத்தில் தடம்புரண்டது. இந்தவிஷயத்தில் மொழிபேதமில்லை.

இந்த நிலையில் சமீபத்திய தீர்மானம் சிங்கப்பூர் எழுத்தாளர்களின் எழுத்துக்களை வாசித்துவிடுவது! பேராசிரியர் ஜெயக்குமார், சுபாஷ் அனந்தன், ஷாநவாஸ், ஆமருவி தேவநாதன், இப்போது அழகுநிலா. இவ்வரிசை மேலும் நீள வேண்டும் என்பதே என் அவா.

ஆறஞ்சில் பதினான்கு சிறுகதைகள். ‘பச்சை பெல்ட்’ எனக்கு ஆகப்பிடித்த கதை. தந்தையின் மரணத்திற்கு சிங்கப்பூரிலிருந்து ஊருக்குப்போவதா வேண்டாமா என்று உணர்ச்சிக்கும் பணத்துக்கும் இடையில் தடுமாறித் தத்தளிப்பவனின் கதை. அதைக்கூட சமாதானம் செய்துகொள்பவன் எப்போது உடைகிறான் என்பது படம்பிடிக்கப்பட்டுள்ள கதை. தந்தை இறந்து பலநாட்கள் கழித்து ஜெயகாந்தன் உடைந்து அழுததைக் குறித்து எங்கோ எழுதியிருந்தார், அந்த நினைவு வந்தது. சுகமோ துக்கமோ அவ்வந்த தருணங்களில் அல்லாமல் நினைவுகளை மீட்டும்போதுதான் அவற்றின் உச்சங்கள் வெளிப்படுகின்றன. என்னிடம்கூட ஊரில் ஒருவர் பச்சைபெல்ட் கேட்டிருந்தார்!

‘பெயர்த்தி’யும் பிடித்திருந்தது. சீனப்பையன் தமிழ்ப்பெண் இவர்களிடையே மலரும் காதல், வெற்றிகரமான குடும்ப வாழ்க்கை ஆகியவற்றின் நிறைவு அவர்களின் மகன் வளரும்போது எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலைகளால் மெல்ல மாறுகிறது. செயற்கையாக நாம் உருவாக்கிக்கொண்டுள்ள சில சமூகப்பார்வைகள் இயற்கையின் முன் மண்டியிடும் முடிவைக்கொண்ட கதை. உள்ளூர்க்கலாச்சாரத்தை ஓரளவுக்காவது புழங்கி அறிந்தவர்கள் உணர்ந்து புன்னகையரும்பவைக்கும் கதை.

‘உறவு மயக்கம்’ என்ற கதையில், தன் வீட்டுப் பணிப்பெண் தன் பிள்ளையைத் தன்னைப்போலப் பார்த்துக்கொள்ளவேண்டும்என்ற ஆசை ஒரு தாய்க்கு எப்போதும்இருக்கிறது. ஆனால் தன்னுடைய இடத்திலிருந்து அப்பிள்ளையின் தவறை அப்பணிப்பெண் திருத்தினால் அதை அந்த தாய் விரும்புவதில்லை. தவறு தன்பிள்ளையின்மேல் இருக்கக்கூடும் என்று நினைப்பதற்குக்கூட அவள் மனம் மறுக்கிறது. தன் வளர்ப்பு சரியில்லையோ என்ற பதற்றத்தை உண்டுபண்ணுகிறது. பணத்துக்கு முன்னுரிமை அளிக்கும் வாழ்முறையை கைக்கொண்டுவிட்டோமோ என்ற குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்குகிறது.

இவற்றிலிருந்து தப்பிக்கும் ஒரே வழிபணிப்பெண் மீது குற்றம் சுமத்திவெளியேற்றுவதுதான். ஆனால் அதைச்செய்ததும் மனசாட்சி உறுத்துகிறது.தன்னெஞ்சே தன்னைச் சுடுகிறது. இவ்விரண்டுநிலைகளுக்குள்ளும் ஒரு தாய்மாட்டிக்கொண்டு தடுமாறுகிறாள். இப்படியானதவிப்பை வெளிப்படுத்தும் ஒரு கதை.

மற்ற கதைகள் விரைவில் என் நினைவிலிருந்து விரைவில் மறைந்து போகக்கூடும். ஒரு புனைவு தர்மசங்கடமான சூழ்நிலைக்கு ஆளாகாத, தெளிவான வரையறைகள் கொண்ட, குழப்பமில்லாத பாத்திரங்களை மட்டுமே கொண்டு புனையப்படுமானால் அதில் எனக்கு உவப்பில்லை; ஏனெனில் நிஜவாழ்க்கையில் அது பெரும்பாலும் சாத்தியமில்லை. எங்கேனும் விதிவிலக்குகளாக சாத்தியப்பட்டாலும் அவற்றையே புனைவுகளில் எழுதிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. எப்போதும் எங்கும் எவரிடமும் குணம் நாடிக் குற்றமும் நாடும் நிலைதான் இருக்கும். அச்சவாலை எதிர்கொள்பவரே – என்னைப்பொறுத்தவரை – புனைவெழுத்தாளர். அவர் தீர்வுகளோ தீர்ப்புகளோ சொல்லவேண்டிய கட்டாயமில்லை. ஆனால் எளிதான பாதையில் பயணிக்க விரும்பலாகாது; விரும்பினால் நீதிக்கதைகள் மட்டுமே எழுதமுடியும்.

*

ஆசிரியர் : அழகுநிலா